Monday, April 9, 2012

விடுதலையானோம்!



என்னையும் சேர்த்து 28 பேர் இன்று ஈரோடு அமர்வு நீதிமன்றம் 2ன் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு அது. 20009 ஈழப் போரின் போது நடத்தப்பட்ட எண்ணற்ற போராட்டங்களிடையே, நாங்களும் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். பிணையில் வெளிவந்த பின்னர், மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு, இன்றுடன் முடிவுக்கு வந்தது.

வழக்கு விசாரணையினால் நாங்கள் இழந்தவை அதிகம். இப்போது கூட, நார்வே திரைப்பட விழாவுக்கு பாலை யின் இயக்குனர் என்ற வகையில் நான் கலந்து கொள்வது தொடர்பான பணிகள் முடங்கிவிட்டன. எனது பஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக கடந்த 20 நாட்களாக, தொடர்ந்து மூன்று வேலை நாட்கள் கூட என்னால் ஊரில் தங்க முடியவில்லை. விசாரணை, வழக்கறிஞர் விவாதம், தீர்ப்பு தள்ளி வைப்பு, ஒத்தி வைப்பு என 20 நாட்கள் தொடர்ச்சியாக ஈரோட்டைச் சுற்றி தங்க வேண்டி இருந்தது.

வழக்கின் இறுதிக் கட்டமாதலால், ஒருவர் வரவில்லையென்றாலும் நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்து விடுகிறார். அருணபாரதி சென்னையிலிருந்து வர வேண்டும். மற்றவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். நான் செல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டால், அவர்கள் மற்றொரு நாள் கூலியை இழக்க வேண்டும்.

ஈ..வி.கே.எஸ்.இளங்கோவன் ஈழப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசி எரிச்சலூட்டிய காலம் அது. ‘முத்துக் குமாரா…யார் அவன்? எனக்குத் தெரியாதே’ என்று அவர் பேட்டி கொடுத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். பின்னர், ’சீமான் என்னமோ பெரியாரோட பேரனாமே…பெரியார் சின்ன வயசுல தப்பு பண்ணியிருப்பார்…அதுல பொறந்த பேரனா இருக்கும்’ என்றார் ஈரோடு பொதுக்கூட்டத்தில்.

இந்தக் காலத்தில், நானும் அருணபாரதியும் இளங்கோவனும் (இவர் எங்கள் இளங்கோவன்) ஈரோடு பகுதியில் தலைமறைவாக இருந்தோம். போர் குறித்த ‘தீர்ப்பு எழுதுங்கள்’ என்ற ஆவணப்படத்தை பல்லாயிரக் கணக்கில் விநியோகம் செய்து கொண்டிருந்தோம். ஈரோடு தொகுதியில் இளங்கோவனைத் தோற்கடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிரம் எங்களுக்குள் இருந்தது. 

ஒருபுறம் காவல்துறை தேடுதல், மறுபுறம் வெளிப்படையாக ஏதேனும் போராட்டம் நடத்தியே தீர வேண்டிய கட்டாயம். இளங்கோவன் வீட்டை முற்றுகையிடுவது என முடிவு செய்தோம். செய்தோம் என்றால், நாங்கள் மொத்தமே மூன்று பேர்தான்.

ஆனால், அதைப்பற்றி நான் பொதுவாகவே கவலைப்படுவதில்லை. நோக்கம் தெளிவாக இருந்தால், தேவையானவை கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. துண்டறிக்கை அடித்து, விநியோகம் செய்து, குறைந்தது 20 பேரையாவது திரட்டலாம் என்றால், அச்சகங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. அதையும் மீறி வேறு ஒரு வழியில் அச்சிட்டோம். 

இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டம், தலைமை : க.அருணபாரதி என்று போட்டு, நாள் நேரம் ஆகியனவும் குறித்து, அனைவரும் வருக! என்று அழைப்பு வேறு விடுத்தாயிற்று. கொடுமையாக, அந்தத் துண்டறிக்கைகளை வெளியே சென்று விநியோகம் செய்யக்கூட முடியவில்லை. அவ்வளவு நெருக்கடி. போராட்டம் நடத்தப்போவது காவல்துறைக்குத் தெரிந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் தெரிந்துவிட்டது. போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய உணர்வாளர்களுக்குத் தெரியவில்லை.

நாங்களோ, ஈரோட்டிலிருந்து ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் தொலைவில் கிராமம் ஒன்றில் தங்கியிருந்தோம். ஆகவே, போராட்டத்துக்கு முதல் நாள், எங்களிடமிருந்த அலைபேசி எண்களுக்கு, ’நாளை காலை போராட்டம். அவசியம் வருக’ என கல்யாண அழைப்பு போல குறுஞ்செய்தி அனுப்பி விட்டுப்படுத்துக் கொண்டோம்.

காலை, ஒன்பது மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு நோக்கி நான், இளங்கோவன், அருணபாரதி மூவரும் என் காரில் சென்றோம், முற்றுகைப் போராட்டத்துக்கு! யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, நாம் அறிவித்தோம் நாம் செல்வோம் என்ற நினைப்பு.

பன்னீர் செல்வம் பூங்கா அருகே இருந்து, இளங்கோவன் வீடு வரைக்கும் ஏறத்தாழ 200 அடி தூரத்துக்கு, இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய அதிரடிப்படையினர் நிற்கிறார்கள் நண்பர்களே.

நாங்களே அதிர்ந்து போனோம். காரை ஓரமாக நிறுத்தினேன். அங்கு இருந்த டாக்சி ஓட்டுநரிடம், ‘அண்ணா…என்ன இவ்வளவு போலீஸ்… அதுவும் மிக்ஷின் கன்னோட…?’ அவர் சொன்னார், ‘இளந்தமிழர் இயக்கம்னு ஒரு குரூப்பு…இளங்கோவன் வீட்டை அடிக்கப்போவுதாம்…’ என்றார்.

அருணபாரதியின் தம்பி ஆனந்த், அண்ணனைப் பார்க்க வந்தார். அவர் அந்த ஓட்டுநரிடம், ’இளந்தமிழர் இயக்கம் அவ்வளவு பெரிய அமைப்பாண்ணா…?’ எனக் கேட்க, அந்த ஓட்டுனர், ‘அவிங்க சொன்னா செஞ்சுடுவாய்ங்களாம் தம்பி’ என்றார் பெரும் எதிர்பார்ப்புடன்.

நாங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டு நின்றோம். மணி பத்து ஆனது. போராட்டத்துக்குக் குறித்த நேரம். அங்கிருக்கும் பெரியார் சிலைக்குத்தான் ’அனைவரையும்’ வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தோம். பெரியார் சிலையைச் சுற்றி இன்ஸ்பெக்டர் தகுதியிலான காவலர்கள் நிற்கிறார்கள்.

நாங்கள் மூவரும் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடன் அங்கே சென்றோம். இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து, ‘தம்பி இங்கல்லாம் நிக்கக் கூடாது…போங்க’ என்றார். நான், ‘சார்…நாங்கதான் போராட்டத்துக்கு வந்திருக்கோம்’ என்றேன். அவர் ஏற இறங்கப் பார்த்தார். நம்பவில்லை என்பது புரிந்தது. 

‘சரி…அதனால என்ன…போராட்டம்லாம் கிடையாது…கிளம்புங்க’ என்றார்.

அருணபாரதி சட்டெனக் கோபமடைந்து, ‘நீங்க யார் சார் அதைச் சொல்ல…? போராட்டம் உண்டு…’ என்றார். இளங்கோவன் சிரிக்கிறாரா வேதனையை வெளிப்படுத்துகிறாரா எனத் தெரியவில்லை. அங்கிருந்த காவலர்கள் சட்டென கூடினர். இன்ஸ்பெக்டர் மட்டும் பொறுமையுடன், ‘மூணு பேர்தானா?’ எனக் கேட்டார். நான், ‘இன்னும் வருவாங்க…இந்த இடத்துக்குத் தான் வரச் சொல்லியிருக்கோம்’ என்றேன் உரிமையுடன்.

நாங்கள் மூவரும் அங்கேயே நின்றபடி யாராவது வருகிறார்களா எனப் பார்க்கத் தொடங்கினோம். காவல்துறையினருக்கு, இது சீரியஸ் சீனா காமெடி சீனா என்ற குழப்பம் மேலிட்டது.

இளங்கோவன் என் காதில், ‘ஏங்க…யாருமே வரலைன்னா…என்ன பண்றது? ’எனக் கேட்டார். நான் சற்றே அதிக தெனாவட்டுடன், ‘நாம மூணு பேரும் அவர் வீட்டுக்குப் போவோம், முற்றுகையிடுவோம்’ என்றேன். அருணபாரதியும் ’ஆமாம்…’என ஆவேசம் காட்டினார். இளங்கோவன் பரிதாபமாக, ‘சரிதான் போவோம்’ என்றார்.

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தமது படை அணிவகுப்பு இவ்வளவு மோசமான தோல்வியைச் சந்திக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் முகங்களில் எங்கள் மீதான் கடுப்பு தெறித்துக் கொண்டிருந்தது.

பத்து நிமிடங்களில், எங்கள் விருப்பம் நிறைவேறத் தொடங்கியது. பவானி ஒரிசேரியிலிருந்து வேன் நிறைய மக்கள் வரும் தகவல் வந்தது. பின்னர் குமாரபாளையத்திலிருந்து பேருந்தில் பத்து தோழர்கள், ஈரோட்டிலிருந்து இரு வழக்கறிஞர்கள், சில கூலித் தொழிலாளர்கள் வருவதாக தகவல் வந்து கொண்டே இருந்தது.

முதலில் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் வந்தனர். எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்தார். நாங்கள் ‘இது எல்லாமே பக்கா ப்ளான்’ என்பது போல பெருமிதத்துடன் அவரைப் பார்த்தோம்.

‘உங்களை அரஸ்ட் பண்றோம்’ என்றார். நாங்கள் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினோம். சாலையில் சென்றோர் தேங்கி நின்றனர். துண்டறிக்கைகளை வீசினோம். இடம் பரபரப்பானது. இதற்கிடையில் ஒரிசேரியிலிருந்து வந்த வேன் பேருந்து நிலையத்திலேயே மறிக்கப்பட்டது. அதிலிருந்தவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். 

பன்னீர் செல்வம் பூங்கா அருகே வேறு சிலர் முழக்கமிட்டனர். ஒரு குழு, எப்படியோ இளங்கோவன் வீட்டுக்கு அருகே சென்றுவிட்டது. துப்பாக்கிக் காவலர்கள் திமுதிமுவென ஓடி அவர்களைப் பிடித்தனர். ஈரோடு தொடர் வண்டி நிலையத்தினருகே ஒரு குழு இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிடத் தொடங்க, இங்கிருந்து காவல் வேன் அங்கே பாய்ந்தது.
நாங்கள் மூவரும் நடு நாயகமாக, முழங்கிக் கொண்டிருந்தோம். பத்திரிகையாளர்கள் படையெடுத்து வந்தனர். மாபெரும் கூட்ட நெரிசலுக்கிடையே, செந்தமிழன், அருணபாரதி, இளங்கோவன் உள்ளிட்ட பத்துப் பேர் முதலில் கைது செய்யப்பபட்டனர்.

’மாஸ்டர் ப்ளான் சார்…இவனுக…நம்மளை இங்கே டைவர்ட் பண்ணிட்டு…சிட்டி முழுக்க ஆர்ப்பாட்டம் பண்ணிட்டானுக’ என இன்ஸ்பெக்டரிடம் எஸ்.ஐ வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் மூவரும் தன்னடக்கமாக முகத்தை வைத்துக் கொண்டோம்.

கைதானோர் மொத்தம் 68 பேர். அவர்களில் 40 பேரை மாலையில் அனுப்பிவிட்டனர். தாயம்மா எனும் 60 வயது மூதாட்டியும் அவரது இரு மகன்களும் கைதாகியிருந்தனர். தாயம்மா குடும்பத்தினர் மட்டும் வீட்டுக்குப் போக மறுத்து விட்டனர். 28 பேர் கோவைச் சிறைக்கு அனுப்பப்பட்டோம்.

இரவு, 11 மணி இருக்கும். சிறையின் உள்ளே சென்றதும், ஒவ்வொருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று, நிர்வாணப்படுத்தினர். சோதனை செய்யும் முறை என்றனர். பின்னர், ஒரு கொட்டறையில் அடைக்கப்பட்டோம்.

எங்களுக்கென ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. வரிசையாக, 20 லாக் அப்கள். ஒன்றில் மூவர் இருக்கலாம். நாங்கள் மூவரும் ஒரு லாக் அப்பில். பொதுக் கழிப்பறை வெளியே உண்டு. இரண்டடி உயரம் மட்டுமே ஒரு நபருக்கும் அடுத்த நபருக்கும் தடுப்பு. இப்படி வரிசையாக பத்து ’கழிவறைகள்.’ பொதுத் தொட்டியில் காலை, மாலை தண்ணீர் வரும் அனைவரும் குளிக்க, குடிக்க அதுவே ஆதாரம்.

காலை ஆறு மணிக்கு லாக் அப் திறக்கப்படும். மாலை ஆறு மணிக்கு உள்ளே சென்றுவிட வேண்டும். காடாத் துணிகள் இரண்டு தரப்படும். ஒன்று விரிப்பு, ஒன்று போர்வை. மிகச் சிறிய அறைதான் அந்த லாக் அப். அதில் மூவர் படுத்தால், புரண்டு படுக்க முடியாது. இரண்டடி உயரத் தடுப்புக்கு அந்தப் பக்கம், கழிவறை. அந்த இரண்டடித் தடுப்புக்கு இந்தப் பக்கம் உணவு உண்ணுதல், படுத்து உறங்குதல், பகலில் பிற கைதிகள் விருந்தினராக வந்தால் உபசரித்தல் அனைத்தும் நடக்கும்.

பார்வையாளர்கள் வந்தால் நாங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒரே அரிய பொருள் ஊறுகாய் பாக்கெட். சிறையில் வழங்கப்படும் உணவை ஊறுகாய் இல்லாமல் விழுங்குவது எளிதல்ல. இதில் அளவு சாப்பாடு வேறு. கிடைப்பதே பாதி வயிற்றுக்கு, அதுவும் உள்ளே இறங்காத அளவுக்கு இருக்கும். ஆதலால், ஊறுகாய் எங்களுக்கு அமுதம்.

சரம் சரமாக ஊறுகாய் பாக்கெட்கள் வந்தாலும் நொடியில் காலியாகிவிடும். பக்கத்து கொட்டறைகளிலிருந்து வரும் விருந்தினர்கள், ‘நாங்கள் தங்கப் புதையலைப் பதுக்கி வைத்திருப்பது போல பொறாமையுடன் பார்ப்பார்கள். அவர்கள் கண் வைக்காமல் இருக்கவே சில பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.

இளங்கோவன் எனக்கும் அருணபாரதிக்கும் சில சப்பாத்திகளையும் சிறப்பு தேநீரும் வாங்கித் தருவார். அரசியல் கைதிகளுக்கு காலையில் தேநீர் வழங்கப்படும். ஆனால், அது தேநீர் மாதிரி கூட இருக்காது.

ஒரு கோப்பைத் தேநீர் கிடைப்பதற்கு நாங்கள் முதல் நாள் இரவே தீவிரமாகத் திட்டமிடுவோம். எப்போதும் பாதி வயிறு பசித்தே இருக்கும். பார்வையாளர்கள் பழங்கள் வாங்கி வந்தால், சந்திப்பு வாசலில் உள்ள காவலர்கள் மாமூல் போக, மீதம் கிடைப்பதை நாங்கள் பங்குபோட்டு மாளாது.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடும் வழக்கம் எனது. எனக்குப் பசிக்கும்போது இரவு ஒன்பது மணி ஆகும். மாலை ஆறு மணிக்குக் கொடுத்த உணவு காய்ந்து போயிருக்கும். பசியில் தூக்கம் வராது. அருணபாரதி என் தலையை வருடிக் கொடுத்து உறங்க வைப்பார். இப்படி அவர் அதிகமாக வருடியதில் ஓர் இரவு, என் கனவில் எனக்கும் எனக்குப் பிடித்த பிரபல நடிகைக்கும் திருமணமே நடந்தது.

தேர்தல் முடிவுகள் வந்தன. தூர்தர்சன் ஒளி பரப்பு ஆகும் கொட்டறைக்குச் சென்றோம். ஈரோட்டில் இளங்கோவன் தோற்றார் எனும் செய்தி, ஒட்டிய வயிற்றிலும் பால் வார்த்தது.

பாலை, திரைப்படப் பணிகள் தொடங்கியபோது, நடிகர் தேர்வு எனக்கு வெகு எளிதாக இருந்தது. சிறையில் எங்களுடன் இருந்த தாயம்மா, தமிழ்ச் செல்வன், எங்களுக்கு ஜாமீன் வாங்க அலைந்த இளையராஜா ஆகியோரை நடிக்க வைத்தேன். அவ்வளவு மோசமான நெருக்கடியிலும் எனக்கும் அருணபாரதிக்கும் சப்பாத்தி வாங்கித் தந்த இளங்கோவன், பாலையின் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியமர்த்தப்பட்டார்.

மேலும் கோவைச் சிறையில் எனக்கும் என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் நேர்ந்த அனுபவங்கள், என் அடுத்த திரைப்படத்தில் முக்கியச் சம்பவங்களாக இடம் பெறுகின்றன.

தான் தேர்தலில் தோற்றாலும், எனக்கு நடிகர்களை, தயாரிப்பு நிர்வாகியை, திரைக் கதைச் சம்பவங்களை வழங்கி, தொடுத்த வழக்கிலும் வெற்றி பெறாமல், ஒரு தியாக திருவுருவமாக திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திகழ்கிறார்.

No comments:

Post a Comment