Saturday, January 19, 2013

செம்மொழித் தமிழரின் வேளாண் நுட்பங்கள்!


செம்மொழித் தமிழரின் வேளாண் நுட்பங்கள்!

ம.செந்தமிழன்
சங்கம் 4- நிகழ்வில் நான் வாசித்த ஆய்வுக் கட்டுரை (23/12/12)பசுமைப் புரட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் அனைவரும் மரபுசார்ந்த தமிழக வேளாண் தொழில்நுட்பங்களைக் கேலி செய்யும் வழக்கம் உள்ளது. 

இந்தியா முழுக்க பசுமைப் புரட்சிக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்பட்டதில் உள்ளூர் மரபு சார்ந்த தொழில் நுட்பங்களைக் குறைகூறும் வழக்கம் முக்கியப் பங்கு வகித்தது. இன்றுவரை இந்தப் போக்கு நிலவுகிறது. தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் நம்ப இயலாத அளவு மோசமானவை. 

ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கடைப்பிடித்து, மேம்படுத்தி வந்த எண்ணற்ற வேளாண் தொழில்நுட்பங்களை 50 ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிட்டது பசுமைப் புரட்சி. 

உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம், வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தது. அரசர் முதல் கடைநிலை மாந்தர் வரை அனைவரும், வேளாண் பாதுகாப்பு என்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். இதனால், பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். இந்தத் தொழில்நுட்பங்கள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக, சங்க இலக்கியங்களில் இப்பதிவுகள் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. மேலும், சங்கப் பாடல்களில் உள்ள பயிர்த் தொழில்நுட்பங்கள் இன்றைய விவசாய நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சேதி.

சங்ககால விவசாயத்தின் சிறப்பு –இயற்கை அமைப்பிற்கேற்ற வகையில், நிலத்தை வகைப்படுத்திப் பிரித்ததுதான். 

மலை, காடு, ஆற்றோரச் சமவெளி, கடலோர நன்னீர்ப் பகுதிகள் ஆகிய நான்கு வகை நிலங்களிலும் பயிர்த்தொழில் செய்யப்பட்டது. இந்த நான்கு வகை நிலங்களுக்கும் எனத் தனித் தனியான தொழில்நுட்பங்கள் இருந்தன.


தமிழ்ச் சமூகத்தின் இலக்கணத்தைத் தொகுத்த தொல்காப்பியர், ஒரு நிலத்திற்கான பயிர்களை மற்ற நிலத்தில் செய்வதை ‘மயக்கம்’ என்றார். அதாவது, இயற்கையின் இயல்புக்கு மாறான செயல் என்றார். இந்தக் கருத்தின் பின்னே, சூழலியல், மண்ணியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகள் குறித்த அறிவு உள்ளது. 

குறிப்பிட்ட நிலத்தின் நீர்ப் பிடிப்புத் தன்மை, சத்து, தட்ப வெப்பம், மழை அளவு, நீர் இருப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில்தான் அந்த நிலத்தில் இயற்கையான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. இதுவே இயற்கை நியதி. இந்த விதிக்குப் புறம்பாக, அந்தநிலத்திற்குப் பொருத்தமில்லாத பயிர்களைப் பயிரிட்டால், அது கால ஓட்டத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை சங்ககாலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். 

நெல் விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். மலை, ஆற்றோரச் சமவெளி ஆகிய இரு நிலங்களிலும் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இவை தவிர, கடலோரக் கழிமுகங்களிலும், காடுகளின் ஓரங்களிலும் கூட நெல் விளைவிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஆயினும், இவற்றைப் பொது விதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது. 

பெரும்பாலான நெல் விவசாயம் ஆற்றோரங்களிலும், குறைந்தளவு மலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. 

மலைகளில் பயிரிடும் நெல்லுக்கெனத் தனி வகைகள் இருந்தன. அந்த வகைகள் மலைகளில் நிலவும் குளிர், மித வெப்பம் ஆகியவற்றைத் தாங்கி வளரும் திறன் கொண்டவை. மலைநெல் என்ற வகையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். 

ஆற்றங்கறைச் சமவெளிகளில் பயிரிடப்பட்ட நெல் வகைகள், கடும் வெப்பம், வெள்ளம், மிதமான வெப்பம், நீடித்த மழை ஆகியவற்றைச் சமாளித்து வளருபவை. செந்நெல், வெண்ணெல் உள்ளிட்ட பல வகைகள் மருத நிலத்துக்கென இருந்தன. 

இன்றும் கூட, மாப்பிள்ளை சம்பா எனும் நெல்வகை பல்வேறு பருவமாற்றங்களைத் தாங்கி வளரும் தன்மையுடன் இருப்பதைக் காணலாம். இந்த மாப்பிள்ளைச் சம்பா, நெற் பயிர் ஏறத்தாழ ஐந்தரை அடி உயரம் வளரும் ஆற்றலுடையது. 

மடுமுழுங்கி, எனப்படும் ஒரு நெல் வகை, இன்றும் அரிதாகப் பயிரிடப்படுகிறது. இம் மடுமுழுங்கி நெல், பெருவெள்ளத்தையும் தாங்கி, அழுகிவிடாமல், வளர்கிறது. தஞ்சையின் புன் செய் நிலப்பகுதிகளில் பயிரிடப்படம் மட்டை நெல், வறட்சி தாங்கி வளரும் தன்மையுடையது.

இவைபோல, எண்ணற்ற வகைகள் சங்ககாலத்தில் இருந்தன.

தமிழகம் முழுக்க நெல் வேளாண்மை நடக்கும் இன்றைய நிலை, உண்மையில் தமிழரின் மரபு சார்ந்த சிந்தனைகளுக்கு முற்றிலும் மாறானது.

எல்லா நிலங்களிலும் நெல் விவசாயம் செய்வது முறையற்றது அல்லது சாத்தியக் குறைவானது என்பதைப் பல்வேறு புலவர்கள் வலியுறுத்தினர்.

’புன்புலச் சீறூர் நெல்விளை யாதே’ என்கிறது புறநானூற்றுப் பாடல் (328). அதாவது, புன்செய் நிலத்தில் நெல் விளையாது என்பது இதன் பொருள். 

நெல்லுக்கு நீர் அதிகத் தேவை என்பதாலும் பிற சூழலியல் காரணிகளையும் கணக்கில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டது. 

ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்வதற்குரிய முல்லை நிலத்தில் எந்தெந்தப் பயிர்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது மற்றொரு பாடல்.
’வரகு, தினை, கொள்ளு, அவரை இந்த நான்கும் இல்லாமல் பிற உணவுப் பயிர் இல்லை’ என்பது அப்பாடல் (புறம் 355). 

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை – 335 

இந்த நான்கு மட்டுமே முல்லை நிலத்தின் உணவுப் பயிர்கள் என்பதல்ல, இதன் பொருள். மாறாக, வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய நான்கு பயிர்களையும் முல்லை நிலத்தில் தவிர்க்கவே இயலாது, இப்பயிர்களே முகாமையானவை என்கிறார் புலவர் மாங்குடிக்கிழார்.


பயிரிடும் முறையிலும் நிலத்துக்குத் தகுந்த நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. மலைச் சாரலில் பயிர் செய்வது பற்றிய குறிப்பு நற்றிணையில் உள்ளது (209). 


மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென பல விளைந்து


எனத் துவங்குகிறது அப்பாடல். பாடியவர் நொச்சி நியமங்கிழார் எனும் புலவர். 

இப்பாடலின் பொருள் என்னவெனில்,
மலைவாழ் மக்கள், மழைக் காலத்திற்கு முன், தமது தோட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தினர். அதாவது, தோட்டத்தின் வேலிக்கு வெளியே உள்ள நிலத்தையும் பண்படுத்தி வேலிக்குள் கொண்டுவந்தனர். மழை பெய்யும் முன், காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததும் மண் உழவுக்கு ஏற்ற பதத்திற்கு வந்துவிட்டது. ஆகவே, மழைக்கு முன்னே, நிலத்தை உழுதனர். இந்தப் பதம் ‘தளி பதம்’ எனப்பட்டது. ’தளி’ என்பதற்கு, குளிர், மெல்லிய தூறல், மேகமூட்டம் ஆகிய அர்த்தங்கள் உள்ளன. மழை பெய்து மண்ணில் நீர்த் தன்மை அதிகரிக்கும் முன், தளி பதம் பார்த்து விதைத்துவிட வேண்டும் என்பதே இதில் கவனிக்கத்தக்க நுட்பம்.

உழுத பிறகு, குறைந்த விதைகளை அதிக இடைவெளி விட்டு தூவினர். இதன் பலனாக, பயிர்கள் செழிப்புடன் வளர்ந்து அதிக விளைச்சல் கிடைத்தது. இந்த நுட்பம், ’சிலவித்து அகல விட்டு பலவிளைந்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையே இன்று ஒற்றை நாற்று நடவு முறை எனப்படுகிறது. இன்றும் தமிழக மலைக் கிராமங்களில் இந்த முறைப்படி பயிர் செய்கின்றனர். குறிப்பாக, மேட்டூர் அருகே உள்ள பாலமலைக்கு நான் சென்றபோது, ஓரிரு நாற்றுகளை மட்டுமே நடும் வழக்கத்தைக் கண்டேன். பொதுவாகவே, இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் நாற்று நடும் வழக்கம் அங்கே உள்ள பழங்குடி மக்களிடம் இன்றும் உள்ளது. ஆயினும், ஒற்றை நாற்று நடவு முறை, தமிழர்களின் மரபிலேயே ஊறிய ஒன்றுதான், என்ற புரிதல், தமிழக வேளாண் துறையிடம் இல்லாதது வருந்தத்தக்கது.

மருத நில நெல் விவசாயத்துக்கென ஏராளமான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அந்த முறைகள் இன்றைய தேவைகளுக்கும் தீர்வாக அமைகின்றன. சிலவற்றைக் காண்போம்.

அதற்கு முன் மருத நில விவசாயத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். மருதநிலம் ஆற்றுச் சமவெளி என்பதால், ஆற்று நீரின் வரத்து வயல்களுக்கு அதிகமாக இருந்தது. மேலும், அக்காலத்தில் ஆற்று நீரை வயல்களில் பாய்ச்சுவதற்கான நீர் மேலாண்மை முறைகள் இப்போதைய முறைகளைக் காட்டிலும் வலுவாகவும் இயற்கையின் இயல்புகளுக்கு நெருக்கமானவையாகவும் இருந்தன. 

பயிர்த் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற விதத்தில், ஆற்று நீரை அக்கால அரசாங்கம் முறைப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது உள்ளது போல், நீரின் வரத்துக்குத் தகுந்தாற்போல தண்ணீர் திறப்பு என்ற நிலை அன்று இல்லை எனத் தோன்றுகிறது. மாறாக, தேவைக்கு ஏற்ற தண்ணீர் திறக்கப்பட்டது. அல்லது, தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு ஏற்ற முறையில் விவசாயம் செய்யப்பட்டது.

மருத நிலத்தின் நெல் வயல்கள் எப்படி இருந்தன எனப் பார்ப்போம். 

நெல் வயல்களில் மழை பெய்தபோது, கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்தன. 
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
....நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – 287
(புறம் 287)

நெல் வயலின் அடியில் மீன்கள் இருந்தன. நீர் மட்டத்தில் குவளை மலர்கள் பூத்திருந்தன. அதற்கும் மேலே நெல் விளைந்திருந்தது. என்கிறது மற்றொரு புறநானூற்றுப் பாடல்.கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396 
(அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர்)

மற்றொரு புற நானூற்றுப் பாடல் பின்வருமாறு சித்தரிக்கிறது;
’நெல் வயலில் பயிர்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. அந்தப் பயிர்களின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருந்தன. அறுவடைக்குச் சென்ற உழவர்கள் பறவைகளுக்குச் சேதம் ஏற்படக் கூடாதென்ற கவலையுடன், அவை பறந்து செல்லும்படி ஒலி எழுப்பினர். இந்த ஓசையைக் கேட்டு, வயல்களைச் சுற்றி இருந்த மூங்கில் காடுகளில் இருந்த தேனீக்கள், தேனடையை விட்டுப் பறந்தன. சுற்றி இருந்த மக்கள் தேன் வடித்துக் கொண்டனர்’. (புறநானூறு பாடல்: 348)

-மேற்கண்ட மூன்று காட்சிகளும் மூன்று வகை நெல் பயிர் முறைகளைக் கொண்டுள்ளன. 

முதல் வகை, வயலில் ஆற்று நீரைப் பாய்ச்சி மீன் வாழும் அளவுக்கு எப்போதும் நீர் தேக்கி வைத்திருக்கும் முறை. இந்த முறை அக்காலத்தில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நற்றிணைப் பாடல் ஒன்று இம்முறையைச் சுவைபடச் சித்தரிக்கிறது.

‘நெல் அறுவடைக்குச் சென்ற உழவர்கள், விதை எடுத்துச் சென்றனர். வயல்களில் இருந்த மீன்களைப் பிடித்துக் கொண்டு திரும்பினர்’ என்கிறது அப்பாடல் (210).


அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர’

என்ற அப்பாடலை இயற்றியவர் மிளைகிழான் நல்வேட்டனார்.

இதன்படி, 
• அறுவடையின் போதே விதைக்கப்பட்டது
• அறுவடையின்போதும் வயலில் மீன் வாழுமளவு நீர் இருந்தது
• விதைப்புக்காக, நீரை வடித்தனர். அப்போது மீன்கள் சிக்கின
-ஆகிய செய்திகளை உணர முடிகிறது.

இரண்டாம் வகை வயல், பல்லுயிர்ப் பெருக்கத்தின் சிறந்த சான்றாக உள்ளது. இந்த வயலில் மூன்று அடுக்குகள் உள்ளன. நீரின் அடியில் மீன்கள், நீர் மட்டத்தில் நீர்த் தாவரம், அதற்கும் மேலே நெற் கதிர்கள். நீர்த் தாவரங்கள் வளர்ந்து பூக்கும் காலம் வரை, இந்த வயலில் களைப் பறிப்பு உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு நடந்திருந்தால், நீர்த் தாவரங்கள் பூக்குமளவு வளர்ந்திருக்காது. ஆகவே, இது இயற்கைக்கு மிக நெருக்கமான விவசாயத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இருந்த வயல் ஆகும். அதாவது, இந்த வயலில் விதைப்புக்குப் பிறகு, நீர் மேலாண்மை மட்டுமே கவனிக்கப்பட்டுள்ளது, களை, எரு கொட்டுதல் உள்ளிட்ட வேலைகள் நடக்கவில்லை. 

ஆஸ்திரேலிய வேளாண் அறிஞர் பில் மோலிசன், தான் முன் வைக்கும் Perma Culture எனப்படும் நீடித்த வேளாண், முறையில் இம்மாதிரியான வயலை வலியுறுத்துகிறார். 

ஆயினும் இம்முறை நமது முன்னோர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகும்.


மூன்றாம் வகை, முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்ப வகையில் உள்ள வயல் ஆகும். இந்த வயலில், அறுவடையின்போது நெற் பயிரில் பறவைகள் கூடு கட்டியுள்ளன. ஆகவே, இது பிற நெல் வகைகளைக் காட்டிலும் நீண்ட காலப் பயிர் விளைந்த வயல் எனலாம். மேலும், இந்த வயலில் முந்தைய வயல்களைப் போல் நீர் தேக்கப்படவில்லை. அதேவேளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர். இந்த வயலிலும் மனித நடவடிக்கைகள் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் பறவைகள் கூடு கட்டியிருக்காது. ஆகவே, இம்முறையும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலானதே.

இந்த மூன்று வயல்களும் உதாரணங்கள்தான். இவைபோல, ஏராளமான தொழில்நுட்பங்கள் நமது இலக்கியங்களில் உள்ளன. 

ஜப்பானிய அறிஞர் மசானபு புக்கோகா முன் வைத்த, ’ஏதும் செய்யாத (Do Nothing)’ இயற்கை வேளாண்மை’த் தொழில் நுட்பங்கள், தமிழகத்தில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறையில் இருந்தன. இதற்கான சான்றுகளாக மேலேயுள்ள மூன்று நெல் பயிரிடும் முறைகளையும் கூறலாம். 

இவை தவிர, புக்கோகாவின் தொழில்நுட்பங்களில் சிறப்பு வாய்ந்ததான, ‘அறுவடையின்போதே அடுத்த பயிரை விதைப்பது’ என்ற முறையும் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.

‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்’ என்கிறது ஐங்குறுநூறு 
(மருதம் 3 பாடியவர் ஓரம்போகியார்).அதாவது, விதைக்கச் சென்ற உழவர்கள் அறுவடை முடித்து நெல்லோடு திரும்பினர் என்கிறது இந்தப் பாடல். பொதுவாகவே, அறுவடைக்குப் பின் விதைப்பு என்ற இன்றைய முறை அக்கால மருதப் பாடல்களில் குறைவாகவே உள்ளது. 

அறுவடையின்போதே விதைத்து விடும் வழக்கம் பரவலாக இருந்தது. உழாமலே விதைத்தனர் என்பதையும் இப்பாடல் மறைமுகமாக விளக்குகிறது.

• அறுவடையோடு விதைத்தல்
• உழவு செய்யாத விதைப்பு
• களை நீக்காமல், நீர் மேலாண்மையின் வழி களைக் கட்டுப்படுத்தல்
• பயிர்க் காலத்தில் வயலில் வெளி இடு பொருட்கள் சேர்க்காதிருத்தல்
-ஆகியவை புக்கோகாவின் கோட்பாடுகளில் அடிப்படையானவை. 
இவை அனைத்துமே நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டன. உண்மையான இயற்கை வேளாண்மையின் முன்னோடிகளாக தமிழர்கள் இருந்தனர் என்பதற்கான சான்றுகளே முன்னர் கண்டவை.

மேலும், பல்லுயிர்ப் பெருக்கம் என்பது இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற அறிவியலாக உருவெடுத்துள்ளது. சங்கத் தமிழர் வேளாண் முறைகளில் மீன், நத்தை, நண்டுகள், செடிகள், கொடிகள், வண்டுகள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகளையும் அரவணைத்துச் செல்லும் விதமான தொழில்நுட்பங்கள் இருந்தன. 

சங்கத் தமிழர் வேளாண் அறிவியல் குறித்த ஆய்வுகள் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கவில்லை என்பது வருத்ததிற்குரிய சேதி. சில ஆர்வலர்களும் வேளாண் அறிவாளர்களும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். 

இத்துறையில், வேளாண் அறிவாளர் பாமயன், சில முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.
சங்க காலத்தில் உழாத வேளாண்மை இருந்தது என்பதற்கான நேரடியான சான்றை அவர் முன் வைக்கிறார்.
‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்கிறது சிறுபாணாற்றுப் பாடல். உழவு செய்யாமல் விதைக்கப்பட்ட வளமான நிலம், என்பதுவே இதன் பொருள்.’உழாது வித்திய பரூஉக் குரற் சிறுதினை’ என்கிறது புறநானூறு (168). 
இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்களை நம் மரபிலேயே வைத்துக் கொண்டு, அவற்றை அறியாதவர்களாக நிற்கிறோம். இது அவலமான நிலை ஆகும்.

இவை தவிர, அக்காலத் தமிழர்கள், கம்போஸ்டு (Composed manure) எனப்படும் மட்கு எரு தயாரித்துள்ளனர் என்பதை பாமயன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். 

’தாது எரு மறுகின் மூதூர்’ என்பது அகநானூறு (165). தாது எரு என்பது மட்கு எரு ஆகும். இயற்கை வேளாண்மை, இடுபொருள் வேளாண்மை, நீடித்த வேளாண்மை ஆகிய இன்றைய நவீன வேளாண் முறைகள் அனைத்துக்குமான தொழில்நுட்பங்கள் சங்கப் பாடல்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறைப்படி வெளிக்கொணர்ந்து, இன்றைய உழவர்களுக்குப் பயன்படச் செய்வது அரசின் கடமை ஆகும். 

ஆனால், தமிழக அரசு இதுபோன்ற உருப்படியான ஆய்வுகளுக்கு ஆதரவு அளிப்பதே இல்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை, மொழி வேறு; தொழில்நுட்பங்கள் வேறு என்ற அறிவுக்குப் புறம்பான நிலைப்படுதான் உள்ளது. 

மொழியில்தான் தொழில்நுட்பங்கள் உள்ளன. மொழியைக் காக்க வேண்டும் என்றால், அம்மொழியில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைக் காக்க வேண்டும்.

தமிழ் செம்மொழி என்றால், அதன் இலக்கணச் சிறப்பால் மட்டும் அல்ல; தமிழில் உள்ள அறிவுச் செல்வம்தான் அதன் தனிச் சிறப்பு. தமிழக ஆட்சியாளர்கள் அனைவருமே, தமிழ் மொழியை வெறும் இலக்கிய , இலக்கண மொழியாக சித்தரித்தனர். அறிவு என்றாலே, மேற்குலகிலிருந்துதான் இறக்குமதியாகும் என்ற மூடநம்பிக்கையைப் பரப்பியுள்ளனர். ஆங்கிலம் என்றால் அறிவு; தமிழ் என்றால் பிற்போக்கு என்பதும் இவர்கள் ’கண்டுபிடிப்புகளில்’ ஒன்று. மேற்குலகம் நமது வேளாண்மைக்கு சாவு மணிதான் அடித்ததே தவிர, நன்மை செய்யவில்லை. இதனால், விவசாயம் என்பதே தமிழகத்தில் கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தின் உயிர்நாடியாகிய விவசாயிகளின் கழுத்தைப் பசுமைப் புரட்சியின் பேரால் நெறித்துக்கொண்டு, செம்மொழி பெருமை பேசுவது முரண் ஆகும். இதைக் கண்டு வருங்காலம் நகைக்கும். 

உண்மையிலேயே, செம்மொழியான தமிழ் மீது அக்கறை இருந்தால், முன்னோர்களின் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்து, தற்காலப் பயன்பாட்டுக்குத் தக்கபடி மாற்ற வேண்டும். அப்படிச் செய்தால்தான், மொழி வாழும். வெறுமனே பழம்பெருமை பேசுவதாலோ மாநாடுகள் நடத்தித் திருவிழாக் கொண்டாடுவதாலோ தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் நற் பலன்கள் ஏற்படுவதில்லை.

ஆகவே, இந்த நிகழ்வு நமது மரபுசார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என வேண்டுகிறேன். 

இயற்கையைப் போற்றுவோம்! தமிழராய் வாழ்வோம்!

நன்றி!
(இணைப்பு படம்: Paul Gregory- எங்கள் வேளாண் தோட்டத்தில் உள்ள குடிசை- ஆச்சாம்பட்டி