Friday, July 16, 2010

மறைக்கப்பட்ட தமிழின வரலாறு


தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேச விடுதலை எண்ணமும் மேலோங்கி வரும் இவ்வேளையில், தமிழரின் போராட்ட வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்துதான் எந்த இனமும் தமது எதிர்காலத்தைத் திட்டமிட இயலும். அவ்வகையில், தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே போராடி வந்தாலும், அப் போராட்டங்கள் அனைத்தும் தவறான வழி நடத்தல்களால் / பிழையான கோட்பாடுகளால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ’தமிழ் – தமிழர் – தமிழ்நாடு’ என்ற சிந்தனை மேலோங்கியது. இந்தச் சிந்தனை எழுச்சியை வெகு தந்திரமாக மடை மாற்றியது திராவிட இயக்கம். ‘திராவிடம் – திராவிடர் – திராவிட நாடு’ எனும் புத்தம் புதிய முழக்கங்களை அது முன் வைத்தது. இம் முழக்கம், ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டு கால தமிழ் இன வரலாற்றில் ஒரு போதும் நிலவாதது ஆகும். மேலும், திராவிடர் எனும் சொல்லால் தமிழர்கள் தம்மை, அதற்குமுன் ஒருபோதும் அழைத்துக் கொண்டதும் இல்லை.


இன்றும், தமிழர் என்ற அடையாளத்தை மறைக்க திராவிட முகமூடியைச் சுமந்து வருவோர் இருப்பதைக் கவனித்தால், தமிழ் – தமிழர் – தமிழ் நாடு ஆகிய முழக்கங்களின் இன்றியமையாமை விளங்கும்.


தனித் தமிழ் நாடு வேண்டும் என்ற விருப்பம் தமிழர்களின் ஆழ் மனத்தில் எப்போதும் உண்டு. ஏனெனில், வரலாற்றில் பெரும்பான்மையான காலப் பகுதிகளில் தமிழர்கள் தமக்கான அரசுகளை அமைத்து ஆண்டவர்கள். அந்த நினைவு தமிழ்ச் சமூகத்தின் மா உளவியலில் (mass psychology) அழுந்தப் பதிந்துள்ளது. ஆரிய பிராமணர்களின் ஆழ்மனம் எப்போதும் ஒரு நிலத்தில் கால் ஊன்றாமல், சுரண்டுவதற்கான இடம் தேடி அலையும் என்பது இவ்வகை மா உளவியலே.


தமிழர்களின் தனி நாடு வேட்கை, காலந்தோறும் வெடித்துக் கொண்டுதான் இருந்துள்ளது. தமிழர் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாக இக் கட்டுரையில் காண்போம்.


சிந்து வெளித் தமிழர்


இந்திய நிலப் பரப்பின் வட மேற்கில் தொடங்கிய சிந்துவெளி அரசு, தெற்காசியாவின் வட மேற்குத் திசை வழியே ஏறத்தாழ 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கிமு.2600 – கிமு 1900), மிக உயர்ந்த நாகரிகத்தை எட்டியிருந்தது சிந்து வெளித் தமிழர் அரசு. சிந்து நதியின் பெரு வெள்ளத்தையே தடுத்து, பாசனம் செய்ய அணைகள் கட்டி இருந்தனர் சிந்துவெளித் தமிழர்கள். அடுக்கு மாடி வீடுகள், நகரின் மையத்தில் நீச்சல் குளம், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீதிகள், தொழிலாளர்களுக்கென தனி வீடுகள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிந்துவெளியில் இருந்தன. உலகின் மிகப் பெரிய பண்டைய நாகரிகம் இது ஆகும்.


கப்பற் கலையில் சிந்துவெளித் தமிழர் விற்பன்னர்களாக இருந்தனர். சிந்து ஆற்றின் வழியே கலங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலுக்கு வந்து, அங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். இறக்குமதிக்கும் இவ்வழியே பயன்படுத்தப்பட்டது.


சிந்துவெளி அரசு தமிழர்களுடையதுதான் என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வாளர்கள் அனைவரும் சிந்துவெளி மக்களை, ’மூல திராவிடர்’ என்கின்றனர். தமிழர் என்று அறுதியிட்டுக் கூறவியலா வண்ணம் ’திராவிட அரசியல்’ தமிழகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகளும் கிடைத்துவிட்டன. அக்காலத்தில் இருந்த தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆதலின், சிந்துவெளி மொழியை மூலத் தமிழ் மொழி என அழைத்தலே பொருத்தமானது. ஆனால், திராவிடம் குறித்த பெரு எடுப்பிலான பரப்புரையின் விளைவு, ஆய்வுலகையும் தாக்கியுள்ளதால், சிந்துவெளி மொழியை ‘ மூல திராவிட மொழி’ என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.


சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்துகளை, ஒலி வடிவத்துடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் அறிஞர் பலர். முனைவர்.இரா.மதிவாணன் தமது ஆய்வில் வெளியிட்டுள்ள சிந்து வெளி எழுத்துகள் சிலவற்றைக் காண்போம்;


அவ்வன்
அண்ணன் அப்பு
அட்டன்
அதியன்
சானன் அவ்வன்
நன்னன்
அந்தனன்


(Indus script Dravidian – Dr.r.Madhivanan / Tamil chanror peravai/ 1995)


ஆகவே, சிந்துவெளி அரசு தமிழர் அரசு என்பதில் யாதொரு ஐயமும் தேவை இல்லை. சிந்துவெளித் தமிழர் அரசு நிலைகுலையத் தொடங்கியது ஆரியப் படையெடுப்பினால்தான். தமிழர்கள் மாபெரும் நாகரிகத்தைக் கட்டியாண்ட காலத்தில், கொள்ளையர்களாகவும் கால்நடை மேய்ப்பவர்களாகவும் வட மேற்கு இந்தியாவிற்குள் புகுந்தவர்கள் ஆரியர்கள். தமக்கென ஒரு நிலையான நாடு இல்லாமல், நிலைத்த அரசு இல்லாமல் வழிப்பறி செய்தும் சூறையாடியும் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆரியர்கள். கால்நடை மேய்த்தல் ஒன்றுதான் அவர்கள் அறிந்த உற்பத்தி சார்ந்த தொழில். பல்வேறு நாகரிகப் பழங்குடிகளின் குடியிருப்புகளைச் சூறையாடி அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளையும் உற்பத்தி நுட்பங்களையும் தமதாக்கிக் கொண்டுதான் ஆரிய இனம் சிந்துவெளிக்குள் நுழைந்தது.


தமிழரது சிந்துவெளி அரசின் கட்டமைப்பும் வளமையும் ஆரியருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிந்துவெளியின் மீது ஆரியர் போர் தொடுத்தனர். ஆரியரது போர் முறையின் அடிப்படை ஒன்றுதான் – அழித்தொழி! எஞ்சியதைக் கைப்பற்று!


இந்த அடிப்படையில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இவ்விதமான போரை அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு, தற்காப்பு நிலை தேவைப்பட்டது. ஏனெனில், ஒரு மாபெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள். நகரங்கள், கப்பல்கள், எண்ணற்ற உற்பத்தி ஆலைகள், வேளாண் நிலங்கள், அணைகள் என அவர்கள் கட்டமைத்திருந்த செல்வங்கள் ஏராளம். பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களும் அல்லர். அவர்கள் அமைதியான வாழ்வியலைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்தனர்.


ஆரியர்களுக்கோ அழித்தொழிப்பதும், எஞ்சியவற்றைப் பிடுங்குவதுமே வாழ்வியல். வெறிபிடித்த கொள்ளைக் கூட்டத்திற்கும் நாகரிகமயப்பட்ட மாந்தருக்கும் இடையே நடந்த போர் அது. இப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. ஆரியரது முதல் வேதமான, ரிக் இப்போர் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. ரிக் வேதம் வாய்வழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரிய முனிவர்கள் தமது வரலாற்றைப் பாடல்களாக்கி வழி வழியாகப் பாடியே, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு ஆரிய வெறி ஊட்டினர். ஆரியருக்கு அப்போது எந்த எழுத்து மொழியும் இல்லை.


ரிக் வேதம், சிந்துவெளித் தமிழரை ‘தஸ்யூக்கள்’ என்கிறது. தாசர்கள் என்பது இதன் தமிழ் ஒலிப்பு முறை. தாசர்கள் என்றால், ’வள்ளல் என்பதே மூலப் பொருள். ஆனால், அது இப்போது அடிமை என்று மாறி விட்டது. ஆரியன் என்றால் நாடோடியாகத் திரிகிறவன் என்று பொருள். அது இபோது உயர்ந்தவன் என மாறிவிட்டது’ என்பார் அறிஞர் கோசாம்பி.(நூல்: பகவான் புத்தர்)


பெரும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் வாழ்ந்த சிந்துத் தமிழர், ஆரியருக்கும் பிறருக்கும் வாரி வழங்கிய வள்ளன்மையுடன் வாழ்ந்ததன் அடையாளம் தாசர் என்ற பெயர்.


சிந்துவெளித் தமிழரது தலைவர், விருத்திரன் என்று அறியப்படுகிறார். இந்திரன், ஆரியரின் தலைவன். இந்திரன், குடி வெறியன், பெண்பித்தன். தமிழர்களது நீர்த் தேக்கங்களைப் பாதுகாக்கும் தலைவராக, அகி என்பவர் அறியப்படுகிறார். இந்திரனது படைகள், சிந்துவெளியின் நீர்த் தேக்கங்களையே கூடுதலாகக் குறி வைத்துத் தாக்கின. இதற்கு ஆரியர்கள் கூறிய காரணம் கவனிக்கத்தக்கது. ’மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பதுபோல், இந்தத் தாசர்கள் தண்ணீரைப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! இதைக் கட்டுத்தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவதுபோல், சிறைப்பிடித்து வைத்திருக்கின்ற இந்தத் தண்ணீரை அவிழ்த்துவிடு இந்திரா’
-இவ்வாறு ஆரிய முனிவர்கள் / தலைவர்கள் கூறக் காரணம் என்னவாக இருக்கும்?


ஒரு பேரழிவை ஏற்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் விதமான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் பின்னணியாக இருக்கலாம். ஆரியரது உடன் பிறந்த இயல்பும் இதுவாகும். சிந்துவெளித் தமிழரை அழிப்பதற்கு ஆரியர் கூறிய பல்வேறு காரணங்களில் சில,


• தாசர்கள் வேள்வி செய்யாதவர்கள். அதுமட்டுமன்று, ஆரியரது வேள்விகளைத் தடுக்கிறார்கள். இரவிலே வந்து வேள்விகளை அழித்துச் செல்கின்றனர். ஆகவே, இவர்களை அழிக்க வேண்டும்.
• தாசர்கள் கடவுள்களை நம்பாதவர்கள்.
• தாசர்கள் அசுரர்கள்.
• தாசர்கள் மதச் சடங்கு அற்றவர்கள். அறிவு இல்லாதவர்கள். மனிதத்தன்மையே இல்லாதவர்கள்
-இவ்வாறெல்லாம் சிந்துத் தமிழர்கள் மீது ஆரியர்கள் வெறுப்பு ஏற்படுத்தினர்.
ஒரு சமூகத்தை அழிக்கும் முன், அச் சமூகம் குறித்த பொய்யான அபாயகரமான மதிப்பீடுகளை உருவாக்குவது ஆரியம் இன்றும் செய்யும் திட்டமிட்ட பணியாகும்.


ஈழத்தில் பேரழிவு ஏற்படுத்தும் முன், ’தீவிரவாதம், சகோதர யுத்தம், ரத்த வெறி’ என்றெல்லாம் பல ஆண்டுகளாக ஆரியம் பரப்புரை செய்தது. பின்னர், அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஒரு ஞாயமான போராட்டத்தை அழிப்பதற்குத் தேவையான உள உறுதியையும் துணிவையும் அகத்திலும் புறத்திலும் வழங்கும் அடிப்படைக் காரணி இந்த பொய்ப் பரப்புரை ஆகும்.


நீர்த்தேக்கங்களின் தலைவர் அகி, இந்திரன் படைகளால் கொல்லப்பட்டார். பல நீர்த் தேக்கங்களை ஆரிய வெறிப் படை உடைத்தது. வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரம் சிந்துத் தமிழர் அழிந்தனர். விருத்திரன் காட்டில் தன் தாயுடன் ஒளிந்திருந்து சிறிய சண்டைகள் நடத்தினார். பின்னர் விருத்திரனும் தாயும் கொல்லப்பட்டனர்.


சிந்துவெளித் தமிழர்தான் ஆரியரை முதன் முதலில் எதிர்த்துப் பெரும்போர் புரிந்தோர் ஆவர். ஆரியரை எதிர்க்கும் மனத் துணிவும் மரபு வழி அறிவும் இந்திய நிலப் பரப்பில் எவரைக் காட்டிலும் தமிழருக்கே மிகுதியாக உண்டு. சிந்துவெளிப் போர் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. ஆரியர் வெற்றிகொள்ளத் தொடங்கினர். தமிழர் பகுதிகள் ஆரியக் குடியேற்றங்களாகின. பின்னர் இயற்கைச் சீற்றங்களால், சிந்துவெளித் தமிழர் நிலம் அழிந்தது.


சங்ககாலத்தில் ஆரியர் – தமிழர் போர்கள்


சங்க காலத்தில் ஆரிய – தமிழர் போர் மீண்டும் தொடங்கியது. தமிழரது ஆட்சியெல்லை, தெற்கே குமரி முதல் வடக்கே விந்திய மலை வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே, ஆரியர் ஆட்சியும், தெற்கே தமிழர் ஆட்சியும் நிலவியது.


இக்காலத்தில், தமிழர்கள் அரசுகள் அமைத்து, போர்க் கலைகள் கற்று வலுவுடன் இருந்தனர். முற்கால மூவேந்தர்கள் ஆட்சி செலுத்தினர். இக்காலத்தில், ஆரியர் தமிழரைத் தேடி வந்து படையெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை. மாறாக, தமிழ் வேந்தர்கள் இமயம் வரை சென்று ஆரியரை அழித்ததற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரிய அரசுகள் தமிழர் அரசுகளுக்கு அடங்கி வாழ்ந்தன என்பதையே வரலாறு உணர்த்துகிறது.


ஆரிய பிராமணர்கள், தமிழகத்தை நோக்கிப் பிழைப்புத் தேடி வந்தனர். அவர்களது ஆட்சியமைப்புக் கலை, தமிழக வேந்தர்களுக்குப் பயன்பட்டது. அரச உருவாக்கம் என்பது, சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை, பாகுபாடுகளை ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இப்பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் ஞாயப்படுத்தும் கோட்பாடு எதுவும் தமிழரிடத்தில் இல்லை. அவ்விதமான கோட்பாடு, இன்றுவரை தமிழரிடம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆரியரோ, ரிக் வேத காலத்திலிருந்தே பாகுபாடுகளை / சுரண்டலைக் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள். அவர்களது அர்த்தசாத்திரம், ஆட்சியமைப்புக் கலையின் உச்சகட்ட சீரழிவுகளை போதிக்கும் நூல் ஆகும்.


வேந்தர்கள் பேரரசு உருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், தமிழக அந்தணர்கள் (பிராமணர்கள் அல்ல – அறிவாளர்கள்!) தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தினர். வீரம், தமிழ் அந்தணர்களால் போற்றப்பட்டது. அதேவேளை, அறம் சார்ந்த வாழ்வியலே அடிப்படையானதாகக் கற்பிக்கப்பட்டது. புறநானூறு, தமிழ் அரசர்களின் வீரத்தைப் போற்றும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், தமிழ் அரசர்களுக்கு அறம் போதிக்கும் பாடல்கள் புறநானூற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவ்வகையான அறம் போதிக்கும் மரபு, தமிழருக்கே உரிய சிறப்பு.


தமிழத்தின் எல்லை, ‘ வட வேங்கடம் – தென் குமரி’ என வரையறுக்கபட்டது. ஆனால், தமிழ் வேந்தர்கள் பல்வேறு படையெடுப்புகளை இமையம் வரை நடத்தி வெற்றி கண்டனர். பேரரசு உருவாக்கத்தில், ஓர் அரசர் எந்த எல்லை வரை படையெடுத்துச் சென்று வெல்கிறாரோ அந்த எல்லையே அவரது பேரரசின் எல்லை ஆகும். ஆனால், தமிழர்கள், இவ்விதமாகத் தமது எல்லையை விரிவுபடுத்தவே இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய சேதியாகும்.


படையெடுத்து வெற்றி கொள்வது வேறு, இனத்தின் ஆட்சி எல்லை வேறு என்ற ஆழமான புரிதல் அக்காலத் தமிழ் வேந்தருக்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ் அந்தணர்களுக்கும் இருந்தமையை இது உணர்த்துகிறது. தமிழரின் வெளிநாட்டு வணிகத்திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப்பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.


வாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தேசிய இனத்தின் எல்லையை விரிவாக்காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திரமானது; தென் தமிழகம் கேரளமானது; மேற்கே கன்னடம் உருவானது.
பல்லவர் – களப்பிரர் ஆட்சியில் ஆரியம் வளர்ந்தது


சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர்களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.


கி.பி.2 முதல் கி.பி.9 வரையிலான 700 ஆண்டு காலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது. தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சி மொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதிகளிலும் வட மொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்கவில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்.


தமிழகத்தில் பிராமணர் குடியேற்றம்


பிராமணர் குடியேற்றங்கள் முதன் முதலாகப் பெருமளவில் நடந்தது பல்லவர் காலத்தில்தான். முதலில், தமிழகச் சிற்றூர்களில் பிற தமிழ்க் குலத்தவருடன் பிராமணரும் கலந்து வாழும்படியான குடியேற்றங்களே செய்யப்பட்டன. அதாவது, பிராமணர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் – சிறப்புத் தன்மைகளுடன், தொடக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென ஆய்ந்தால், தமிழரின் மரபுப் பெருமை விளங்கும். சங்ககாலம் வரை, ஆரிய பிராமணர்களுக்குத் தமிழரிடையே நன் மதிப்பு இல்லை. அவர்கள் இரண்டாம் தரமாகவே நடத்தப்பட்டனர். கலித்தொகையில் வரும் தலைவி, ’ நம் ஊரைவிட்டுத் துரத்தினாலும் போகாமல் சுற்றிவரும் பார்ப்பான்’ என்று ஒரு முதிய பிராமணனைக் கேலி செய்யும் பாடலை இதற்கான மிகச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். (குறிஞ்சிக்கலி – 29)


வைகை ஆற்றின் கரையில் பிராமணர்கள் வேள்வித் தீ வளர்க்கும்போது, ஆற்றில் குளித்து விளையாடிய இளம் பெண்கள் வேள்வித் தீயில் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக, பரிபாடல் காட்சிப்படுத்தியுள்ளது. (பரிபாடல் -11 / ‘ விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’ எனும் பாடல்)


மேற்கண்ட இரு சான்றுகளிலுமே, பெண்களே பிராமணர்களைக் கேலி செய்கின்றனர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.


அரசதிகார மட்டத்தில் மட்டுமே, பிராமணர்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதுவும், பொதுமைப்படுத்திக் கூற இயலாத அளவுக்கு மட்டுப்பட்டுதான் இருந்தது. சமூகத்தில், பிராமணர்களுக்கு வரவேற்பு இல்லை. அவர்களைப் பெரும்பகுதித் தமிழர்கள், தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவே கருதினர். இந்த நிலையை முதன் முதலில் மாற்றியவர்கள் திராவிடர்களான பல்லவர்களே ஆவர். முதலில், பிராமணர்களைத் தமிழர் வாழும் ஊர்களில் சமமாகக் குடியேற்றினர். பிறகு, பிரமதேய ஊர்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள்தான் முதன் முதலில் பிராமணர்களுக்கு எனத் தனி ஊர்களை உருவாக்கித் தந்தவர்கள் ஆவர்.


இந்த பிரமதேய நிலங்கள், பிராமணர்களுக்கென இலவசமாக, உரிமையாக வழங்கப்பட்டவை. இவற்றிற்கு அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இதேபோல, சமண மதத் தலைவர்களுக்கென, ’பள்ளிச் சந்தம்’ எனப்பட்ட இறையிலி நிலங்களையும் பலவர்களே உருவாக்கினர்.


ஆக, ஆரிய மதக் கருத்தியல்களை ஆதரித்து வளர்த்து, அவற்றுக்காக தமிழரது நிலங்களை தானமாகக் கொடுத்தவர்கள் பல்லவர்கள். சோழர்காலத்தில், பிராமணர்களுக்கு, பிரமதேய நிலங்கள் ’உரிமையாக்கப்படவில்லை’ என்பது இந்த இடத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சோழர்காலத்தில், பிரமதேய நிலங்கள், அரசனின், வேளாளரின் கட்டுப்பாட்டில் / மேற்பார்வையில் இருந்தன. அந்த நிலங்கள் தற்காலிக அனுபவிக்கும் உரிமையின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டனவே தவிர, உரிமை ஆக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோழர்கால பிரமதேய முறை, பிராமணர்களுக்கு நிலம் வழங்குவது என்பதல்லாமல், நிலத்தின் வருவாயில் பங்கு தருவது என்பதே ஆகும்.


பிற்காலச் சோழர் அரசமைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவர் செய்த சீரழிவே பிரமதேய முறை ஆகும். இம்முறையின் தீவினைகளைக் குறைத்தவர்கள்தான் சோழர்கள் என்பதை மேற்கண்ட ஒப்பீடு காட்டும். ஆனால், திராவிடக் கோட்பாட்டை ஆதரிப்போர், பிரமதேய நிலம் என்றால், அது சோழர் காலத்தில் தொடங்கப்பட்டது போல் எழுதுவார்கள், மேடைகளில் முழங்குவார்கள். பல்லவர், களப்பிரர் ஆட்சிகளின் பிராமண விசுவாசம் அவர்கள் கண்களுக்குத் தெரியாது. அதேபோல், சோழர்களுக்குப் பின் வந்த விஜயநகர, நாயக்க ஆட்சிகளின் பிராமண சேவையையும் அவர்கள் இதுவரை பேசியதே இல்லை.


உண்மையில், திராவிடரான பல்லவர்கள் ஏற்படுத்திய பிராமண ஆதிக்கத்தைப் பிற்காலச் சோழர்கள், தாம் அரசாண்ட குறுகிய காலத்தில் குறைத்துள்ளனர் என்பது நாம் உணர வேண்டிய உண்மை.


சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர் , பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.


தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப்படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத்தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப்படையாகப் புரியும்.


இது ஒரு எளிய உண்மையே. ஆனால், இந்த எளிய உண்மையைக்கூட தமிழர்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரிகளின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.


திராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப்பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆரியத்தின் பிள்ளையே திராவிடம்!
ஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை; கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.
பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலைநிறுத்தியபோதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.


சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பானவையாக உள்ளன. இந்தி மொழியைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென்னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம்தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத்தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.


பல்லவர்கள் தம்மை ‘பரத்வாஜ கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பிராமண குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பிராமணர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், தம்மை பிராமணர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளுமளவு ஆரியத்தில் கரைந்து போனவர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்றை முன் வைக்கிறேன்.


இவ்வினங்களின் ஆரியக் கூடாரத்தில் தமிழரையும் அடைத்து வைக்கும் சொல்தான் ‘திராவிடர்’ என்பது. பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.


தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண்களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறையான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.


20 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக்காட்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கிவிடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கையை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன் வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.


தமிழரிடையே தமிழ்த் தேசிய இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ‘ தமிழனுக்கு நாடு வேண்டும்’ என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, ’திராவிடம்தான் சரி’ என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.


தமிழரது இனப் போராட்ட வரலாற்றை,
1. ஆரியர் – தமிழர் போர்
2. தமிழர் – திராவிடர் போர்
என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :
• ஆரியர் கூட்டத்திற்கு அழித்தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.
• சிந்துவெளித் தமிழருக்கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.
• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்.


இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.


விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, ’திராவிடம்’ என்றாலேயே புரட்சிகரமான சொல் என்பது போல் மடைமாற்றம் செய்யப்பட்டது.


குருதித் தூய்மைவாதம்


இப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத்தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின் சிறப்பு.
பல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினார். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.


இவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.


விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம்மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரைவீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரை வீரன்.


அவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப்படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று. அருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரசகுலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மையை உருவாக்கிவிட்டனர். அருந்ததியர்கள் இன்று கடை நிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள்தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.


இதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே! இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச் சதியை முறித்துக் கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம்மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.


தமிழ், களப்பிரர்களை, பல்லவர்களை, நாயக்கர்களை, பிரிட்டானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள – இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.


தமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள்,
ஆரியமே தமிழரின் முதல் பகை
திராவிடம் ஆரியத்தின் கிளை!
-என்பவையாகும்.


இந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். திராவிட இனங்களான / ஆரிய பிராமணியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா. இந்திய தேசிய ஒடுக்குமுறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல; ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்களே, இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.


இவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமுகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை, இந்தியம் வளர்த்தெடுக்கிறது.


ஆகவே, திராவிடம் – இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


திராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். திராவிடர் என்றால் பிராமணர் வரமாட்டார் என்ற வாதம் முழுக்க முழுக்கப் பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப்படுத்தியதும் ஆகும்.

தகவல்களுக்கு உதவிய நூல்கள்:

சிந்து முதல் குமரி வரை – குருவிக்கரம்பை வேலு

பல்லவர் வரலாறு – முனைவர் மா. இராசமாணிக்கனார்

சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் –முனைவர் மே.து.இராசுகுமார்

Published in : http://kaattchi.blogspot.com/2010/05/blog-post_28.html

சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!

சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!
- ஆய்வுலகில் புதிய தொடக்கம்

உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையது; சீன நாகரிகம் சீனருடையது; கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை ’வேதகால நாகரிகம்’ என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, ‘அது திராவிட நாகரிகம்’ என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும்போதெல்லாம், ‘பழங்கதை பேசுவதால் என்ன பயன்?’ என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது; ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.


இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது. டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் ’விடுபட்ட இணைப்பு’ (missing link) என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது.


கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.


சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.


சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.


’சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’ என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை ‘இந்து மதத்தோடு’ தொடர்புபடுத்துகிறார். இக்கருத்தை இக் கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.


கபிலர் பாடிய இருங்கோவேள்


கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திகிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிக்ஷம் என்றாக்கினர். மகிக்ஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது.


துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.


துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
’இருங்கோவேளே...என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே...செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!’


-இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக்குமான இணைப்பு ஒளிந்துள்ளது.


கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
‘நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்ற வரியில் தொடங்குகிறது.
‘வடபால் முனிவன்’ யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.


’வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது ’பெரும் மண் பாண்டத்தில் தோன்றி’ என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, ‘ஓமகுண்டத்தில்’ என்று தவறாகப் பொருள் கூறினர். ’தட’ என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல்பொருள் ஆய்வுகளில் ‘தட’ என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.


வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.


துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.
கண்ணன் தமிழன்


நச்சினார்க்கினியாரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.


அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், ‘வடபால் முனிவர் தடவினுள் தோன்றி’ என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திரவகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.


இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை ‘தாச யாதவன்’ என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை – குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!


கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.


’கண்ணன் கருப்பு நிறத்தவன்; தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தது; ஆரியர் தலைவன் இந்திரன்’ ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.


அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா – அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).


அகத்தியரோடு தொடர்புடைய ’தட’ குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மட்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மட்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் – அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.


அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.


மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும்? என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும்? என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.


ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, ’நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி’ என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.


இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.


அழிந்த நகரங்கள்


இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்;
‘உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு’ என்கிறார் கபிலர்.


(புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு; கபிலர் குற்ப்பிடும் கழாத்தலையார் வேறு)


இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் ‘நீடுநிலை அரையத்துக் கேடு’ என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.


மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.


வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்லை; அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.


சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்டபோது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரிய பாடல்கள் கண்ணனை, ‘தாச யாதவன்’ என்கின்றன.


கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் ‘துவரை’ என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.


இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.


தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் ‘அகத்தியம்’ என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்துவிட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். ’அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்’ என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.


பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.


சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.


சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடைமாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்டகாலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியதுபோல, சிந்துவெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.


முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, ‘இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்’ என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன்வைப்பதைக் கவனிக்க வேண்டும்.


தமிழிய ஆய்வுலகம் இதுபோன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.

Published in : http://kaattchi.blogspot.com/2010/07/blog-post_10.html

உளுந்து சாகுபடிக்காரனின் சாபம்


என் பெயர் விவசாயி. வீட்டில் வைத்த பெயரைப் பற்றி நீங்கள் எந்த ஆய்வுக்கும் போகத் தேவையில்லை. ஏனெனில், எல்லாருக்கும் போலவே வீட்டில் எனக்கு வைத்த பெயர் மகிழ்வூட்டக்கூடியது. எல்லாரையும் போலவே அப் பெயருக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. என் கிராமத்தில் என்னை ஏமாளி என்றும், நகர எல்லைக்குள் கோமாளி என்றும் அழைப்பது வழக்கம். மாநகர எல்லைக்குள் எனக்குப் பெயரிடும் அக்கறையைக்கூட யாரும் காட்டுவதில்லை. உங்களிடம் பேச நிறைய சேதிகள் என்னிடம் உண்டு. இப்போது நான் என் உளுந்து சாகுபடி குறித்துப் பேச விரும்புகிறேன்.நீங்கள் இன்று காலையில் உண்ட இட்லியிலோ தோசையிலோ வடையிலோ என் தோட்டத்து உளுந்து இருந்திருக்கலாம். இது ஒன்றே உங்களுக்கும் எனக்குமான உறவு. இந்த உறவின் உரிமையில்தான் உங்களுடன் பேசும் துணிவு எனக்கு ஏற்பட்டது. அந்த உணவில் என்னுடைய மற்றும் என்னுடன் தோட்டத்தில் வேலை செய்தவர்களுடைய வியர்வை, கண்ணீர் வாடை இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உங்களுக்குக் கிடைப்பவை அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டவை. நீங்களும் அவற்றையே விரும்புகிறீர்கள். சுத்திகரிப்புச் செய்யப்படும் ஆலைகளில் தேடிப் பார்த்தாலும் அவற்றை உணரக்கூட முடியாது. ஏனெனில் அவை மாந்திரிக மாற்றத்திற்குட்பட்டுக் கரன்சிகளாக மாறி ஆலை உரிமையாளர்களின் மற்றும் வணிகர்களின் கல்லாக்களில் உறைகின்றன. காந்தியின் சிரிப்பில் கண்ணீரையோ வியர்வையையோ தேடும் வல்லமை யாருக்கு உண்டு?

கடந்த மார்கழிப் பட்டத்தில் ஒன்றரை ஏக்கரில் நான் உளுந்து விதைத்தேன். மாசி மாதத்தில் அறுவடை செய்தேன். மன்னிக்கவும், என்னால் டிசம்பர் மார்ச் என்று எழுத இயலவில்லை. மார்கழி என்றால் பனி. மாசி என்றால் முன்பனியும் வெயிலும். இதுதான் என் போன்றோரின் கணக்கு. மார்கழி என்றால் இசைக்கச்சேரி என்பது உங்களில் சிலருக்கான கணக்காக இருக்கலாம். மார்ச் என்றால் பட்ஜெட் சிலருக்கான கணக்காக இருக்கலாம். மார்கழியில் பனியில் உழுவதும் களை பறிப்பதும். மாசியில் வெயிலில் நின்று நீர் பாய்ச்சுவதும் அறுவடை செய்வதுமே எங்கள் புத்திக்கு எட்டியவை.

உளுந்து குறித்த வரவு செலவுக் கணக்கை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
உழவு (டிராக்டர்) – ரூ 1750
விதை (ஏடிடீ5)- ரூ 1650
விதைப்பு உழவு (ஏர்) ரூ 500
களை பறிப்பு ரூ 3265
பாத்தி பிடிக்க ரூ 900
அறுவடை ரூ 1200
தூற்றுதல், சுத்தம் செய்தல் ரூ 950
உளுந்து மூட்டைகளைச் சந்தைக்குக் கொண்டு செல்ல வண்டி (டாடா ஏசி) வாடகை ரூ 850
மூட்டை தூக்குபவர் கூலி ரூ 60
மொத்தம் ரூ 11065/-

இதில் நானும் என் தோட்டத்தில் பணிபுரிபவரும் பார்த்த வேலைகளுக்கான கூலி எதுவும் சேர்க்கப்படவில்லை.ரசாயன உரம், பூச்சி விக்ஷம் ஆகியவை பயன்படுத்தவில்லை. இவற்றைப் பயன்படுத்துவது பாவம் செய்வதாகும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதனால்தான் கிராமத்தில் எனக்கு நான் சொன்ன பேர் வைக்கப்பட்டுள்ளது என்பதை தயை செய்து குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும், இந்த சாகுபடி நடந்த காலத்தில் நான் வருமானம் தரக்கூடிய வேறெந்த வேலையும் செய்யவில்லை. விவசாயமும் ஒரு வருவாய் ஆதாரம் என்பதும், வேறெந்த வேலையைக் காட்டிலும் இதில் புண்ணியம் சேரும் என்பதும் என் நம்பிக்கை. இதனால்தான் நகரத்தில் எனக்கு நான் சொன்ன பேர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் தயை செய்து குறித்துக்கொள்ளுங்கள்.

மொத்த விளைச்சல் 300 கிலோ.
ஒரு கிலோ உளுந்து வாங்கப்படும் விலை ரூ 42/-
நான் வாங்கிய விதையின் விலை 110 ரூபாய் என்பதைத் தங்கள் மேலான கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.இதுபோக, நீங்கள் கடைகளில் வாங்கும் உளுந்தின் விலை ஒரு கிலோ ரூ 80 என்பதை உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லைதானே?என் போன்றோரின் உளுந்து வாங்கப்பட்டு தோல் நீக்கப்பட்டு உங்களிடம் வந்து சேர்கிறது. வாங்கி விற்பவர்கள் தாங்கள் செய்யும் இந்தச் சிறிய வேலைக்கு எடுத்துக்கொள்ளும் ஆதாயம் கிலோவுக்கு 38 ரூபாய். கிலோ ஒன்றுக்கு 42 ரூபாய் என 300 கிலோவை விற்றால் 12600ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் மார்கழி முதல் மாசி வரை நானும் என் பணியாளரும் பார்த்த வேலைக்குக் கிடைத்த தொகை ரூ.1535/

இந்த சொற்பத் தொகையில் எந்த மனிதனும் வாழ முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி வாழ்ந்தாலும் அவன் நாகரிகம் எனப்படும் சொல்லுக்கான எந்தத் தகுதியையும் அடைய முடியாது என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்தானே! மாநகர எல்லைக்குள் என்னை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளாததன் காரணம் இதுவே என்பதை தயை செய்து குறித்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் பாவம்தான். உங்களிடமும் போதிய பணமில்லை. ஆனாலும் உங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கக் காரணம் என்ன என்பதை அருள் கூர்ந்து யோசித்துப் பாருங்கள். அதேபோல, ஒரு மளிகைக் கடைக்காரர் உங்களையோ உங்கள் மனைவி மக்களையோ பார்த்து ’சார்...மேடம்’ என்று அழைத்து மரியாதை செலுத்துபவர், உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார் என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

நீங்கள் மாதம் 20 ஆயிரம் சம்பாதித்தால் உங்கள் குடியிருப்பு கடைக்காரருக்கு மாதம் 4ஆயிரம் செலுத்துவீர்கள். 50 ஆயிரம் சம்பாதித்தால் 8 ஆயிரம் செலுத்துவீர்கள். உள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல், குடியிருப்பின் சம்பளத்தனைய மளிகைக் கடைக்காரர் உயர்வு!

சாகுபடி செய்யும் எங்களைவிட மொத்த வியாபாரிகள் மிக நன்றாக வாழ்வதை நாங்கள் பார்க்கிறோம். உங்களுக்கு ஏதோ வேலை இருக்கிறது. சம்பாத்தியம் வருகிறது. ஆகவே, இவை குறித்த கவலை தேவையில்லை என நீங்கள் எண்ணலாம். உங்கள் தாய் தந்தையர் இதே போல நினைத்தார்கள். அதனால்தான், 10 ரூபாய் உளுந்து அவர்கள் காலத்தில் 40 ரூபாய் ஆனது.
நீங்களும் இதையே நினைத்தால் உங்கள் மக்கள் 250 ரூபாய் கொடுப்பார்கள். அதுவரை நீ இருப்பாயா? என உங்களில் சிலர் என்னைப் பார்த்துக் கோபப்படுவதை என்னால் உணர முடிகிறது.

நான் இருப்பேன். என் வீட்டு இட்லி தோசை வடைக்கு மட்டும் உளுந்து விதைத்துக்கொண்டும் பணம் சம்பாதிக்கும் வேலை பார்த்துக் கொண்டும் ஓய்வு நேரத்தில் மட்டும் என் தோட்டத்துக்குப் போய்க்கொண்டும்...பிடித்த காய்கறிகளைப் பயிரிட்டுக் கொண்டும் நான் இருப்பேன்.

நண்பர்களே... பணம் பொதுவானது. அதை நாங்களும் சம்பாதிக்க முடியும். நிலம் எங்களுக்கானது. அது உங்களில் பலருக்கு இல்லை என்பதை நானறிவேன். சாகுபடி அறிவு எங்களுக்கு மட்டுமேயானது. அது உங்களில் எவருக்கும் இருக்காது என்பதையும் நானறிவேன்.

இந்தக் கடிதத்தை எழுதத் தோன்றிய காரணத்தையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.உளுந்து விலை உயர்வுக்காக நீங்கள் வருந்தியும் கோபமுற்றும் வருகிறீர்கள். உங்களுக்காக முதல்வரும் பிரதமரும் பதிலளிக்கிறார்கள். காய்கறி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை குறித்தும் உங்களுக்குக் கோபம் உண்டு.ஹமாம் சோப்பு விலை வருடம் தோறும் உயர்வது குறித்து நீங்கள் யாரும் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிக்கு எதிராகப் போராடியதாக நான் கேள்விப்படவில்லை. பாட்டா செருப்பு விலை உயர்வு குறித்து உங்களில் ஒருவரும் பாட்டா கடை முன் உரக்கப் பேசுவது கூட இல்லை. தேநீர் ஒன்று 5 ரூபாய்க்கும் 4 ரூபாய்க்கும் விற்கப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை.தண்ணீர் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்கப்படுவதையும் அதை நீங்கள் வாங்குவதையும் பார்க்கும் எங்கள் வயிறு எரிகிறதுதான். பெப்சி கோக் இன்ன பிற இத்யாதிகளைக் கடைக்காரர் சொல்லும் விலை கொடுத்து நீங்கள் வாங்குவதையும் அந்தப் பொருட்களின் விலை குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளாமலே இருப்பதையும் பார்த்த பிறகுதான் இந்தக் கடிதம் அவசியமானது எனக்கு.

இலவச மின்சாரம், மானியம் ஆகிய சலுகைகள் எங்களுக்கு இருப்பதாக உங்களில் பலர் பொறாமையோடு பேசுவதைக் கேட்டிருக்கிறேன். உங்கள் வீட்டுக்கு மின்சாரம் இலவசம், உங்கள் வாகன பெட்ரோலுக்கு மானியமும் தரப்படும். ஆனால், உங்கள் சம்பளத்தை மட்டும் கொத்தவால்சாவடி மொத்த வியாபாரியிடம், அவர் என்ன தர நினைக்கிறாரோ அந்த அளவுக்கு வாங்கிக்கொள்ளலாம் என ஒரு சட்டம் வந்தால் மட்டும்தான் அந்த சலுகைகளின் வலி உங்களுக்குப் புரியும்.

வணிகர்களுக்கு எதிராகப் போராடி ஓய்ந்து போனவர்களின் பிள்ளைகள் நாங்கள். இனி, அப்படி ஒரு போராட்டம் தேவையில்லை என்பது எங்கள் முடிவு. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவை என்றால் ஏதாவது செய்யுங்கள்.இல்லையென்றால், இன்னும் சிறிது காலம் கழித்து, உங்களுக்கு உத்தியோகம் இருக்கும், வீடு வாசல் இருக்கும், டாடா நேனோ அல்லது வேறு ஏதேனும் தீப்பெட்டி கார் கூட இருக்கும், புதிய மாடல் 3 ஜி மொபைல் இருக்கும், இன்னும் பலவும் இருக்கும், உணவு மட்டும் இருக்காது. அது எங்களிடம் இருக்கும்.

இப்போது நாங்கள் அனுபவிக்கும் பசியை, அது தரும் அவமானத்தை நீங்கள் சந்திக்க நேரும். ஆனால், அரசாங்கம் உங்களைக் கைவிடாது. ’கரன்சியைத் தின்று உயிர் வாழும் கலை’ கற்றுத் தரும் கல்லூரிகள் அரசு அனுமதியுடன் (நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும்தான்) துவக்கப்படும். அவற்றில் படிக்க, நீங்கள் உங்கள் பணிக் காலத்தின்(சர்வீஸ் என்றால் புரியும்தானே) 20 ஆண்டு வருவாயைக் கடனாகப் பெற நேரிடும். இது ஒன்றும் உங்களுக்குப் புதிதல்ல. ஏற்ர்கனவே, இதே போன்ற வாழ்க்கை அடமானத்தின்படி, அட்டைப் பெட்டி வீடுகள் கட்டி அவற்றுக்கு ராயல் வில்லா, ஹேப்பி ஹோம் என்றெல்லாம் வேடிக்கையாகப் பெயரிட்டு வாழ்ந்து பழகியவர்கள் நீங்கள்.

விளை நிலத்தைப் பொறியியல் கல்லூரிகளுக்கு விற்றுவிட்டு, கல்லூரிகளில் விவசாயம் செய்வது எப்படி எனப் படித்த மேதைகள் அல்லவா நீங்கள்! கரன்சி படிப்புக்கும் விற்பதற்கென ஏதேனும் இல்லாமலா போகும்! நாங்கள் உணவு உண்டு, பெண்டு பிள்ளைகளுடன் கூடிக் குலாவி இருக்கும் நேரம், நீங்கள் கரன்சி உண்டு உயிர் நீட்டிப்பு செய்வீர்கள்.

நாங்கள் மனிதர்களாகவும் நீங்கள் வேறு ஏதோவாகவும் இருக்கப்போகும் காலம் அதுவாக இருக்கும்.இப்படி நடக்கக் கூடாதெனில்,ஒன்று, உங்களில் பலர் ஊர் திரும்பி வயலில் இறங்க வேண்டும். அல்லது, ஒவ்வொரு வடையிலும் இட்லியிலும் பிரியாணியிலும் இருக்கும் எங்கள் வியர்வை வாடையை உணர வேண்டும். காற்றில் கலந்து வரும் எமது பெருமூச்சின் சூட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உளுந்தின் நிறம் கருப்பு! உங்கள் வீட்டில் இருக்கும் உளுந்து தோல் உரிக்கப்பட்டது!

Published in : http://kaattchi.blogspot.com/2010/05/blog-post_08.html

செம்மொழித் தமிழரின் வேளாண் தொழில்நுட்பங்கள்!


பசுமைப் புரட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் அனைவரும் மரபுசார்ந்த தமிழக வேளாண் தொழில்நுட்பங்களைக் கேலி செய்யும் வழக்கம் உள்ளது. இந்தியா முழுக்க பசுமைப் புரட்சிக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்பட்டதில் உள்ளூர் மரபு சார்ந்த தொழில் நுட்பங்களைக் குறைகூறும் வழக்கம் முக்கியப் பங்கு வகித்தது. இன்றுவரை இந்தப் போக்கு நிலவுகிறது. தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் நம்ப இயலாத அளவு மோசமானவை. ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கடைப்பிடித்து, மேம்படுத்தி வந்த எண்ணற்ற வேளாண் தொழில்நுட்பங்களை 50 ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிட்டது பசுமைப் புரட்சி.

உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம், வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தது. அரசர் முதல் கடைநிலை மாந்தர் வரை அனைவரும், வேளாண் பாதுகாப்பு என்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். இதனால், பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். இந்தத் தொழில்நுட்பங்கள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்ப்ட்டுள்ளன. குறிப்பாக, சங்க இலக்கியங்களில் இப்பதிவுகள் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. மேலும், சங்கப் பாடல்களில் உள்ள பயிர்த் தொழில்நுட்பங்கள் இன்றைய விவசாய நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன.

சங்ககால விவசாயத்தின் சிறப்பு, நிலத்தை வகைப்படுத்திப் பிரித்ததுதான். மலை (குறிஞ்சி), காடு (முல்லை), ஆற்றோரச் சமவெளி (மருதம்) ஆகிய மூன்று வகை நிலங்களிலும் பயிர்த்தொழில் செய்யப்பட்டது. இந்த மூன்று வகை நிலங்களுக்கும் எனத் தனித் தனியான தொழில்நுட்பங்கள் இருந்தன. தமிழ்ச் சமூகத்தின் இலக்கணத்தைத் தொகுத்த தொல்காப்பியர், ஒரு நிலத்திற்கான பயிர்களை மற்ற நிலத்தில் செய்வதை ‘மயக்கம்’ என்றார். அதாவது, முறை தவறிய செயல் என்றார். இந்தக் கருத்தின் பின்னே, சூழலியல், மண்ணியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகள் குறித்த அறிவு உள்ளது.

குறிப்பிட்ட நிலத்தின் நீர்ப் பிடிப்புத் தன்மை, சத்து, தட்ப வெப்பம், மழை அளவு, நீர் இருப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில்தான் அந்த நிலத்தில் இயற்கையான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. இதுவே இயற்கை நியதி. இந்த விதிக்குப் புறம்பாக, அந்தநிலத்திற்குப் பொருத்தமில்லாத பயிர்களைப் பயிரிட்டால், அது கால ஓட்டத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை சங்ககாலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

நெல் விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். மலை, ஆற்றோரச் சமவெளி ஆகிய இரு நிலங்களிலும் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இவை தவிர, கடலோரக் கழிமுகங்களிலும், காடுகளின் ஓரங்களிலும் கூட நெல் விளைவிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பொது விதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலான நெல் விவசாயம் ஆற்றோரங்களிலும், குறைந்தளவு மலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. மலைகளில் பயிரிடும் நெல்லுக்கெனத் தனி வகைகள் இருந்தன. அந்த வகைகள் மலைகளில் நிலவும் குளிர், மித வெப்பம் ஆகியவற்றைத் தாங்கி வளரும் திறன் கொண்டவை. மலைநெல் என்ற வகையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆற்றங்கறைச் சமவெளிகளில் பயிரிடப்பட்ட நெல் வகைகள், கடும் வெப்பம், வெள்ளம் ஆகியவற்றைச் சமாளித்து வளருபவை. செந்நெல், வெண்ணெல் உள்ளிட்ட பல வகைகள் மருத நிலத்துக்கென இருந்தன.

இவைதவிர, பிற நிலங்களில் நெல் விவசாயம் செய்வது முறையற்றது அல்லது சாத்தியக் குறைவானது என்பதைப் பல்வேறு புலவர்கள் வலியுறுத்தினர். ’புன்புலச் சீறூர் நெல்விளை யாதே’ என்கிறது புறநானூற்றுப் பாடல் (328). அதாவது, புன்செய் நிலத்தில் நெல் விளையாது என்பது இதன் பொருள். நெல்லுக்கு நீர் அதிகத் தேவை என்பதாலும் பிற சூழலியல் காரணிகளையும் கணக்கில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டது. ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்வதற்குரிய முல்லை நிலத்தில் எந்தெந்தப் பயிர்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது மற்றொரு பாடல்.
வரகு, தினை, கொள்ளு, அவரை இந்த நான்கும் இல்லாமல் பிற உணவுப் பயிர் இல்லை’ என்பது அப்பாடல் (புறம் 355).

பயிரிடும் முறையிலும் நிலத்துக்குத் தகுந்த நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. மலைச் சாரலில் பயிர் செய்வது பற்றிய குறிப்பு நற்றிணையில் உள்ளது (209). மலைவாழ் மக்கள், மழைக் காலத்திற்கு முன், தமது தோட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தினர். அதாவது, தோட்டத்தின் வேலிக்கு வெளியே உள்ள நிலத்தையும் பண்படுத்தி வேலிக்குள் கொண்டுவந்தனர். மழை பெய்யும் முன், காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததும் மண் உழவுக்கு ஏற்ற பதத்திற்கு வந்துவிட்டது. ஆகவே, மழைக்கு முன்னே, நிலத்தை உழுதனர். இந்தப் பதம் ‘தளி பதம்’ எனப்பட்டது. ’தளி’ என்பதற்கு, குளிர், மெல்லிய தூறல், மேகமூட்டம் ஆகிய அர்த்தங்கள் உள்ளன. மழை பெய்து மண்ணில் நீர்த் தன்மை அதிகரிக்கும் முன், தளி பதம் பார்த்து விதைத்துவிட வேண்டும் என்பதே இதில் கவனிக்கத்தக்க நுட்பம்.உழுத பிறகு, குறைந்த விதைகளை அதிக இடைவெளி விட்டு தூவினர். இதன் பலனாக,பயிர்கள் செழிப்புடன் வளர்ந்து அதிக விளைச்சல் கிடைத்தது. இந்த நுட்பம், சிலவித்து அகல விட்டு பலவிளைந்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த முறையே இன்று ஒற்றை நாற்று நடவு முறை எனப்படுகிறது. இன்றும் தமிழக மலைக் கிராமங்களில் இந்த முறைப்படி பயிர் செய்கின்றனர்.


மருத நில நெல் விவசாயத்துக்கென ஏராளமான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அந்த முறைகள் இன்றைய தேவைகளுக்கும் தீர்வாக அமைகின்றன. சிலவற்றைக் காண்போம்.
அதற்கு முன் மருத நில விவசாயத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். மருதநிலம் ஆற்றுச் சமவெளி என்பதால், ஆற்று நீரின் வரத்து வயல்களுக்கு அதிகமாக இருந்தது. மேலும், அக்காலத்தில் ஆற்று நீரை வயல்களில் பாய்ச்சுவதற்கான நீர் மேலாண்மை முறைகள் இப்போதைய முறைகளைக் காட்டிலும் வலுவாகவும் இயற்கையின் இயல்புகளுக்கு நெருக்கமானவையாகவும் இருந்தன. பயிர்த் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற விதத்தில், ஆற்று நீரை அக்கால அரசாங்கம் முறைப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது உள்ளது போல், நீரின் வரத்துக்குத் தகுந்தாற்போல தண்ணீர் திறப்பு என்ற நிலை அன்று இல்லை எனத் தோன்றுகிறது. மாறாக, தேவைக்கு ஏற்ற தண்ணீர் திறக்கப்பட்டது. அல்லது, தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு ஏற்ற முறையில் விவசாயம் செய்யப்பட்டது.

மருத நிலத்தின் நெல் வயல்கள் எப்படி இருந்தன எனப் பார்ப்போம்.
நெல் வயல்களில் மழை பெய்தபோது, கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்தன. (புறம் 287)
நெல் வயலின் அடியில் மீன்கள் இருந்தன. நீர் மட்டத்தில் குவளை மலர்கள் பூத்திருந்தன. அதற்கும் மேலே நெல் விளைந்திருந்தது. (புறம் 396)
நெல் வயலில் பயிர்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. அந்தப் பயிர்களின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருந்தன. அறுவடைக்குச் சென்ற உழவர்கள் பறவைகளுக்குச் சேதம் ஏற்படக் கூடாதென்ற கவலையுடன், அவை பறந்து செல்லும்படி ஒலி எழுப்பினர். இந்த ஓசையைக் கேட்டு, வயல்களைச் சுற்றி இருந்த மூங்கில் காடுகளில் இருந்த தேனீக்கள், தேனடையை விட்டுப் பறந்தன. சுற்றி இருந்த மக்கள் தேன் வடித்துக் கொண்டனர். (புறம் 348)

-மேற்கண்ட மூன்று காட்சிகளும் மூன்று வகை நெல் பயிர் முறைகளைக் கொண்டுள்ளன.
முதல் வகை, வயலில் ஆற்று நீரைப் பாய்ச்சி மீன் வாழும் அளவுக்கு எப்போதும் நீர் தேக்கி வைத்திருக்கும் முறை. இந்த முறை அக்காலத்தில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நற்றிணைப் பாடல் ஒன்று இம்முறையை சுவைபடச் சித்தரிக்கிறது.
‘நெல் அறுவடைக்குச் சென்ற உழவர்கள், விதை எடுத்துச் சென்றனர். வயல்களில் இருந்த மீன்களைப் பிடித்துக் கொண்டு திரும்பினர்’ என்கிறது அப்பாடல் (210).


இதன்படி,
அறுவடையின் போதே விதைக்கப்பட்டது
அறுவடையின்போதும் வயலில் மீன் வாழுமளவு நீர் இருந்தது
விதைப்புக்காக, நீரை வடித்தனர். அப்போது மீன்கள் சிக்கின
-ஆகிய செய்திகளை உணர முடிகிறது.
இரண்டாம் வகை வயல், பல்லுயிர்ப் பெருக்கத்தின் சிறந்த சான்றாக உள்ளது. இந்த வயலில் மூன்று அடுக்குகள் உள்ளன. நீரின் அடியில் மீன்கள், நீர் மட்டத்தில் நீர்த் தாவரம், அதற்கும் மேலே நெற் கதிர்கள். நீர்த் தாவரங்கள் வளர்ந்து பூக்கும் காலம் வரை, இந்த வயலில் களைப் பறிப்பு உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு நடந்திருந்தால், நீர்த் தாவரங்கள் பூக்குமளவு வளர்ந்திருக்காது. ஆகவே, இது இயற்கைக்கு மிக நெருக்கமான விவசாயத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இருந்த வயல் ஆகும். அதாவது, இந்த வயலில் விதைப்புக்குப் பிறகு, நீர் மேலாண்மை மட்டுமே கவனிக்கப்பட்டுள்ளது, களை, எரு கொட்டுதல் உள்ளிட்ட வேலைகள் நடக்கவில்லை.

ஆஸ்திரேலிய அறிஞர் பில் மோலிசன், தான் முன் வைக்கும் நீடித்த வேளாண்மை (Perma Cculture) எனப்படும் நவீன முறையில் இம்மாதிரியான வயலை வலியுறுத்துகிறார். இம்முறை நமது முன்னோர்களால் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகும்.

மூன்றாம் வகை, முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்ப வகையில் உள்ள வயல் ஆகும். இந்த வயலில், அறுவடையின்போது நெற் பயிரில் பறவைகள் கூடு கட்டியுள்ளன. ஆகவே, இது பிற நெல் வகைகளைக் காட்டிலும் நீண்ட காலப் பயிர் விளைந்த வயல் எனலாம். மேலும், இந்த வயலில் முந்தைய வயல்களைப் போல் நீர் தேக்கப்படவில்லை. அதேவேளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர். இந்த வயலிலும் மனித நடவடிக்கைகள் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் பறவைகள் கூடு கட்டியிருக்காது. ஆகவே, இம்முறையும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலானதே.இந்த மூன்று வயல்களும் உதாரணங்கள்தான். இவைபோல, ஏராளமான தொழில்நுட்பங்கள் நமது இலக்கியங்களில் உள்ளன.

ஜப்பானிய அறிஞர் மசானபு புக்கோகா முன் வைத்த, ’ஏதும் செய்யாத (Do Nothing)’ இயற்கை வேளாண்மை’த் தொழில் நுட்பங்கள், தமிழகத்தில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறையில் இருந்தன. இதற்கான சான்றுகளாக மேலேயுள்ள மூன்று நெல் பயிரிடும் முறைகளையும் கூறலாம்.
இவை தவிர, புக்கோகாவின் தொழில்நுட்பங்களில் சிறப்பு வாய்ந்ததான, ‘அறுவடையின்போதே அடுத்த பயிரை விதைப்பது’ என்ற முறையும் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.

‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்’ என்கிறது ஐங்குறுநூறு
(மருதம் 3).அதாவது, விதைக்கச் சென்ற உழவர்கள் அறுவடை முடித்து நெல்லோடு திரும்பினர் என்கிறது இந்தப் பாடல். பொதுவாகவே, அறுவடைக்குப் பின் விதைப்பு என்ற இன்றைய முறை அக்கால மருதப் பாடல்களில் குறைவாகவே உள்ளது.
அறுவடையின்போதே விதைத்து விடும் வழக்கம் பரவலாக இருந்தது. உழாமலே விதைத்தனர் என்பதையும் இப்பாடல் மறைமுகமாக விளக்குகிறது.
அறுவடையோடு விதைத்தல்
உழவு செய்யாத விதைப்பு
களை நீக்காமல், நீர் மேலாண்மையின் வழி களைக் கட்டுப்படுத்தல்
பயிர்க் காலத்தில் வயலில் வெளி இடு பொருட்கள் சேர்க்காதிருத்தல்
-ஆகியவை புக்கோகாவின் கோட்பாடுகளில் அடிப்படையானவை.
இவை அனைத்துமே நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டன. உண்மையான இயற்கை வேளாண்மையின் முன்னோடிகளாக தமிழர்கள் இருந்தனர் என்பதற்கான சான்றுகளே முன்னர் கண்டவை.

மேலும், பல்லுயிர்ப் பெருக்கம் என்பது இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற அறிவியலாக உருவெடுத்துள்ளது. சங்கத் தமிழர் வேளாண் முறைகளில் மீன், நத்தை, நண்டுகள், செடிகள், கொடிகள், வண்டுகள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகளையும் அரவணைத்துச் செல்லும் விதமான தொழில்நுட்பங்கள் இருந்தன.

சங்கத் தமிழர் வேளாண் அறிவியல் குறித்த ஆய்வுகள் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கவில்லை என்பது வருத்ததிற்குரிய சேதி. சில ஆர்வலர்களும் வேளாண் அறிவாளர்களும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இத்துறையில், வேளாண் அறிவாளர் பாமயன், சில முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.
சங்க காலத்தில் உழாத வேளாண்மை இருந்தது என்பதற்கான நேரடியான சான்றை அவர் முன் வைக்கிறார்.
‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்கிறது சிறுபாணாற்றுப் பாடல். உழவு செய்யாமல் விதைக்கப்பட்ட வளமான நிலம், என்பதுவே இதன் பொருள்.
’உழாது வித்திய பரூஉக் குரற் சிறுதினை’ என்கிறது புறநானூறு (168).
இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்களை நம் மரபிலேயே வைத்துக் கொண்டு, அவற்றை அறியாதவர்களாக நிற்கிறோம். இது அவலமான நிலை ஆகும்.
இவை தவிர, அக்காலத் தமிழர்கள், கம்போஸ்டு (Composed manure) எனப்படும் மட்கு எரு தயாரித்துள்ளனர் என்பதை பாமயன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். ’தாது எரு மறுகின் மூதூர்’ என்பது அகநானூறு (165). தாது எரு என்பது மட்கு எரு ஆகும். இயற்கை வேளாண்மை, இடுபொருள் வேளாண்மை, நீடித்த வேளாண்மை ஆகிய இன்றைய நவீன வேளாண் முறைகள் அனைத்துக்குமான தொழில்நுட்பங்கள் சங்கப் பாடல்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறைப்படி வெளிக்கொணர்ந்து, இன்றைய உழவர்களுக்குப் பயன்படச் செய்வது அரசின் கடமை ஆகும்.

ஆனால், தமிழக அரசு இதுபோன்ற உருப்படியான ஆய்வுகளுக்கு ஆதரவு அளிப்பதே இல்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை, மொழி வேறு; தொழில்நுட்பங்கள் வேறு என்ற அறிவுக்குப் புறம்பான நிலைப்படுதான் உள்ளது. மொழியில்தான் தொழில்நுட்பங்கள் உள்ளன. மொழியைக் காக்க வேண்டும் என்றால், அம்மொழியில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைக் காக்க வேண்டும்.

தமிழ் செம்மொழி என்றால், அதன் இலக்கணச் சிறப்பால் மட்டும் அல்ல; தமிழில் உள்ள அறிவுச் செல்வம்தான் அதன் தனிச் சிறப்பு. தமிழக ஆட்சியாளர்கள் அனைவருமே, தமிழ் மொழியை வெறும் இலக்கிய , இலக்கண மொழியாக சித்தரித்தனர். அறிவு என்றாலே, மேற்குலகிலிருந்துதான் இறக்குமதியாகும் என்ற மூடநம்பிக்கையைப் பரப்பியுள்ளனர். ஆங்கிலம் என்றால் அறிவு; தமிழ் என்றால் பிற்போக்கு என்பதும் இவர்கள் ’கண்டுபிடிப்புகளில்’ ஒன்று. மேற்குலகம் நமது வேளாண்மைக்கு சாவு மணிதான் அடித்ததே தவிர, நன்மை செய்யவில்லை. இதனால், விவசாயம் என்பதே தமிழகத்தில் கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தின் உயிர்நாடியாகிய விவசாயிகளின் கழுத்தைப் பசுமைப் புரட்சியின் பேரால் நெறித்துக்கொண்டு, செம்மொழி மாநாடு நடத்துவது முரண் ஆகும். இதைக் கண்டு வருங்காலம் நகைக்கும். உண்மையிலேயே, செம்மொழியான தமிழ் மீது அக்கறை இருந்தால், முன்னோர்களின் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்து, தற்காலப் பயன்பாட்டுக்குத் தக்கபடி மாற்ற வேண்டும். அப்படிச் செய்தால்தான், மொழி வாழும். வெறுமனே பழம்பெருமை பேசுவதாலோ மாநாடுகள் நடத்தித் திருவிழாக் கொண்டாடுவதாலோ தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஒரு பயனும் இல்லை.

(இக்கட்டுரையின் சுருக்கம் 10 / 07 / 2010 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியானது)

Published in : http://kaattchi.blogspot.com/2010/07/blog-post.html

நமது மரணம் குறித்து

பொழுதுபுலர்ந்துவிட்டது
கொலை செய்வதற்கு யாரும் கிடைக்கவில்லை
நாளொன்றுக்கு
நான்கு உயிர்களையாவது
பறிப்பது என் வழக்கம்.

பகலில் என்னால் கொல்லப்பட்டவர்கள்
இரவுகளில்
மறுபிறப்பு அடைந்து
மீண்டும் கொல்லும்படி
காலையில் என்னிடம் வருகிறார்கள்.


நான் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன
இரவுகளில் அடி வயிற்றில்
இரு கைகளையும் பொத்தி வைத்தபடி
படுத்திருப்பேன்.
பார்ப்பவர்கள்
அதை ஆழ்ந்த உறக்கம் என்பதுண்டு
இறந்தவன் உறங்குவானா?

எனது கொலைகள் எளிமையானவை
உலகமயத்தில் தொடங்கினால்
உடனடி மரணம்.

மரபுகளைத் தொட்டால்
மயக்கம் பின் மரணம்.

இனம் மொழி போர் ஆகியவை
விக்ஷம் தடவிய சிறு முட்களை
உங்கள் முதுகில் குத்துவது போல்
வலி கொடுத்துக் கொல்லும்.

நான் இவை அனைத்தாலும் கொல்லப்பட்டேன்.

இப்போதெல்லாம்
ஏதாவது ஒன்றிலேயே சாவது சகஜமாகிவிட்டது.

என்னால் கொல்லப்படுபவர்கள்
தமது மரணம் குறித்துப் பெருமையடைகின்றனர்.

முன்பெல்லாம்
என் போன்றோர் குறைவு
கடந்த மே மாதத்திற்குப் பிறகு
கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சாக விரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமே.

என்னால் கொல்லப்படுவதை
விரும்பினால்
என் வீடு தேடி வரலாம்.

வீட்டில் சாவது சலிப்பூட்டினால்
தேநீர்க் கடை ஆற்றங்கரை
ஏதேனும் ஒரு மலை
கடற்கரை எனப் போகலாம்.

தேநீர் உள்ளிறங்கும் சூட்டை
மலையின் குளிர்ச்சியை
ஆற்றங்கரையின் அமைதியை
கடற்கரையின் ஓசையை
உணராமல்
நான் முன் கூறிய
ஏதேனுமொரு தலைப்பு குறித்து
விவாதித்து மரணத்தை விழுங்கலாம்.

வாருங்கள்
உங்களுக்குப் பிடிக்கும்படி
உங்களைக் கொல்வதில்
எனக்கு
நிரம்ப அனுபவம் உண்டு.

Published in : http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_16.html

ஆந்தைக்கும் எனக்குமான தற்காலிக உறவிலிருந்து...

அன்றைய செய்தித் தாளில் என்னை ஈர்த்த செய்தி இதுதான்:
‘ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்
அதிசய ஆந்தை பிடிபட்டது’

பொதுவாக ஆந்தைகள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவை இரவுகளில் உலகைப் பார்க்கின்றன, அந்த விதத்தில் மனிதரை விட மேம்பட்டிருகின்றன, இரவுகளில் திருடி வாழும் பெருச்சாளிகளை ஆந்தைகள் பிடித்துவிடும். என் வீட்டுக்கு அருகே ஓங்கி வளர்ந்த மரங்கள் இருப்பதால், நாங்கள் எலிப் பொறிக் கட்டைகளும் எலி விக்ஷமும் இல்லாமலே சமையலறையில் தக்காளிகளையும் பழங்களையும் பாதுகாத்துக்கொள்கிறோம். ஆந்தைகள் இந்தச் சேவைக்காக எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதில்லை.

ஒரு நாள் இரவு, வயது முதிர்ந்த ஆந்தை கனவில் வந்தது. என் தோட்டத்து மா மரத்தில் வாழ்வதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டது. ஒரு சில சேதிகளை மனம் விட்டுப் பேசவே கனவில் வந்ததாகக் கூறியது. ’உங்கள் மா மரத்தின் தென் மேற்குக் கிளைகள் கரையான் தாக்குதலுக்குட்பட்டு வேதனைப்படுகின்றன’ என்றது. ’அதற்கு என்ன செய்வது?’ எனக் கேட்டேன். ’அந்தக் கரையான்களை விரட்ட வேண்டும்’ என்றது. ’கரையான்கள் இருந்தால் உங்கள் இனத்தவருக்கு உணவாகுமே?’ என்றேன். ஆந்தை, ’நாங்கள் உணவுக்குச் சிரமப்படுவதில்லை. ஆனால், இருப்பிடம்தான் எங்களுக்கு சவாலானது. இந்த மா மரத்தின் கரையான்கள் தென்மேற்குக் கிளைகளை இற்று விழச் செய்துவிடும் அபாயம் உள்ளது. அதுமட்டும் நடந்துவிட்டால் எங்கள் குடும்பம் வேறு இடம் தேடி அலைய வேண்டும்’ என்றது.

எனக்கு அலுப்பு ஏற்பட்டது. அதை மறைக்க நான் பின்வருமாறு கேட்டேன்.
’நீங்களே அந்தக் கரையான்களைத் தின்றுவிட்டால் என்ன?’
ஆந்தை இறக்கைகளைக் கீழிறக்கி, பணிவுடன் கூறியது.
’ஆலோசனைக்கு நன்றி. ஆனால், எல்லாக் கரையான்களையும் தின்று தீர்ப்பது எங்களால் இயலாது. தவிர, உணவுக்காக உழைப்பதை நாங்கள் விதியாக வைத்திருக்கிறோம். காலடியில் கிடைக்கும் உணவு நிரந்தரமல்ல என்பது எங்கள் முன்னோர் வாக்கு. ஆகவே, கரையான்களை ஒழித்து உங்கள் மரக்கிளைகளையும் எங்களையும் காக்க வேண்டும்’ எனக் கேட்டுவிட்டு மறைந்துவிட்டது.

மாமரத்தின் தென்மேற்குக் கிளைகளில் கரையான் தாக்குதல் இருந்தது என்னவோ உண்மைதான். கரையான்கள் அங்கு வரக் காரணம் என்ன எனக் கண்டறிந்து, ஆந்தையின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. நன்றி சொல்வதற்காக அந்த ஆந்தை மீண்டும் கனவில் வரும் என எதிர்பார்த்தேன். அது வரவில்லை. ஆனால், எங்கள் தோட்டத்தில் நீண்ட நாட்களாகப் பதுங்கியிருந்த சில பாம்புக் குட்டிகளை ஆந்தைகள் பிடித்துவிட்டதாக, அக்கம்பக்கத்தினர் நிம்மதியடைந்தனர்.

இந்த அனுபவம் எனக்கு இருந்ததால், ஆயிரம் ஆண்டுகள் வாழும் அந்த ஆந்தையைப் பார்க்க விரும்பி வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். துருப்பிடித்த மிகப் பழைய கூண்டு ஒன்றில் இருந்தது அந்த ஆந்தை. இறக்கைகள் தளர்ந்து பாதி கீழிறங்கிய நிலையில் இருந்தன. நான் பகலில் சென்றேன். ஆந்தை பாதிக் கண்கள் மூடிய நிலையில் இருந்தது. ’பேச முடியுமா? எனக் கேட்டபோது,
‘பகலில் நாங்கள் வேலை செய்வதில்லை’ என்றது.
‘பேசுவது எப்படி வேலையாகும்?’
’நீங்கள் இரவில் உறங்குவது ஏன்?’
’ஓய்வெடுக்கத்தான்’
’ஏன் அதை ஓய்வு என்கிறீர்கள்?’
’ஏனெனில் தூங்கும்போது, எந்த வேலையும் செய்வதில்லை’
’அப்படியானால், பேசுவதும் வேலைதானே?’

ஆந்தை தன் முடிவில் பிடிவாதமாக இருந்தது. ஆகவே நான் சிறப்பு அனுமதி பெற்று அந்த ஆந்தையை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். கூண்டிலிருந்து தன்னை விடுவிக்கும்படிக் கேட்டது. வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்துவிடுமா என்ற என் கவலையை வெளிப்படுத்தினேன். என் தோட்டம் அதற்குப் பிடித்துவிட்டதாகவும் அதனால் வேறு எங்கும் போக விருப்பமில்லை என்றும் கூறியது.

இரவு நான் தூங்கிவிடுவதும் பகலில் அது தூங்கிவிடுவதும் வழக்கமானது. எங்கள் இருவருக்குமான முறையான அறிமுகம் கூட நடக்கவில்லை.இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க ஒரு திட்டம் வேண்டியிருந்தது. ஒரு அந்திப் பொழுதில் ஆந்தை விழித்தபோது, ’நாம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது’
என்றேன்.
‘அப்படியா?’
‘ஆமாம்... இன்று இரவே நாம் பேசலாம். நான் இன்று இரவு விழித்திருப்பதாக முடிவு செய்துவிட்டேன்’ என்றேன்.
’ஆனால், நான் உன்னோடு பேசுவதாக முடிவு செய்யவில்லையே’ என்றது.
’ஒரு நாள் கூட ஒதுக்க முடியாதா?’
’மன்னிக்கவும். ஒரு நாள் என்பதை நீங்கள் பார்க்கும் விதம் வேறு. நாங்கள் பார்க்கும் விதம் வேறு. உங்களுக்கு நாள் என்பது அடுத்த நாளுக்கும் இன்றுக்கும் இடையில் உள்ளது. எங்களுக்கு ஒரு நாள் என்பது மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் உள்ளது. ஆகவே, ஒரு நாளை வீணடித்தால் அந்த நாள் கிடைக்கவே போவதில்லை என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது’

‘ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு இந்தத் தத்துவம் கூடப் பேசவில்லை என்றால் எப்படி?’ என்றேன் எரிச்சலுடன்.

ஆந்தை ஆச்சரியமாகக் கேட்டது,
‘நான் பேசியது தத்துவமா?’
‘ஆமாம். மரணத்தைப் பற்றியும் வாழ்வின் நிலையாமை பற்றியும் குழப்பும் விதத்திலும் பேசுவது தத்துவம்தானே?’
ஆந்தை பெருமூச்செறிந்தது.
’உன் முன்னோர் பேசிய தத்துவங்கள் தெரியுமா?’ எனக் கேட்டது.
’அவர்களும் இதைத்தான் பேசியிருப்பார்கள்’ என்றேன்.
ஆந்தை ஒரு முதியவருக்கே உரிய கேலிப் புன்னகையுடன், ‘சரி...நான் கிளம்ப வேண்டும்’ என்றது.
’நீ என் கனவில் வர முடியுமா?’ எனக் கேட்டேன்.
‘கனவிலா? ஏன்?’
’கனவில் உரையாடலாமே’
’உன் கனவு உன் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது?’ என்றது.
’இல்லை. மா மரத்து ஆந்தை ஒன்று என் கனவில் வந்ததே?’
ஆந்தை நீண்ட நேரம் பதில் பேசாமல் யோசித்தது. பிறகு பரிவும் கனிவும் பொங்க என்னிடம்,
‘சரி...இன்று இரவு கனவில் சந்திப்போம்’ என்று கூறிச் சென்றது.

அன்று இரவு நீண்ட நேரம் உறக்கமில்லாமல் உலாத்திக் கொண்டிருந்தேன். கனவு வருமா வராதா என்ற கேள்விக்கு விதவிதமான விடைகள் கிடைத்துக்கொண்டேயிருந்தன. பொதுவாக, எந்தக் கனவும் நான் விரும்பி வந்ததில்லை. ஆனால், கனவில் வந்தவைகளில் பெரும்பாலானவை நான் விரும்பியவையாக இருந்தன. சில கனவுகளில் நான் அம்மணமாயிருப்பேன், சிலவற்றில் நான் படிக்காமலேயே தேர்வெழுதப் போவேன், சில கனவுகளோ ஏதேனும் ஒரு பெண்ணிடம் நான் இச்சை வழியப் பேசுவதாகவும், சிலவற்றில் பிரபல நடிகைகளுடன் சல்லாபிப்பதாகவும், வேறு சிலவற்றில் பெரிய நட்சத்திர விடுதியொன்றில் சாப்பிட்டுவிட்டுப் பணமில்லாமல் நிற்பேன், சிறுநீர் கழிப்பதும் சிலவேளைகளில் உண்டு.

ஆந்தையுடனான உரையாடல் எனக்குப் புதிதுதான். அதுவும் அந்த மாமரத்து ஆந்தை கனவில் கூறியபடியே கரையான்கள் இருந்தது எனக்கே அதிசயம்தான்.

உலாத்திய களைப்பில் கால்கடுத்துப் படுத்தேன். கண்கள் மூடிய மறு கணம் ஆந்தை வந்து என் மார்பில் உட்கார்ந்தது. கொஞ்சம் சிடுசிடுப்பாகத்தான் தொடங்கியது.
’ஏன் இவ்வளவு தாமதம்?’
’தூக்கம் வரவில்லை’
’நான் எவ்வளவு நேரம்தான் உன் கனவு திறக்குமா எனக் காத்துக்கொண்டிருப்பது? எனக்கு வேறு வேலையே இல்லை என நினைத்தாயா?’
‘மன்னித்துக்கொள்’
’சரி...என்ன சேதி?’

ஆந்தையின் குரலில் தெரிந்த கண்டிப்பு என்னை மிகுந்த பயனளிக்கும் விதமான கேள்விகளை மட்டும் கேட்கத் தூண்டியது.ஆகவே, உரையாடலுக்கான வழக்கமான பீடிகைகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாகவே சேதிக்குப் போனேன்.

’உனக்கு ஆயிரம் வயது என எப்படி நம்புவது?’
’நீ ஏன் அதை நம்ப வேண்டும்?’-என்றுவிட்டு அடுத்த கேள்விக்குக் காத்திருப்பது போல பார்த்தது.

‘நீ இன்னும் என் முதல் கேள்விக்கே பதில் சொல்லவில்லை’
’நீ கேட்டது கேள்வியே அல்ல. எனக்கு ஆயிரம் வயது என நான் சொல்லவில்லை. அதை நீ நம்ப வேண்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, வயது குறித்த பயமும் பதட்டமும் பெருமிதமும் எங்கள் இனத்தவருக்கு இல்லை. நாங்கள் பிறந்த நாளைக் கணக்கிடுவதும் இல்லை, கொண்டாடுவதுமில்லை’

‘இது குதர்க்கமாகத் தெரியவில்லையா உனக்கு?’ என எரிச்சலாகக் கேட்டுவிட்டு, ஆந்தையின் போக்கிலேயே கேட்பதாக நினைத்துக்கொண்டு,
’நீ பிறந்து நீண்ட காலமாகிவிட்டதா?’ என்றேன்.
’ஆம்’ என்றது.
’எத்தனை தலைமுறைகள் இருக்கும்? அதாவது நீ பிறந்த பிறகு எத்தனை ஆந்தைகள் பிறந்து இறந்திருக்கும்?’
’எத்தனை மனிதர்கள் எனக் கேட்டால் விடை சொல்வேன். ஏனெனில் நாங்கள் எங்கள் பிறப்பையும் இறப்பையும் கொண்டாடுவதும் இல்லை, துக்கிப்பதும் இல்லை. ஆகவே, அவை பதிவுகள் ஆவதில்லை’
’அப்படியானால்...வாழ்க்கை மீது உங்களுக்குப் பிடிப்பு இல்லை என எடுத்துக்கொள்ளலாமா?’
’வாழ்க்கை மீது விருப்பம் இருப்பதால் தான் வாழ்க்கையை மட்டும் பார்க்கிறோம். பிறப்பு எனும் முடிந்ததையும் இறப்பு எனும் வரப்போவதையும் கணக்கில் கொள்வதில்லை’
’சரி...எத்தனை மனிதர்கள் பிறந்து இறந்ததைப் பார்த்திருப்பாய்?’
ஆந்தை பேசும் முன் வேறொரு ஆந்தை பறந்து வந்தது. அது இந்த ஆந்தையைப் பார்த்து எரிச்சலுடனும் எச்சரிக்கும் விதமாகவும் கூறியது,
’நீ ஏன் இந்த நாகரிகம் பிடித்தவனுடனெல்லாம் பழகுகிறாய்? நமக்கென தகுதி இருப்பதை மறந்துவிட்டாயா?’
அதிசய ஆந்தை பொறுமையுடன் பேசியது,
’இந்தக் காலத்தில் உங்களுக்குப் பொறுமை இல்லாமல் போய்விட்டது. நம்மைவிடக் கீழானவருக்கும் மரியாதை செலுத்த வேண்டும்’

புதிய ஆந்தை அதிசய ஆந்தையை விரைந்து வரும்படிக் கூறிவிட்டுப் பறந்தது. அது என் வீட்டில் நின்ற சில நொடிகளிலும் அதன் முகம் கடுமையான வெறுப்புடனிருந்தது. பிடிக்காத அல்லது அருவருப்பான இடத்திற்கு வந்ததுபோல நடந்துகொண்டது.

அதிசய ஆந்தை என் பக்கம் திரும்பியது,
’எங்கள் காலத்தில் இப்படியான வெறுப்பும் வன்மமும் இருக்கவில்லை’ என்றது. மீண்டும் அதுவே தொடர்ந்து, ‘ஆனால்...இந்த கெட்ட மாற்றத்திற்கும் நீங்கள் தான் காரணம்’ என்றது.

உங்களுக்கு வருவதைப் போலவே எனக்கும் ஆத்திரம் வந்தது.
’ஆந்தைகள் மனிதர்களை இழிவாக நினைப்பது அக்கிரமம் அல்லவா?’ என்று எனக்குள்தான் சொல்லிக்கொண்டேன். ஆந்தை சிரித்தது.

‘ஏன் சிரிக்கிறாய்? நாகரிகம் பிடித்தவன் என்பதை ஏதோ பைத்தியம் பிடித்தவன் போல் சொல்கிறீர்கள்...ஆந்தைகளுக்கு இவ்வளவு திமிர் இருக்குமா?’

’மன்னித்துக்கொள்...நாங்கள் மனிதர்களைத் திட்டப் பயன்படுத்தும் வார்த்தை அது’

நான் குழப்பமும் ஆவேசமும் மேலிட மூச்சிறைக்கப் பார்த்தேன். ஆந்தை சிறு விளக்கம் ஒன்றை அளித்தது. ’இந்த நாகரிகம் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது உங்கள் கண்டுபிடிப்புதான். உங்களுக்கும் எங்களுக்கும் இருந்த இடைவெளியை...உங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடாக நீங்கள் மாற்றினீர்களே அப்போது இந்தச் சொல் பிறந்திருக்கலாம். பிறகு உங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாட்டை நீங்கள் முரண்பாடாக மாற்றினீர்கள். எங்கள் இனம் வாழும் மரங்களை உங்கள் கழிப்பறைக் கதவுகளாக்கினீர்கள். நாங்கள் உண்டு வாழவே விதிக்கப்பட்ட எலிகளையும் சிறு பூச்சிகளையும் விக்ஷம் வைத்துக்கொன்றீர்கள். எங்களுக்கு உணவில்லாமல் போனது. இப்படி...நமக்கான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. ‘நீங்கள்...செய்வது அக்கிரமம்...இந்த பூமி நாங்களும் வாழத்தான் விதிக்கப்பட்டது’ என்று உங்களிடம் பேச வந்தபோதெல்லாம், நீங்கள் மேலும் மேலும் நாகரிகமடைந்துகொண்டே போவதாக உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டீர்கள்.
அப்போதுதான் கண்டுகொண்டோம், அது கெட்ட வார்த்தை என்பதை. அதன்பிறகு, உங்களைத் திட்டுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்துகிறோம்.’

பேசி முடித்துவிட்டு என் கண்களை உற்றுப் பார்த்தது. என்னால் எச்சில் விழுங்கக்கூட இயலவில்லை. வியர்த்தது. நான் கழிவிரக்கம் கொண்டவனானேன்.
ஒரே ஒரு வார்த்தையாவது ஆந்தையிடமிருந்து பாராட்டாகப் பெற்றுவிட முடியாதா என ஏங்கினேன்.

‘எங்கள் வளர்ச்சியை நீ ஏன் கணக்கில் கொள்ளக் கூடாது? பாலங்கள்...விமானங்கள்...செயற்கைக்கோள்...கணிப்பொறி....’

’போதும் நிறுத்து...’ என்றது ஆந்தை. ‘இந்தப் பட்டியல் இப்போது முடியாது. இது முடியும் வரைக் காத்திருப்பதும் வாழ்வு முடியும் நாளை எதிர்பார்ப்பதும்’ ஒன்று என்றது.
’அவ்வளவு பெரிய வளர்ச்சிப் பட்டியல் எங்களிடம் உள்ளது அல்லவா?’ என்றேன்.

’நான் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல. உங்கள் வளர்ச்சிப் பட்டியல் முடியும் நாளில் உங்கள் அனைவரின் வாழ்நாட்களும் முடியும்’ என்றது.

மேலும் தொடர்ந்து,
’பெயர் வைப்பதில் உங்கள் முறை சிக்கலாகவே உள்ளது. ஒரு உயிர் பறிப்பவரைக் கொலைகாரர் என்கிறீர்கள் ஆயிரக்கணக்கில் கொல்பவரை வீரர் என்கிறீர்கள். அதுபோலத்தான் வளர்ச்சி என்ற வார்த்தையை நாங்கள் பார்க்கிறோம். அதிகமாக வளரும் எதுவும் வெடித்து, சிதைந்து அழியும் என்ற விதி எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மரம் அதிகம் வளர்ந்துவிட்டால் அதன் கிளைகள் ஒவ்வொன்றாகப் பட்டுப் போய் கடைசியில் வேரும் அழுகிவிடுகிறது. அதிகமாக இரையெடுத்த மலைப்பாம்புகள் நகர முடியாமல், யானைக் காலடியில் சிதைந்துபோன சம்பவங்கள் அதிகம்.

அதனால்தான் நீங்கள் வளர்ச்சி எனப் பட்டியலிடும் எல்லாமே உங்களை அழிக்கப்போகின்றவை என்கிறேன். நாகரிகம் என்பது மிகப் பழைய வார்த்தை என்பதால் அதுகுறித்த விளக்கங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அது ஒரு கெட்ட வார்த்தை என்பதை மட்டும் என்னால் கூற முடியும். ’

‘எது அதிகம் எது குறைவு என்பதை நீ எப்படி முடிவு செய்யலாம்?’

‘சமைத்த உணவைத்தான் உண்ண வேண்டும் என நீங்கள் முடிவெடுத்ததே அதிகம்தான். அதன் பிறகு எல்லாமே அதிகத்திற்கும் அதிகம் அல்லவா?’ என்றுவிட்டுக் கேலியாகச் சிரித்துவிட்டு மார்பின் மீது மேலும் ஈரடிகள் நடந்து வந்து கண்களைக் கொத்திவிட்டுப் பறந்தது.

இப்போதும் என் வலது கண் வலிக்கிறது. அந்த ஆந்தையை மட்டுமல்ல எந்த ஆந்தையையும் அதன் பிறகு நான் பார்ப்பதில்லை. இரவுகளில் தூங்குவதே பல விதங்களிலும் சரியெனப்படுகிறது.

Published in : http://kaattchi.blogspot.com/2010/06/blog-post.html

உங்கள் வீட்டிற்கு கடவுள் வந்தாரா?


கடவுள் வந்தபோது நான் வீட்டில் இல்லை
நான் காத்திருந்தபோது அவருக்கு வேறு வேலை

மதில்மேல் முகம் புதைத்துப் பூனைபோல் பார்த்தபடி
இன்றாவது சந்தித்தாயா எனக் கேட்கும் அண்டைவீட்டார்

தொலைபேசி வழி விசாரிப்புகள் என எனக்கும் கடவுளுக்குமான உறவில் ஊர் சிரித்தது

அன்று ஒரு நாள் நான் தோட்டத்திற்குப் புறப்பட்டபோது, என் மகன் தன் பென்சில் ஓவியங்களுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். அவனது ரயில் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருக்கும். கேட்டால், ’இந்த ரயில் தண்ணீர் ஊற்றினாலே தானே முளைத்து வளர்ந்துவிடும். யாரும் செய்ய வேண்டியதில்லை. அதில் பயணிக்கக் காசும் தேவையில்லை’ என்பான். என் தேவைகளைப் பட்டியலாக எழுதி, மடித்து அவனிடம் கொடுத்தேன்.

’கடவுள் என்னைத் தேடி வந்தால் இதை அவரிடம் கொடுத்துவிடு’ என்றேன். ’நீ வர்ற வரைக்கும் இருக்கச் சொல்லவா?’ எனக் கேட்டான். ’அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். வேண்டாம்’ என்றேன். பிறகு, ‘நீ அவரை உன் கார் விளையாட்டில் சேர்ந்துகொள்ளும்படி தொந்திரவு செய்துடாதே’
‘ஏன்...அவருக்குக் கார் ஓட்டத் தெரியாதா?’

’இல்ல...அவருக்கு எல்லாம் தெரியும்...ஆனா நேரம் இருக்காது’

அவனுக்கு இதில் உடன்பாடில்லை என்பதுபோல் தெரிந்தது. நான் புறப்பட்டுவிட்டேன்.

அன்று மாலை சாயத் தொடங்கிய வேளை, நீண்ட காலமாக சத்துடனிருந்துவிட்டு, என் அப்பா காலத்தில் உயிரற்றுப்போன தோட்டத்தில் வாய்க்கால் வெட்டிக்கொண்டிருந்தோம். அந்தக் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சிறு வண்டுகளோ தும்பிகளோ கூட வருவதில்லை. அவை வருவதற்குரிய செடிகளும் அந்நிலத்தில் முளைப்பதில்லை.

என் மண்வெட்டி சற்றே ஆழப் பதிந்தபோது, வெட்டி வீசப்பட்ட மன்ணோடு சுருட்டிக்கொண்டு மண்புழு ஒன்று வந்தது. கடவுளிடம் கேட்டிருந்த உதவிகளில் அதுவும் ஒன்று! பிறகு, பள்ளமான வயல் ஒன்றில் வயல் நண்டுகளைப் பார்த்ததாக மாடு மேய்த்த சிறுவர்கள் கூவியபடி ஓடி வந்தார்கள். நத்தைகளைக் கண்டதாகவும் கானாங்கோழிகளைக் கண்டதாகவும் முதியவர்கள் தெரிவித்தார்கள். இவையும் கடவுளிடம் நான் வைத்த கோரிக்கைகள்தான்.

சிட்டுக்குருவிகள், செம்போத்துப் பறவைகள், மரங்கொத்திகள், வரிச்சான்கள் என காணாமல்போனவை அல்லது போகத் தொடங்கியவை அனைத்தும் காணக்கிடைத்தன.

நான் வீடு திரும்பும்போதும் மகன் வரைந்துகொண்டுதானிருந்தான்.
’கடவுள் வந்தாரா...?’
’ஓ...வந்தாரே...’
’அந்தப் பட்டியலைக் கொடுத்தியா...?’
’ம்...’
என்றபடி நிமிராமல் வரைந்தான்.
’நீ ஏதும் கேட்டியா...?’ என்றேன்.
ஆர்வத்துடன் நிமிர்ந்துபார்த்து சொன்னான்,
‘அந்த வண்ணாத்துப்பூச்சி என் கையில சிக்காமலே இருந்துச்சுல்ல...? அது இனிமே சாயங்காலம் ஆனா தானே பறந்து வந்து என் கையில உக்கார்ந்திருமே...’
‘எப்படி?’
’கடவுள் தாத்தா கிட்ட இதப்பத்தி சொன்னேன்...அவர் அந்த வண்ணாத்திப்பூச்சிக்கிட்ட சொல்லிட்டாரு...இதோ பாரு...’
என உள்ளங்கைகளை விரித்துக் காட்டினான். மஞ்சள் கலந்த செந்நிறத்தில் மருதாணி பூசியது போலிருந்தது. வண்ணத்துப் பூச்சி பறந்து வந்து இவன் கைகளில் அமர்ந்து, மகரந்தத் தூளை உதிர்த்து மருதாணிபோல் பூசியதாக விளக்கினான். மேலும், இது இனி தினமும் நடக்கும் என்றும் அந்த வண்ணத்துப்பூச்சியிடம் மகரந்தம் இல்லையென்றால் அதன் தோழிகளை அழைத்து வரும் என்றும் கூறினான். மீண்டும் வரையத் தொடங்கினான்.


என் அண்டை வீட்டார் சுவர் உச்சியில் முகம் புதைத்தபடி, ‘என்ன...இன்னிக்கும் சாமி வரலியே?’ என்றனர். நான் மகனைப் பார்த்தேன். அவன் ’பாருப்பா…வந்தாரு வந்தாருன்னு சொல்றேன்…இவங்க இல்ல இல்லங்கறாங்க…அவங்களுக்குக் காட்டத்தான்…கடவுளைப் படம் வரஞ்சுக்கிட்டிருக்கேன்…’ என்றான்.


’சின்னப் பயலைக் கெடுத்து வச்சிருக்கீங்களே…’என்றார் ஒருவர்.
’உங்க வீட்டுக்கு இதுவரைக்கும் கடவுள் வந்ததே இல்லையா?’ எனக் கேட்டேன்.


அவர்கள் பூஜை அறையைப் பராமரிப்பதில் தொடங்கி பல்வேறு தூர தேசங்களுக்குச் சென்று உண்டியலில் பணம் கொட்டுவதுவரை அடுக்கடுக்காகக் கூறினர்.
’அப்புடியுமே…எங்க வீட்டுக்கு சாமி வந்ததில்ல…உங்க வீட்டுல ஒரு சாமி படம் கூடக் கெடையாது…கோயிலுக்கும் போறதில்ல…எப்புடி வருவாரு?’ என்றனர்.


பிறகு தங்கள் வேண்டுதல்களில் ஒன்று கூட நிறைவேறுவதில்லை என்றனர். அந்த வேண்டுகோள்களில் சிலவற்றை மாதிரிகளாகக் கூறிப் புலம்பினர். அவையனைத்தும் கடன் அடைப்பது, சம்பள உயர்வு, புதிய கடன் பெறுவது, நோய் தீர்வது தொடர்பானவை.


மகன் சட்டெனத் திரும்பி கோபமாகக் கத்தினான், ‘கடவுள் என்ன பேங்க் வச்சிருக்காரா? இல்ல அவர் என்ன டாக்டரா? அவர்கிட்டப் போயி…இதெல்லாம் கேக்கறீங்க? அவர் எதைப் படைச்சாரோ அதைக் கேட்டாத்தான் குடுப்பாரு…’
என்றுவிட்டு என்னைப் பார்த்து…
‘இல்லப்பா…?’ என்றான்.
நான் புன்னகைத்தபடி அவன் வரைந்த படத்தைப் பார்த்தேன்.
’இது யார் சொல்லு?’ என்றான்.
‘தெரியலையே…’
’இதுதான்…கடவுள் தாத்தா…’
என்றான்.
மகனது ஓவியத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதை என்னால் உங்களுக்கு விளக்க இயலவில்லை. ஆகவே, உங்கள் மகனிடமோ மகளிடமோ இதுபோன்ற அனுபவம் கிடைக்கும் வரைக் காத்திருங்கள்.


ஒருவேளை, அவர்கள் கடவுள் படம் என்ற பேரில் சுற்றிலும் தனம் கொட்டியிருக்கும் ஏதேனும் வங்கி அதிபர் படத்தை வரைந்தால், உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகளும் மருதாணியும் இல்லை என்று பொருள். அதேபோல், உங்கள் நிலத்தில் உயிர் இல்லை என்றோ அல்லது உங்களுக்கென்று நிலமே இல்லை என்றோ பொருள்.


இப்படிச் சொல்வதற்காக என்னைக் கோபிக்காதீர்கள்.
தாத்தா பாட்டியைத் திண்ணையில் வைத்து, திண்ணை இல்லாத வீடு மாறிய பிறகு வீட்டிலிருந்தே விரட்டியதுபோல, கடவுளை விரட்டியடித்தவர்கள் நீங்கள்!
உங்கள் குழந்தைகள் கடவுளைப் பார்க்காதவரை, உங்கள் முதுமையில் உங்களையும் விரட்டுவார்கள்!

உங்கள் வீட்டிற்கு கடவுள் வந்தாரா?

கடவுள் வந்தபோது நான் வீட்டில் இல்லை
நான் காத்திருந்தபோது அவருக்கு வேறு வேலை

மதில்மேல் முகம் புதைத்துப் பூனைபோல் பார்த்தபடி
இன்றாவது சந்தித்தாயா எனக் கேட்கும் அண்டைவீட்டார்
தொலைபேசி வழி விசாரிப்புகள் என எனக்கும் கடவுளுக்குமான உறவில் ஊர் சிரித்தது

அன்று ஒரு நாள் நான் தோட்டத்திற்குப் புறப்பட்டபோது, என் மகன் தன் பென்சில் ஓவியங்களுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். அவனது ரயில் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருக்கும். கேட்டால், ’இந்த ரயில் தண்ணீர் ஊற்றினாலே தானே முளைத்து வளர்ந்துவிடும். யாரும் செய்ய வேண்டியதில்லை. அதில் பயணிக்கக் காசும் தேவையில்லை’ என்பான். என் தேவைகளைப் பட்டியலாக எழுதி, மடித்து அவனிடம் கொடுத்தேன்.’கடவுள் என்னைத் தேடி வந்தால் இதை அவரிடம் கொடுத்துவிடு’ என்றேன். ’நீ வர்ற வரைக்கும் இருக்கச் சொல்லவா?’ எனக் கேட்டான். ’அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். வேண்டாம்’ என்றேன். பிறகு, ‘நீ அவரை உன் கார் விளையாட்டில் சேர்ந்துகொள்ளும்படி தொந்திரவு செய்துடாதே’
‘ஏன்...அவருக்குக் கார் ஓட்டத் தெரியாதா?’
’இல்ல...அவருக்கு எல்லாம் தெரியும்...ஆனா நேரம் இருக்காது’
அவனுக்கு இதில் உடன்பாடில்லை என்பதுபோல் தெரிந்தது. நான் புறப்பட்டுவிட்டேன்.


அன்று மாலை சாயத் தொடங்கிய வேளை, நீண்ட காலமாக சத்துடனிருந்துவிட்டு, என் அப்பா காலத்தில் உயிரற்றுப்போன தோட்டத்தில் வாய்க்கால் வெட்டிக்கொண்டிருந்தோம். அந்தக் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சிறு வண்டுகளோ தும்பிகளோ கூட வருவதில்லை. அவை வருவதற்குரிய செடிகளும் அந்நிலத்தில் முளைப்பதில்லை.


என் மண்வெட்டி சற்றே ஆழப் பதிந்தபோது, வெட்டி வீசப்பட்ட மன்ணோடு சுருட்டிக்கொண்டு மண்புழு ஒன்று வந்தது. கடவுளிடம் கேட்டிருந்த உதவிகளில் அதுவும் ஒன்று! பிறகு, பள்ளமான வயல் ஒன்றில் வயல் நண்டுகளைப் பார்த்ததாக மாடு மேய்த்த சிறுவர்கள் கூவியபடி ஓடி வந்தார்கள். நத்தைகளைக் கண்டதாகவும் கானாங்கோழிகளைக் கண்டதாகவும் முதியவர்கள் தெரிவித்தார்கள். இவையும் கடவுளிடம் நான் வைத்த கோரிக்கைகள்தான்.


சிட்டுக்குருவிகள், செம்போத்துப் பறவைகள், மரங்கொத்திகள், வரிச்சான்கள் என காணாமல்போனவை அல்லது போகத் தொடங்கியவை அனைத்தும் காணக்கிடைத்தன.


நான் வீடு திரும்பும்போதும் மகன் வரைந்துகொண்டுதானிருந்தான்.
’கடவுள் வந்தாரா...?’
’ஓ...வந்தாரே...’
’அந்தப் பட்டியலைக் கொடுத்தியா...?’
’ம்...’
என்றபடி நிமிராமல் வரைந்தான்.
’நீ ஏதும் கேட்டியா...?’ என்றேன்.
ஆர்வத்துடன் நிமிர்ந்துபார்த்து சொன்னான்,
‘அந்த வண்ணாத்துப்பூச்சி என் கையில சிக்காமலே இருந்துச்சுல்ல...? அது இனிமே சாயங்காலம் ஆனா தானே பறந்து வந்து என் கையில உக்கார்ந்திருமே...’
‘எப்படி?’
’கடவுள் தாத்தா கிட்ட இதப்பத்தி சொன்னேன்...அவர் அந்த வண்ணாத்திப்பூச்சிக்கிட்ட சொல்லிட்டாரு...இதோ பாரு...’
என உள்ளங்கைகளை விரித்துக் காட்டினான். மஞ்சள் கலந்த செந்நிறத்தில் மருதாணி பூசியது போலிருந்தது. வண்ணத்துப் பூச்சி பறந்து வந்து இவன் கைகளில் அமர்ந்து, மகரந்தத் தூளை உதிர்த்து மருதாணிபோல் பூசியதாக விளக்கினான். மேலும், இது இனி தினமும் நடக்கும் என்றும் அந்த வண்ணத்துப்பூச்சியிடம் மகரந்தம் இல்லையென்றால் அதன் தோழிகளை அழைத்து வரும் என்றும் கூறினான். மீண்டும் வரையத் தொடங்கினான்.


என் அண்டை வீட்டார் சுவர் உச்சியில் முகம் புதைத்தபடி, ‘என்ன...இன்னிக்கும் சாமி வரலியே?’ என்றனர். நான் மகனைப் பார்த்தேன். அவன் ’பாருப்பா…வந்தாரு வந்தாருன்னு சொல்றேன்…இவங்க இல்ல இல்லங்கறாங்க…அவங்களுக்குக் காட்டத்தான்…கடவுளைப் படம் வரஞ்சுக்கிட்டிருக்கேன்…’ என்றான்.


’சின்னப் பயலைக் கெடுத்து வச்சிருக்கீங்களே…’என்றார் ஒருவர்.
’உங்க வீட்டுக்கு இதுவரைக்கும் கடவுள் வந்ததே இல்லையா?’ எனக் கேட்டேன்.


அவர்கள் பூஜை அறையைப் பராமரிப்பதில் தொடங்கி பல்வேறு தூர தேசங்களுக்குச் சென்று உண்டியலில் பணம் கொட்டுவதுவரை அடுக்கடுக்காகக் கூறினர்.
’அப்புடியுமே…எங்க வீட்டுக்கு சாமி வந்ததில்ல…உங்க வீட்டுல ஒரு சாமி படம் கூடக் கெடையாது…கோயிலுக்கும் போறதில்ல…எப்புடி வருவாரு?’ என்றனர்.


பிறகு தங்கள் வேண்டுதல்களில் ஒன்று கூட நிறைவேறுவதில்லை என்றனர். அந்த வேண்டுகோள்களில் சிலவற்றை மாதிரிகளாகக் கூறிப் புலம்பினர். அவையனைத்தும் கடன் அடைப்பது, சம்பள உயர்வு, புதிய கடன் பெறுவது, நோய் தீர்வது தொடர்பானவை.


மகன் சட்டெனத் திரும்பி கோபமாகக் கத்தினான், ‘கடவுள் என்ன பேங்க் வச்சிருக்காரா? இல்ல அவர் என்ன டாக்டரா? அவர்கிட்டப் போயி…இதெல்லாம் கேக்கறீங்க? அவர் எதைப் படைச்சாரோ அதைக் கேட்டாத்தான் குடுப்பாரு…’
என்றுவிட்டு என்னைப் பார்த்து…
‘இல்லப்பா…?’ என்றான்.
நான் புன்னகைத்தபடி அவன் வரைந்த படத்தைப் பார்த்தேன்.
’இது யார் சொல்லு?’ என்றான்.
‘தெரியலையே…’
’இதுதான்…கடவுள் தாத்தா…’
என்றான்.
மகனது ஓவியத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதை என்னால் உங்களுக்கு விளக்க இயலவில்லை. ஆகவே, உங்கள் மகனிடமோ மகளிடமோ இதுபோன்ற அனுபவம் கிடைக்கும் வரைக் காத்திருங்கள்.


ஒருவேளை, அவர்கள் கடவுள் படம் என்ற பேரில் சுற்றிலும் தனம் கொட்டியிருக்கும் ஏதேனும் வங்கி அதிபர் படத்தை வரைந்தால், உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகளும் மருதாணியும் இல்லை என்று பொருள். அதேபோல், உங்கள் நிலத்தில் உயிர் இல்லை என்றோ அல்லது உங்களுக்கென்று நிலமே இல்லை என்றோ பொருள்.

இப்படிச் சொல்வதற்காக என்னைக் கோபிக்காதீர்கள்.

தாத்தா பாட்டியைத் திண்ணையில் வைத்து, திண்ணை இல்லாத வீடு மாறிய பிறகு வீட்டிலிருந்தே விரட்டியதுபோல, கடவுளை விரட்டியடித்தவர்கள் நீங்கள்!

உங்கள் குழந்தைகள் கடவுளைப் பார்க்காதவரை, உங்கள் முதுமையில் உங்களையும் விரட்டுவார்கள்!

பட்டினிச்சாவின் முன்னறிவிப்பு

அறிமுகம்:

ம.செந்தமிழன். கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி,ஆம் தஞ்சையில் இயற்கை வழி வேளாண்மை செய்யும் விவசாயி. ஆவணப்பட இயக்குநர்.பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், தமிழ் தேசிய ஆர்வலர் என்ற பன்முகங் கொண்டவர்.

நெல் விவசாயம் ஒரு காலத்தில் ஆற்றுப் பாசனத்தில் மட்டும் அதிகம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும், மூன்று போகங்களும் நெல் பயிரிடாமல் கேழ்வரகு, கடலை, எள், உளுந்து, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கலந்த வேளாண்முறை இருந்தது. இதனால், எந்தக் குறிப்பிட்ட பயிரும் மிகையாக உற்பத்தி செய்யப்படாமல், உற்பத்தி அளவு கட்டுக்குள் இருந்தது. மேலும், பலவகைப் பயிர்கள் உணவுக்குக் கிடைத்ததால் மக்களது உணவுப் பழக்கம் சீராகவும் சத்துள்ளதாகவும் இருந்தது.

குறிப்பாக, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து அதிகம் உள்ள அரிசியை அளவோடு உண்டு நலமாக வாழ்ந்தனர் நம் மூத்த தலைமுறையினர்.

புன்செய் எனப்படும் ஆற்றுப்பாசனமில்லா நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம் (வெள்ளைச் சோளம், காக்கா சோளம், முத்துச் சோளம்), சிலவகை நெல் வகைகள் – மட்டை நெல் அல்லது சிவப்பரிசி நெல், மாப்பிள்ளைச் சம்பா, குச்சி நெல், மடுமுழுங்கி உள்ளிட்டவை- கடலை, உளுந்து, துவரை, எள், காய்கறிகள் – அதிகம் நீர் தேவைப்படாத வகைகள் – உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்கள் புன்செய் நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டன.

பசுமைப் புரட்சி என்ற ஊழல் புரட்சி ’உணவுத் தட்டுப்பாடு’ என்ற பொய்யைக் கூறியது. அரிசி மட்டும்தான் உணவு என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டு, அரிசியின் உற்பத்தி அளவு போதாமையில் உள்ளது என்றனர். இதற்காக அவர்கள் அள்ளி விட்ட புள்ளி விவரப் புளுகு மூட்டைகள் கணக்கிலடங்காதவை.

இதன் விளைவாக, நெல் பயிரிடுவதற்கு அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்தனர்.

• புதிய – வீரிய நெல் வகைகள் கண்டுபிடிப்பு
• இரசாயன உரங்கள் அறிமுகம்
• பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் அறிமுகம்
• நெல்லுக்குக் கூடுதல் விலை
• அரிசி உண்பதே உயர்ந்தது எனும் மறைமுக உளவியல் பிரசாரம்
• நெல் பயிரிட்டால் கடன் வசதி (இப்போதும் விவசாயக் கடன் நெல் விவசாயத்துக்கே வழங்கப்படுகிறது / முன்னுரிமை வழங்கப்படுகிறது-நானே வாங்கியுள்ளேன்!)
• நெல் கொள்முதலுக்கு அரசு பொறுப்பேற்பு
• பிற தானியங்களைப் புறக்கணித்து ஒழித்தல்
-என பல நடைமுறைகள் வழியாக நெல் பயிரிடலை அதன் தேவைக்கும் திறனுக்கும் சற்றும் பொருந்தாத முறையில் அதிகப்படுத்தியது பசுமைப் புரட்சி.
விளைவு...
ஆற்றுப் பாசன விவசாயிகள் நெல் தவிர வேறு பயிர் செய்ய இயலாதவர்களாக மாறிவிட்டனர். ஆடு, மாடு, கோழி வளர்க்கக் கூட நிலம் இல்லாத வகையில் எங்கு பார்த்தாலும் நெல் வயல்கள்!
பல ஊர்களில் குறிப்பிட்ட காலத்திற்கு ஆடு வளர்க்கத் தடையே உள்ளது. ஆற்றுப் பாசன ஊர்கள் பலவற்றில் எப்போதுமே ஆடு வளர்க்கக் கூடாது அல்லது ஆடு வளர்ப்பவரின் வேலி தாண்டி வரக்கூடாது.

இவையெல்லாம் எதற்கு?
நெல் சாகுபடியைப் பாதுகாப்பதற்கு!

ஆனால், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு நெல் சாகுபடி செய்யும் விவசாயி கடனில் மூழ்கி நிலத்தை விற்க வேண்டியுள்ளது என்பதுதான் நிலை. விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படும் வழக்கம், நெல் விவசாயம் செய்யப்படும் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளது என்பதைக் கவனித்துப் பார்த்தால் உண்மையின் சூட்டை உணர முடியும்.

மக்களின் பொது உணவாக அரிசி மாறிவிட்டதால், போதுமான அரிசி உற்பத்தி அளவைத் தமிழகத்தால் எட்ட முடியவில்லை. இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அதிக அரிசியைத் தமிழகத்தில் இறக்குகின்றன.

இந்த மாநிலங்களில் எல்லாம், அரிசி மட்டுமே உண்ணும் மூடத்தனம் இல்லை. சான்றாக, பெங்களூரில் கூட ராகி முத்தே எனப்படும் கேப்பைக் கூழ் உருண்டை தாராளமாகக் கிடைக்கிறது. கிராமங்களுக்குச் செல்லச் செல்ல இந்தப் பழக்கம் கம்பங்களி, வரகுச் சோறு, தினைச் சோறு, சாமைச் சோறு என அதிகரிப்பதைக் காண முடியும். ஆந்திராவிலும் இதே நிலைதான்.
இதனால்தான் அவர்களால் தமிழ்நாட்டுக்கு அரிசி விற்க முடிகிறது.

நம் கிராமங்களோ, ஒரு ரூபாய் அரிசி இல்லாவிட்டால் பட்டினிச் சாவு என்ற அபாயத்தை நோக்கிச் சென்றுவிட்டன. இது மிகையல்ல, முழு உண்மை!

நெல் சாகுபடியின் வரவு – செலவுக் கணக்கைப் பார்ப்போம்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குக் குறைந்தளவுச் செலவு ரூ.25 ஆயிரம் ஆகும். இது, விவசாயம் செய்பவருடைய உழைப்பைக் கணக்கிடாத செலவு ஆகும். விவசாயி தன் குடும்பத்தினருடன் இணைந்து உழைத்துதான் பயிரிடலில் ஈடுபடுகிறார்.
விதை, கூலியாகக் கொடுக்கும் பணம், பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களுக்கான செலவு ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு மேற்கண்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் விளைச்சல் சராசரியாக – 30 மூட்டைகள்.

அதிக விலை மதிப்பு கொண்ட பொன்னி ஒரு மூட்டை ரூ.1050
குறைந்த விலை மதிப்பு கொண்ட வகைகள் ஒரு மூட்டை – ரூ 450
(கோ 43, குச்சி நெல் உள்ளிட்டவை)

இந்தக் கணக்கின்படி,
ஒரு ஏக்கருக்கு-
அதிகளவு வருமானமாக ரூ. 31,500
குறைந்தளவு வருமானமாக ரூ.13,500
கிடைக்கிறது.

குறைந்த விலை மதிப்புள்ள வகை நெல் பயிரிடலில் விதை விலை மட்டுமே குறையும். மற்றச் செலவுகள் குறையாது. அதேவேளை பொன்னி உள்ளிட்ட அதிக விலை மதிப்புள்ள நெல் வகைகள் பராமரிக்கக் கடினமானவை. ஆகவே, அவற்றின் செலவு மேற்கண்ட சராசரிச் செலவைக் காட்டிலும் கூடுதலாகும். இவ்வகை நெல் வகைககள் அதிக வெப்பம், அதிக மழை ஆகிய இரு சூழல்களையுமே தாங்காதவையாகும். இதற்கேற்ப, வெப்பம் மிகுந்தால் நீர் பாய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தால், மழையில் நனைந்துகொண்டாவது மிகை நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இவை தவிர, நோய் தாக்குதல், விதை பழுது காரணமாக விளைச்சல் குறைதல், ஆள் பற்றாக்குறை / கூலி உயர்வு காரணமாக பராமரிக்க இயலாத நிலை உள்ளிட்ட எண்ணற்ற காரணிகள் செயல்படுகின்றன. இவ்வளவையும் மீறி விளைவிக்கப்படும் நெல்லுக்குத்தான் மேற்கண்ட விலை!

ஆக, கணக்கிட்டுப் பார்த்தால் நெல் விவசாயம் என்பது இழப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதே உண்மை. இதனால்தான் நெல் விவசாயம் செய்யப்படும் பரப்பு நம் கண்ணெதிரே குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், அரசு கொடுக்கும் புள்ளிவிவரங்களோ தலைகீழானவை. உற்பத்தி உபரியாக உள்ளது என்கிற விததில்தான் ஒவ்வொரு முறையும் அரசு அறிவிக்கிறது.

இனி...நெல் அரிசியாக் மாறும் நிலையில் உள்ள கணக்குகளைப் பார்ப்போம்!

ஒரு மூட்டை நெல் 62 கிலோ ஆகும். இதில் சாக்கு எடை என 2 கிலோ வியாபாரிகளால் கழிக்கப்படும். உண்மையில் சாக்கின் எடை 1 கிலோவுக்கும் குறைவே!

60 கிலோ நெல் அரைத்தால் 35 -40 கிலோ அரிசி கிடைக்கும். இதன் சராசரி அளவாக 37 கிலோவைக் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளலாம்.


இதற்கான செலவுகள்:

ஒரு மூட்டைக்கு-
அவித்து அரைக்கும் கூலி –ரூ 35
மூட்டை தூக்குவோர் கூலி –ரூ 5
மொத்தச் செலவு ரூ.40/

அரைக்கும்போது கிடைக்கும் பொருட்களின் மதிப்பு:
குருணை 2 கிலோ – ரூ. 30
தவிடு 21 கிலோ - ரூ. 110
(கிலோ 5ரூபாய்)
மொத்த மதிப்பு ரூ. 140/

ஆக,
நிகர வருவாய் ரூ.100/
(ரூ140-ரூ.40)

இந்த வருவாய் (ரூ.100) ஒருபோதும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. அரசு கொள்முதல் செய்யும்போதும் தனியார் கொள்முதல் செய்யும்போதும் இந்த வருவாய் பற்றி வாய் திறப்பதே இல்லை.
தவிடு விற்பனை இன்று மிகப் பெரிய வணிகமாகும்.
கால்நடைத் தீவனங்கள் தயாரிப்புக்கு தவிடு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது மட்டுமல்ல, தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்குத் தவிடு ஆயிரக்கணக்கான டன்கள் விற்கப்படுகின்றன. தவிட்டு எண்ணெய் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக பல நூறு கோடிகளைக் குவிக்கிறது. இந்த வருவாய்களில் இருந்து ஒரு பைசா கூட நெல்லை விவசாயம் செய்தவருக்குக் கிடைப்பதில்லை.

இதைவிடக் கொடுமை, இப்படியெல்லாம் வருவாய் வருகிறது என்ற உண்மைகூட விவசாயிகளுக்குத் தெரிவதே இல்லை.

அரிசி விலையின் அதிசயக் கணக்குகள்:

மேலே கண்ட கணக்குகளின்படி ஒரு மூட்டை அரிசி ரூ.1050 என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. அரவையின் போது கிடைக்கும் உபரி வருவாயான ரூ.100ஐக் கழித்துவிட்டால், நிகரக் கொள்முதல் விலை ரூ.950/ஆகும்.

இம்மூட்டையிலிருந்து குறைந்தளவு 35கிலோ அரிசி கிடைக்கிறது.
அதாவது ஒரு கிலோ அரிசியின் மதிப்பு ரூ.27/-

இந்த அரிசிதான் கடைகளில் ரூ.35 முதல் ரூ.40வரையும், பொருளாதார மந்தம் என்ற பெயரில் சில வேளைகளில் ரூ.45 என்ற விலைக்கும் விற்கப்படுகிறது.

குறைந்தளவு விலையான ரூ.35ஐ எடுத்துக்கொள்வோம்.
ஒரு மூட்டை நெல்லின் கணக்கு எப்படி மாறுகிறதெனப் பார்ப்போம்.

ஒரு மூட்டை நெல்லில் கிடைக்கும் அரிசி மதிப்பு – ரூ.35 * 35கிலோ =ரூ.1225/-

அரிசி விற்பனை மதிப்பு ரூ. 1225
அரவையில் கிடைக்கும் மதிப்பு ரூ.100
மொத்த வருவாய் –ரூ.1325/-
(-)
விவசாயிக்கு வழங்கப்படும் விலை ரூ.1050

நிகர ஆதாயம் = ரூ. 275/

ஒரு மூட்டையில் வணிகர்களுக்கும் இடைத் தரகர்களுக்கும் ஆலை முதலாளிகளுக்கும் கிடைக்கும் ஆதாயம் ரூ.275/

வணிகர்களும் முதலாளிகளும் தங்கள் செலவினங்களையும் முதலீடுகளுக்கான பங்குகளையும் கழித்துப் பார்த்தால்கூட, இத்தொகை அவர்களுக்குக் கொள்ளை ஆதாயத்தையே தருகிறது.

இந்த வணிகத்தின் அடிப்படைக் காரணியான விவசாயி கணக்குப் பார்த்தால், மூட்டைக்கு 1 ரூபாய் ஆதாயம் கூடக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

இதே நிலை நீடித்தால், விவசாயிகள் நெல் பயிரிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால், தமிழக உணவுத் தேவையைச் சமாளிக்கப் பேரளவு பிற நாடுகளையும் மாநிலங்களையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். விலை ஏற்றம் விண்ணைத் தொடும்.

இன்னும் இரு ஆண்டுகளில் அரிசியின் குறைந்தளவு விலை ரூ.30 ஆகிவிடும் வாய்ப்பே அதிகம். அதிகளவு விலை (பொன்னி வகைகள்) ரூ.50ஐத் தாண்டிவிடும்.

இவை தவிர, கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் நடக்கும் அபாயத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள் உணர வேண்டிய செய்தி இதுதான்; ’விவசாயிகள் பட்டினி கிடக்கும்போது கண்டுகொள்ளாத சமூகம் ஒருவேளை உணவுக்கும் வழியின்றிச் சாகும்’.

எதிர்வினைக்கு மறுவினை

புலவர் க.முருகேசன் அவர்களின் இந்தத் திறனாய்வு திராவிடக் கோட்பாட்டாளர்களுக்கேயுரிய விவாத முறையைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். தனிமனிதத் தாக்குதல், இழிவு செய்தல், கோட்பாட்டு விவாதங்களுக்குள் புகும்போது, தமக்கு வசதியான தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாதிடுதல் ஆகியவை ‘திராவிடக் கோட்பாட்டாளர்களுக்கே’ உரிய பண்புகள்.

முதலில் ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் (04-05-2009), நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில், நான் உட்பட 65 பேர் கலந்து கொண்டோம். பின்னர் 38 பேர் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டோம். 58 வயது பெண்ணும் சிறை சென்றவர்களில் ஒருவர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரியாரைப் பற்றி தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசியதால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடந்த முற்றுகைப் போராட்டம் அது. எமது இயக்கத்தவர் மட்டுமல்ல, பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். அந்த வழக்கில் நிபந்தனைப் பிணை பெற்று, தஞ்சையிலிருந்து வாராவாரம் ஈரோடு சென்று நீதிமன்றத்தில் கையெழுத்திட்டவன் நான். இன்னும் வழக்கு நடக்கிறது. போராட்டம் நடத்தியபோது எந்தளவு மனநிறைவும் பெருமிதமும் இருந்ததோ, அதே உணர்வு எனக்கு இன்றும் உள்ளது.

பெரியாரை மதிப்பது வேறு, அவரைத் திறனாய்வு செய்வது வேறு! அவரது ரசிகர்களாக இருப்பது வேறு.

எத்தனையோ இனத்தாரை, கோட்பாடுகளைத் தன்னுள் ஏற்று, அவற்றுள் கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி வளர்வது வருவது தமிழியம். திராவிடக் கோட்பாட்டிலும் கொள்வனவும் உண்டு. தள்ளுவனவும் உண்டு.

புலவர் முருகேசன், கற்பு குறித்த தொல்காப்பியர் சூத்திரத்திற்கு, “கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் பெண் என்ன கடைச் சரக்கா?’ என்ற அளவில் ஒரு விமர்சனத்தை வீசுகிறார். கற்பு மணம் என்பது, மானுடவியல் போக்கில், பண்பாட்டுப் பரிணாமத்தில் விளைந்த முறையாகும். பலதார மணம், இணைமணம் ஆகிய முறைகளின் தொடர்ச்சி அது. சுருங்கக் கூறின், குடும்பம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட முறையே கற்பு மணம் ஆகும். திரு.முருகேசன், மேற்கோள் காட்டும் பாடலின் முன்பாதி,

‘கற்பு எனப்படுவது, சடங்குகளோடு புணர ஏற்படுத்தப்பட்ட முறை’ என்று கூறுகிறது. ‘காதலர்கள் தம் விருப்பம்போல் பாலுறவு கொண்டு பிள்ளைகள் பெற்று வரையறைகள் இல்லாதிருந்த காலத்திலிருந்து மாறி, குடும்பம் எனும் அமைப்பை நிலைநாட்ட, முன்னோர் வகுத்த முறை கற்பு’ என்பது அதன் விரிந்த பொருளாகும். இக்கருத்தை,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’- என்கிறார் தொல்காப்பியர். ஐயர் என்றால், தலைவர் என்று பொருள் - பார்ப்பன‌ர் அல்லர்!

ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகள் அதிகரித்த பின்னர், சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் என்பது கருத்து. இன்றும், திருமணம் என்றால் அது கரணம்தான் - சடங்குதான். யாருமறியாது ஆண் - பெண் கூடி வாழ்வதில்லையே! உற்றார் உறவினரைக் கூட்டித்தானே திருமணம் நடக்கிறது! இதுவே கற்பு மணம் ஆகும்.

கற்பு என்பது, ஆண் - பெண் நிலைத்த குடும்பமாக வாழ வேண்டுமென்று தலைவர்களால்/ ஆன்றோர்களால் கற்பிக்கப்பட்ட முறையாகும். கற்பு என்றால் கற்பிக்கப்பட்டது என்றே பொருளாகும்.

திரு.முருகேசன் குற்றம் சாட்டும்விதமாக, ‘பெண் என்ன கடைச் சரக்கா?’எனக் கேட்கும் படியான எந்தப் பொருளும் தொல் காப்பியத்தில் இல்லை.

‘கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’

- என்றால், ‘கொடுப்பதற்குரிய மணமகனையும் மணமகளையும் பெறுவதற்குரியவர்கள் பெறுவது கற்பு மணம்’ என்றுதான் பொருள். தமிழறிந்த யாரும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்பாடல் “பெண்ணை மட்டும் கொடுப்பது - பெறுவது’ என்று எழுதப்பட்டதாகக் கற்பனை செய்து கொண்டு, அப்பாடலே ஆணாதிக்கப் பாடல் என்கிறார் திரு.முருகேசன். கற்பு என்ற சொல்லை வைத்துத் திராவிடக் கோட்பாட்டாளர்கள் ஆடிவரும் பொய் ஆட்டம் அறிவுலகிற்குப் பொருந்தாது. ‘கற்பு என்றாலே அது ஆணாதிக்கம்’ என்பது அவர்களது கண்டுபிடிப்பு. இந்த அவதூறு களுக்குத் தொல்காப்பியர் பொறுப்பாக முடியாது. பின்வரும் பாடல் கருத்துகளைப் பார்ப்போம்.

· காதலன் காதலி விரும்பித் தாமே சேர்ந்துகொண்டால், கொடுப்போர் இல்லாமலும் கற்பு மணம் நிகழும் என்கிறது கற்பியல் சூத்திரம்.

· பெண்ணின் காதலை அறிந்து அவளுக்கு மணம் செய்விக்கும் உரிமையும் கடமையும் தாய்க்கு மட்டுமே உண்டு. இதை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் ஏராளம். காதலனுடன் உடன்போக்கு சென்ற பெண்ணைத் தேடி, தாய் செல்லும் பாடல்கள் மட்டுமே உண்டு. தந்தை சென்றதாக இல்லை. மேலும், தொல்காப்பியர் களவியலில் இதுகுறித்து நிறைய உரைத்துள்ளார். மகள் காதலிக்கும் சேதி அறிந்த தாய், மகளின் காதலனைப் பற்றி, சான்றோர் களிடம் கேட்டுத் தெளிவு பெறுவாள் என்கிறார் தொல்காப்பியர் (களவியல்-26- ‘கிழவோன் அறியா அறிவினள்...’) பெண்ணின் தாய்க்கும் செவிலித் தாய்க்கும் தோழிக்கும் மட்டுமே களவியலி லும் கற்பியலிலும் மிகையான பங்களிப்புகள் உண்டு.

· பெண்ணின் திருமணத்தில்/ காதல் வாழ்க்கையில் தந்தைக்கும் சகோதரனுக்கும் குறிப்பிடத்தக்க இடமே இல்லை என்பதைத் தொல்காப்பியர், “தந்தையும் தன்னையும் முன்னதின் உணர்ப” (களவியல்) என்கிறார். அதாவது, பெண்ணின் காதல் வாழ்க்கை/கற்பு வாழ்க்கை குறித்து இவர்கள் இருவரும் கேள்விப் படுவார்கள். அவ்வளவே. மற்றபடி, அனைத்து உரிமைகளும் பொறுப்பு களும் தாய்க்கும் பிற பெண்களுக்கு மே உண்டு. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது?

தொல்காப்பியம் மட்டு மல்ல, சங்க இலக்கியங்கள் அனைத் தையும் படித்து ஆய்வு நோக்கில் உணர வேண்டு மெனில், மானுட வியல், பண்பாட்டுப் பரிணாமவியல் அறிந்திருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்களைப் போகிற போக்கில் கெல்லி எறிய முடியாது.

இதேபோல், பரத்தமை ஒழுக்கம் குறித்தும் திரு.முருகேசன் திராவிடக் கோட்பாட்டு விளக்கங்கள் கொடுக்கிறார். ‘பரத்தையர் என்போர் விபசாரிகள் அல்லர்’ என்பது என் ஆய்வு முடிவு. எனது “நிலம் பெண்ணுடல் நிறுவனமயம்” நூலில் இக்கூற்று விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் இக்கருத்தைச் சுருங்கக் கூறுகிறேன். ஆண் - பெண் பாலுறவு வாழ்க்கை கட்டுப்பாடற்று இருந்த காலத்தில் குடும்பம் எனும் அமைப்பும் இல்லை. நிலவுடைமையும் இல்லை. இந்த நிலை மாறத் தொடங்கி, குடும்பமும் நிலவு டைமையும் உருவாகியபோது நிலவிய முறையே பரத்தமை ஆகும். அதாவது, பல்லாயிரம் ஆண்டுகளாக, மணம் புரியாது வாழ்ந்த பெண்களும் ஆண்களும் குடும்பம் எனும் புதிய அமைப்பு முறைக்குள் செல்லும்போது, அனைவரும் இந்த அமைப்பை விரும்பி ஏற்கவில்லை. சிலர் ஏற்றனர்; சிலர் மறுத்தனர். ஏற்றோர் கற்பு மணம் புரிந்தனர். மறுத்தோர் பரத்தமை ஒழுக்கம் நாடினர். பரத்தைப் பெண்கள், பொருளுக்காக/பணத்துக்காக ஆணுடன் உறவு கொண்டதாக எந்தச் சங்க இலக்கியமும் கூறவில்லை. திருமணத்தை விரும்பாத பெண்கள் தாமாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை அது.

பரத்தையர்களும் குடும்பத் தலைவியரும் சகோதரிகளாக வாழ்ந்ததற்கான சான்றுகளே சங்க இலக்கியங்களில் மிகையாக உள்ளன.

தொல்காப்பியரும் இதைப் பதிவு செய்துள்ளார். குடும்ப ஆதிக்கம் பெண்கள் கையில்தான் இருந்தது என்பதற்கான சான்றாகவும் இதை அணுகலாம். பரத்தையர் வீட்டிற்குச் சென்று திரும்பும் கணவனை வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கும் பெண்ணை சங்க இலக்கியங்கள் முழுதும் காணலாம்.

“பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் கணவன், மனைவி யின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான். அவனைத் தூக்கி விடும் மனைவி, ‘நீ இம்மாதிரி காலில் விழுவதை என் தங்கையராகிய பரத்தையர் கண்டால் சிரிக்க மாட்டார்களா? எனக் கேட்பாள்’ என்கிறார் தொல்காப்பியர். (கற்பியல் - 6).

இந்த நிலை எதைக் குறிக்கிறது? மண வாழ்க்கை வேண்டுமென்று விரும்பித் தேர்ந் தெடுத்த ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்துகின்றனர். இதில், ஆண் மண வாழ்க்கையிலிருந்து விலகி, மண வாழ்க்கையை விரும்பாது வாழும் பெண்களுடன் பாலுறவு கொள் கிறான். இதை மனைவி கண்டிக் கிறாள். இது விபசாரம் அல்ல. பரத்தையர்கள், ஆண்களின் பாலுறவுப் பதுமை களாக நடத்தப் பட்டார்கள் என்பதற் கான சான்றும் அல்ல இது. திராவிடக் கோட்பாட்டாளர்கள் கதைகட்டுவது போல், ஆணாதிக்கச் சமூகம் நிலவி யிருந்தால், பரத்தை வீட்டுக்குப் போய்த் திரும்பிய ஆண் மனைவி யின் காலில் ஏன் விழ வேண்டும்?

பெரியாரின் கொள்கைகளை ஏற்ற திராவிடக் கோட்பாட்டாளர்கள், பரத்தமை ஒழுக்கத் தை ஏன் எதிர்க்க வேண்டும்? “குடும்பம் என்பதே தேவையற்ற ஒன்று” என்பதுதானே பெரியாரின் கொள்கை!

பெரியாரின் வார்த்தை களிலேயே இதற்கான விளக்கத்தைக் காணலாம்.

“...திருமண முறை எதற்காக எப்போது ஏற்பட்டது எனப் பார்ப்போம். ஆணின் மீது பெண் ணுக்கு எப்படி ஆதிக்கம் இல்லாமற் போய்விட்டது என்பது குறித்துச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்... தனியுடைமைச் சுதந்திரம் இல்லாத போது தனக்கே பிள்ளை பிறக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உதித் திருக்க இடமே இல்லை. என் றைக்குத் தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக்கொள்ள உரிமை ஏற்பட்டதோ, அதன்பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

....தனி உடைமை இல்லாத ரசியா போன்ற நாடுகளில் பெண்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந் திருப்பதை நாம் பார்க்கலாம். தனி உடைமையில்லாத நாட்டில் திருமணமுறை இருக்காது; வாழ்க்கை ஒப்பந்தந்தான் இருக்கும்.

(விடுதலை - 11-10-1948)

பெரியாரைப் பொறுத்த வரை, திருமணம் என்பதே, ஆணாதிக்கத்தனமானது. அப்படி யானால், பெண்களும் ஆண்களும் எவ்விதமான வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு கோட்பாட்டு அடிப் படையிலான விளக்கம் திராவிடக் கோட்பாட்டாளர்களால் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு கண்டவர்கள் தமிழர்கள். கற்பு மணம், பரத்தமை ஒழுக்கம் ஆகிய இரு பிரிவினரையும் சமமாக அங்கீகரித்தது தமிழர் மரபு. பரத்தையர் என்பதால், அவர்களைப் பாலியல் அடிமைகளாக ஆண்கள் நடத்தியதாகவோ, அவர்கள் பொரு ளுக்காகத் தமது பாலுறவை விற்றதாகவோ ஒரு சான்றும் இல்லை.

மேலும், திருமணம் என்பதே ஆணாதிக்கத்தனமானது என்ற கருத்தும் தமிழர் மரபு சார்ந்தது அன்று. திருமணத்தை முடிவு செய்யும் இடத்திலேயே பெண்கள் தான் இருந்தனர் என்பதை முன்னர் கண்டோம். முறையான ஆய்வு எதுவும் இல்லாது, தமிழர் மரபை இழிவுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வார்த்தைகளை வீசுவது திராவிடக் கோட்பாட்டாளர்களின் வழக்கம்.

குடும்பம் எனும் அமைப் புக்குள் புகாமல், வாழ்ந்த பரத்தை யரைப் பாராட்ட வேண்டிய திராவிடக் கோட்பாட்டாளர்கள், அவர்களை விபசாரிகளாகக் கருதி, தொல்காப்பியச் சமூகமே ஆணாதிக்க மானது என முழங்குவது ஏனோ?

கற்பு மணம் எனப்படும் திருமண முறையும் தவறு, திருமணம் புரியாது வாழ்ந்த பரத்தமையும் தவறு என்றால், எது சரி என்பதையாவது திராவிடக் கோட்பாட்டாளர்கள் உரைப் பார்களா?

ஆங்கிலத்தில் ஃபேமிலி (ஞூச்ட்டிடூதூ) எனும் சொல், கிரேக்கச் சொல்லில் இருந்து பறந்தது. “அடிமைகளின் தொகுப்பு’ என்று இதற்குப் பொருள். கிரேக்கத்தில், ஆண் பல பெண் அடிமைகளை வைத்திருந்தான். அவர்களைப் பொறுத்தவரை அது தான் குடும்பம். ஊச்ட்டிடூதூ(ஃபேமிலி) என்ற சொல்லைக் கொண்டுள்ள ஆங்கிலம் உயர்ந்த மொழி, குடும்பத்தை இல்லறம் என்று உரைக்கும் தமிழ் காட்டுமிராண்டி மொழி! - இதுதான் திராவிடக் கோட்பாடு.

‘தனிச் சொத்துடைமையை ஒழித் தால்தான், திருமணம் ஒழியும்’ என்ற பெரியாரின் கொள்கையை இன்றுள்ள திராவிடக் கோட் பாட்டாளர்கள் ஏற்கின்றனரா? அவ்வாறு ஏற்பதாக இருந்தால், தனிச் சொத்துடைமையை,ஒழிப்பது எப்படி என்ற செயல் திட்டம் அவர்களிடம் உண்டா?

தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சிக்கு அவ்வாறான தத்துவ அறிவும் செயல்திட்டங்களும் உண்டு.

தமிழ்ச் சமூக வரலாற்றில், தனிச் சொத்துடைமை, அரசு உருவாக்கம் ஆகியவற்றின் வழியே பொருளாதார முறைகளின் மாற்றம் எப்படி நடந்தது என்பதை விளங்கிக் கொள்ளாமல், இன்றைய சிக்கல் களுக்குத் தீர்வு கூற முடியாது. பரத்தையர், வரைவின் மகளிர், பொருட் பெண்டிர் - ஆகிய பிரிவுச் சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு, கால வேறுபாடு ஆகியவற்றை உணர்ந்து உரைத்தலே ஆய்வு. பொருட் பெண்டிர் முறை சங்கப் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். பொத்தாம் பொதுவாக, பரத்தமை இருந்தது, விபசாரம் இருந்தது என்றால், அது அவதூறு!

‘மேலோர் -கீழோர்’ எனும் சொற்களைக் கொண்டு, “தமிழர் மரபு ஏற்றத் தாழ்வு மிக்கது” என்கிறார் திரு.முருகேசன். குறிப்பிட்ட அந்தப் பாடலில், கற்பு மணம் யாருக்கு உரியது என்று விளக்குகிறார் தொல்காப்பயர்.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” என்கிறார். இதில், மேலோர் மூவர் யார் எனப் பார்த்தால்தான் உண்மையான பொருள் புரியும். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகியவையே நான்கு பிரிவுகள். இவற்றில், முதல் மூன்று பிரிவினரான அரசர், அந்தணர், வணிகர் ஆகியோருக்கு உரிய கற்புமண முறை, வேளாள ருக்கும் ஆகிய காலமும் உண்டு’ என்பது இப்பாடலின் பொருள். இதில், மேலோர் மூவர்- கீழோர் என்பது முதல் மூன்று பிரிவினர் மற்றும் நான்காம் பிரிவினர் என்ற வரிசை பிரித்தலே அன்றி, பாகுபாடு அல்ல.

கட்டுரை எழுதும் போது “மேலது, கீழது” என்று குறிப்பிடும் முறை உண்டு. இதன் பொருள் முன்னர் சொன்னது, பின்னர் சொன்னது என்பதாகும்; மேலானது, கீழானது என்பது அன்று.

இது பாகுபாடுதான் என்றால், வேளாளரைக் கீழ்நிலை யில் வைத்திருந்ததா தமிழ்ச் சமூகம் என்ற கேள்விக்கு திரு.முருகேசன் விடையளிக்க வேண்டும். அவ்வாறு விளக்குவதே ஆய்வு. ஒரு சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு, அச் சொல் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது எனப் பாராமல், அவதூறுகளை வீசுவது முறையல்ல.

நாமறிந்த தமிழர் வரலாற்றில், வேளாளருக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. வேளாளர்களைத் தமிழ்ச் சமூகம் கீழ்நிலையில் வைத்திருந்தது என்ற கருத்தை முன்வைத்தால், தமிழ் ஆய்வுலகம் ஏற்காது. திராவிட “ஆய்வுலகத்திற்கு” இது உவப்பான கருத்தாக இருக்கலாம்.

“திராவிடம்’ என்னும் சொல் லுக்கு திரு.முருகேசன், பல விளக்கங் களைக் கொடுக்கிறார். அவை அனைத்துமே, “பிற மொழியினர் தமிழரைத் திராவிடர்’ என்று அழைத்தனர்’ என்ற முடிவில் போய்த்தான் நிற்கின்றன. தமிழர் தங்களைத் தமிழர் என்று அழைக்கும்போது, பிறர் திராவிடர் என்று அழைத்தால் என்ன வேறு பெயரிட்டு அழைத்தால் என்ன? நம் இனத்துக்கு வேற்று இனத்தவர்தான் பெயர் சூட்ட வேண்டுமா?

‘திராவிடர் என்றால் பார்ப்பன‌ர் வரமாட்டார்’ என்ற திராவிட வாதம், முற்றும் முழுதாக மறுக்கப்பட்டுவிட்டது. இதே தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் 2010 ஏப்ரல் இதழில், பேரா.த.செயராமன், ‘திராவிடர் என்போர் தென்னிந்திய பார்ப்பன‌ரே’ என்ற ஆய்வைச் சான்று களுடன் வைத்துள்ளார். மார்ச்சு ஏப்ரல் இதழ்களில் வந்துள்ள (த.தே.த.க.) எனது கட்டுரைத் தொடரிலும் இதற்கான சான்றுகள் வைக்கப்பட்டுள்ளன. ‘இது யாரோ திரித்துவிட்ட கதை’ என்கிறார் திரு.முருகேசன். கதை திரிப்பதற்கா, இத்தனை வரலாற்றுச் சான்றுகள் முன்வைக்கப் படுகின்றன? ஒரு சான்றையேனும் மறுக்கும் ஆய்வு திராவிடக் கோட் பாட்டாளர்களிடம் உண்டா?

திராவிடர் என்றால் “தென்னிந்திய பார்ப்பன‌ர்” என்று நிறுவ, பிரிட்டானிகா என்சைக்ளோ பீடியாவில் இருந்தும் பேரா. த.செயராமன் சான்று காட்டியுள்ளார். பிரிட்டானிகா என்சைக் ளோபீடியா, திராவிடத்துக்கு உவப்பான ஆங்கில மொழிக் களஞ்சியம்தானே! உண்மையைச் சொன்னால் ஆங்கிலமும் கசக்குமோ!

திராவிடம் என்ற நிலப் பகுதியில் வாழ்ந்ததால், ஆரியப் பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று புதுவிளக்கம் தருகிறார். தஞ்சாறூரில் வாழ்பவரைத் ‘தஞ்சாறூரான்’ என்று அழைப்பது போல் தான் இது என்கிறார். தஞ்சாறூரான் என்று சொல்வது அவ்றூரில் வசிக்கும் எல்லா சாதி மக்களையும் குறிக்கும். ஆனால், திராவிடர் என்ற சொல் தென்னாட்டில் வசிக்கும் பார்ப்பன‌ர்களை மட்டும் தான் குறிக்கும் என்று ஏராளமான தரவுகளுடன், பேரா. த.செயராமனும் நானும், தமிழர் கண்ணோட்டம் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளோம். எனவே, அவர் சொல்லும் தஞ்சாறூரான் உவமை பொருந்தாத ஒன்று.

பெரியார், தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலில் தெளிவாகச் செயல்படவில்லை. அவர் முரண் பாடுகளுடன் இயங்கினார். தனித்தமிழ்நாடு வேண்டும் என்பார். தேசியம் என்றாலே பாசிசம் என்பார். இனப்பற்றோ மொழிப் பற்றோ எனக்கில்லை என்பார். கன்னியா குமரி மாவட்ட அளவு கிடைத்தாலும், வர்ணாசிரமம் இல்லாத நாடு இருந்தால் போதும் என்பார். தமிழ் மொழியை மறுத்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ஆகவே, தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்குப் பெரியாரைப் பின்பற்ற முடியாது என்பது என் கட்டுரையின் சாரம். ‘தனித் தமிழ்நாடுதான் பெரியாரின் இலக்காக இருந்தது’ என்கிறார் திரு.முருகேசன். பெரியாரது இலக்கு தனித் தமிழ்நாடு தான் என்றால், அவரது பாதையில் பயணிக்கும் எந்த இயக்கம் ‘தனித் தமிழ்நாடு அமைப்பது எமது கொள்கை’ என்று அறிவித்து உள்ளது என திரு.முருகேசன் விளக்க வேண்டும். திராவிட இயக்கங்கள் அனைத்துமே, இந்திய தேசியத்தின் கிளையாகச் செயல்படுகின்றன. தமிழக அரசுக்கும், தில்லி நாடாளு மன்றத்துக்கும் வாக்கு சேகரிக்கும் அல்லது வாக்குக் கேட்கும் கட்சி களாகத்தானே செயல்படு கின்றன! இதில் திராவிடத்திற்கு எங்கிருந்து, “தனித் தமிழ்நாடு” வந்தது?

மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் திராவிட இயக்கத்தவர் அல்லர். மொழிப்போராட்டத்திற்கு அடித் தளமும் உந்துவிசையும் அளித்தது தி.மு.க. தான். மொழிப்போர் தீவிரமடைந்த பிறகு, ‘நடக்கும் கலவரங்களுக்கும் தி.மு.கவிற்கும் சம்பந்தமில்லை’ என அறிவித்தவர் அண்ணாதானே! களத்தில் பலியான 400க்கும் மேற்பட்ட தமிழ் மறவர்களைச் சொந்தம் கொண் டாடக்கூட ஒரு கட்சி இல்லை என்ற நிலை உருவானது யாரால் என்பதை வரலாறு அறிந்தோர் உணர்வர். எந்தக் காங்கிரஸ் கட்சி அம் மறவர்களைக் கொன்றதோ, அதே கட்சியுடன் கூட்

இருமொழிக் கொள்கையை உருவாக்கி தமிழை ஆங்கிலம் அடிமைப்படுத்த வழிசெய்ததுதான் அண்ணாவின் மொழிக் கொள்கை. இந்தியும், ஆங்கிலமும் எங்களுக்கு இணைப்பு மொழி அல்ல. தமிழே இணைப்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை தமிழ்த் தேசியர்களால் உருவாக்கப் பட்டதாகும்.டணி அமைத்து வாக்குக் கேட்டதுதானே திராவிட இயக்கங்களின் வரலாறு!

‘திராவிடக் கட்சிகள் பார்ப்பன‌ ஜெயலலிதாவிற்கு வாக்கு கேட்பது ஏன்?’ என்ற கேள்விக்கு திரு.முருகேசன் அளித்துள்ள விடையின் சாரம், “கலைஞர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் நடத்த, இழந்தவற்றை அவரிடமிருந்து மீட்க” என்பதே ஆகும்.

‘தமிழர் என்றாலே அது தவறு. அப்படிச் சொன்னால் பார்ப்பன‌ர் வந்து விடுவார்கள்’ என்று கதைகட்டி, இன அடையாளத்தையே மறைத்த இயக்கத்தின் பிரதிநிதி, பார்ப்பன‌ர் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தக் கூறும் காரணம் இதுதான்! பார்ப்பன‌ர் தமிழரை ஆட்சி செய்யத் துணைபோவதும், பார்ப்பன‌ ஆதிக்கத்தை எதிர்க்கத் தானோ?

சேரி என்றால், சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். சேரி என்றாலே தாழ்த்தப்பட்ட சாதியினர் வாழும் இடம் என்று கதை கட்டப்படுகிறது. இதை மறுக்கும் சான்றுகளை என் கட்டுரையில் முன் வைத்தேன். திரு.முருகேசன், ‘மேல்சாதிக்காரன் ஒருவனாவது கீழ்சாதிக்காரன் சேரியில் குடியிருந்தானா?’ எனக் கேட்கிறார். தமிழர் அரசாண்ட காலம் வரை, பள்ளர், பறையர், வள்ளுவர், நாவிதர், வண்ணார் உள்ளிட்ட அனைத்துமே குலங்களாகத்தான் இருந்தன. சாதிகளாக இல்லை. அவற்றின் மீது சாதி ஆதிக்கம் திணிக்கப்படவில்லை என்பது எனது கருத்து. சோழர்காலத்திலிருந்த வலங்கை இடங்கைப் பிரிவினருக்கும் இது பொருந்தும்.

பார்ப்பனருக்கும் சேரி இருந்தது. ஆனால், பார்ப்பனர்கள் பறைச் சாதியினரைத் தீண்ட மாட்டோம் என்று சொல்லவில்லை. அதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

சிலப்பதிகாரம் கூறும் புறஞ்சேரியில் பார்ப்பனர்களும் பாணர் குலத்தவரும் கலந்து வாழ்ந்தனர் என்பதையும் எனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பட்டிருந்தேன். (சான்று: புறஞ்சேரி இறுத்த காதை) சாதி ஆதிக்கமே இல்லாத சமூகத்தில் மேல்சாதிக்காரர் கீழ் சாதிக்காரர் என்று பிரித்து, அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இருந்தது; இவர் அங்கு வாழமாட்டார். அவர் இங்கு வாழமாட்டார் என்று கதைகட்டும் திறனும் மரபும் தமிழியக் கோட் பாட்டாளனான எனக்கு இல்லை.

சேரிகள் என்பவை, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான குடியிருப்பு களாக மாற்றப்பட்டது விஜயநகரப் பேரரசுக் காலத்தில்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 2007)

ஆனால், கிருதீண தேவராயர் மீது பழி விழாமல் காக்க திரு. முருகேசன் துடிப்பது ஏன் என்று விளங்கவில்லை.

‘கிருதீணதேவராயர் தன் மகனைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பார்ப்பன‌ அமைச்சரைக் கொல்வதற்கு ஆணை பிறப்பக்க வில்லை’ என்ற சான்றை அவர் கேலி செய்கிறார். கிருதீண தேவராயர் ஆட்சிக் காலத்தில் எந்த பார்ப்பன‌ரும் எந்தக் குற்றத்திற்காகவும் தண்டிக்கப் படவில்லை என்ற வரலாற்றை முன்வைத்து அதற்கான முகாமைச் சான்றாகவே, சாளுவதிம்மா குறித்த செய்தியைக் குறிப்பட்டேன். ஓர் அரசன் தன் நாட்டில் எந்த பார்ப்பன‌ரும் தண்டிக்கப்பட மாட்டார் எனச் சட்டம் இயற்றினார் என்ற உண்மை திரு.முருகேசனுக்குச் சுடவில்லை. மாறாக, ‘ராஜராஜ சோழன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற பார்ப்பன‌ர்களைத் தண்டிக்கவில்லை’ என்று தமிழ்ப் பேரரசன் மீது பாய்கிறார். இதுதான் திராவிடப் பற்றோ!

தமது வாதத்தை வலுப்படுத்த திரு.முருகேசன், நீலகண்ட சாஸ்திரியைத் துணைக்கு அழைக் கிறார். சோழர் காலம் குறித்த பல தவறான முடிவுகளை முன் வைத்தவர் நீலகண்ட சாஸ்திரி. “சோழர் காலத்தில் பார்ப்பன‌ர்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கப் பட்டது” என்று பொய்யாக, தவறாக எழுதியவர் இவர். தமது சாதியின் பெருமையைப் போலியாக வடித்துக் கொண்டவர் என்றும் சாஸ்திரி மீது ஆய்வுலகில் குற்றச் சாட்டு உண்டு.

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தோர் குறித்த உடையார் குடிக் கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்த முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியம், கூறும் கருத்துகள் சிலவற்றைக் காண்போம்.

· ‘உடையார்குடிக் கல்வெட்டுச் சாசனம் என்பது கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பதை ஒரு வரியில் கூறும் கல்வெட்டே அன்றி, அக்கொலை பற்றிய பிற செய்திகளையோ அல்லது அவர்களுக்குக் கொடுக்கப்பெற்ற தண்டனை பற்றியோ விவரிக்கும் சாசனமாகாது’

· ‘இராஜராஜ சோழன் குற்றம் செய்த பார்ப்பன‌ர்களைக் கொல்லாது விடுத்தான் என்பதும் சான்றுகள் இன்றிக் கூறப்பெறும் கூற்றாகும். இராஜராஜன் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டதைக் கூறும் சாளுக்கிய நாட்டுக் கல்வெட்டுகள் அவன் அந்நாட்டில் பார்ப்பன‌ர்களைக் கொன்றவன் என்று குறிப்பிடுகின்றன’

(உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை, முனைவர் குடவாயில். பாலசுப்ரமணியன் /கோயிற்களஞ்சியம் வெளியீடு, தஞ்சை-7)

‘பிரமதேயங்களில் அரசன் ஆதிக்கம் செல்லாது’ என்பதும் நீலகண்ட சாஸ்திரியின் கற்பனைக் கதைதான். இதுகுறித்த எண்ணற்ற சான்றுகளை, முனைவர் மே.து.ராசு குமார் எழுதிய “சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்” எனும் நூலில் இருந்து காட்டியுள்ளேன்.

திரு.முருகேசன், நீலகண்ட சாஸ்திரியைத்தான் ஆய்வாளராக மதிப்பார் போலும்!

திராவிடக் கோட்பாட்டாளர்கள் பொதுவாகவே, பார்ப்பன‌ரல்லாத ஆய்வாளர்களின், குறிப்பாக தமிழிய ஆய்வாளர்களின் முடிவு களை மதிப்பதில்லை. அதன் தொடர்ச்சியே இது.

திராவிடக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கோரியதையும், வழங்கியதையும், சாதி இழிவுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்ததையும் தனிப் பெரும் சாதனையாக திரு.முருகேசன் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு கூட, பெருமைப்பட்டுக் கொள்ள அதன் ஆட்சிக்கால சாதனைகளும் விடு தலைப் போராட்ட கால சாதனை களும் உண்டு. தீண்டாமைக்கு எதிராக காந்தியாரின், காங்கிரசாரின் பரப்புரையும் போராட்டங்களும் நடந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட மக்களுக்கு சில நன்மைகள் நடந்துள்ளன.

கோட்பாடுகள் குறித்து திறனாய்வு செய்யும் போது, காங்கிரஸ் மற்றும் ஆங்கிலேய ஆட்சிகளை எவ்வாறு வரை யறுப்பது? காங்கிரஸ் பார்ப்பனியச் சார்புள்ள இந்தியத் தேசியக் கட்சி என்றும் அது தமிழ்த் தேசியத்திற்குப் பகை சக்தி என்றும் வரையறுக்க வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சி ஏகாதிபத்திய நலன் கொண்ட காலனியக் கோட்பாடு கொண்டது என்று திறனாய்வு செய்தால் அவ்வாட்சிகள் செய்த சில நன்மைகளைக் காட்டிக் குறுக்குச்சால் ஓட்டுவது தர்க்கமன்று.

திராவிட இயக்கம் தந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லை யென்றால், ‘செந்தமிழன் எங்காவது பண்ணையில் கிடைமாடு மேய்த்து வயிறு கழுவிக் கொண்டிருப்பார்’ என்கிறார் திரு.முருகேசன்.

நான், பி.காம் மற்றும் முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்றுள்ளேன்.

இன்று சொந்த மண்ணில் இயற்கை வேளாண்மை செய்கிறேன். என் தோட்டத்தில் ஆடு, மாடுகளும் உண்டு. அவற்றை மேய்ப்பதில் பெருமையே தவிர, இழிவு இல்லை.

நான் மட்டுமல்ல, என்னைவிட படித்த பலர் கூட பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உதறிவிட்டு இயற்கை வேளாண்மை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம வாழ்க்கையை, வேளாண்மையை, ஆடு, மேய்த் தலை இழிவாகப் பேசுவது முதலாளியவாதிகளுக்கு மட்டு மின்றி, திராவிடக் கோட் பாட்டாளர்களுக்கும் வழமை யான ஒன்று.

நவீனம், முன்னேற்றம் என்ற பெயர்களில் மேற்கத்திய வாழ்முறையை உச்சி மேல் வைத்து பாராட்டுவதும், இவர்களது இயல்பு. புலவர் முருகேசனிடமும் அது வெளிப்படுகிறது.