Sunday, April 22, 2012

பாலை - எளியோர் செய்த போர்!

பாலை யில் நாங்கள் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து தப்பிப் பிழைத்து, அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளதற்கான காரணம் ஒன்று உண்டு. தயாரிப்பு முறையில் நாங்கள் உருவாக்கிய தொழில் நுட்ப நடவடிக்கைகள் மிகவும் சிக்கனமானவை.

இங்கேயுள்ள வணிக ’முன்னோடிகள்’ எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு படத்தை வெளியிட்டு வருவாய் ஈட்டும் வகையிலான நுட்பங்களைக் கடைபிடித்தோம்.

ஒப்பனைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், செட் இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைவருமே பாலையில் என் குழுவினர் மட்டுமே. இவர்களில் ஒருவருக்கும் எந்த படப் பிடிப்பையும் வேடிக்கை பார்த்த அனுபவம் கூட இல்லை. சங்ககால மாட்டு வண்டி செய்ய, உள்ளூர் ஆசாரியாரை அணுகினோம். முல்லை நில சீறூர் குடிசைகள், வட்ட வடிவில் இருக்கும். அவ்வாறான வட்ட வடிவ வீடுகளை எனது குழுவினரே வடிவமைத்து, உள்ளூர் முதியவர்களிடமும், சில பழங்குடி மக்களிடமும் குறிப்புகள் கேட்டு, உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு கட்டினார்கள். படத்தில் காட்டப்பட்ட எந்த வீடும் வெறும் ‘செட்’ அல்ல. அவை உண்மையான வீடுகள். நாங்கள் அங்கு தங்குவோம்.

நடனம் அமைக்க, பூம் பூம் மாட்டுக்காரர்களையும், இருளர்களையும் பயன்படுத்தினேன். அவர்களுக்குத்தான் உண்மையான பழங்கால நடனம் தெரியும். சண்டைக் காட்சிகளை, குத்து, சிலம்பம் முறையாகப் பயின்ற இளைஞர்கள் அமைத்தார்கள்.

படம் முழுக்க 5டி, 7டி, 60டி ஆகிய மூன்று புகைப்பட கேமிராக்களால் எடுக்கப்பட்டது. இவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட லென்சுகள் கூட, சினிமா லென்சுகள் அல்ல, வெறும் புகைப்பட லென்சுகளே.

கிராமங்களில் திருமண வீடுகளில் பயன்படுத்தப்படும் இரண்டு ஹாலோஜன் லைட்டுகளே படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் ஒரு நாள் வாடகை தலா 50 ரூபாய். மிகச் சில காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சாஃப்ட் பாக்ஸ் லைட்டுகளையும் நாங்களே 23 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம். இல்லையென்றால், அதன் வாடகையும் அதைப் பராமரிக்கும் யூனியன் தொழிலாளர் ஊதியமும் அதன் விலையைப் போல பல மடங்கு எகிறும். 
மாலை நேரக் காட்சிகளை, எங்கள் கார்களின் முன் விளக்குகளை ஒளிர விட்டுத்தான் படம் பிடித்தோம். ‘யாதோ யாதோ’ பாடலில் காயாம்பூ ‘முட்டுவேன் கொல் கூவுவேன் கொல்’ என காமத்தால் உருகும் நடன அசைவுகள் இரவு 7 மணிக்கு ஷம்முவின் இன்னோவா கார் லைட்டுகளின் வெளிச்சத்தில் படம் பிடிக்கப்பட்டவை.

படத்தின் எடிட்டிங் முழுமையும் லேப் டாப்பில் மட்டுமே செய்யப்பட்டன. ஒரு ஷாட்டைக் கூட நாங்கள் எடிட்டிங் ஸ்டுடியோவில் செய்யவில்லை என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன். ஸ்டுடியோக்களில் பெரிய திரையில் படத்தை ஓட விட்டு, துல்லியமாக, ஒரு விநாடியின் 24ன் ஒரு பங்கான ஃபிரேமை மதிப்பிட்டு எடிட் செய்வதே உலக வழக்கம். ஆனால், லேப் டாப்பின் இரண்டே இரண்டு அங்குல சின்னஞ் சிறு திரையில் மட்டுமே பார்த்துத்தான் பாலை படம் எடிட் செய்யப்பட்டது.

நாங்கள் எங்கு தங்குகிறோமே அங்கே ஹார்ட் டிஸ்குகளை இணைத்து எடிட் செய்வோம். 

படப்பிடிப்பின் போது, ஷாட்டை இயக்குனர் பார்க்க, மானிட்டர் எனப்படும் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ஒன்று பயன்படுத்தப்படுவது வழக்கம். பாலையில், ஒரு ஷாட்டைக் கூட நான் மானிட்டரில் பார்க்கவில்லை. அப்படி ஒரு சாதனத்தை நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. ஃபிரேமிங் அளவுகள், ஷாட்டின் ஆழம், வண்ணக் கலப்பு, ஒளி அளவு, நடிகர்களின் செயல்பாடு, அசைவு உள்ளிட்ட எண்ணற்றவைகளை நேரடியாகப் பார்த்துத்தான் மதிப்பிட்டுப் படமாக்கினேன். அவ்வப்போது ஒளிப்பதிவாளர் தனது கேமிராவின் சில அங்குலங்கள் மட்டுமே தெரியும் திரையில் ஷாட் காட்டுவார். அவரும் மானிட்டர் இல்லாமல் படம் பிடித்தது இன்றைய சூழலில் வியக்கத்தக்க பணிதான் என்பதைத் திரையுலக நண்பர்கள் நன்கு அறிவார்கள்.

Crane, mini crane, arm, jimmy, track and trolley, dolly ஆகியவை அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள். இவற்றில் வசதிக்கேற்ற அளவுகள் உண்டு. ட்ராலியில் கூட 40 அடி நீளம் உண்டு. நீங்கள் பார்க்கும் எல்லாப் படங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள், சொந்தமாக ஒரு track and trolley செய்தோம். அதற்கு 7 ஆயிரம் ரூபாய் செலவானது. அதன் நீளமும் 8 அடி மட்டுமே. மிகச் சில நாட்கள், திருமணத்தில் பயன்படுத்தப்படும் jimmy வாடகைக்கு எடுத்தோம். இரு நாட்கள் arm பயன்படுத்தப்பட்டது. இவைதான் எங்கள் படப்பிடிப்பின் மொத்த சாதனங்கள்.
இவை தொடர்பான நம்பிக்கையை விஜய் ஆம்ஸ்ட்ராங் அளித்தார். அபிநந்தன் அந்த நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செயல்பட்டார்.

மாட்டு வண்டியின் முகத்தடியில் ஒளிப்பதிவாளர் அமர்ந்து கொண்டு படம் பிடிப்பார். உதவியாளர்கள் வண்டியின் பின் புறத்தைத் தூக்கி இறக்குவார்கள். இதுவே mini crane. ஆலம் விழுதைப் பிடித்துத் தொங்கியபடி top angle படம் பிடிக்கப்பட்டது, குச்சியின் முனையில் கேமராவைக் கட்டி மேலே உயர்த்தி, கீழே இறக்கி jimmy shots எடுக்கப்பட்டன. ’மாயமா போகாதேடா’ பாடலில் காயாம்பூவும் வலனும் ஓடைக் கரையில் படுத்திருக்கும் காட்சி, ஓடையில் கேமரா பயணித்துப் படமாக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், 20 அடி crane அல்லது arm வைத்துத்தான் படமாக்குவது வழக்கம். நாங்கள் டயர் ஒன்றின் மீது பலகை போட்டு, அதன் மீது கேமரா வைத்து, அந்த டயரை குலுங்காமல் ஓடையில் தள்ளிச் சென்றுதான் படம் பிடித்தோம்.

ஒரு கூரை வீட்டில் வரிசையாக 40 பேரும் படுத்துக் கிடப்போம். இதுவே எங்கள் தங்குமிடம். அந்த வரிசையில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், படத் தொகுப்பாளர், நடிகைகள் சிலர் அனைவரும் அடக்கம். சங்கடமும் இல்லை, வருத்தமும் இல்லை. சில லட்சங்கள் பணம் அடங்கிய பை ஒன்றை, எடிட்டர் ரிச்சடிடம் கொடுத்து வைப்பேன். அவர், அந்தப் பையை அதே கூரை வீட்டில் அனைவரும் பார்க்கும் இடத்தில்தான் வைத்திருப்பார். ஒரு ரூபாயும் காணாமல் போகவில்லை.

மிகச் சிலருக்கு மட்டுமே விடுதிகளில் அறை எடுக்கப்பட்டது.

நானும் தயாரிப்பாளரும் என் குழுவினரும் ஏழைகள் அல்லர். ஆனாலும் இவ்வாறான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததற்குக் காரணம், திரைப்படக் கலை மீது எங்களுக்கு உள்ள காதல் மட்டுமே. கோடிகளைக் கொட்டி, படம் எடுக்கும்போது, பலருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. முடிந்த அளவு சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் செயல்படும்போது, நம்முடைய சினிமாவிடம் மட்டுமே பேசினால் போதும். பின்னர் நம் சினிமா சமூகத்திடம் பேசிக்கொள்ளும்.

சென்னையில் அலுவலகம் இல்லாத ஒரு சினிமா குழுவினரைப் பார்க்க வேண்டும் என்றால், பாலை குழுவினர் மட்டுமே உங்களுக்குக் காட்சியளிப்பார்கள். இப்போதுதான் தங்கும் வசதிக்காகவும், வேறு சில தொழில் காரணங்களுக்காகவும் அலுவலகம் பார்க்கும் திட்டமே உருவாகியுள்ளது.

’தொழில்நுட்ப நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்ட சினிமா என்றும் நேர்மையான சினிமா’ என்றும் இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் தங்கர்பச்சன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளார்கள். நேற்று கூட திரு.தமிழருவி மணியன் படம் பார்த்துவிட்டு, ‘பாலையில் அற்புதம் நிகழ்த்தப்பட்டுள்ளது செந்தமிழன்’ என்றார். இவை அனைத்துக்கும் திரைப்படம் மீது எங்கள் குழுவினருக்கு உள்ள காதல் மட்டுமே காரணம்.

இந்தப் படத்துக்காக தனது பல ஆண்டுகள் அனுபவம் மிக்க பத்திரிகைப் பணியை, குமுதம் இதழ் பணியை, விட்டு விலகினார் துணை இயக்குனர் வெற்றிவேல். மேலும் பலர் தம் வேலைகளை உதறினர். அந்தப் பட்டியல் பெரிது. இன்றும் நாங்கள் அதே உறுதியுடன் நிற்கிறோம்.

திரையரங்குகளில் இடம் மறுக்கப்பட்ட பின்னரும் நாங்கள் ஓயவில்லை. குறுவட்டுகளை வெளியிட்டோம். ஆயிரக் கணக்கில் விற்கின்றன. இதோ இப்போது அடுத்த கட்டமாக தர மேம்பாடு செய்யப்பட்ட குறுவட்டுகளை, பாலையின் தயாரிப்புக் காட்சிகள் அடங்கிய ஆவணப் படம் ஒன்றுடன் சேர்த்து வெளியிட உள்ளோம்.

இந்த விற்பனையின் வருவாயின் ஒரு பங்கைத்தான், சறுக்கல் பாறை தொல் தமிழர்களுக்கான கிராமம் உருவாக்கப் பயன்படுத்துகிறோம். 

ஒவ்வொரு கதவு மூடப்பட்ட போதும் பல கதவுகள் திறக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை முழுமையாகக் கடைபிடிக்கிறோம். அடுத்த படமும் இதே நேர்மையுடன் நேர்த்தியுடன் உருவாகி வருகிறது. ஆனால், இந்த முறை ஒரு வசதி என்னவென்றால், இது முழு நீள நகைச்சுவைப் படம். அதுவும் அடர்ந்த வனப் பகுதியில் பெரும்பகுதி காட்சிகள். ஆதலால், கிளையில்லா மரத்தின் உச்சியில் ஏறி, top angle வைத்தாலும் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது.
 

Monday, April 9, 2012

விடுதலையானோம்!என்னையும் சேர்த்து 28 பேர் இன்று ஈரோடு அமர்வு நீதிமன்றம் 2ன் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு அது. 20009 ஈழப் போரின் போது நடத்தப்பட்ட எண்ணற்ற போராட்டங்களிடையே, நாங்களும் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். பிணையில் வெளிவந்த பின்னர், மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு, இன்றுடன் முடிவுக்கு வந்தது.

வழக்கு விசாரணையினால் நாங்கள் இழந்தவை அதிகம். இப்போது கூட, நார்வே திரைப்பட விழாவுக்கு பாலை யின் இயக்குனர் என்ற வகையில் நான் கலந்து கொள்வது தொடர்பான பணிகள் முடங்கிவிட்டன. எனது பஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக கடந்த 20 நாட்களாக, தொடர்ந்து மூன்று வேலை நாட்கள் கூட என்னால் ஊரில் தங்க முடியவில்லை. விசாரணை, வழக்கறிஞர் விவாதம், தீர்ப்பு தள்ளி வைப்பு, ஒத்தி வைப்பு என 20 நாட்கள் தொடர்ச்சியாக ஈரோட்டைச் சுற்றி தங்க வேண்டி இருந்தது.

வழக்கின் இறுதிக் கட்டமாதலால், ஒருவர் வரவில்லையென்றாலும் நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்து விடுகிறார். அருணபாரதி சென்னையிலிருந்து வர வேண்டும். மற்றவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். நான் செல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டால், அவர்கள் மற்றொரு நாள் கூலியை இழக்க வேண்டும்.

ஈ..வி.கே.எஸ்.இளங்கோவன் ஈழப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசி எரிச்சலூட்டிய காலம் அது. ‘முத்துக் குமாரா…யார் அவன்? எனக்குத் தெரியாதே’ என்று அவர் பேட்டி கொடுத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். பின்னர், ’சீமான் என்னமோ பெரியாரோட பேரனாமே…பெரியார் சின்ன வயசுல தப்பு பண்ணியிருப்பார்…அதுல பொறந்த பேரனா இருக்கும்’ என்றார் ஈரோடு பொதுக்கூட்டத்தில்.

இந்தக் காலத்தில், நானும் அருணபாரதியும் இளங்கோவனும் (இவர் எங்கள் இளங்கோவன்) ஈரோடு பகுதியில் தலைமறைவாக இருந்தோம். போர் குறித்த ‘தீர்ப்பு எழுதுங்கள்’ என்ற ஆவணப்படத்தை பல்லாயிரக் கணக்கில் விநியோகம் செய்து கொண்டிருந்தோம். ஈரோடு தொகுதியில் இளங்கோவனைத் தோற்கடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிரம் எங்களுக்குள் இருந்தது. 

ஒருபுறம் காவல்துறை தேடுதல், மறுபுறம் வெளிப்படையாக ஏதேனும் போராட்டம் நடத்தியே தீர வேண்டிய கட்டாயம். இளங்கோவன் வீட்டை முற்றுகையிடுவது என முடிவு செய்தோம். செய்தோம் என்றால், நாங்கள் மொத்தமே மூன்று பேர்தான்.

ஆனால், அதைப்பற்றி நான் பொதுவாகவே கவலைப்படுவதில்லை. நோக்கம் தெளிவாக இருந்தால், தேவையானவை கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. துண்டறிக்கை அடித்து, விநியோகம் செய்து, குறைந்தது 20 பேரையாவது திரட்டலாம் என்றால், அச்சகங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. அதையும் மீறி வேறு ஒரு வழியில் அச்சிட்டோம். 

இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டம், தலைமை : க.அருணபாரதி என்று போட்டு, நாள் நேரம் ஆகியனவும் குறித்து, அனைவரும் வருக! என்று அழைப்பு வேறு விடுத்தாயிற்று. கொடுமையாக, அந்தத் துண்டறிக்கைகளை வெளியே சென்று விநியோகம் செய்யக்கூட முடியவில்லை. அவ்வளவு நெருக்கடி. போராட்டம் நடத்தப்போவது காவல்துறைக்குத் தெரிந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் தெரிந்துவிட்டது. போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய உணர்வாளர்களுக்குத் தெரியவில்லை.

நாங்களோ, ஈரோட்டிலிருந்து ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் தொலைவில் கிராமம் ஒன்றில் தங்கியிருந்தோம். ஆகவே, போராட்டத்துக்கு முதல் நாள், எங்களிடமிருந்த அலைபேசி எண்களுக்கு, ’நாளை காலை போராட்டம். அவசியம் வருக’ என கல்யாண அழைப்பு போல குறுஞ்செய்தி அனுப்பி விட்டுப்படுத்துக் கொண்டோம்.

காலை, ஒன்பது மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு நோக்கி நான், இளங்கோவன், அருணபாரதி மூவரும் என் காரில் சென்றோம், முற்றுகைப் போராட்டத்துக்கு! யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, நாம் அறிவித்தோம் நாம் செல்வோம் என்ற நினைப்பு.

பன்னீர் செல்வம் பூங்கா அருகே இருந்து, இளங்கோவன் வீடு வரைக்கும் ஏறத்தாழ 200 அடி தூரத்துக்கு, இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய அதிரடிப்படையினர் நிற்கிறார்கள் நண்பர்களே.

நாங்களே அதிர்ந்து போனோம். காரை ஓரமாக நிறுத்தினேன். அங்கு இருந்த டாக்சி ஓட்டுநரிடம், ‘அண்ணா…என்ன இவ்வளவு போலீஸ்… அதுவும் மிக்ஷின் கன்னோட…?’ அவர் சொன்னார், ‘இளந்தமிழர் இயக்கம்னு ஒரு குரூப்பு…இளங்கோவன் வீட்டை அடிக்கப்போவுதாம்…’ என்றார்.

அருணபாரதியின் தம்பி ஆனந்த், அண்ணனைப் பார்க்க வந்தார். அவர் அந்த ஓட்டுநரிடம், ’இளந்தமிழர் இயக்கம் அவ்வளவு பெரிய அமைப்பாண்ணா…?’ எனக் கேட்க, அந்த ஓட்டுனர், ‘அவிங்க சொன்னா செஞ்சுடுவாய்ங்களாம் தம்பி’ என்றார் பெரும் எதிர்பார்ப்புடன்.

நாங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டு நின்றோம். மணி பத்து ஆனது. போராட்டத்துக்குக் குறித்த நேரம். அங்கிருக்கும் பெரியார் சிலைக்குத்தான் ’அனைவரையும்’ வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தோம். பெரியார் சிலையைச் சுற்றி இன்ஸ்பெக்டர் தகுதியிலான காவலர்கள் நிற்கிறார்கள்.

நாங்கள் மூவரும் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடன் அங்கே சென்றோம். இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து, ‘தம்பி இங்கல்லாம் நிக்கக் கூடாது…போங்க’ என்றார். நான், ‘சார்…நாங்கதான் போராட்டத்துக்கு வந்திருக்கோம்’ என்றேன். அவர் ஏற இறங்கப் பார்த்தார். நம்பவில்லை என்பது புரிந்தது. 

‘சரி…அதனால என்ன…போராட்டம்லாம் கிடையாது…கிளம்புங்க’ என்றார்.

அருணபாரதி சட்டெனக் கோபமடைந்து, ‘நீங்க யார் சார் அதைச் சொல்ல…? போராட்டம் உண்டு…’ என்றார். இளங்கோவன் சிரிக்கிறாரா வேதனையை வெளிப்படுத்துகிறாரா எனத் தெரியவில்லை. அங்கிருந்த காவலர்கள் சட்டென கூடினர். இன்ஸ்பெக்டர் மட்டும் பொறுமையுடன், ‘மூணு பேர்தானா?’ எனக் கேட்டார். நான், ‘இன்னும் வருவாங்க…இந்த இடத்துக்குத் தான் வரச் சொல்லியிருக்கோம்’ என்றேன் உரிமையுடன்.

நாங்கள் மூவரும் அங்கேயே நின்றபடி யாராவது வருகிறார்களா எனப் பார்க்கத் தொடங்கினோம். காவல்துறையினருக்கு, இது சீரியஸ் சீனா காமெடி சீனா என்ற குழப்பம் மேலிட்டது.

இளங்கோவன் என் காதில், ‘ஏங்க…யாருமே வரலைன்னா…என்ன பண்றது? ’எனக் கேட்டார். நான் சற்றே அதிக தெனாவட்டுடன், ‘நாம மூணு பேரும் அவர் வீட்டுக்குப் போவோம், முற்றுகையிடுவோம்’ என்றேன். அருணபாரதியும் ’ஆமாம்…’என ஆவேசம் காட்டினார். இளங்கோவன் பரிதாபமாக, ‘சரிதான் போவோம்’ என்றார்.

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தமது படை அணிவகுப்பு இவ்வளவு மோசமான தோல்வியைச் சந்திக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் முகங்களில் எங்கள் மீதான் கடுப்பு தெறித்துக் கொண்டிருந்தது.

பத்து நிமிடங்களில், எங்கள் விருப்பம் நிறைவேறத் தொடங்கியது. பவானி ஒரிசேரியிலிருந்து வேன் நிறைய மக்கள் வரும் தகவல் வந்தது. பின்னர் குமாரபாளையத்திலிருந்து பேருந்தில் பத்து தோழர்கள், ஈரோட்டிலிருந்து இரு வழக்கறிஞர்கள், சில கூலித் தொழிலாளர்கள் வருவதாக தகவல் வந்து கொண்டே இருந்தது.

முதலில் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் வந்தனர். எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்தார். நாங்கள் ‘இது எல்லாமே பக்கா ப்ளான்’ என்பது போல பெருமிதத்துடன் அவரைப் பார்த்தோம்.

‘உங்களை அரஸ்ட் பண்றோம்’ என்றார். நாங்கள் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினோம். சாலையில் சென்றோர் தேங்கி நின்றனர். துண்டறிக்கைகளை வீசினோம். இடம் பரபரப்பானது. இதற்கிடையில் ஒரிசேரியிலிருந்து வந்த வேன் பேருந்து நிலையத்திலேயே மறிக்கப்பட்டது. அதிலிருந்தவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். 

பன்னீர் செல்வம் பூங்கா அருகே வேறு சிலர் முழக்கமிட்டனர். ஒரு குழு, எப்படியோ இளங்கோவன் வீட்டுக்கு அருகே சென்றுவிட்டது. துப்பாக்கிக் காவலர்கள் திமுதிமுவென ஓடி அவர்களைப் பிடித்தனர். ஈரோடு தொடர் வண்டி நிலையத்தினருகே ஒரு குழு இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிடத் தொடங்க, இங்கிருந்து காவல் வேன் அங்கே பாய்ந்தது.
நாங்கள் மூவரும் நடு நாயகமாக, முழங்கிக் கொண்டிருந்தோம். பத்திரிகையாளர்கள் படையெடுத்து வந்தனர். மாபெரும் கூட்ட நெரிசலுக்கிடையே, செந்தமிழன், அருணபாரதி, இளங்கோவன் உள்ளிட்ட பத்துப் பேர் முதலில் கைது செய்யப்பபட்டனர்.

’மாஸ்டர் ப்ளான் சார்…இவனுக…நம்மளை இங்கே டைவர்ட் பண்ணிட்டு…சிட்டி முழுக்க ஆர்ப்பாட்டம் பண்ணிட்டானுக’ என இன்ஸ்பெக்டரிடம் எஸ்.ஐ வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் மூவரும் தன்னடக்கமாக முகத்தை வைத்துக் கொண்டோம்.

கைதானோர் மொத்தம் 68 பேர். அவர்களில் 40 பேரை மாலையில் அனுப்பிவிட்டனர். தாயம்மா எனும் 60 வயது மூதாட்டியும் அவரது இரு மகன்களும் கைதாகியிருந்தனர். தாயம்மா குடும்பத்தினர் மட்டும் வீட்டுக்குப் போக மறுத்து விட்டனர். 28 பேர் கோவைச் சிறைக்கு அனுப்பப்பட்டோம்.

இரவு, 11 மணி இருக்கும். சிறையின் உள்ளே சென்றதும், ஒவ்வொருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று, நிர்வாணப்படுத்தினர். சோதனை செய்யும் முறை என்றனர். பின்னர், ஒரு கொட்டறையில் அடைக்கப்பட்டோம்.

எங்களுக்கென ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. வரிசையாக, 20 லாக் அப்கள். ஒன்றில் மூவர் இருக்கலாம். நாங்கள் மூவரும் ஒரு லாக் அப்பில். பொதுக் கழிப்பறை வெளியே உண்டு. இரண்டடி உயரம் மட்டுமே ஒரு நபருக்கும் அடுத்த நபருக்கும் தடுப்பு. இப்படி வரிசையாக பத்து ’கழிவறைகள்.’ பொதுத் தொட்டியில் காலை, மாலை தண்ணீர் வரும் அனைவரும் குளிக்க, குடிக்க அதுவே ஆதாரம்.

காலை ஆறு மணிக்கு லாக் அப் திறக்கப்படும். மாலை ஆறு மணிக்கு உள்ளே சென்றுவிட வேண்டும். காடாத் துணிகள் இரண்டு தரப்படும். ஒன்று விரிப்பு, ஒன்று போர்வை. மிகச் சிறிய அறைதான் அந்த லாக் அப். அதில் மூவர் படுத்தால், புரண்டு படுக்க முடியாது. இரண்டடி உயரத் தடுப்புக்கு அந்தப் பக்கம், கழிவறை. அந்த இரண்டடித் தடுப்புக்கு இந்தப் பக்கம் உணவு உண்ணுதல், படுத்து உறங்குதல், பகலில் பிற கைதிகள் விருந்தினராக வந்தால் உபசரித்தல் அனைத்தும் நடக்கும்.

பார்வையாளர்கள் வந்தால் நாங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒரே அரிய பொருள் ஊறுகாய் பாக்கெட். சிறையில் வழங்கப்படும் உணவை ஊறுகாய் இல்லாமல் விழுங்குவது எளிதல்ல. இதில் அளவு சாப்பாடு வேறு. கிடைப்பதே பாதி வயிற்றுக்கு, அதுவும் உள்ளே இறங்காத அளவுக்கு இருக்கும். ஆதலால், ஊறுகாய் எங்களுக்கு அமுதம்.

சரம் சரமாக ஊறுகாய் பாக்கெட்கள் வந்தாலும் நொடியில் காலியாகிவிடும். பக்கத்து கொட்டறைகளிலிருந்து வரும் விருந்தினர்கள், ‘நாங்கள் தங்கப் புதையலைப் பதுக்கி வைத்திருப்பது போல பொறாமையுடன் பார்ப்பார்கள். அவர்கள் கண் வைக்காமல் இருக்கவே சில பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.

இளங்கோவன் எனக்கும் அருணபாரதிக்கும் சில சப்பாத்திகளையும் சிறப்பு தேநீரும் வாங்கித் தருவார். அரசியல் கைதிகளுக்கு காலையில் தேநீர் வழங்கப்படும். ஆனால், அது தேநீர் மாதிரி கூட இருக்காது.

ஒரு கோப்பைத் தேநீர் கிடைப்பதற்கு நாங்கள் முதல் நாள் இரவே தீவிரமாகத் திட்டமிடுவோம். எப்போதும் பாதி வயிறு பசித்தே இருக்கும். பார்வையாளர்கள் பழங்கள் வாங்கி வந்தால், சந்திப்பு வாசலில் உள்ள காவலர்கள் மாமூல் போக, மீதம் கிடைப்பதை நாங்கள் பங்குபோட்டு மாளாது.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடும் வழக்கம் எனது. எனக்குப் பசிக்கும்போது இரவு ஒன்பது மணி ஆகும். மாலை ஆறு மணிக்குக் கொடுத்த உணவு காய்ந்து போயிருக்கும். பசியில் தூக்கம் வராது. அருணபாரதி என் தலையை வருடிக் கொடுத்து உறங்க வைப்பார். இப்படி அவர் அதிகமாக வருடியதில் ஓர் இரவு, என் கனவில் எனக்கும் எனக்குப் பிடித்த பிரபல நடிகைக்கும் திருமணமே நடந்தது.

தேர்தல் முடிவுகள் வந்தன. தூர்தர்சன் ஒளி பரப்பு ஆகும் கொட்டறைக்குச் சென்றோம். ஈரோட்டில் இளங்கோவன் தோற்றார் எனும் செய்தி, ஒட்டிய வயிற்றிலும் பால் வார்த்தது.

பாலை, திரைப்படப் பணிகள் தொடங்கியபோது, நடிகர் தேர்வு எனக்கு வெகு எளிதாக இருந்தது. சிறையில் எங்களுடன் இருந்த தாயம்மா, தமிழ்ச் செல்வன், எங்களுக்கு ஜாமீன் வாங்க அலைந்த இளையராஜா ஆகியோரை நடிக்க வைத்தேன். அவ்வளவு மோசமான நெருக்கடியிலும் எனக்கும் அருணபாரதிக்கும் சப்பாத்தி வாங்கித் தந்த இளங்கோவன், பாலையின் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியமர்த்தப்பட்டார்.

மேலும் கோவைச் சிறையில் எனக்கும் என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் நேர்ந்த அனுபவங்கள், என் அடுத்த திரைப்படத்தில் முக்கியச் சம்பவங்களாக இடம் பெறுகின்றன.

தான் தேர்தலில் தோற்றாலும், எனக்கு நடிகர்களை, தயாரிப்பு நிர்வாகியை, திரைக் கதைச் சம்பவங்களை வழங்கி, தொடுத்த வழக்கிலும் வெற்றி பெறாமல், ஒரு தியாக திருவுருவமாக திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திகழ்கிறார்.

Thursday, April 5, 2012

கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.

2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.

நான் பணீயாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.

‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்.

குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.

குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு,என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.

விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன்.. கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.

குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.

’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார். ‘நான் எழுதறேன் சார்…” ’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’ ‘பரவால்ல சார்…’

ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல், ’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.

அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.

‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.

கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.

மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.

அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.

கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.

கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன். நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.

அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.

என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார். ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.

’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.

’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.

அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.

‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.

இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.

என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.

என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.

2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.

’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.

‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.

அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.
’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்..

’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.

சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.

அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.

பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர். எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.

சில சாதாரண காரணங்களால் எனக்கும் கிருஷ்ணாவுக்கும் விரிசல் விழுந்தது. எவ்வளவோ முயன்றும் இணைப்பு ஏற்படவில்லை. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் எந்தச் சிக்கலும் நேரடியாக ஏற்படவில்லை.

எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.

ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள். நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!