Sunday, April 22, 2012

பாலை - எளியோர் செய்த போர்!





பாலை யில் நாங்கள் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து தப்பிப் பிழைத்து, அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளதற்கான காரணம் ஒன்று உண்டு. தயாரிப்பு முறையில் நாங்கள் உருவாக்கிய தொழில் நுட்ப நடவடிக்கைகள் மிகவும் சிக்கனமானவை.

இங்கேயுள்ள வணிக ’முன்னோடிகள்’ எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு படத்தை வெளியிட்டு வருவாய் ஈட்டும் வகையிலான நுட்பங்களைக் கடைபிடித்தோம்.

ஒப்பனைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், செட் இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைவருமே பாலையில் என் குழுவினர் மட்டுமே. இவர்களில் ஒருவருக்கும் எந்த படப் பிடிப்பையும் வேடிக்கை பார்த்த அனுபவம் கூட இல்லை. சங்ககால மாட்டு வண்டி செய்ய, உள்ளூர் ஆசாரியாரை அணுகினோம். முல்லை நில சீறூர் குடிசைகள், வட்ட வடிவில் இருக்கும். அவ்வாறான வட்ட வடிவ வீடுகளை எனது குழுவினரே வடிவமைத்து, உள்ளூர் முதியவர்களிடமும், சில பழங்குடி மக்களிடமும் குறிப்புகள் கேட்டு, உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு கட்டினார்கள். படத்தில் காட்டப்பட்ட எந்த வீடும் வெறும் ‘செட்’ அல்ல. அவை உண்மையான வீடுகள். நாங்கள் அங்கு தங்குவோம்.

நடனம் அமைக்க, பூம் பூம் மாட்டுக்காரர்களையும், இருளர்களையும் பயன்படுத்தினேன். அவர்களுக்குத்தான் உண்மையான பழங்கால நடனம் தெரியும். சண்டைக் காட்சிகளை, குத்து, சிலம்பம் முறையாகப் பயின்ற இளைஞர்கள் அமைத்தார்கள்.

படம் முழுக்க 5டி, 7டி, 60டி ஆகிய மூன்று புகைப்பட கேமிராக்களால் எடுக்கப்பட்டது. இவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட லென்சுகள் கூட, சினிமா லென்சுகள் அல்ல, வெறும் புகைப்பட லென்சுகளே.

கிராமங்களில் திருமண வீடுகளில் பயன்படுத்தப்படும் இரண்டு ஹாலோஜன் லைட்டுகளே படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் ஒரு நாள் வாடகை தலா 50 ரூபாய். மிகச் சில காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சாஃப்ட் பாக்ஸ் லைட்டுகளையும் நாங்களே 23 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம். இல்லையென்றால், அதன் வாடகையும் அதைப் பராமரிக்கும் யூனியன் தொழிலாளர் ஊதியமும் அதன் விலையைப் போல பல மடங்கு எகிறும். 
மாலை நேரக் காட்சிகளை, எங்கள் கார்களின் முன் விளக்குகளை ஒளிர விட்டுத்தான் படம் பிடித்தோம். ‘யாதோ யாதோ’ பாடலில் காயாம்பூ ‘முட்டுவேன் கொல் கூவுவேன் கொல்’ என காமத்தால் உருகும் நடன அசைவுகள் இரவு 7 மணிக்கு ஷம்முவின் இன்னோவா கார் லைட்டுகளின் வெளிச்சத்தில் படம் பிடிக்கப்பட்டவை.

படத்தின் எடிட்டிங் முழுமையும் லேப் டாப்பில் மட்டுமே செய்யப்பட்டன. ஒரு ஷாட்டைக் கூட நாங்கள் எடிட்டிங் ஸ்டுடியோவில் செய்யவில்லை என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன். ஸ்டுடியோக்களில் பெரிய திரையில் படத்தை ஓட விட்டு, துல்லியமாக, ஒரு விநாடியின் 24ன் ஒரு பங்கான ஃபிரேமை மதிப்பிட்டு எடிட் செய்வதே உலக வழக்கம். ஆனால், லேப் டாப்பின் இரண்டே இரண்டு அங்குல சின்னஞ் சிறு திரையில் மட்டுமே பார்த்துத்தான் பாலை படம் எடிட் செய்யப்பட்டது.

நாங்கள் எங்கு தங்குகிறோமே அங்கே ஹார்ட் டிஸ்குகளை இணைத்து எடிட் செய்வோம். 

படப்பிடிப்பின் போது, ஷாட்டை இயக்குனர் பார்க்க, மானிட்டர் எனப்படும் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ஒன்று பயன்படுத்தப்படுவது வழக்கம். பாலையில், ஒரு ஷாட்டைக் கூட நான் மானிட்டரில் பார்க்கவில்லை. அப்படி ஒரு சாதனத்தை நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. ஃபிரேமிங் அளவுகள், ஷாட்டின் ஆழம், வண்ணக் கலப்பு, ஒளி அளவு, நடிகர்களின் செயல்பாடு, அசைவு உள்ளிட்ட எண்ணற்றவைகளை நேரடியாகப் பார்த்துத்தான் மதிப்பிட்டுப் படமாக்கினேன். அவ்வப்போது ஒளிப்பதிவாளர் தனது கேமிராவின் சில அங்குலங்கள் மட்டுமே தெரியும் திரையில் ஷாட் காட்டுவார். அவரும் மானிட்டர் இல்லாமல் படம் பிடித்தது இன்றைய சூழலில் வியக்கத்தக்க பணிதான் என்பதைத் திரையுலக நண்பர்கள் நன்கு அறிவார்கள்.

Crane, mini crane, arm, jimmy, track and trolley, dolly ஆகியவை அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள். இவற்றில் வசதிக்கேற்ற அளவுகள் உண்டு. ட்ராலியில் கூட 40 அடி நீளம் உண்டு. நீங்கள் பார்க்கும் எல்லாப் படங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள், சொந்தமாக ஒரு track and trolley செய்தோம். அதற்கு 7 ஆயிரம் ரூபாய் செலவானது. அதன் நீளமும் 8 அடி மட்டுமே. மிகச் சில நாட்கள், திருமணத்தில் பயன்படுத்தப்படும் jimmy வாடகைக்கு எடுத்தோம். இரு நாட்கள் arm பயன்படுத்தப்பட்டது. இவைதான் எங்கள் படப்பிடிப்பின் மொத்த சாதனங்கள்.
இவை தொடர்பான நம்பிக்கையை விஜய் ஆம்ஸ்ட்ராங் அளித்தார். அபிநந்தன் அந்த நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செயல்பட்டார்.

மாட்டு வண்டியின் முகத்தடியில் ஒளிப்பதிவாளர் அமர்ந்து கொண்டு படம் பிடிப்பார். உதவியாளர்கள் வண்டியின் பின் புறத்தைத் தூக்கி இறக்குவார்கள். இதுவே mini crane. ஆலம் விழுதைப் பிடித்துத் தொங்கியபடி top angle படம் பிடிக்கப்பட்டது, குச்சியின் முனையில் கேமராவைக் கட்டி மேலே உயர்த்தி, கீழே இறக்கி jimmy shots எடுக்கப்பட்டன. ’மாயமா போகாதேடா’ பாடலில் காயாம்பூவும் வலனும் ஓடைக் கரையில் படுத்திருக்கும் காட்சி, ஓடையில் கேமரா பயணித்துப் படமாக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், 20 அடி crane அல்லது arm வைத்துத்தான் படமாக்குவது வழக்கம். நாங்கள் டயர் ஒன்றின் மீது பலகை போட்டு, அதன் மீது கேமரா வைத்து, அந்த டயரை குலுங்காமல் ஓடையில் தள்ளிச் சென்றுதான் படம் பிடித்தோம்.

ஒரு கூரை வீட்டில் வரிசையாக 40 பேரும் படுத்துக் கிடப்போம். இதுவே எங்கள் தங்குமிடம். அந்த வரிசையில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், படத் தொகுப்பாளர், நடிகைகள் சிலர் அனைவரும் அடக்கம். சங்கடமும் இல்லை, வருத்தமும் இல்லை. சில லட்சங்கள் பணம் அடங்கிய பை ஒன்றை, எடிட்டர் ரிச்சடிடம் கொடுத்து வைப்பேன். அவர், அந்தப் பையை அதே கூரை வீட்டில் அனைவரும் பார்க்கும் இடத்தில்தான் வைத்திருப்பார். ஒரு ரூபாயும் காணாமல் போகவில்லை.

மிகச் சிலருக்கு மட்டுமே விடுதிகளில் அறை எடுக்கப்பட்டது.

நானும் தயாரிப்பாளரும் என் குழுவினரும் ஏழைகள் அல்லர். ஆனாலும் இவ்வாறான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததற்குக் காரணம், திரைப்படக் கலை மீது எங்களுக்கு உள்ள காதல் மட்டுமே. கோடிகளைக் கொட்டி, படம் எடுக்கும்போது, பலருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. முடிந்த அளவு சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் செயல்படும்போது, நம்முடைய சினிமாவிடம் மட்டுமே பேசினால் போதும். பின்னர் நம் சினிமா சமூகத்திடம் பேசிக்கொள்ளும்.

சென்னையில் அலுவலகம் இல்லாத ஒரு சினிமா குழுவினரைப் பார்க்க வேண்டும் என்றால், பாலை குழுவினர் மட்டுமே உங்களுக்குக் காட்சியளிப்பார்கள். இப்போதுதான் தங்கும் வசதிக்காகவும், வேறு சில தொழில் காரணங்களுக்காகவும் அலுவலகம் பார்க்கும் திட்டமே உருவாகியுள்ளது.

’தொழில்நுட்ப நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்ட சினிமா என்றும் நேர்மையான சினிமா’ என்றும் இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் தங்கர்பச்சன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளார்கள். நேற்று கூட திரு.தமிழருவி மணியன் படம் பார்த்துவிட்டு, ‘பாலையில் அற்புதம் நிகழ்த்தப்பட்டுள்ளது செந்தமிழன்’ என்றார். இவை அனைத்துக்கும் திரைப்படம் மீது எங்கள் குழுவினருக்கு உள்ள காதல் மட்டுமே காரணம்.

இந்தப் படத்துக்காக தனது பல ஆண்டுகள் அனுபவம் மிக்க பத்திரிகைப் பணியை, குமுதம் இதழ் பணியை, விட்டு விலகினார் துணை இயக்குனர் வெற்றிவேல். மேலும் பலர் தம் வேலைகளை உதறினர். அந்தப் பட்டியல் பெரிது. இன்றும் நாங்கள் அதே உறுதியுடன் நிற்கிறோம்.

திரையரங்குகளில் இடம் மறுக்கப்பட்ட பின்னரும் நாங்கள் ஓயவில்லை. குறுவட்டுகளை வெளியிட்டோம். ஆயிரக் கணக்கில் விற்கின்றன. இதோ இப்போது அடுத்த கட்டமாக தர மேம்பாடு செய்யப்பட்ட குறுவட்டுகளை, பாலையின் தயாரிப்புக் காட்சிகள் அடங்கிய ஆவணப் படம் ஒன்றுடன் சேர்த்து வெளியிட உள்ளோம்.

இந்த விற்பனையின் வருவாயின் ஒரு பங்கைத்தான், சறுக்கல் பாறை தொல் தமிழர்களுக்கான கிராமம் உருவாக்கப் பயன்படுத்துகிறோம். 

ஒவ்வொரு கதவு மூடப்பட்ட போதும் பல கதவுகள் திறக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை முழுமையாகக் கடைபிடிக்கிறோம். அடுத்த படமும் இதே நேர்மையுடன் நேர்த்தியுடன் உருவாகி வருகிறது. ஆனால், இந்த முறை ஒரு வசதி என்னவென்றால், இது முழு நீள நகைச்சுவைப் படம். அதுவும் அடர்ந்த வனப் பகுதியில் பெரும்பகுதி காட்சிகள். ஆதலால், கிளையில்லா மரத்தின் உச்சியில் ஏறி, top angle வைத்தாலும் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது.
 

No comments:

Post a Comment