Tuesday, September 11, 2012

நான் தேசதுரோகி ஆகிவிட்டேன் - -காவல்துறை FIR அறிவிக்கிறது!




நண்பர்களே, கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக் கூடாது எனப் போராடும் மக்களுடன் கலந்து நின்ற காரணத்தினால், , ‘தேசவிரோதச் செயலில் ஈடுபட்டது, சட்டவிரோதமாகக் கூடிப் பேசியது’ உள்ளிட்ட சில வழக்குகளில் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழகக் காவல்துறை.

கடந்த ஆகஸ்ட் 16 ஆம் நாள், ‘இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவு விழா’ நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இதுவே நான் செய்த தேசதுரோகம்!
அந்த நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு இன்னும் முதல் தகவல் அறிக்கை வந்து சேரவில்லை. ஆயினும் வழக்குப் பதிவை, திரு.உதயகுமாரனிடம் காவல்துறை உறுதி செய்துள்ளது.

அமைதியாகப் போராடும் மக்கள் மீது வன்முறை ஏவுவது தேசப் பாதுகாப்பு. இடிந்தகரையை, கூடங்குளத்தைச் சுற்றி, ஆயுதப் படையைக் குவித்து பொதுமக்களை அச்சுறுத்துவது, தேசப்பாதுகாப்பு. குழந்தைகளையும் பெண்களையும் கடலுக்கும் முள் காட்டுக்கும் நடுவே மறித்து அடித்து விரட்டுவது தேசப்பாதுகாப்பு. படகுகளை உடைப்பது, வலைகளை அறுப்பது, உணவு வழியை அடைப்பது, பொருளாதாரத்தை முடக்கி மக்களைப் பஞ்சத்தில் தள்ளுவது ஆகியவையும் தேசப்பாதுகாப்பு செயல்கள்.

இயற்கையைச் சிதைக்காதே, மனிதகுலத்தை அழிவில் தள்ளாதே, தேசத்தையே மரணக் குழியில் தள்ளாதே எனக் குரல் எழுப்புவது, தேசத் துரோகம்!

இப்படியான சட்ட மிரட்டல்களை விடுக்கும் இந்தத் ’தேசத்தின்’ துரோகியாக இருப்பதைக் காட்டிலும் என்ன பெருமிதம் இருக்க முடியும்!

இதுதான் இவர்கள் தேசம் எனில் - ஆம்! நானும் என் போன்றோரும், எம்மை வழி நடத்துவோரும் தேசத் துரோகிகளே!