Monday, November 12, 2012

அம்மாவின் கைப்பேசி: எதார்த்த சினிமாவின் அடுத்த நிலை!



அம்மாவின் கைப்பேசி சிறப்புக் காட்சி பார்த்தேன். புதினம் ஒன்றைப் படமாக்கும்போது அச்சில் ஏற்றப்பட்ட கதையின் தன்மை மாறாமல் படமாக்குவது கடினமான கலை. அம்மாவின் கைப்பேசியும் இயக்குனர் தங்கர்பச்சானின் புதினம்தான். முதல் சட்டகத்தில் (frame) இருந்து சில நொடிகளுக்கு ஓர் அட்டைப் பூச்சி ஊர்ந்து செல்கிறது. அப்பூச்சி ஊர்வது, கையளவு நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குழி. அக்குழியில், சில பூச்சிகள் செத்துக் கிடக்கின்றன. அட்டைப் பூச்சி ஊர்தலை சற்றே நிறுத்திவிட்டு, நிமிர்ந்து பார்க்கிறது. கேமிராவும் மேல் நோக்குகிறது. சற்று தொலைவில் வியர்வை வழிய, படபடப்பும் திருட்டுத்தனமும் மிக்க நபர் பயணப் பை ஒன்றைத் தோளில் போட்டுக் கொண்டு செல்கிறான். அவனது கதாபாத்திரப் பெயர் பிரசாத்.

பிரசாத், பனை வெளி, பாறை வெளி, வறண்ட வயல் வெளி, மேய்ச்சல் வெளி உள்ளிட்ட பலவகை நிலப்பரப்புகளைக் கடந்து நடக்கிறான். ஆடு மேய்க்கும் தாத்தா பொருள் பொதிந்த பார்வையை அவன் மீது வீசுகிறார். அந்த இடத்திலிருந்து உள்ளீடான பரபரப்பு தொற்றுகிறது.

படம் முடியும்போது, அட்டைப் பூச்சி ஊர்ந்த சிறு குழி நீருக்கும் அதில் கிடந்த பூச்சிகளுக்கும் அர்த்தம் விளங்குகிறது.

நாயகன், நாயகி, வில்லன், காமெடியன் ஆகிய சொற்கட்டுகளைத் தூக்கி வீசும் படமாக எனக்குத் தோன்றுகிறது. எதார்த்த வகைப் படங்கள் தமிழில் வெற்றிகரமாக வலம் வரும் காலம் இது. புத்தம் புது இளைஞர்கள் தமிழ்த் திரைப் படங்களின் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறை இயக்குனர்களில் தங்கர் பச்சான் இவ்வாறான எதார்த்த வகைப் படமாக்கலில் புதிய உயரத்தை அம்மாவின் கைப்பேசியில் எட்டியுள்ளதாக எண்ணுகிறேன்.

அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய படங்கள் அவரது சிறப்பு இருத்தலை உணர்த்தி நிற்கின்றன. அம்மாவின் கைப்பேசி, துணிச்சலான படமாகக் கருதப்படும். ஊரை விட்டு விரட்டப்படும் இளைஞன் ஒருவனது, முன்னேற்றம் அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளில் மட்டுமே பொதுவாகக் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், அந்த இளைஞனது நேர்மை அல்லது கடமையுணர்வினால், ஏற்படும் இன்னல்கள் இப்படத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வில்லன்கள் வெற்றி பெறவும் செய்வார்கள் ஹீரோக்கள் துன்பத்தில் உழலவும் நேரிடும் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்கிறது படம்.

கிராமத்து அம்மாவின் கைப்பேசிக்கு அவள் வீட்டின் உள்ளே சிக்னல் கிடைக்கவில்லை. அவள் தன் வீட்டு மதில் சுவர் மீது ஏறி நின்று மகன் பேரைச் சொல்லிக் கத்துகிறாள். மறுமுனை துண்டிக்கப்பட்டதைக் கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தானும் தன் கணவனும் சேர்ந்து உழைத்து செங்கல் செங்கல்லாகக் கட்டிய வீட்டை இடிக்க கனரக எந்திரங்கள் வரும்போது அம்மா படும்பாட்டைப் பார்க்கையில், நம் எல்லோருக்கும் நம் சொந்த ஊரும் வீடும் நினைவிலாடும்.

அடிப்படையில் இப்படம் ஒரு த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. ஆனால், அவ்வாறு நகர்த்தப்படவில்லை. கிராமத்துக் குடும்ப உணர்வுகள், அம்மா – மகன் உறவின் இயல்புகள், காதலின் வலிமை, பிரிவின் கொடுமை, குற்றவுணர்ச்சிக் குவியலாக அலையும் ஒரு கதாபாத்திரத்தின் அக முரண்கள் என தொட்ட இடமெங்கும் உணர்ச்சிப் போராட்டங்களைப் பதிவு செய்துள்ளார் தங்கர் பச்சான்.

இரண்டாம் பாதியில் ஏறத்தாழ இறுதி 30 நிமிடங்கள் இறுக்கமான, பதட்டமான மனநிலைக்குக் கொண்டு சென்றன.

அடை காக்கும் கோழிகளும், ஆடுகளும், பசுக்களும், தொழுவத்தில் அடைக்கப்பட்ட பன்றிகளும் கதை சொல்லலில் பங்கேற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பார்வையாளர்களை ஏமாளிகளாகவோ, முட்டாள்களாகவோ எண்ணிக் கொண்டு இயக்கப்படும் படங்களைத்தான் பொதுவாக கமர்சியல் படம் என அழைப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. அவ்வாறான படங்களைப் பார்க்கும் பார்வையாளர்கள், படம் எடுத்தவர்களை மேற்கண்ட முறையில் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

பார்வையாளர்களை மதித்து, அவர்களுக்கும் அறிவுண்டு என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்படும் படங்கள்தான் இப்போதெல்லாம் உண்மையான வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில் அம்மாவின் கைப்பேசிக்கும் இடம் வேண்டும் என விரும்புகிறேன். இது அம்மாவின் கைப்பேசி படம் குறித்த என் திறனாய்வு அல்ல நண்பர்களே. பொதுவாக நான் திரைப்படங்களைத் திறனாய்வு செய்வதில்லை. மனதில் பதியும் படங்களைப் பற்றி எழுதுவதுண்டு. 

அம்மாவின் கைப்பேசி, என் மனதில் பதிந்த படங்களில் ஒன்று. நீங்களும் பார்க்கலாம்.