Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Thursday, July 15, 2010

ஈழம்: ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்


தமிழீழ விடுதலையின் நான்காம் போர் 19/5 வேதனைகளுடன் முடிந்த பிறகு, தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இடையில் புதியவகை ‘போதகர்கள்’ புறப்பட்டிருக்கிறார்கள்.

‘ஒற்றுமையுடன் இருப்போம்!

ஆயுதப் போராட்டம் வேண்டாம்.

அரசியல் போரே ஒரே வழி

இராஜதந்திர நகர்வுகளே தீர்வு தரும்!’

ஆகியவை இந்தப் புதிய போதகர்களின் மந்திரங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முதல் நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற சிங்கள இந்திய உளவுத் துறைகளின் பரப்புரைகளை மறுத்துரைக்காமல் அல்லது அவை உண்மையாகவே இருந்தாலும் அந்த சரிவுகளிலிருந்து போராட்டத்தை மீட்டு எடுத்து வழி நடத்தும் முயற்சிகளில் இறங்காமல் மேற்கண்ட மந்திரங்கள் சில பிரமுகர்களால் ஓதப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிரிகளிடம் சரணடையச் செய்வதற்கான அனைத்துக் கூறுகளையும் இந்த நான்கு வரி மந்திரம் கொண்டுள்ளது. கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாபன் தொடக்கி வைத்த இந்தச் சரணாகதி மதம் புலம்பெயர் நாடுகள் கடந்து தமிழகத்திலும் வேர் பிடிக்க நுழைந்திருக்கிறது. ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்!’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன? இந்த அழைப்பு யாரை நோக்கி விடுக்கப்படுகிறது? இந்தச் சூழலில் இந்த அழைப்பின் தேவையும் நோக்கமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடினால் சரணாகதி மதத்தின் ‘தத்துவம்’ புரியும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெடிய வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தமிழீழ மக்களின் அறுதிப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தேசம் ஓர் இயக்கம் ஒரே நோக்கம் - அது ஈழ விடுதலை, என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்ட கருத்து. ஆகவே, ‘ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோள் ஈழத் தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைவரும், தமிழீழ ஆதரவுப் போராட்டங்களில் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டுத்தான் நிற்கிறார்கள்.

நடந்து முடிந்த ஈழப் பேரவலத்தைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் சிறு உணர்வாளர் குழுக்களும் முரண்பட்டு மோதிக் கொள்ளவில்லை. மாறாக, சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு இலக்கு நோக்கியே செயல்பட்டார்கள். 19/5க்குப் பிறகான தமிழீழ ஆதரவு அரசியற் செயல்பாடுகளில் சில முரண்கள் தமிழ்த் தேசிய இயக்கங்களிடையே முதன்மைப் படுத்தப்படுகின்றன.

• தமிழ்த் தேச விடுதலையும் தமிழீழ விடுதலையும் ஒருங்கிணைந்த புரட்சிகர நடவடிக்கைகளாக அணுக வேண்டும்.

• இந்தியாவைத் தமிழினம் தமது பகை சக்தி என்று புரிந்து கொண்டு அதனடிப்படையிலேயே எதிர்கால இனவிடுதலைப் போராட்டத்தைத் திட்டமிட வேண்டும்.

- இவை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைப்பாடுகள்.

• தமிழீழ விடுதலையே முதன்மையானது. தமிழ்த் தேச விடுதலை இரண்டாம் கட்டத்திற்குத் தள்ளப்படவேண்டியது.

• இந்தியாவைத் தமிழீழ அரசியலின் நேச சக்தியாக மாற்றும் வகையில் அணுக வேண்டும்.

- இவை தமிழர் தேசிய இயக்கத்தின் நிலைப்பாடுகள். இவை தவிர வேறு சில முரண்கள் இருப்பினும், இன்றைய அரசியல் தளத்தில் விவாதப் பொருட்களாக இருப்பவை இவ்விரண்டு முரண்கள் மட்டுமே. இந்த கோட்பாட்டு மாறுபாடுகள் இருப்பதால், த.தே.பொ.க. வும், த.தே.இ.யும் மல்லுக்கு நிற்கவில்லை. அவரவர் தளங்களில் இவ்வியக்கங்கள் தமிழீழ விடுதலை தொடர்பான பணிகளை இடையறாது மேற்கொண்டு வருகின்றன. இம்முரண்கள் தவிர, தமிழகத்தில் ஈழவிடுதலையை ஆதரிப்போர் இடையில் ஈழவிடுதலை குறித்த பெரிய முரண்கள் ஏதுமில்லை!

‘நாம் தமிழர்’ என்ற பெயரில் கடந்த 18ஆம் நாள் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ஆகியோர், ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்! இந்த வேண்டுகோள் யாருக்கு விடுக்கப்படுகிறது? கட்சித் தமிழன் என்றால்… தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதா ‘நாம் தமிழர்’ கொண்டுள்ள விருப்பம்.?

ஆம் எனில் அது போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சி. ஆனால், அம்மாநாடு வலியுறுத்திய செய்தி, தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் கட்சிகள், இயக்கங்கள் தனித்துச் செயல்படுகின்றன.. அவை ‘நாம் தமிழர்’ என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்!

செல்வராசா பத்மநாபனும் புலம்பெயர் தமிழர்களிடையே ‘ஒன்றிணைவோம்’ என்றுதான் பரப்புரை செய்கிறார். இவர் வேண்டுகோள் விடுப்பது யாருக்கு? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு பல்லாண்டு காலமாக ஒன்றிணைந்து செயல்படும் ஈழத்தமிழர்களிடத்தில்! கே.பி. யின் வேண்டுகோளின் உண்மையான பொருள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஒதுக்கிவிட்டுத் தன் தலைமையின் கீழ் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்பதே!

தமிழ்நாட்டில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கோட்பாட்டுக் குடையின் கீழ் ஏற்கெனவே திரண்டு நிற்கும் பெருந்திரளை நோக்கி ‘ஒன்றுபடுங்கள்’ என்று ‘நாம் தமிழர்’ அறைகூவல் விடுப்பதற்கும் கே.பி.யின் அழைப்பிற்கும் அடிப்படையான ஒற்றுமைகள் உள்ளன.

கே.பி. முன்வைக்கும் அணுகுமுறைகள்:

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இனி அரசியல் வழியில் மட்டுமே முன்னெடுக்கப்படும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ‘வன்முறை’ வழிகள் இனி பலன் தராது. இந்திய சிங்கள அரசுகளுடன் நல்லுறவின் அடிப்படையில் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெற வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்றரை இலட்சம் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கவனமாகச் செயல்படவேண்டும். (இவை தவிர ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைப்பதும் இத்தலைப்பின் கீழ் அடங்கும். ஆயினும் இத்தலைப்பு இக்கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.) ‘நாம் தமிழர்’ மாநாட்டில் இதே அணுகுமுறைகளை வழிமொழியும் கருத்துகளே பேசப்பட்டுள்ளன.

அருட்த்தந்தை ஜெகத்கஸ்ப்பர் : ‘தி.மு.க., அ.தி.மு.க, பா.ம.க, ச.ம.க., வி.சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அனைத்துச் கட்சிகளும் தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும்’.

‘மூன்றரை இலட்சம் தமிழர்களை வதை முகாம்களிலிருந்து மீட்பதற்காக, ராஜபக்சே காலில் கூட விழத் தயார்’.

இவை தவிர அம்மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்தியலும் ‘இந்திய அரசிடம் இணங்கிப் போவது, எந்த அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளாமலிருப்பது குறிப்பாக தி.மு.க.வுடன் சுமூக உறவு பேணுவது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. மாநாட்டில் உரையாற்றிய பலர் இந்த அடிப்படையிலேயே பேசினர். திரைப்பட உதவி இயக்குனர்கள் நடத்திய நாடகத்தில், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை விமர்சிக்கும் காட்சி ‘நாம் தமிழர்’ மாநாட்டில் நீக்கப்பட்டது.

‘ஒன்றிணைவோம்’ என்ற அழைப்பு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்துவதற்காக அல்ல, எதிரிகளிடம் சரணடைவதற்காகத்தான் என்பதை தமிழீழ அரசியலில் கே.பி.யின் செயல்பாடுகளும் தமிழக அரசியலில் ‘நாம் தமிழர்’ மாநாடும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

ஒட்டுக் குழுக்களின் ‘ஒற்றுமையுணர்வு’!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாபெரும் இடர்களைத் தோற்றுவித்த ஒட்டுக் குழுக்கள் எப்போதும் முன்வைத்த மந்திரம் - ‘ஒன்றுபடுவோம்’ என்பதே. தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இந்தச் சதிகார ‘ஒற்றுமை’ குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போதைய ‘ஒன்றிணை வோம்’ மந்திரத்தின் பின்னாலிருக்கும் சதிவலையை உணர வேண்டிய அவசியம் இருப்பதால், விடுதலைப் புலிகளின் கடந்த கால அனுபவப் பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

"தனித்து நின்று போராடி தமிழீழம் காணவேண்டும் என்ற இறுமாப்போடு நாம் இயங்கவில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை வரித்துக் கொண்ட சகல விடுதலை அமைப்புகளும் எமது பொது எதிரியை எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதே எமது ஆவல்.

"…நாம் ஒற்றுமையை வரவேற்கவே செய்கிறோம். ஒற்றுமையின் தேவையை உணர்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமையானது தமிழ் ஈழப் புரட்சி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவோ, அன்றி பிற்போக்கு சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் நெருக்குதல் காரணமாகவோ, அவசரப்பட்டுச் சமைத்த சாம்பார் ஒற்றுமையாக அமைவதை நாம் விரும்பவில்லை.

"…நாம் விரும்புவது உண்மையான, நிரந்தர ஒருமைப்பாட்டையே. இந்த ஒற்றுமையானது புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பும் இலக்கில், வரலாற்றுப் போக்கினை உணர்ந்து கொண்ட தெளிவில், புரட்சிகர இலட்சியங்களிலிருந்து வழுவாத உறுதிப்பாட்டில், ஆழமான சகோதரத்துவப் புரிந்துணர்வில் புரட்சிகர சக்திகள் மத்தியில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும்".

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் - இதழ் - ஏப்ரல் 85)

ஈபிஆர்எல்எஃப், டெலோ, ப்ளாட், ஈரோஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சூழலில், இக்குழுக்களில் பெரும்பான்மை யானவை இந்திய அரசின் வளர்ப்புப் பிள்ளைகளாக வலம் வந்த நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழீழ மக்களை மட்டும் நம்பி இயங்கினர். பிற ஆயுதக் குழுக்கள் தமது இந்திய எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து செயல்படாதவர்கள். அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் எதேச்சாதிகாரக் குழுவினர்’ என்று பரப்புரை செய்தன. இந்தப் பரப்புரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியே மேலே கண்டது. இது தொடர்பான விவாதங்கள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் மிக ஆழமாகவும் நேர்மையாகவும் மேற் கொள்ளப்பட்டன. விளைவாக, 1985 ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O)

3. ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S)

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F)

ஆகிய நான்கு அமைப்புகளும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டன.

1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறைமையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத்திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தாய் நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்

5. உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் வூரணமாக விடுவித்து, அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்

- இவையே ஒருங்கிணைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடுகள்.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 85)

இந்த ஐந்து கோட்பாடுகளில் ஒன்றிலிருந்தும் வழுவாமல் இன்று வரை விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இதே உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிற மூன்று குழுக்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுக்குழுக்களாக மாறியதை வரலாறு உணர்த்தியுள்ளது. ‘ஒன்றிணைவு’ குறித்து அதிகமாகப் பேசிய அனைத்து ஆயுதக் குழுக்களும் விடுதலைப் போருக்கு எதிரான முகாம்களில் பதுங்கியிருந்த படிதான் செயல்பட்டன.

ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் ஆசியோடு தமிழகத்தில் தங்கிக் கொண்டு, அனைத்துவிதச் சீரழிவுகளுக்கும் ஆட்பட்டு, புரட்சிகர வசனங்களைப் பத்திரிகைகளில் எழுதுவதன் வழி மட்டுமே தமது ‘விடுதலைப் போரை’ நடத்திக் கொண்டிருந்தன". விடுதலைப் புலிகள் இவர்களை, ‘காகிதப் புரட்சியாளர்கள்’ என்று அழைத்தனர். ஆனால், இந்த ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் செய்த ஒரே பரப்புரை, ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைய மறுக்கிறார்கள்’ என்பதுதான்!

ஆக, ‘ஒன்றிணைதல்’ என்ற சொல்லின் பின்னே அன்று முதல் இன்றுவரை ‘இந்திய ஏகாதிபத்தியத்தின் சதிகார முகம்’ ஒளிந்து கொண்டுள்ளது. கே.பியும், ‘நாம் தமிழர்’ அமைப்பும் வலியுறுத்தும் ‘ஒற்றுமை’க்கு என்ன கோட்பாட்டு நிபந்தனைகள் உள்ளன?

தனித் தமிழீழம் அமைய வேண்டும் - என்பதை இவ்விரு முகாம்களும் பேச்சளவில் ஒத்துக் கொள்கின்றன. ஆனால், அதைச் சாதிப்பதற்கான செயல்திட்டம் என்ன என்பதை ஆராயும் போதுதான் இவர்களின் சொல்லடுக்குகளுக்குப் பின்னால் உள்ள உண்மை முகங்கள் தெரிகின்றன.

இந்திய அரசோடு நல்லுறவு பேணிக் கொண்டு, தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, ச.ம.க, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, ராஜபக்சேயின் காலில் விழுந்தாவது அரசியல் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்து இராஜதந்திர வழியில் தனித் தமிழீழம் அமைக்கப் போகிறார்கள்!

இவ்வளவு ‘எளிய வழிகள்’ இருக்கும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 35 ஆண்டுகள் சமர் புரிந்தார்கள் என்று வியக்க வைக்கும் செயல்திட்டங்கள் ‘இவை’! எதிரிகளிடம் சரணடைந்து விடக்கோரும் திட்டம் இது. எல்லா சரணடைவுகளுக்கும் ‘ஒன்றிணைவு’ என்ற சொல்லே மூல மந்திரம்!

இதே போன்ற சூழலை முப்பது ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட தலைவர் பிரபாகரன் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘ஒற்றுமை என்ற உயரிய நோக்கினை மக்களை ஏமாற்றும் வெறும் பிரசார சாதனமாகக் கையாள்வது மிகவும் கீழ்த்தரமான அரசியற் சந்தர்ப்பவாதமாகும்’ (விடுதலைப் புலிகள் இதழ் - ஏப்ரல் 85)

ஒரு தேசிய இனத்தின் விடுதலையைக் கெஞ்சிப் பெற முயல்வது, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வாங்க நினைப்பது, போராட்டமே நடத்தாமல் அடைய முனைவது ஆகிய குணநலன்கள் கோழைத்தனத்தின் தன்னலத்தின் வெளிப்பாடுகள். 19/5க்குப் பிறகு மேலும் வீறு கொண்டு எழுந்து போராட வேண்டிய தமிழினம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

தமிழ்த்தேசிய அரசியலைக் களமாக முன்வைக்கும் த.தே.பொ.க., த.தே.வி.இ. உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் உரிமை என்றளவில் வீரியமாகச் செயல்படும் பெ.தி.க., தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுமே தமிழீழ விடுதலை அரசியலை மீண்டும் தமிழகத்தில் களமேற்றியுள்ளன. இவையே ‘அமைப்புகள்’ என்றளவில் தொடர்ந்து களத்தில் நிற்பவை. ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் வெற்றிகரமாக இயங்கும்போது அதற்கு ஆதரவாக வீரர்கள், கோழைகள் அனைவரும் குரல் எழுப்புவர். அவ்வியக்கம் சரிவைச் சந்திக்கும்போதுதான் எந்தக் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது, எது கரைந்து காணாமல் போகிறது என்பதை அறிய முடியும். வீரம் - கோழைத்தனம் ஆகிய இரண்டும் இரு இயல்புகள். ஒரு மனிதரின் கோழைத்தனம் குறித்து நாம் குறைபட இயலாது. ஆனால் தன்னலம் ஆபத்தானது. அது நல்லவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

‘சரணாகதி மதத்தவர் தம்மளவில் ஒதுங்கிக் கொண்டால், அது குறித்து நமக்கு விசனம் தேவையில்லை. அவர்கள் ராஜபக்சே, சோனியா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் கால்களில் விழுவதை நாமும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால், ‘ஒற்றுமை’ என்ற போர்வையில் இனவிடுதலைப் போராட்டத்தில் உள்ள அனைவரையும் காலில் விழ வைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தால், அது ஆபத்தானது.

"(எமது பாராளுமன்ற அரசியல்வாதிகள்) எமது மக்களது தேசியப் பிரச்சினையின் முழுவடிவத்தினையும் அதற்கான நிரந்தரத் தீர்வு என்ன என்பதையும் இந்திய அரசிடமோ சிங்கள அரசிடமோ உலகத்திற்கோ தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. தனியரசு தவிர்த்த சலுகைகள் பெறுவதற்காகவே இவர்கள் கொழும்புக்கும் டெல்லிக்கும் ராஜதந்திரக் காவடி எடுத்து வந்தனர். ஒரு தேசிய இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு தலைமை, அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையிலும் அதற்கான அரசியற் தீர்விலும் குழம்பி நின்று, ‘மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கட்டும்’ என்ற மதி நுட்பமற்ற தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்து வந்ததாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டது.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 84)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் சந்தித்துக் கெல்லி எறிந்த கருத்துதான் ‘சரணாகதி மதம்’ என்பது. நபர்கள் மாறியுள்ளனர். கருத்து ஒன்றுதான் - என்பதை மேற்கண்ட தலையங்க வரிகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. புலிகள் அடையாளம் காட்டிய ‘ராஜதந்திர காவடி’யைத் தமிழகத் தமிழ்த்தேசியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்தச் சூழல் மிகவும் சிக்கலானது. போராடிய இயக்கம் இன்று உறங்கு நிலையில் உள்ளது. தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு இனமே அல்லாடுகிறது. மூன்றரை இலட்சம் மக்கள் சொந்த மண்ணில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். எதிரிகளோ களியாட்டம் போடுகின்றனர். ஒட்டுக் குழுக்களின் பரப்புரைகளில் பிணம் தின்ற ஓநாய்களின் உற்சாக ஊளையைக் கேட்க முடிகிறது. எங்கும் வேதனை, சோகம், மன இறுக்கம், தவிப்பு, மனநோய்க்கு ஆளாகிவிடுவோமோ, மாரடைப்பு வந்து விடுமோ என்ற பதைப்பு!

ஆனால், இதுவும் ஒரு போராட்டச் சூழல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனவிடுதலைப் போர் நடக்கிறது என்பதன் அறிகுறிகள்தான் இவை. இத்தனை ஆண்டுகள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டுப் பழகினோம். இப்போது பின்னடைவுகளை ஏற்க இயலவில்லை. வெற்றியின் களிப்பில் பங்குபெற்ற நம் அனைவருக்கும் இந்தப் பின்னடைவைச் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

எந்தப் புலிகள் நம்மைப் புன்னகைக்க வைத்தார்களோ… அந்தப் புலிகள் முகங்களில் மீண்டும் புன்னகை வூக்க வேண்டும். எந்தப் புலிகள் நமக்குத் ‘தமிழர்’ என்ற பெருமிதத்தை இறுமாப்பை மீட்டுத் தந்தார்களோ… அந்தப் புலிகள் மீண்டும் இறுமாப்படையச் செய்ய வேண்டும். இவையே போராடும் இனத்திற்குத் தேவையான குணங்கள்.

"சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானமிழந்து ‘தலைகுனிந்து’ வாழ வேண்டும். பயந்து பயந்து பதட்டத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இதழ் - மே 84)

இவையே தலைவர் பிரபாகரன் கடைபிடிக்கும் கோட்பாட்டு வரிகள். அவரோ, புலிகள் இயக்கமோ ஒரு போதும் ‘சரணாகதியை’ ஏற்றதில்லை. எதிரிகள் நமது இனத்தை அழிக்க முடிவு செய்துவிட்ட பிறகு, அவர்களிடம் சரணடைந்தாலும் மரணம்தான். திருப்பி அடித்தாலும் மரணம்தான். இவற்றில் இரண்டாவது வழியில்தான் விடுதலைக்கான வாய்ப்பு இருக்கிறது. வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறது.

‘சரணாகதி’ என்பது ஒரு இனத்தை அழித்தொழிக்கும் திட்டம் ஆகும். ‘சிங்களர்கள் கோபப்படும்படி எதுவும் செய்ய வேண்டாம்’ என்று தலைவர் கருணாநிதி கூறியதற்கும், கே.பி., ‘நாம் தமிழர்’ முன்வைக்கும் ‘ஒற்றுமை’ திட்டங்களுக்கும் பாரிய ‘ஒற்றுமை’ உள்ளது என்பதைக் கவனித்தால் நிலைமையை விளங்கி்க் கொள்ளலாம்.

‘சரணாகதி மதத்தவர்’ அனைவரும் எழுச்சி மிக்க வசனங்கள் பேசுகின்றனர். தலைவர் பிரபாகரன் குறித்து சிலாகிக்கின்றனர். இவையெல்லம், புரட்சிகர அடையாளங்கள் ஆகா. மாறாக, நடவடிக்கைகள் மட்டுமே அடையாளத்தைத் தீர்மானிக்கும். இயேசு ஒரு கலகக்காரராக வாழ்ந்தவர். மத நிறுவனங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜெருசலேம் நகருக்குத் தம் சீடர்களுடன் சென்ற இயேசு தேவாலயத்தின் முற்றத்தில் வணிகர்கள் கடைவிரித்திருந்ததைக் கண்டு துணுக்குற்றார். அவ்வணிகர்களை அங்கிருந்து விரட்டுகிறார். புறாக்களை விற்பவனிடமிருந்து அப்புறாக்களைப் பறித்துப் பறக்க விடுகிறார். அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தைப் பார்க்கும் மதபோதகர்களை நோக்கி, ‘இவ்விடம் வழிபாட்டுக்கான இல்லம் என்று எழுதப்பட்டுள்ளது. நீரோ இதை வழிப்பறிக்காரர்களின் குகை யாக்கிவிட்டீரே’ என்றார். (மத்தேயு 21:13) இது மட்டுமல்லாது, மதத் தலைவர்களையும், பிரசாரகர்களையும் இயேசு மிகக் கடுமையாகச் சாடினார். மத்தேயு அதிகாரம் 23 முழுவதும் மதகுருக்கள் மீதான இயேசுவின் கடுஞ்சொற்கள் நிறைந்தது.

இயேசு இறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டான்டின் என்ற ரோம அரசன் தனது வர்க்க நலன்களுக்காக, கிறித்துவத்தை ஒர் ஆதிக்க வர்க்க மதமாகக் கட்டமைத்தான். இன்று தேவாலயங்கள் வணிகமயமாகிவிட்டன. மொத்த வணிகமும் இயேசுவின் பெயரால் நடக்கிறது. ‘நீங்கள் ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள். பரலோகத்தில் இருப்பவரே உங்கள் பிதா’ என்றார் இயேசு. (மத்தேயு 23:9) இன்று கிறித்துவப் பாதிரியார்கள் அனைவரும் ‘பிதா’(Father) என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதுவும் இயேசுவின் முன்னிலையில்தான் நடக்கிறது. யூத மதம் என்னென்ன பாவங்கள் செய்கிறது என்பதற்காக இயேசு ஒரு கலகக்காரராகப் போராடி கொல்லப்பட்டாரோ, அப்பாவங்களைக் காட்டிலும் அதிகமான பாவங்களை கிறித்துவம் புரிந்துவருகிறது - இயேசுவின் திருப்பெயரால்!

சமூக மாற்றத்திற்குப் போராடும் இயக்கம் சரியும்போது அதைச் சரிவிலிருந்து மீட்டு அதற்கு வலுவூட்டத் தவறினால், இதுபோன்ற விபரீதங்கள் தவிர்க்கவியலாதவை. இதே வழியில்தான் புலிகள் சரிந்த நிலையில், சரணாகதி மதத்தினர் புலிகளின் பெயராலெயே ‘ஆயுதப் போராட்டத்தை வன்முறை’ என்று அறிக்கை விடுகின்றனர். இதே போக்கில் சரணாகதி மதம் வளர்ந்தால், புலிகள் மீண்டு வருவதே இடர் நிறைந்ததாகி விடும். ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் இவர்கள் நமது போர்க்குணத்தை மழுங்கடித்து மண்டியிட்டு மனுப்போடப் பழக்கி விடுவார்கள்.

நமது மதிப்புக்குரிய இயக்குனர் சீமான் அவர்களும் "நாம் தமிழர்" பொதுக் கூட்டத்தில் ஜெகத் கஸ்பருடைய உரையின் சாரத்தை மறுத்துப் பேசவில்லை. மாறாக அவரும் இதே தொனியில் பேசினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இயக்குனர் சீமானை இந்த ஒரு பொதுக் கூட்டத்தின் பங்கேற்பைக் கொண்டு மதிப்பிட இயலாது. தமிழீழ விடுதலைக்காக அவர் புரிந்த ஈகங்கள் அதிகம். தமிழ் இளைஞர்களிடையே இனவுணர்வைத் தட்டியெழுப்பியதில் அவர் பங்கு அளப்பரியது. இயக்குனர் சீமான், தான் நிற்பது எதிர்ப் போராட்டக் களத்தில் என்பதை உணர வேண்டும். ‘ஒற்றுமை, சமரசம்’ ஆகியவை போராட்ட உத்திகள் என்று அவர் கருதினால் அது சரியல்ல. அவர் இந்நிலையபாட்டிலிருந்து மீள வேண்டும். அவர் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு அவர் உயிரினும் மேலாக மதிக்கும் தலைவர் பிரபாகரன் வெறுத்து ஒதுக்கிய நிலைப்பாடு என்பதை இக்கட்டுரையின் மேற்கோள் சான்றுகளே தெரிவிக்கும்.

"இறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழீழம் என்றோ ஒரு நாள் உதயமாவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வளம் கொழிப்பது திண்ணம். இந்நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறு நடை போடுவோமாக" - இவையும் தலைவர் பிரபாகரன் எழுதிய வரிகளே!

ஜெகத் கஸ்பரின் சதிகார முகம் அம்பலம்

நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கப் பொதுக்கூட்டம் மதுரையில் 18.07.09 அன்று நடந்த பிறகு, அம் மாநாட்டில் அருள் தந்தை ஜெகத் கஸ்பர் பேசிய பேச்சின் சாரம், ’தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய ஏகாதிபத்தியத்திடம் சரணடையச் செய்வதாக உள்ளது’ என்று ஆகஸ்ட் மாத தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் எழுதியிருந்தேன்.
‘இயக்குனர் சீமான் இந்தச் சிக்கலில் தனது அரசியல் போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றும் அக்கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அக்கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றாலும், இயக்குனர் சீமானின் ஆதரவாளர்கள் பலர் நம்மைத் தொடர்புகொண்டு ‘அக் கட்டுரையால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும், அக் கட்டுரை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ எனவும் கூறி வருந்தினர். இன்னும் சிலர், ‘ஒரு இயக்கம் தொடங்கப்படும் போதே இப்படி அவசரப்பட்டு விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?’ என ஆதங்கப்பட்டனர்.

இயக்குனர் சீமான் தமது இயக்க ஆலோசனைக் கூட்டங்களில் ’தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர்தான் என்னை வேண்டுமென்றே குறை கூறி வருகின்றனர்’ என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வருகிறார்.

அந்தக் கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம், இயக்குனர் சீமானைக் குறை கூறுவதோ, நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதோ அன்று என்றும் அருள் தந்தை ஜெகத் கஸ்பரின் இந்திய அரசு சார்ந்த அரசியல் சதியை இயக்குனர் சீமான் உணர்ந்தாரா இல்லையா என்ற கேள்வி எழுப்புவதே என்றும் நம்மிடம் பேசிய உணர்வாளர்களுக்கு விளக்கம் அளித்தோம்.

பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது என்பது போல, ஜெகத் கஸ்பரின் இந்திய சதிகார அரசியல் முகம் இப்போது அம்பலப்பட்டு விட்டது. ஜெகத் கஸ்பர் குமுதம் இணையதளத்திற்குக் கடந்த மாதம் அளித்துள்ள நேர்காணலில் உதிர்த்த முத்துகளில் சில:

· விடுதலைப் புலிகளும் தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களும் தவறே செய்யாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

· கடைசிக் கட்டப் பேரிழப்புகளைத் தடுக்கும் விதமான போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்தது. ஆனால், விடுதலைப் புலிகள்தான் அதை நிராகரித்தனர். அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே ஆகும்.

· இவர்களுக்குப் புவி அரசியல் பற்றிய அறிவு இல்லை; ஆளுமை இல்லை; ஆண்மை இல்லை. ஆனால், எனக்கு இவை அனைத்தும் உள்ளன.

· சீமான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக வேண்டும் என்பதற்கான களமாக நாம் தமிழர் இயக்கத்தை, ஈழ அரசியலைப் பயன்படுத்துகிறார். இதற்குப் பதிலாக அவர் திமுக அல்லது அதிமுகவில் சேரலாம்.

· நாம் தமிழர் என்ற இயக்கம் துவக்கப்பட்டதில் என் பங்களிப்பு அதிகம்.

· நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரே நான் வைத்ததுதான்.

· தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட விபசாரம் செய்யலாம்.

- இன்னும் நிறைய பேசியுள்ளார். ஆனால், இவற்றில் எதற்கும் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே சில இயக்கங்களின், தலைவர்களின் மீதான அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகள். இவற்றிற்கு அவரவரே பதில் கூறுவது பொருத்தம்.

மேலும், கஸ்பருக்கான பதில்களும் வரத் தொடங்கியுள்ளன. சிபிஐ கட்சியின் தமிழக துணைப் பொதுச் செயலர் தோழர் சி.மகேந்திரன் குமுதம் இணையத்தில் இது தொடர்பான பதிலடிகளைக் கொடுத்துள்ளார்.

கஸ்பர் பேசியவற்றிலேயே மிக முக்கியமான சேதியாக நான் கருதுவது இதைத் தான்:

· உலகப் புவி அரசியல் சூழலைப் புலிகள் கருத்தில் கொள்ளவில்லை.

· பிராந்திய புவி அரசியலையும் அவர்கள் அவதானிக்கவில்லை.

· இந்தியா ஈழத்திற்கு எதிராகப் போவதன் காரணம் மேற்கண்ட இரு காரணிகளோடும் தொடர்புடையது.

இதே கருத்தைத்தான் கஸ்பர் போர் முடிந்த காலத்திலிருந்து தொடர்ந்து கூறி வருகிறார். மதுரை நாம் தமிழர் இயக்கத் துவக்க விழாவிலும் இதே கருத்துகளைத்தான் கூறினார். ஆனால், குமுதம் இணையத்தில் புதிதாக ஒரு சேதியைச் சேர்த்துள்ளார்.

· சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது, இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழித்ததன் வழி, அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா இழந்துவிட்டது என்பதே அச் சேதி.

இந்தக் கருத்தின் பயங்கர முகத்தை விளக்கமாகப் பார்ப்போம்.

தெற்காசியாவின் பேட்டை தாதாவாக இந்தியா நீடிக்க விரும்புகிறது என்பது பாதி உண்மை மட்டுமே. இந்தியா என்றால் இந்தியா அல்ல. மாறாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் உள்ளிட்ட காலனியச் சுகங்கண்ட நாடுகளின் எடுபிடியாக இந்தியா இருக்கிறது.

இந்நாடுகள் தெற்காசியாவில் ஆட்டம் போடவும் சுரண்டிக் கொழுக்கவும் வசதியான அடிமை தேவை. அந்த அடிமையே இந்தியா. இந்தியா என்பது ஒரு தேசமே அல்ல என்பதாலும், இந்தியா என்பதே பல தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்பதாலும், காலனி ஆதிக்க நாடுகளின் வேலைத் திட்டத்திற்கு இந்தியா மிக வசதியாக ஒத்துழைக்கிறது.

ஆகவே, ஈழப் போரில் சிங்களனுக்கு இந்தியா உதவியது என்றால், அது இந்தியா மட்டும் அல்ல; அமெரிக்கா தலைமையிலான சுரண்டல் நாடுகளும்தான் உதவின என்றே புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாடுகளுக்கு இருக்கும் எதிர் சக்தி, சீனா. இந்தியாவைக் கொண்டு சீனாவை எதிர்ப்பதும், தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்குவதும் அமெரிக்கத் தலைமை நாடுகளின் புவி அரசியல் கோட்பாடு.

இதே காரணங்களின் மறுபக்கம் சீனாவுக்கும் இருக்கிறது. அதாவது அமெரிக்கத் தலைமை நாடுகளை தெற்காசியாவில் ஒடுக்க, இந்தியாவைத் தொல்லைக்குள்ளாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியம். ஆனால், இந்தியாவின் ஈழ எதிர்ப்பு நிலைக்கு இவை மட்டுமா காரணங்கள்?

இந்தியாவிற்கு இயல்பாகவே உள்ள ’தமிழின விரோத’ கொள்கைதான் அதி முக்கியமான அடிப்படையான காரணம். இக்கொள்கை இல்லையென்றால்....

· புலிகள் நீட்டிய நட்புக் கையைப் பற்றிக் கொண்டு இந்தியா சிங்களனுக்கு எதிரான நிலையை எடுத்து, அதன் வழி சீனாவை இந்தியப் பெருங்கடலுக்குள் ஆப்பு அடித்தது போல் நிறுத்தியிருக்க முடியும்.

· இந்தியா இந்த நிலைபாட்டை எடுத்திருந்தால், அமெரிக்கத் தலைமை நாடுகள் எந்தச் சங்கடமும் இன்றி இந்தியாவை ஆதரித்திருக்கும். ஏனெனில் அவற்றின் எதிரி சீனாவே தவிர, புலிகள் அல்ல; தமிழீழ மக்கள் அல்ல! ஆனால், இந்தியா தனது புவி அரசியல் நலனையும் இன விரோதக் கொள்கையையும் தந்திரமாக ஒருங்கிணைத்தது!

1. சீனாவையும் எதிர்ப்பது

2. அமெரிக்கத் தலைமைக்கும் கட்டுப்படுவது

3. தமிழீழத்தையும் அழிப்பது

ஆகிய மூன்று நலன்களையும் ‘சிங்கள ஆதரவு’ என்ற ஒரே காய் நகர்த்தலில் அடைந்தது இந்தியா!

நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியா தமிழீழத்தை அழிக்கத் துடிப்பதன் காரணம்...புவி அரசியல் மட்டும் அல்ல. அதன் தமிழின விரோத கொள்கைதான் அம்முடிவிற்கான அடிப்படை!

இப்போது கஸ்பர் மொழியும் ’அரசியலை’ப் பார்போம்.

· சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது, இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத் தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழித்ததன் வழி, அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா இழந்துவிட்டது, என்கிறார் கஸ்பர்.

இந்தக் கூற்றை கஸ்பர் வெளிப்படையாகச் சொன்னதற்காக அவருக்கு நன்றிகள் உரித்தாகுக! இந்தியாவின் கொலைவெறி பிடித்த அறிவு ஜீவிக் கூட்டத்தில் தானும் ஒருவர் தான் என்பதை மறைமுகமாக ஒப்புகொண்டிருக்கிறார் கஸ்பர்.

இந்தியப் பெருங்கடலில் சீனா கால், மூக்கு, கை, உடம்பு என அனைத்தையும் நுழைத்துவிட்டது. அண்மையில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள், ‘சிங்களக் கப்பற் படையுடன் சீன ராணுவத்தினரையும் பார்த்ததாக’ ஊடகங்களில் தெரிவித்தனர்.

புலிகளின் கடற்படை செயல்பாட்டில் இருந்தவரை சீன ராμஷீம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக செய்தி உண்டா...? இல்லை!

சீன ராμஷீத்தின் எந்தச் செயல்பாட்டையும் புலிகள் இந்தியப் பெருங்கடல் பரப்பில் கட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். இன்று நிலைமை மாறி விட்டது. புலிகளை ஒடுக்கியதன் வழி, இந்தியா தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டுவிட்டது.

இதுமட்டுமில்லாமல், அருணாசலப் பிரதேசத்தைக் கிட்டத்தட்ட சீனா புதிய வேகத்துடன் வளைக்கத் தொடங்கியுள்ளது. ’எங்கள் சீனத்தின் அங்கமான அருணாசலப் பிரதேசத்திற்குள் இந்தியத் தலைவர்கள் விருப்பம் போல வந்து போகிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது’ - என்றது சீனா அண்மையில். இந்த எச்சரிக்கை யாருக்குத் தெரியுமா? இந்தியப் பிரதமர் திருவாளர் மன்மோகன்சிங் அருணாசலப் பிரதேசம் சென்றபோது விடப்பட்ட எச்சரிக்கை இது!

சீன ராஜதந்திரி ஒருவர் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், ’இந்தியாவில் காக்ஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களையும் எளிதில் தனித் தனி நாடுகளாக்கிவிட முடியும். சீனா இதைச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஆக, இந்தியாவின் தலை, வால், உடம்பு கை, கால் அனைத்தும் கழன்று போகும் அபாயத்திலிருக்கிறது. கழற்றிவிடும் வேலையில் சீனா ஏற்கெனவே இறங்கிவிட்டது. தமிழீழத்தை ஒழிப்பதற்காக சிங்களனுக்கு உதவிய இந்தியா, அதே சிங்களனுடன் சேர்ந்துகொண்டு தன்னை உடைக்கத் தொடங்கியுள்ள சீனாவை எதிர்கொள்ள இயலாமல் தள்ளாடுகிறது. இதுதான் இன்றைய இந்தியாவின் புவி அரசியல் நிலை!

ஆகவே, இந்தியக் கொலைகார அறிவுஜீவிகள் இந்த நிலையைச் சமாளிக்க அல்லது ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள, கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் கஸ்பர் கையில் தவழ்கிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டிலான தமிழீழம்! என்பதுதான் அந்த ஆயுதம்.

· இந்தியப் பெருங்கடலில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும்.

· ஒரே நேரத்தில் சீனாவையும் சிங்களனையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட படை தமிழீழத்தில் இருக்க வேண்டும்.

· அதே நேரத்தில் தமிழீழ தேசிய இனத்திற்கு முழுமையான தன்னாட்சி உரிமையும் கிடைத்து விடக் கூடாது

இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை முன் வைத்து இந்தியா இப்போது காய் நகர்த்துகிறது. ’தமிழீழம் எவருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்காது’ என்ற தலைவர் பிரபாகரனின் கொள்கைகளும் இலட்சிய வெறியுமே இந்தியத் தந்திரத் தலைமைக்கு பல்லாண்டுகளாக எரிச்சலூட்டி வந்தன.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் மேலே கண்டவற்றிற்கான கூறுகள் இருந்ததையும், இக் காரணங்களால்தான் தலைவர் பிரபாகரன் அவ்வொப்பந்தத்தை நிராகரித்தார் என்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்த்தால்...இந்தியத் தந்திரம் எளிதில் விளங்கும்.

இப்போது, புலிகள் படை செயல்பாட்டில் இல்லாத நிலையில், மேற்கண்ட மூன்று அம்சத் தேவைகளை நிறைவேற்றுவது இந்தியாவுக்கு ஓரளவு எளிது. இதைச் சாதிப்பதற்காக அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ள பரப்புரையே, கஸ்பர் போன்றோர் தொடர்ந்து பேசிவரும், ’புலிகள் இயக்கம் இனி ஆயுதப் போராட்டம் நடத்தக் கூடாது’ ‘இந்தியாவை எதிர்க்கக் கூடாது’ என்பதாகும். இதன் பொருள், விடுதலைப் புலிகள் இந்தியாவிடம் சரணடைந்து தமிழீழ மக்களின் தன்னாட்சியைக் கைவிட்டு, இந்தியாவின் எடுபிடிகளாக - அடியாட்களாக மாற வேண்டும் என்பதே ஆகும்.

விடுதலைப் புலிகளும் புலம் பெயர் தமிழர்களும் ’தமிழீழத் தாயகம் தமிழ் மக்களின் தாகம்’ என்ற முழக்கத்தைத் தூக்கிக் குப்பையில் வீசத் தயாராக வேண்டும். இந்தியாவின் கூலிப் படையாகச் செயல்பட்ட பல ஆயுத ஒட்டுக் குழுக்கள் இருந்த காலத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.

புலிகள் இயக்கம் இந்தியாவின் இப்போதைய இந்த ‘எதிர்பார்ப்பை’ நிறைவேற்றா விட்டால்... மீண்டும் அதே போன்ற ஒட்டுக் குழுக்களை இந்தியாவே உருவாக்கி தமிழீழத்தில் உலவ விடும் அபாயம் நெருங்கி விட்டது. இதைத்தான் கஸ்பர் ‘புவி அரசியல்’ என்ற தங்க முலாம் பூசிய வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.

· சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது, இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழித்ததன் வழி, அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா இழந்துவிட்டது. கஸ்பரின் இந்த வார்த்தைகள் உரைப்பவை யாவை?

· சீனாவும் இந்தியாவும் போரில் ஈடுபடும்போது சிங்களன் சீனாவை ஆதரிப்பான்.

· சீனப் படைகள் தமிழீழ நிலப் பரப்பிலும் கடற்பரப்பிலும் தளம் அமைக்கும். அங்கிருந்து இந்தியா மீதான தாக்குதல்களை மேற் கொள்ளும்.

· இந்தியப் படைகள் சிங்களப் பகுதிக்குள் நுழைவதை சிங்களர் அனுமதிக்கமாட்டார்கள். அச்சூழலில், தமிழீழப் பரப்பிற்குள் இந்தியப்படைகள் நுழைந்தே சீனத் தளங்களை அழிக்க இயலும்.

· ஆகவே போர் நடக்கும் களங்களில் ஒன்றாக, தமிழீழம் மாறப் போவது உறுதி.

· சீனாவை எதிர்த்தும் இந்தியாவை ஆதரித்தும் போரில் ஈடுபட வேண்டிய சூழல் தமிழீழ மக்களுக்கு ஏற்படும்.

· அப்படியான சூழலில் விடுதலைப் புலிகள் சீனாவை எதிர்த்துப் போரிடும் நல்ல வாய்ப்பை இந்தியா கெடுத்துவிட்டது. இவைதானே, பொருள்...?

தமிழீழமும் அதன் மக்களும் இந்தியாவுக்காகப் போரிட்டு அழிய வேண்டும்! இதுதான் கஸ்பரின் விருப்பம்! அந்த விருப்பத்தில் இப்போது மண் விழுந்துவிட்டது! இதுவே கஸ்பர் தமிழீழ மக்களையும் தமிழீழ அரசியலையும் அணுகும் விதம். ஆக மொத்ததில், தமிழீழ மக்கள் ஒன்று இந்தியாவால் கொல்லப்பட வேண்டும் அல்லது இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!

என்னே இவரின் புவி அரசியல் அறிவு! ஆளுமை! ஆண்மை! இப்போது கேட்கிறேன்...

ஜனவரி மாதம் போர் நிறுத்ததிற்கு ‘ஏற்பாடு’ செய்வதாக இந்தியா முற்சித்ததாக சொல்லும் கஸ்பர் அவர்களே... அந்த ஏற்பாட்டில் ஆயுத ஒப்படைப்பு மட்டும் இருந்ததா...?

அல்லது

· இந்தியாவின் பாதுகாப்புப் படையாக புலிகள் இருக்க வேண்டும்

· தலைவர் பிரபாகரன் இந்தியாவின் மாத ஊதியத்திற்கு ஏவல்படைத் தலைவனாகப் பணிபுரிய வேண்டும்

· தமிழீழத் தேசம் என்ற இலட்சியத்தைப் புலிகள் இந்தியப் பெருங்கடலில் ராமர் பாலத்திற்கு அடியில் புதைத்து விட வேண்டும்

· ஒரு புறம் சீனர்களோடும் மறுபுறம் சிங்களரோடும் சண்டையிட்டு, ஒருபோதும் போர் முடியாத, மரண மண்ணாக தமிழீழம் மாற வேண்டும் ஆகிய ’நிபந்தனைகளும்’ இருந்தனவா...?

குமுதம் நேர்காணலில் உங்கள் தொலைபேசியைக் காட்டி... ‘இதோ இந்தத் தொலைபேசியில்தான் நடேசன் அண்ணை என்னோடு பேசினார். அவரிடம் நான் இந்தியாவின் ஏற்பாடு பற்றிச் சொன்னேன்’ என்று கூறினீர்கள்.

நடேசன் ஐயாவை உங்கள் இந்தியா காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டது. நீங்கள் என்னவெல்லாம் பேசினீர்கள்...? நடேசன் ஐயா என்னவெல்லாம் கூறினார்...? இந்தியாவின் அந்த ரகசியமான ‘போர் நிறுத்த ஏற்பாட்டில்’ உண்மையில் என்னென்ன அம்சங்கள் இருந்தன...? மே மாதம் 16 ஆம் நாள் ‘நாங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம்’ என்று அறிவித்த புலிகள் இயக்கம்... நீங்கள் ‘ஏற்பாடு’ செய்தபோது மட்டும் ஏன் முரண்பட்டது...?

கேள்விகள் நிறைய உள்ளன.

சாட்சி சொல்ல நடேசன் ஐயா இல்லை. சாட்சியாக நீங்கள் காட்டும் உங்கள் தொலைபேசிக்கோ உயிரில்லை...! ஆகவே, கஸ்பர் அவர்களே நீங்கள் மட்டுமே சாட்சியாக உள்ள அறைக்குள் நடந்த ’மர்மங்களை’ இனியும் வெளியே பேசாதீர்கள்’.

கஸ்பரின் அரசியல் இதுதான் என்பதை அவரது மதுரைப் பேச்சிலிருந்தே கணித்துதான் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் ஆகஸ்டு மாதம் ’ஈழம்: ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்’ என்ற கட்டுரை எழுதப்பட்டிருந்தது என்பதை அக்கட்டுரையை மீண்டும் ஒரு முறை படிப்பவர்களால் எளிதில் உணர முடியும்.

இயக்குனர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்போது கஸ்பர் மீதான விமர்சனத்தைத் தம்மீதான குற்றச்சாட்டு என்ற அளவில் அணுகினர். இதன் விளைவுதான், நாம் தமிழர் இயக்கம் குறித்தும் இயக்குனர் சீமான் குறித்தும் கஸ்பர் வீசும் குற்றச்சாட்டுகளாக வளர்ந்து நிற்கின்றன.

‘தலைவர் பிரபாகரன் சொல்லித் தான் நாம் தமிழர் இயக்கம் தொடங்கினேன்’ என்று இயக்குனர் சீமான் கூறி வரும் இவ்வேளையில் கஸ்பர் ‘எனது ஆலோசனையின் படிதான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது; அந்த அமைப்பிற்குப் பெயர் வைத்ததே நான் தான்’ என்றெல்லாம் கூறுகிறார். இவற்றிற்குப் பதில் சொல்வதும் சொல்லாமல் விடுப்பதும் இயக்குனர் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினரின் விருப்பம்.

நம்முடைய எதிர்பார்ப்புகள் என்னவெனில், தமிழ்த் தேசிய அரசியலில் களம்புகுந்துள்ள இயக்குனர் சீமான், அவருடன் இருப்பவர்களின் அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றிய திறனாய்வை மேற்கொண்டு, அதன்படிச் செயல்பட வேண்டும் என்பதே.

தமிழர் கண்ணோட்டம் உள்ளிட்ட தமிழத் தேசிய இதழ்கள் எழுதும் திறனாய்வுக் கட்டுரைகளைத் தம்மீதான தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றைப் புற நிலையில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால், மதுரை மாநாட்டில் ஜெகத் கஸ்பரைத் தவிர்த்திருக்கலாம். அல்லது, அதற்குப் பிறகாவது அவருடைய பேச்சில் தம் இயக்கத்திற்கு உடன்பாடில்லை என இயக்குனர் சீமான் அறிவித்திருக்கலாம்.

மேலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குறித்த அவரது எதிர்மறைப் பார்வையை இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனத்துரோகிகளுக்கு நாமே அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அவர்களால் ஏற்படும் இன்னல்களைச் சமாளிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுவோம்!
(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009
இதழில் வெளியான கட்டுரை)