Saturday, January 19, 2013

செம்மொழித் தமிழரின் வேளாண் நுட்பங்கள்!


செம்மொழித் தமிழரின் வேளாண் நுட்பங்கள்!

ம.செந்தமிழன்




சங்கம் 4- நிகழ்வில் நான் வாசித்த ஆய்வுக் கட்டுரை (23/12/12)



பசுமைப் புரட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் அனைவரும் மரபுசார்ந்த தமிழக வேளாண் தொழில்நுட்பங்களைக் கேலி செய்யும் வழக்கம் உள்ளது. 

இந்தியா முழுக்க பசுமைப் புரட்சிக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்பட்டதில் உள்ளூர் மரபு சார்ந்த தொழில் நுட்பங்களைக் குறைகூறும் வழக்கம் முக்கியப் பங்கு வகித்தது. இன்றுவரை இந்தப் போக்கு நிலவுகிறது. தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் நம்ப இயலாத அளவு மோசமானவை. 

ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கடைப்பிடித்து, மேம்படுத்தி வந்த எண்ணற்ற வேளாண் தொழில்நுட்பங்களை 50 ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிட்டது பசுமைப் புரட்சி. 

உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம், வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தது. அரசர் முதல் கடைநிலை மாந்தர் வரை அனைவரும், வேளாண் பாதுகாப்பு என்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். இதனால், பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். இந்தத் தொழில்நுட்பங்கள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக, சங்க இலக்கியங்களில் இப்பதிவுகள் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. மேலும், சங்கப் பாடல்களில் உள்ள பயிர்த் தொழில்நுட்பங்கள் இன்றைய விவசாய நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சேதி.

சங்ககால விவசாயத்தின் சிறப்பு –இயற்கை அமைப்பிற்கேற்ற வகையில், நிலத்தை வகைப்படுத்திப் பிரித்ததுதான். 

மலை, காடு, ஆற்றோரச் சமவெளி, கடலோர நன்னீர்ப் பகுதிகள் ஆகிய நான்கு வகை நிலங்களிலும் பயிர்த்தொழில் செய்யப்பட்டது. இந்த நான்கு வகை நிலங்களுக்கும் எனத் தனித் தனியான தொழில்நுட்பங்கள் இருந்தன.


தமிழ்ச் சமூகத்தின் இலக்கணத்தைத் தொகுத்த தொல்காப்பியர், ஒரு நிலத்திற்கான பயிர்களை மற்ற நிலத்தில் செய்வதை ‘மயக்கம்’ என்றார். அதாவது, இயற்கையின் இயல்புக்கு மாறான செயல் என்றார். இந்தக் கருத்தின் பின்னே, சூழலியல், மண்ணியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகள் குறித்த அறிவு உள்ளது. 

குறிப்பிட்ட நிலத்தின் நீர்ப் பிடிப்புத் தன்மை, சத்து, தட்ப வெப்பம், மழை அளவு, நீர் இருப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில்தான் அந்த நிலத்தில் இயற்கையான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. இதுவே இயற்கை நியதி. இந்த விதிக்குப் புறம்பாக, அந்தநிலத்திற்குப் பொருத்தமில்லாத பயிர்களைப் பயிரிட்டால், அது கால ஓட்டத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை சங்ககாலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். 

நெல் விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். மலை, ஆற்றோரச் சமவெளி ஆகிய இரு நிலங்களிலும் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இவை தவிர, கடலோரக் கழிமுகங்களிலும், காடுகளின் ஓரங்களிலும் கூட நெல் விளைவிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஆயினும், இவற்றைப் பொது விதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது. 

பெரும்பாலான நெல் விவசாயம் ஆற்றோரங்களிலும், குறைந்தளவு மலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. 

மலைகளில் பயிரிடும் நெல்லுக்கெனத் தனி வகைகள் இருந்தன. அந்த வகைகள் மலைகளில் நிலவும் குளிர், மித வெப்பம் ஆகியவற்றைத் தாங்கி வளரும் திறன் கொண்டவை. மலைநெல் என்ற வகையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். 

ஆற்றங்கறைச் சமவெளிகளில் பயிரிடப்பட்ட நெல் வகைகள், கடும் வெப்பம், வெள்ளம், மிதமான வெப்பம், நீடித்த மழை ஆகியவற்றைச் சமாளித்து வளருபவை. செந்நெல், வெண்ணெல் உள்ளிட்ட பல வகைகள் மருத நிலத்துக்கென இருந்தன. 

இன்றும் கூட, மாப்பிள்ளை சம்பா எனும் நெல்வகை பல்வேறு பருவமாற்றங்களைத் தாங்கி வளரும் தன்மையுடன் இருப்பதைக் காணலாம். இந்த மாப்பிள்ளைச் சம்பா, நெற் பயிர் ஏறத்தாழ ஐந்தரை அடி உயரம் வளரும் ஆற்றலுடையது. 

மடுமுழுங்கி, எனப்படும் ஒரு நெல் வகை, இன்றும் அரிதாகப் பயிரிடப்படுகிறது. இம் மடுமுழுங்கி நெல், பெருவெள்ளத்தையும் தாங்கி, அழுகிவிடாமல், வளர்கிறது. தஞ்சையின் புன் செய் நிலப்பகுதிகளில் பயிரிடப்படம் மட்டை நெல், வறட்சி தாங்கி வளரும் தன்மையுடையது.

இவைபோல, எண்ணற்ற வகைகள் சங்ககாலத்தில் இருந்தன.

தமிழகம் முழுக்க நெல் வேளாண்மை நடக்கும் இன்றைய நிலை, உண்மையில் தமிழரின் மரபு சார்ந்த சிந்தனைகளுக்கு முற்றிலும் மாறானது.

எல்லா நிலங்களிலும் நெல் விவசாயம் செய்வது முறையற்றது அல்லது சாத்தியக் குறைவானது என்பதைப் பல்வேறு புலவர்கள் வலியுறுத்தினர்.

’புன்புலச் சீறூர் நெல்விளை யாதே’ என்கிறது புறநானூற்றுப் பாடல் (328). அதாவது, புன்செய் நிலத்தில் நெல் விளையாது என்பது இதன் பொருள். 

நெல்லுக்கு நீர் அதிகத் தேவை என்பதாலும் பிற சூழலியல் காரணிகளையும் கணக்கில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டது. 

ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்வதற்குரிய முல்லை நிலத்தில் எந்தெந்தப் பயிர்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது மற்றொரு பாடல்.
’வரகு, தினை, கொள்ளு, அவரை இந்த நான்கும் இல்லாமல் பிற உணவுப் பயிர் இல்லை’ என்பது அப்பாடல் (புறம் 355). 

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை – 335 

இந்த நான்கு மட்டுமே முல்லை நிலத்தின் உணவுப் பயிர்கள் என்பதல்ல, இதன் பொருள். மாறாக, வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய நான்கு பயிர்களையும் முல்லை நிலத்தில் தவிர்க்கவே இயலாது, இப்பயிர்களே முகாமையானவை என்கிறார் புலவர் மாங்குடிக்கிழார்.


பயிரிடும் முறையிலும் நிலத்துக்குத் தகுந்த நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. மலைச் சாரலில் பயிர் செய்வது பற்றிய குறிப்பு நற்றிணையில் உள்ளது (209). 


மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென பல விளைந்து


எனத் துவங்குகிறது அப்பாடல். பாடியவர் நொச்சி நியமங்கிழார் எனும் புலவர். 

இப்பாடலின் பொருள் என்னவெனில்,
மலைவாழ் மக்கள், மழைக் காலத்திற்கு முன், தமது தோட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தினர். அதாவது, தோட்டத்தின் வேலிக்கு வெளியே உள்ள நிலத்தையும் பண்படுத்தி வேலிக்குள் கொண்டுவந்தனர். மழை பெய்யும் முன், காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததும் மண் உழவுக்கு ஏற்ற பதத்திற்கு வந்துவிட்டது. ஆகவே, மழைக்கு முன்னே, நிலத்தை உழுதனர். இந்தப் பதம் ‘தளி பதம்’ எனப்பட்டது. ’தளி’ என்பதற்கு, குளிர், மெல்லிய தூறல், மேகமூட்டம் ஆகிய அர்த்தங்கள் உள்ளன. மழை பெய்து மண்ணில் நீர்த் தன்மை அதிகரிக்கும் முன், தளி பதம் பார்த்து விதைத்துவிட வேண்டும் என்பதே இதில் கவனிக்கத்தக்க நுட்பம்.

உழுத பிறகு, குறைந்த விதைகளை அதிக இடைவெளி விட்டு தூவினர். இதன் பலனாக, பயிர்கள் செழிப்புடன் வளர்ந்து அதிக விளைச்சல் கிடைத்தது. இந்த நுட்பம், ’சிலவித்து அகல விட்டு பலவிளைந்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையே இன்று ஒற்றை நாற்று நடவு முறை எனப்படுகிறது. இன்றும் தமிழக மலைக் கிராமங்களில் இந்த முறைப்படி பயிர் செய்கின்றனர். குறிப்பாக, மேட்டூர் அருகே உள்ள பாலமலைக்கு நான் சென்றபோது, ஓரிரு நாற்றுகளை மட்டுமே நடும் வழக்கத்தைக் கண்டேன். பொதுவாகவே, இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் நாற்று நடும் வழக்கம் அங்கே உள்ள பழங்குடி மக்களிடம் இன்றும் உள்ளது. ஆயினும், ஒற்றை நாற்று நடவு முறை, தமிழர்களின் மரபிலேயே ஊறிய ஒன்றுதான், என்ற புரிதல், தமிழக வேளாண் துறையிடம் இல்லாதது வருந்தத்தக்கது.

மருத நில நெல் விவசாயத்துக்கென ஏராளமான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அந்த முறைகள் இன்றைய தேவைகளுக்கும் தீர்வாக அமைகின்றன. சிலவற்றைக் காண்போம்.

அதற்கு முன் மருத நில விவசாயத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். மருதநிலம் ஆற்றுச் சமவெளி என்பதால், ஆற்று நீரின் வரத்து வயல்களுக்கு அதிகமாக இருந்தது. மேலும், அக்காலத்தில் ஆற்று நீரை வயல்களில் பாய்ச்சுவதற்கான நீர் மேலாண்மை முறைகள் இப்போதைய முறைகளைக் காட்டிலும் வலுவாகவும் இயற்கையின் இயல்புகளுக்கு நெருக்கமானவையாகவும் இருந்தன. 

பயிர்த் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற விதத்தில், ஆற்று நீரை அக்கால அரசாங்கம் முறைப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது உள்ளது போல், நீரின் வரத்துக்குத் தகுந்தாற்போல தண்ணீர் திறப்பு என்ற நிலை அன்று இல்லை எனத் தோன்றுகிறது. மாறாக, தேவைக்கு ஏற்ற தண்ணீர் திறக்கப்பட்டது. அல்லது, தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு ஏற்ற முறையில் விவசாயம் செய்யப்பட்டது.

மருத நிலத்தின் நெல் வயல்கள் எப்படி இருந்தன எனப் பார்ப்போம். 

நெல் வயல்களில் மழை பெய்தபோது, கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்தன. 
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
....நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – 287
(புறம் 287)

நெல் வயலின் அடியில் மீன்கள் இருந்தன. நீர் மட்டத்தில் குவளை மலர்கள் பூத்திருந்தன. அதற்கும் மேலே நெல் விளைந்திருந்தது. என்கிறது மற்றொரு புறநானூற்றுப் பாடல்.



கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396 
(அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர்)

மற்றொரு புற நானூற்றுப் பாடல் பின்வருமாறு சித்தரிக்கிறது;
’நெல் வயலில் பயிர்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. அந்தப் பயிர்களின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருந்தன. அறுவடைக்குச் சென்ற உழவர்கள் பறவைகளுக்குச் சேதம் ஏற்படக் கூடாதென்ற கவலையுடன், அவை பறந்து செல்லும்படி ஒலி எழுப்பினர். இந்த ஓசையைக் கேட்டு, வயல்களைச் சுற்றி இருந்த மூங்கில் காடுகளில் இருந்த தேனீக்கள், தேனடையை விட்டுப் பறந்தன. சுற்றி இருந்த மக்கள் தேன் வடித்துக் கொண்டனர்’. (புறநானூறு பாடல்: 348)

-மேற்கண்ட மூன்று காட்சிகளும் மூன்று வகை நெல் பயிர் முறைகளைக் கொண்டுள்ளன. 

முதல் வகை, வயலில் ஆற்று நீரைப் பாய்ச்சி மீன் வாழும் அளவுக்கு எப்போதும் நீர் தேக்கி வைத்திருக்கும் முறை. இந்த முறை அக்காலத்தில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நற்றிணைப் பாடல் ஒன்று இம்முறையைச் சுவைபடச் சித்தரிக்கிறது.

‘நெல் அறுவடைக்குச் சென்ற உழவர்கள், விதை எடுத்துச் சென்றனர். வயல்களில் இருந்த மீன்களைப் பிடித்துக் கொண்டு திரும்பினர்’ என்கிறது அப்பாடல் (210).


அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர’

என்ற அப்பாடலை இயற்றியவர் மிளைகிழான் நல்வேட்டனார்.

இதன்படி, 
• அறுவடையின் போதே விதைக்கப்பட்டது
• அறுவடையின்போதும் வயலில் மீன் வாழுமளவு நீர் இருந்தது
• விதைப்புக்காக, நீரை வடித்தனர். அப்போது மீன்கள் சிக்கின
-ஆகிய செய்திகளை உணர முடிகிறது.

இரண்டாம் வகை வயல், பல்லுயிர்ப் பெருக்கத்தின் சிறந்த சான்றாக உள்ளது. இந்த வயலில் மூன்று அடுக்குகள் உள்ளன. நீரின் அடியில் மீன்கள், நீர் மட்டத்தில் நீர்த் தாவரம், அதற்கும் மேலே நெற் கதிர்கள். நீர்த் தாவரங்கள் வளர்ந்து பூக்கும் காலம் வரை, இந்த வயலில் களைப் பறிப்பு உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு நடந்திருந்தால், நீர்த் தாவரங்கள் பூக்குமளவு வளர்ந்திருக்காது. ஆகவே, இது இயற்கைக்கு மிக நெருக்கமான விவசாயத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இருந்த வயல் ஆகும். அதாவது, இந்த வயலில் விதைப்புக்குப் பிறகு, நீர் மேலாண்மை மட்டுமே கவனிக்கப்பட்டுள்ளது, களை, எரு கொட்டுதல் உள்ளிட்ட வேலைகள் நடக்கவில்லை. 

ஆஸ்திரேலிய வேளாண் அறிஞர் பில் மோலிசன், தான் முன் வைக்கும் Perma Culture எனப்படும் நீடித்த வேளாண், முறையில் இம்மாதிரியான வயலை வலியுறுத்துகிறார். 

ஆயினும் இம்முறை நமது முன்னோர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகும்.


மூன்றாம் வகை, முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்ப வகையில் உள்ள வயல் ஆகும். இந்த வயலில், அறுவடையின்போது நெற் பயிரில் பறவைகள் கூடு கட்டியுள்ளன. ஆகவே, இது பிற நெல் வகைகளைக் காட்டிலும் நீண்ட காலப் பயிர் விளைந்த வயல் எனலாம். மேலும், இந்த வயலில் முந்தைய வயல்களைப் போல் நீர் தேக்கப்படவில்லை. அதேவேளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர். இந்த வயலிலும் மனித நடவடிக்கைகள் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் பறவைகள் கூடு கட்டியிருக்காது. ஆகவே, இம்முறையும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலானதே.

இந்த மூன்று வயல்களும் உதாரணங்கள்தான். இவைபோல, ஏராளமான தொழில்நுட்பங்கள் நமது இலக்கியங்களில் உள்ளன. 

ஜப்பானிய அறிஞர் மசானபு புக்கோகா முன் வைத்த, ’ஏதும் செய்யாத (Do Nothing)’ இயற்கை வேளாண்மை’த் தொழில் நுட்பங்கள், தமிழகத்தில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறையில் இருந்தன. இதற்கான சான்றுகளாக மேலேயுள்ள மூன்று நெல் பயிரிடும் முறைகளையும் கூறலாம். 

இவை தவிர, புக்கோகாவின் தொழில்நுட்பங்களில் சிறப்பு வாய்ந்ததான, ‘அறுவடையின்போதே அடுத்த பயிரை விதைப்பது’ என்ற முறையும் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.

‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்’ என்கிறது ஐங்குறுநூறு 
(மருதம் 3 பாடியவர் ஓரம்போகியார்).அதாவது, விதைக்கச் சென்ற உழவர்கள் அறுவடை முடித்து நெல்லோடு திரும்பினர் என்கிறது இந்தப் பாடல். பொதுவாகவே, அறுவடைக்குப் பின் விதைப்பு என்ற இன்றைய முறை அக்கால மருதப் பாடல்களில் குறைவாகவே உள்ளது. 

அறுவடையின்போதே விதைத்து விடும் வழக்கம் பரவலாக இருந்தது. உழாமலே விதைத்தனர் என்பதையும் இப்பாடல் மறைமுகமாக விளக்குகிறது.

• அறுவடையோடு விதைத்தல்
• உழவு செய்யாத விதைப்பு
• களை நீக்காமல், நீர் மேலாண்மையின் வழி களைக் கட்டுப்படுத்தல்
• பயிர்க் காலத்தில் வயலில் வெளி இடு பொருட்கள் சேர்க்காதிருத்தல்
-ஆகியவை புக்கோகாவின் கோட்பாடுகளில் அடிப்படையானவை. 
இவை அனைத்துமே நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டன. உண்மையான இயற்கை வேளாண்மையின் முன்னோடிகளாக தமிழர்கள் இருந்தனர் என்பதற்கான சான்றுகளே முன்னர் கண்டவை.

மேலும், பல்லுயிர்ப் பெருக்கம் என்பது இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற அறிவியலாக உருவெடுத்துள்ளது. சங்கத் தமிழர் வேளாண் முறைகளில் மீன், நத்தை, நண்டுகள், செடிகள், கொடிகள், வண்டுகள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகளையும் அரவணைத்துச் செல்லும் விதமான தொழில்நுட்பங்கள் இருந்தன. 

சங்கத் தமிழர் வேளாண் அறிவியல் குறித்த ஆய்வுகள் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கவில்லை என்பது வருத்ததிற்குரிய சேதி. சில ஆர்வலர்களும் வேளாண் அறிவாளர்களும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். 

இத்துறையில், வேளாண் அறிவாளர் பாமயன், சில முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.
சங்க காலத்தில் உழாத வேளாண்மை இருந்தது என்பதற்கான நேரடியான சான்றை அவர் முன் வைக்கிறார்.
‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்கிறது சிறுபாணாற்றுப் பாடல். உழவு செய்யாமல் விதைக்கப்பட்ட வளமான நிலம், என்பதுவே இதன் பொருள்.



’உழாது வித்திய பரூஉக் குரற் சிறுதினை’ என்கிறது புறநானூறு (168). 
இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்களை நம் மரபிலேயே வைத்துக் கொண்டு, அவற்றை அறியாதவர்களாக நிற்கிறோம். இது அவலமான நிலை ஆகும்.

இவை தவிர, அக்காலத் தமிழர்கள், கம்போஸ்டு (Composed manure) எனப்படும் மட்கு எரு தயாரித்துள்ளனர் என்பதை பாமயன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். 

’தாது எரு மறுகின் மூதூர்’ என்பது அகநானூறு (165). தாது எரு என்பது மட்கு எரு ஆகும். இயற்கை வேளாண்மை, இடுபொருள் வேளாண்மை, நீடித்த வேளாண்மை ஆகிய இன்றைய நவீன வேளாண் முறைகள் அனைத்துக்குமான தொழில்நுட்பங்கள் சங்கப் பாடல்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறைப்படி வெளிக்கொணர்ந்து, இன்றைய உழவர்களுக்குப் பயன்படச் செய்வது அரசின் கடமை ஆகும். 

ஆனால், தமிழக அரசு இதுபோன்ற உருப்படியான ஆய்வுகளுக்கு ஆதரவு அளிப்பதே இல்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை, மொழி வேறு; தொழில்நுட்பங்கள் வேறு என்ற அறிவுக்குப் புறம்பான நிலைப்படுதான் உள்ளது. 

மொழியில்தான் தொழில்நுட்பங்கள் உள்ளன. மொழியைக் காக்க வேண்டும் என்றால், அம்மொழியில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைக் காக்க வேண்டும்.

தமிழ் செம்மொழி என்றால், அதன் இலக்கணச் சிறப்பால் மட்டும் அல்ல; தமிழில் உள்ள அறிவுச் செல்வம்தான் அதன் தனிச் சிறப்பு. தமிழக ஆட்சியாளர்கள் அனைவருமே, தமிழ் மொழியை வெறும் இலக்கிய , இலக்கண மொழியாக சித்தரித்தனர். அறிவு என்றாலே, மேற்குலகிலிருந்துதான் இறக்குமதியாகும் என்ற மூடநம்பிக்கையைப் பரப்பியுள்ளனர். ஆங்கிலம் என்றால் அறிவு; தமிழ் என்றால் பிற்போக்கு என்பதும் இவர்கள் ’கண்டுபிடிப்புகளில்’ ஒன்று. மேற்குலகம் நமது வேளாண்மைக்கு சாவு மணிதான் அடித்ததே தவிர, நன்மை செய்யவில்லை. இதனால், விவசாயம் என்பதே தமிழகத்தில் கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தின் உயிர்நாடியாகிய விவசாயிகளின் கழுத்தைப் பசுமைப் புரட்சியின் பேரால் நெறித்துக்கொண்டு, செம்மொழி பெருமை பேசுவது முரண் ஆகும். இதைக் கண்டு வருங்காலம் நகைக்கும். 

உண்மையிலேயே, செம்மொழியான தமிழ் மீது அக்கறை இருந்தால், முன்னோர்களின் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்து, தற்காலப் பயன்பாட்டுக்குத் தக்கபடி மாற்ற வேண்டும். அப்படிச் செய்தால்தான், மொழி வாழும். வெறுமனே பழம்பெருமை பேசுவதாலோ மாநாடுகள் நடத்தித் திருவிழாக் கொண்டாடுவதாலோ தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் நற் பலன்கள் ஏற்படுவதில்லை.

ஆகவே, இந்த நிகழ்வு நமது மரபுசார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என வேண்டுகிறேன். 

இயற்கையைப் போற்றுவோம்! தமிழராய் வாழ்வோம்!

நன்றி!
(இணைப்பு படம்: Paul Gregory- எங்கள் வேளாண் தோட்டத்தில் உள்ள குடிசை- ஆச்சாம்பட்டி

Thursday, January 17, 2013

ஏறுதழுவல்: எம் இன உரிமை!



2011ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
சனவரி இதழில் வெளியான கட்டுரை 



காளைகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கற்பனையிலும் காண இயலாது. காளைகள், சிந்துவெளி நாகரிகத் தமிழரின் பெருமிதச் சின்னங்களாக இருந்தன. ஆரியர் குதிரைகளை ஓட்டி வந்தபோது, தமிழர் காளைகளை முன்னிறுத்தியே அவர்களை எதிர்கொண்டனர். பொதுவாகவே, மாடுகள் தொல் பழங்குடியினரின் செல்வங்களாக இருந்து வருபவைதான். மாடு என்ற சொல்லுக்குத் தமிழில் ‘செல்வம்’ என்றும் பொருள் உண்டு.

ஆரியத்தின் கால்நடை அறிவுக்கும் தமிழிய கால்நடை மரபுக்கும் நேர் எதிர் முரண்களே அதிகம். ஆரியர்களைப் பொதுவாக, கால்நடைச் சமூகத்தினர் என்று ஆய்வுலகம் மதிப்பிடுகிறது. ஆயினும் அவர்களை முழுமையான கால்நடைச் சமூகத்தினர் எனக் கூறுவது பொருந்தாது. ஆரியர் குதிரைகளைத் தம் செல்வமாக, பாசத்துக் குரியவையாகக் கருதினர் என்ற பதிவுகளைக் காட்டிலும் அவற்றைப் பலி கொடுக்கும் பொருளாக மாற்றினர் என்பதையே ரிக் வேதப் பாடல்கள்,காட்டுகின்றன.

ஆரியரின் பொருளியல் சிந்தனை, கால்நடைகளை வளர்த்து பொருள் ஈட்டுவதோ, வணிகம் செய்வதோ, வேளாண் தொழில் புரிவதோ அல்ல. மேற்கண்ட தொழில் செய்யும் சமூகங்களைச் சுரண்டியும் சூறையாடியும் பிழைத்திருப்பது என்பதுதான். ரிக் வேதம் ஒன்றே இக் கூற்றைத் தெளிவாக விளக்கும்.
குதிரைகளை ஆரியர் பலி கொடுப்பதைச் சிந்து வெளித் தமிழர் கடுமையாக எதிர்த்தனர். ஆரியரது யாகங்களைத் தமிழ்ப் படை சிதைத்தது. இது ஆரியருக்குக் கடும் ஆத்திரத்தை ஊட்டியது.

‘ வேள்வி செய்யாதவர் களாகவும், தானம் கொடுக்கா தவர்களாகவும் தன்னை வணங் காதவர்களாகவும், தேவனற்றவர் களாகவும் உள்ள தாசர்களைக் கொல்லுகிறவன் எவனோ அவன் இந்திரன்!’ என்கிறது ரிக் வேதம். (ரிக் 2-12-10/ அரப்பாவில் தமிழர் நாகரிகம்/ குருவிக்கரம்பை வேலு/ சிவசக்தி 2001/பக்19)

கால்நடைகளைத் தம் சமூக உறுப்பினராகக் கருதும் மரபு தமிழருடையது. ஆயம், என்ற சொல் கூடி வாழுதலைக் குறிக்கும். கால்நடைகளின் கூட்டத்தோடு கூடி வாழ்பவர் ஆயர் எனப்படுவர். இச் சொற் களில், மனிதர் கால்நடைகள் இரண்டும் இணைந்த பொருள் உள்ளதைக் கவனிக்கலாம். அதாவது, ஆடு மாடுகளும் மனிதர்களும் ‘ஒன்றாக’ வாழ்தலை இச்சொல் குறிக்கிறது. கால்நடைகளை மனித சமூகத்தின் அங்கங்களாக தமிழர்கள் அணுகியதன் வெளிப்பாட்டினையே ஆயர் எனும் சொல் காட்டி நிற்கிறது

மானுடவியல் படி மலர்ச்சியில், ஒவ்வொரு சமூக மும் தம் உற்பத்தி முறையை மேம்படுத்தும் விதமான வீர விளையாட்டுகளை வளர்த் தெடுத்து வருகின்றன. மலை நாட்டவருக்கு வேட்டையே முதன்மை உற்பத்தி. ஆகவே, குறிஞ்சி நிலத்தின் வீர விளை யாட்டுகள் கொடும் விலங்கு களை வெல்வதாக இருந்தன.

நெய்தல் மாந்தர், சுறா வேட்டை யை வீர விளையாட்டாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலத்தவர் பல்லாயிரம் மாடு களை மேய்க்க வேண்டி யிருந்ததால், ஏறு தழுவல் எனும் காளை அடக்குதலை வீர விளையாட்டாகக் கொண் டனர்.

வீர விளையாட்டுகள் என்பவை, வெறும் வெட்டிப் பொழுதுபோக்குகள் அல்ல. அவை, உற்பத்தி நடவடிக் கையின் கூறுகள். சங்க கால முல்லை நிலப் பெண்கள், ஏறு தழுவும் இளைஞனைத் தம் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதை மரபாகக் கொண்டிருந்தனர். உற்பத்தி நடவடிக்கையான மாடு மேய்த்தலை யாரால் சிறப்பாகச் செய்ய முடியும்? அடங்காத காளையை அடக்கும் இளைஞர் களால்தான் முடியும். அவ்வா றான சிறந்த உற்பத்தித் திறன் கொண்டவனை மணம் கொள்வது, இல் வாழ்க்கை சிறக்க அடிப்படை என்பதே இதன் கருத்து.

இன்றும் கால்நடைச் சமூகத்தவரால் ஏறு தழுவல் கடைப்பிடிக்கப்படுகிறது. உற்பத்தி நடவடிக்கை என்பதன் உண்மையான பொருள் புரிந்து கொள்ளப்படாமல், வெறும் விளையாட்டு என்ற அளவில் ஏறு தழுவல் பார்க்கப்படுகிறது. 

இன்றும் பெரும் மந்தைகளைப் பராமரிக்க, வீரமும் உடல் வலுவும் தேவைதான். திமிர் கொண்டு பெருத்த காளைகளை அடக்க இயலாத எவராலும் அக்காளைகள் அடங்கிய மந்தைகளைப் பராமரிக்க இயலாது. 

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்தியாவில் குதிரைப் பந்தயங்கள் அரசு அங்கீகாரத் துடன் நடத்தப்படுகின்றன. இதற்காக குதிரைகள் கோடிக் கணக்கான பணச் செலவில் பராமரிக்கப் படுகின்றன, இறக்குமதி செய்யப்படுகின்றன. இப் பந்தயங்களை நடத்துவோரும் இவற்றில் பங்கு பெறுவோரும், பணச் சூதாடிகள் மட்டுமே! இப் பந்தயங்களுக்காகக் குதிரைகள் மோசமான முறையில் துன்புறுத்தப்படுகின்றன. குதிரை ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி உறுப்புகள் இழக்கின்றனர், மரணம் அடைகின்றனர்.

கிரிக்கெட் ஆட்டக் காரர் கிர்மானி என்பவர் கண்களில் பந்து வேகமாக மோதியதால் பார்வை இழந்தார். கான்டி ராக்டர் என்ற ஆட்டக் காரரின் உச்சந்தலையில் பந்து மோதி, தலையின் மென்மை யான ஓடு உடைந்து போனது. உலோகத் தால் செய்யப்பட்ட செயற்கை ஓடு அவருக்குப் பொருத்தப் பட்டது. கவாஸ்கர் தலையில் பந்து மோதி, மிக மோசமான நிலையை அடைந்து, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தப்பினார். ஆணுறுப்பின் மீது பந்து மோதி, விரைகள் வெளியே வந்து மரணம் நடந்த நிகழ்வுகள் கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதிகள்.

இதற்காக, கிரிக்கெட் விளையாட்டைத் தடை செய்ய யாரும் கோரவில்லை. கை விரல்கள் முதல் மயிர் வரை அனைத்து உறுப்புகளுக்கும் பாதுகாப்புக் கவசம் அணிந்து கொண்டு ’வீரர்கள்’ அந்த விளையாட்டை ஆடுகின்றனர்.

கிரிக்கெட் எந்தச் சமூகத்தின் உற்பத்தி யைப் பாதுகாக்கிறது? குதிரைச் சூதாட்டம் எந்தச் சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கை?முதலாளிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுகின்றன.

பெருமுதலாளிய ஊழலும் ஆரியச் சுரண்டல் கொள்கையும் இணைந்து இந்திய விளையாட்டுத் துறைகளைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இவற்றுக்கு ஏதுவான விளையாட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம், எதிரான விளையாட் டுகளுக்குச் சிவப்பு அட்டை. இதுவே இந்தியத் தேசியம்!

ஏறு தழுவலுக்கு நிபந்தனைகள் விதிப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.

தமிழரின் மரபுசார் உற்பத்தி நடவடிக்கை களை ஆரியம் வெறுக்கிறது. அவற்றை அழிக்கத் துடிக்கிறது. ஆகவே, தமிழரின் கால்நடைச் செல்வங்கள் ஆரியப் பெரு முதலாளியத்துக்கு ஆகாதவை. பால் உற்பத்தி பெரு நிறுவனங்கள் சுரண்ட வேண்டுமானால், மாடு வளர்ப்போர் அழிய வேண்டும். இதைச் சாதிப்பதற்கு ஆரியப் பெருமுதலாளியம் பல ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், ஏறு தழுவலுக்கு எதிரான நெருக்கடிகள்.

மாடுகள் வளர்ப்பதே இழிவு என்ற கருத்து ஏற்கெனவே தமிழகத்தில் ‘முற்போக்கு’ முகமூடி யுடன் தூவப்பட்டு விட்டது. மாடு பிடிப்பது வெட்டி வேலை என்ற
’பகுத்தறிவு’ப் பரப்புரையும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

ஏறு தழுவலின்போது ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றைச் செய்யக் கூடாது என்று நாம் கூறவில்லை. இதைப் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கும் திட்டமிடல் களுக்கும் நாம் அணியமே. தமிழ் இளைஞரின் உயிர்களையும் உறுப்புகளையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆரிய திராவிட ’முற்போக்குவாதிகளை’ விட நமக்குக் கூடுதலாக உண்டு.

ஏறு தழுவலைப் பாதுகாப்பதற்காக வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு இத்துறையில் நல்ல அறிவும் தேர்ச்சியும் உண்டு. அரசுக்கு உண்மையிலேயே ஏறு தழுவலைப் பாதுகாக்கும் அக்கறை இருந்தால், இவர் களோடு இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும். ஆனால், திராவிட அரசுகளும் ஆரியக் கொள்கை யாளர்களும் கூட்டுச் சேர்ந்துதானே தமிழரை ஆள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். போராட்டங்களின் வழி, ஏறு தழுவலைப் பாதுகாக்க வேண்டும்.

பொதுவாக கிராமங்களில் வகை வகையான மாடுகள் வளர்ப்பது, மாட்டு வேடிக்கையின் போது பெருமிதம் அடையத்தான். காங்கேயம், கண்ணாபுரம், பர்கூர், மணப்பாறை வகைக் காளைகள் கம்பீரமானவை, மிகுந்த ஆற்றல் உடையவை. இவை போன்ற நல் வகைக் காளைகளை வளர்த்து ஏறு தழுவலில் ஈடுபடுத்து வதில்தான் வளர்ப்பவரின் பெருமிதம் அடங்கியுள்ளது. 

ஏறு தழுவலுக்கே தடை / நெருக்கடி எனும் நிலையில் இந்த வகைக் காளைகள் முற்றிலும் அழியும். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில், தமிழர் நாட்டு மாடுகள் மறைந்து போய்விடும் ஆபத்து உள்ளது.

இதைத்தான் ஆரியம் விரும்புகிறது. குதிரகளை வளர்த்து சூதாடினால் ஆரியம் மகிழும். மாடுகளை யாகத்துக்குப் பலியாக்கினால் ஆரியம் உற்சாகம் அடையும். ஆனால், வீரமும் நேர்மையான சமூக உற்பத்தியும் ஆரியத்தால் சகிக்க இயலாதவை.

தமிழரோ, வீரத்தில் விளைந்து வீரத்தில் வாழ்ந்து வந்த மரபினர். ஆரிய –திராவிடக் கூட்டுச் சதியினால் வீர உணர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏறு தழுவல் எம் இன உரிமை என முழ்ங்குவோம். தமிழர் மரபுப் பொருளாதாரத்தை, பண்பாட்டைக் காப்போம்.

காளைகள் தமிழரின் அடையாளங்கள், குதிரைகள் ஆரியச் சின்னங்கள். ஏறு தழுவலுக்கு எதிராக இப்போது நடப்பவை எல்லாம் 5 ஆயிரம் ஆண்டு இனப் போராட்டத்தின் தொடர்ச்சியே!

Thursday, January 10, 2013

தமிழகத்தில் அடிமைப் பெண்கள் ஏற்றுமதி! -சொல்லப்படாத வரலாறு




திராவிடர் ஆட்சிக் காலம், தமிழக பெண்களுக்கு இருண்ட காலமாக அமைந்தது. அதுவரை பெண்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மறுக்கப்பட்டன. 


அக் காலப் பெண்கள் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.
ஆண்கள் வரதட்சிணை வாங்கும் வழக்கம் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

வரதட்சிணை -திராவிடர் வழக்கமே

சோழர்காலம் வரை, மணமகளுக்கு மணமகன் பரிசம் போட்டுத் திருமணம் செய்யும் முறையே இருந்தது.இது குறித்து வராற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.

’பெண் வீட்டார் மணமகனைத் தேடிச் செல்லுதல் பழந்தமிழர் பண்பாட்டுக்கு முரணாகும். மணமகன் வீட்டார் பெண்ணை நாடி மணமகள் வீட்டுக்கு வரவேண்டும். மணமகன் பெண்ணுக்குப் ’பரியம்’ (ஸ்பரிசம்) அல்லது தொடுவிலை போட வேண்டும்.
பெண் வீட்டார் மணமகனுக்கு வரதட்சிணை வழங்குதல் தமிழரின் மரபு அன்று.

ஆனால், பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளிலும் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. விக்கிரமசோழன் காலத்தில் மங்கை நல்லூரில் வாழ்ந்திருந்த அகளங்கராயன் என்பான் ஒருவன் தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவிட்டுவிட்டதற்காக, அவளுக்குச் சிறு நிலங்களை ஈடாகக் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

எந்தக் காரணத்தாலோ, சில பிராமண குலங்களில் பெண்ணுக்குப் பரியம் கொடுக்கும் பழக்கம் நுழைந்துவிட்டதெனத் தெரிகிறது. அதைக் கண்டித்து ஒரு கிராமத்துப் பிராமணருள் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாடர் ஆகியவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அதன்படி, கன்னியாதானமாகவே தம் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றும், மணமகளின் தந்தைக்குப் பரியப் பணம் கொடுக்கும் மாப்பிள்ளையும், பரியம் பெற்றுக்கொள்ளும் மணமகளின் தந்தையும் குலத்தினின்றும் தள்ளி வைக்கப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது’
(தமிழர் வரலாறும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை)

ஆக, வரதட்சிணை முறை தமிழர் முறை அன்று என்பதும், அம்முறையை அறிமுகப்படுத்தினோரே, திராவிடர்களாகிய தென்னிந்திய பிராமணர்தான் என்பதும் தெளிவாகிறது. இந்த திராவிடர்களாகிய தென்னக பிராமணர்கள் தமக்கான ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆணாதிக்கக் கூத்துகளில் சிலவற்றைக் காண்போம்.

• பொதுவாக பெற்றோர்கள் தங்களின் மகள்களைப் பாரமாகவே கருதினர். அவர்களுக்கு விரைவில் மணமுடிக்க விரும்பினர்.

• பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

• மனுதர்ம அடிப்படையில் நடந்துகொள்ள பெண்கள் வலியுறுத்தப்பட்டனர்.

• பொதுமகளிர் எனப்பட்ட விபசாரிகள் முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.

• உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்தது.

• அரசர்கள் இறந்தால் அவர்களுடைய மனைவியர், காமக்கிழத்தியர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயில் விழுந்து மாண்டனர்.

உடன்கட்டை ஏறாத பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். ஆபரணங்களைக் களைந்து வெள்ளை நிற ஆடை அணிந்தனர்.


உணவுப்பழக்கமும் மாற்றப்பட்டது.பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/ சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107, 108)

மேற்கண்ட பெண்ணடிமைத்தன வழக்கங்கள் குறித்து திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ஆனால், அவர்கள் பேச்சின் சாரமாக, தமிழர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து இருக்கும். இதற்காக, கண்ணகியின் வீரத்தைக் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ’திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோர் ஆணாதிக்கவாதிகள்’ என்ற அடாத பழியைப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், விஜயநகர, நாயக்கர் காலத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய சான்றுகளை அவர்கள் முன் வைப்பதே இல்லை.

திராவிடர் ஆட்சியில் தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத களங்கமான போக்கும் உருவாக்கப்பட்டது. ‘அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி’ செய்யும் வணிகம்தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76)

பெண்களை அடிமைகளாக்கும் விதிகளை உருவாக்கியது மனுநீதி. பெண்களைப் பண்டங்களாக்கி ஏற்றுமதியும் செய்த மனிதகுல விரோத ஆட்சிதான் திராவிடராகிய தென்னிந்திய பிராமணர்ஆட்சி என்பதை உணர வேண்டும். பெண்கள் வணிகம் என்பது ஒரு குறியீடுதான். பெண்கள் ஏற்றுமதியே செய்யப்பட்டார்கள் என்றால், சமூகத்தில் பெண்கள் நிலை எந்தளவு மோசமாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்தால் வேதனையே மிஞ்சும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சமூகநிலையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஆட்சி முறை திராவிட அரசர்கள் காலத்தில் உருவானது. 
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா!



(தொடரும்)


Sunday, January 6, 2013

பள்ளர், பறையர் அடிமைகள் ஆக்கப்பட்ட வரலாறு!



வேளாண் தொழிற்நுட்பத்தில் வல்லவரான பள்ளர்கள், நாயக்க பிராமணரிடமும் பிற பிராமணரிடமும் பிராமணரல்லாத நாயக்கர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரிடமும் அடிமைகளாகவே மாறிய வேதனைமிக்க வரலாறு இந்தத் திராவிடர் ஆட்சியில் உருவானது.

இது குறித்த சில சான்றுகளைக் காணலாம்.

முக்கூடற் பள்ளு, இலக்கியம் பள்ளர்கள், நாயக்கரிடம் அடிமைகளாக வேளாண் பணி புரிந்த நிலையைப் பதிவு செய்துள்ளது. இவ்விலக்கியமே, நாயக்கர்காலத்தில் இயற்றப்பட்டது என்பதால், நாயக்கரை நேரடியாக விமர்சிக்கும் பாங்கில் இல்லை. மாறாக, நாயக்கப் பண்ணையாரை உயர்த்தி, பள்ளரே பாடுவதாக உள்ளது. இறுதிப் பகுதியில் பள்ளி பண்ணையாரைத் திட்டுவதாக மட்டும் உள்ளது. ஆயினும், அக்கால பள்ளர் நிலை எந்தளவு தாழ்த்தப்பட்டது என்பதை இவ்விலக்கியத்திலிருந்து நாம் உணரலாம்.

ஆண்டை – அடிமை என்ற முறைக்கான ஆவணம் இதுவாகும். பள்ளர்கள் பண்ணையாரை ‘ஆண்டையே’ என அழைக்கும் முறை இவ்விலக்கியத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று நதிகள் கூடும் தெற்குச் சீமை அழகை விவரிக்கும்போது,
’சாதி நால்வளம் நீதி பெருக்கும்’

என்கிறார் புலவர். ’நால்வருணமே நீதி’ என்கிறது இவ்வரி.

வாழ்த்திப் பாட குயிலை அழைக்கும் கற்பனையில்,
’பார்பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும்’
’அருள் பெருந் தருமநிதி சாத்தூரிற் பெரியநம்பி
அய்யங்கார் வாழவே கூவாய் குயிலே’ 

என்று பள்ளர் பெண்களான பள்ளியர் பாடினராம்.

இந்தப் பண்ணையார் ‘நாயினாரே’ என்று சில இடங்களில் பள்ளரால் அழைக்கப்படுகிறார். பள்ளர்களின் உழைப்பால் விளைந்த நெல் பின்வருமாறு பங்குபிரிக்கப்படுகிறது;

அன்னதானம் நடக்கும் தினச் சத்திரத்திற்கும்
பெரிய நம்பி ஐயங்காருக்கும்
ஏழு திருப்பதி கோயில்களுக்கும்
வேதம் ஓதுவோருக்கும்

-கொடுக்கப்படுகிறது. இவைபோக வேறு சில பங்குகளும் உண்டு. ஆனால், உழைத்த பள்ளருக்கு இல்லை. இதனால், பள்ளி கோபம்கொண்டு நாயினாரான பண்ணையாரை இழிவாகத் திட்டுகிறாள்.

’ஆந்தை மூஞ்சி ஆண்டையே
மட்டிவாய் ஆண்டையே
சட்டித் தலை ஆண்டையே
நீர் இறைக்கும் சால்போன்ற வயிறு கொண்ட ஆண்டையே’- என்றெல்லாம் பள்ளி பாடுகிறாள்.

பண்ணையாரோ, விளைச்சலைக் கண்ட மகிழ்ச்சியில் இந்த இழிசொற்களைக்கூடக் காதில் வாங்காமல் போய்விடுகிறார்.

முக்கூடற் பள்ளு, காலத்திலும் வானியற் அறிவரான கணியர் சாதியினர் வாழ்ந்துவந்தனர் என்பதும், அவர்கள் ‘கணியார்’ என்ற அதே பழந்தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆனால், எண்ணற்ற தத்துவ ஆசான்களை அளித்த கணியார் குலம் கேலியான பொருளில் கையாளப்பட்டுள்ளது. காரணம், அக் காலத்தில் கணியார்கள் அப்படியான நிலையில் வைக்கப்பட்டார்கள் என்பதே.

’ஆருக்கும் பணியான் சீவலப்பேரி கணியான்’ என்கிறது அவ்வரி. ’ஊரில் எவருக்கும் அடங்காதவனான, கணியான் சும்மா வந்து தொந்திரவு செய்தான்’ என்ற பொருளில் உள்ளது.

இதற்கு உரை எழுதியுள்ள உரையாசிரியர் புலியூர் கேசிகன், ’கணியான் என்றால், பறை அடிப்பவர்’ என்று குறிப்பிடுகிறார். இன்றைய பறையர் சாதி, கணியார் குலத்துடனும் தொடர்புடைய குலமாக இருந்தமையின் அடையாளமே இது. தமிழர் மரபில் அந்தணராகப் பறையர்கள் இருந்தனர். நான்கு மறைகளை ஓதும் பறையர்கள் வாழ்ந்ததாக, சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது.

’சேரன் செங்குட்டுவன் முன் நால்வகை மறைகளைப் பாடும் பறையூர் கூத்தச் சாக்கையர்கள் வந்து ஆடினர்’ என்கிறது சிலப்பதிகாரம். (நடுகற்காதை:76-77)

இப்பாடலில், சாக்கையர்கள் ’நால்வகை மறையோர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஊர் பறையூர் என்பதனால், இவர்கள் பறையர் ஆகின்றனர். நால்வகை வேதங்களையும் பாடி ஆடும் தொழிலில் பறையர் இருந்தனர் என்பதும், அவர்களுக்கு மறையோர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

மேலும், பறையர், பள்ளர், கணியர், வள்ளுவர், அம்பட்டர், தச்சர் உள்ளிட்ட குலத்தவர் சங்ககாலத்தில் ‘அறிவுச் சமூகத்தவராக’வே வாழ்ந்தனர். இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால், திராவிடர் ஆட்சியில் மேற்கண்ட குலங்கள் மிக இழிவாக நடத்தப்பட்டன.

முக்கூடற் பள்ளுவில் உள்ள ‘கரையச் சாத்தா விரைய வெட்டும்’ என்ற குறிப்பு ஒன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவலைத் தாங்கி நிற்கிறது. சாத்தன் எனும் கடவுளுக்கு கிடா வெட்டு நடந்ததை இக்குறிப்பு தெரிவிக்கிறது.

கிடா வெட்டி வணங்குபவர்கள், பள்ளர்கள். சாத்தன், எனும் பெயர் பழந்தமிழ் ஆசீவக தத்துவ ஆசானைக் குறிப்பதாகும். அந்தச் சாத்தனாரே, ஐயனார் ஆவார். ஐயனார் வழிபாடு, இன்றும் தமிழகத்தில் பரவலாக உள்ளது. ஆசீவகம் எனும் தத்துவம் இந்திய நிலப்பரப்பு எங்கும் பரவி இருந்த தமிழர் தத்துவம் ஆகும். இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை பேரா.முனைவர்.க.நெடுஞ்செழியன், அறிஞர் குணா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

சாத்தனாரை, அவர் பெயராலேயே வணங்கும் வழக்கம் பள்ளருக்கு இருந்துள்ளமை, பள்ளரின் அறிவுத் தொடர்ச்சியின் அடையாளம் ஆகும். ஒரு மாபெரும் தத்துவ ஆசானை வழிபடும் வழக்கம் அறிவார்ந்த சமூகங்கள் / குலங்களில் மட்டுமே இருக்கும். அதுவும், அவரது பெயராலேயே வணங்குதல் என்பது போற்றத்தக்க சேதி ஆகும். 

நாயினார் பன்ணைக்கு அடிமைகளாக சேவகம் புரிந்த நிலையிலும், வார்த்தைக்கு வார்த்தை ‘ஆண்டையே...ஆண்டையே’ என அந்த நாயினாரை அழைத்தபோதும், சாத்தனையும் வழிபட்ட பள்ளர்கள் தமிழரின் அறிவு மரபுத் தொடர்ச்சியின் கண்ணிகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், திராவிட அரசர்களும் அவர்களது பிராமணத் தலைவர்களும் இந்த அறிவு மரபைச் சிதைப்பதில் பெருமளவு வெற்றி கண்டுவிட்டனர். இன்று பள்ளர், பறையர் ஆக உள்ளவர்களிடம் சாத்தன் யார் எனக் கேட்டால் தெரியாது. கணியார் என்போரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா எனக் கேட்டால் அவர்களுக்கு எதுவும் புரியாது. ஆய்வு செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். அந்தளவுக்கு வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது.

சோழர் கால சதுர்வேதி மங்கலத்தில் இருந்த கிராமங்களிலேயே, நிலக் காணி பெற்றிருந்த பறையர்கள், நாயக்கர் காலத்தில் செத்த மாடு உரிக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். நான்கு மறைகளைக் கற்று, சேரன் செங்குட்டுவன் முன்னே கூத்து நடத்திய பறையர்களை, பிராமண வேரிலிருந்து வளர்ந்து, ஆரியத்தின் கூறுகளுடன் தழைத்த நாயக்க மன்னர்கள், தாழ்த்தப்பட்ட சாதியாராக்கினர்.

இதுபோல் எத்துணை அறிவுக் குலங்களைச் சீரழித்தனர் நாயக்க ஆட்சியாளரும் அவரது மறு பக்கத்தினராகிய பிராமணரும்! 

விஜயநகரப் பேரரசின் வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்;

’ஒவ்வொரு சாதி மக்களும் தனித்தனிப் பகுதிகளில் குடியிருந்தனர். அவரவர்கள் குடியிருந்த இடம் அவர்களின் சாதியாலேயே அழைக்கப்பட்டது. குறிப்பாக, உயர்சாதி மக்களாகக் கருதப்பட்ட பிராமணர்கள் வாழ்ந்த இடம் அக்ரகாரம் எனப்பட்டது. கைவினைஞர்கள் குடியிருந்த பகுதி கைக்கோளர் தெரு, கம்மாளர் தெரு என்றும், கீழ்சாதி மக்களான பறையரும் புலையரும் ஊரின் புற எல்லையில் குடியிருந்த பகுதி சேரி என்றும் வழங்கப்பட்டது. சமுதாயத்தில் சாதி வேற்றுமைகள் வலுப்பெற்று ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் இருந்தன’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி /முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007/ பக் - 98)

சோழர்காலத் தஞ்சைப் பெருந்தெருவில் குயவரும் வண்ணாரும் கூடி வசித்தமையைக் கண்டோம். பிராமணருக்குத் தனியாகப் பார்ப்பனச் சேரி இருந்த சேதியைக் கண்டோம். புறஞ்சேரியில் பார்ப்பனரும் பாணரும் ஒன்றாக வசித்த வரலாற்றைக் கண்டோம்.

அது தமிழர் வரலாறு. மேற்கண்ட சாதிக்கொரு தெரு என்பதும், பறையரையும் புலையரையும் ஊருக்கு வெளியே வைத்தமையும், திராவிடர் வரலாறு. 

இந்த வேறுபாட்டை உரைக்காமலேயே கடந்த 100 ஆண்டுகளாக, திராவிட அரசியல் வெற்றி நடைபோட்டு வருகிறது.

Friday, January 4, 2013

பிராமணருக்கு தேவதாசிகள் இலவசம்: திராவிட அரசர் காலத்தின் பதிவுகள்!





விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் முதன்முறையாக, நால்வருணக் கோட்பாட்டின்படி ஆட்சி செய்தது.

விஜயநகரப் பேரரசின் சமூக அமைப்பைப் பற்றி வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது, ‘சமுதாயத்தில் உயர்குடி மக்களாகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்களாவர். இரண்டாவதாகச் சத்ரியர். மூன்றாவதாக வைசியர்கள், இறுதியாகச் சூத்திரர்கள்’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி / பக் – 98/முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007)

தமிழ் அரசர் ஆண்ட காலத்து வரலாற்றில் பிராமணருக்கான முக்கியத்துவம் குறித்து பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் ’முற்போக்கு’க் கோட்பாட்டாளர்கள், வெகு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.

மரபு வழியாகவே எச்சாதியினரும் பூசை செய்யலாம் என்ற நிலையிலிருந்த பழனிக் கோயிலில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்யக்கூடாது எனத் தடுத்தவர் ’திராவிடர்’ திருமலை நாயக்கர்.

இதற்கான செப்பேட்டுச் சான்று,

`பிராமணர் அல்லாத பண்டாரங்கள் பழனி கோயிலில் பூசை செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாகப் பிராமணர்களை நியமித்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிட்டு இராமப்பய்யன் செப்பேடு வழங்கியுள்ளார். புலிப்பாணி பாத்திர மரபில் வந்த பண்டாரங்களுக்கும் சிவப்பிராமணர்களுக்கும் எந்த எந்த வேலை என்பதை இராமப்பய்யன் வரையறுத்துள்ளார். திருமலை நாயக்கர் செப்பேடு என்பதில் ஐயமில்லை. செப்பேட்டில் திருமலையின் பெயரும் உள்ளது. தற்போது பழனிக் கோயிலில் இச்செப்பேடு உள்ளது.’ (தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2/ ச.கிருக்ஷ்ணமூர்த்தி/மெய்யப்பன் தமிழாய்வகம் 2002/ பக் – 81)

தமிழர்கள் மரபுவழியாகவே, தம் கோயில்களில் தமிழர்களைத்தான் பூசாரிகளாகக் கொண்டிருந்தனர், தமிழில்தான் வழிபாடு செய்துவந்தனர். இந்த முறையை மாற்றியது திராவிடர் ஆட்சிதான். விஜயநகர, நாயக்கர் அரசுகளின் ஆட்சி மொழி, தெலுங்கு, வழிபாட்டு மொழி, சமஸ்கிருதம். தமிழ் புறந்தள்ளப்பட்டது. இதற்கான மிக முக்கியச் சான்றுதான், பழனி கோயிலில் பிராமணர்தான் பூசை செய்ய வேண்டும் என்ற திருமலை நாயக்கரின் ஆணை.

’திராவிட’ அரசர்கள் பிராமணருக்கு இந்தளவு முக்கியத்துவம் அளித்தமைக்கு அடிப்படைக் காரணம், ‘திராவிடர்’ என்பது தென்னிந்திய பிராமணரின் தொகுப்புப் பெயர் என்பதே ஆகும். விஜயநகரப் பேரரசு, நாயக்கர் அரசு ஆகியவற்றின் அரசர்கள் பிறப்பால், முழு சத்ரியர்கள் அல்லர். பிராமணக் கலப்பாளர்கள். இதற்கான பல சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம். 

’திராவிடர் என்போர் தென்னாட்டு பிராமணரே’ என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

’திராவிடர்’ என்றால்தான் ’பிராமணர் வரமாட்டார்’ என்று கூறுவது, வரலாற்றை அறியாமல் முன் வைக்கும் கருத்து அல்லது அறிந்தே ஏதோ உள் நோக்கில் வெளிப்படுத்தும் கருத்து. 

தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசரும் நாயக்கரும் சீரழித்ததில், தமிழரின் மதிப்பீடுகள் பெருமிதங்கள் வாழ்வியல் நெறிகள் அனைத்தும் நிலைகுலைந்தன. தமிழரின் சமூக அமைப்பு முறையே தலைகீழ் மாற்றத்தைக் கண்டது. தமிழ்க் குலங்கள், சாதிகளாக மாறி தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கின. இவ்வாறான ஏற்றத் தாழ்வை சாதிய அடுக்கை பிராமணர்கள்/ திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கினர்.

ஆங்கிலேயர் வருகையின்போது தமிழகம் இருந்த நிலையைப் பார்க்கலாம்.

புக்கானன் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் ஆய்வு செய்த ஊர்களில் எந்தச் சாதியினர் நிலவுடைமையாளராக இருந்தனர் என்பதைப் பட்டியலிடுகிறார். கொங்குப் பகுதித் தரவுகளில் சில கீழே தரப்படுகின்றன.

1. ’கடம்பூர் – விளைநிலங்களை வைதிகப் பிராமணரே பயிரிடுகின்றனர். அவர்களுக்கு வரி குறைவு. ஊரில் உள்ள மற்ற வீடுகளையும் தமதாக்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு வீடு இலவசம். உணவு இலவசம். தேவதாசிகள் இலவசம்.

2. கரூர் – பெரும்பகுதி நிலம் பிராமணருக்கு சொந்தம். 

3. நல்லராயன்பாளையம் – பிராமணரே இங்கு நஞ்சை பூமிக்குச் சொந்தக்காரர்.அது அவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்.

4. கிராமத்துக் கால்வாய் 200 காணி நிலத்திற்குப் பாய்கிறது (265 ஏக்கர்). இங்குள்ள நஞ்சை யாவும் பிராமணருக்கே சொந்தம். மீதி நிலம் யாவும் பொட்டல்.இதுவும் நான்கு பிராமணருக்கே சொந்தம்

5. பெருந்துறை – இவ்வூரில் பிராமணருக்கும் முகமதியருக்கும் இனாம் நிலங்கள் உள்ளன. முகமதியர் சில கடமைகளைச் செய்ய வேண்டும். பிராமணருக்கு அது இல்லை.’

(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும் 1792-1858/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் – 9)

இது ஒரு சிறிய சான்று அவ்வளவே. தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிராமணர் நிலவுடைமையாளராக இருந்தனர். அவர்கள் தமிழ்க் குலங்களை அடிமைகள் போல் நடத்தினர். இந்தக் காலத்தில்தான், திராவிட/ தென்னிந்திய பிராமணர் ஆட்சிக்காலத்தில்தான் தீண்டாமை உருவெடுத்தது. 

நிலம், சாதி ஆதிக்கத் தனியாருக்கு முழு உடைமை ஆகிய பிறகு, பிற குலத்தவருக்குப் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றான பிறகு, சாதியக் கொடுமைகள் உருவாகத்தான் செய்யும். இத்தகைய நிலவுடைமை, தமிழர் அரசாண்ட எந்தக் காலத்திலும் நிலவவில்லை.

ஆங்கிலேயர் வந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கு இது.

கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியின் ஜமீன்கள்/ பாளையங்கள் எந்தெந்த சாதியினரிடம் இருந்தன என்பதைப் பட்டியலிடுகிறது.

பாளையங்கள் – 17
ஜமீன்கள் – 6
பட்டக்காரர் – 6
மற்றவர் – 9
மொத்தம் – 38
இவற்றில்,
நாயக்கர் உரிமை – 20
கவுண்டர் காணி -12
மற்றவர் – 6
(மேலது நூல்)

பாளையங்கள், ஜமீன்கள்தான் சுரண்டலின்கொடூர வடிவங்கள். இம்முறையை முதலில் அறிமுகம் செய்தவர் விசுவநாத நாயக்கர் எனக் கடந்த பதிவில் கண்டோம். பிராமணரை மட்டுமே தனது உயர் அதிகாரிகளாக வைத்திருந்து, அதை நியாயப்படுத்தி – அர்த்த சாத்திர நெறிப்படி அரசாண்ட கிருக்ஷ்ணதேவராயரின் அதிகாரி இவர் எனது குறிப்பிடத்தக்கது.

இந்த விசுவநாத நாயக்கர் வகுத்துகொடுத்த பாளையக்காரப் பாதையில், அவருக்குப் பின்னர் வந்த நாயக்க மான்னர்கள் பீடு நடைபோட்டனர்.

தொல் தமிழ்க் குலங்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை, பிராமணர் - வைசியர் – சத்ரியர் - சில தமிழ் வேளாளக் குலத்தவர் -ஆகிய பிரிவினருக்கு வழங்கினர் நாயக்க மன்னர்கள். இதன் விளைவுகளே மேற்கண்ட பாளையப்பட்டுப் பட்டியல்.

இவற்றில் பெரும்பான்மையை நாயக்கர் எடுத்துகொள்ள, தமிழ்க் குலங்களில் ஒன்றான கவுண்டர்களும் பிற தமிழ்க் குலத்தவர் சிலரும் இப்பாளைய முறையில் ஈடுபட்டுச் சொந்த மக்களையே சுரண்டினர். இதுதான், சாதி வடிவத்தின் ஊற்றுக் கண் ஆகும்.

திராவிட / பிராமணருக்கு சேவகம் செய்த, பாதுகாப்பளித்த பல தமிழ்க் குலங்களை அப் பிராமணர், ஆதிக்கச் சாதிகளாக்கினர். அதாவது, அச் சாதிகள் தம்மோடு மோதாமல் அவற்றுக்குள்ளேயே மோதிக் கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டனர். இதற்காகவே, அவர்கள் தமிழ்க் குலத்தினர் சிலரையும் நிலவுடைமைச் சுரண்டல்காரர்களாக வளர்த்துவிட்டனர் எனலாம். 

மேலும் தென்னிந்திய பிராமணரான திராவிட ஆட்சியாளருக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் தமக்கெதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாட்டில் சுரண்டும் எந்தப் பிரிவுக்கும் உள்ள அச்சமே இது. இந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், இவ்வாறு செய்தனர் எனலாம்.

இந்தத் திராவிடக் கொள்ளை நடத்தப்பட்டபோது, தமிழர்களின் பெரும்பகுதி மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில் விளக்க இயலாதவை. அதுவரை, அறிவார்ந்த குலமாக இருந்த பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர், கணியர், அம்பட்டர்,சானார் உள்ளிட்டவை கடுமையாக ஒடுக்கப்பட்டன. 

உண்மையில், இந்தக் குலங்கள் அனைத்துமே சாதிகளாக மாற்றப்பட்டது, ’திராவிட’ ஆட்சியில்தான்!

(தொடரும்)