Tuesday, January 1, 2013

தமிழகத்தின் முதல் இந்துத்துவ அரசு!




விஜய நகரப் பேரரசு



பிற்காலச் சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவில்லை. கி.பி.1279 ஆம் ஆண்டு, மூன்றாம் இராசேந்திர சோழன் மரணம் அடைந்தார். இவரோடு சோழர் காலம் முடிந்தது. இதன் பின்னர் பாண்டியரும் வலுவிழந்து, குறுநில மன்னராகி அதையும் இழந்தனர். 



பாண்டியரை ஒழித்ததில் மாலிக்காபூர் எனும் முகமதிய அரசனுக்குப் பெரும்பங்கு உண்டு. டெல்லியில் வலுவான முகமதிய அரசு அமைந்து. டெல்லி சுல்தானாக 1320 ஆம் ஆண்டு பதவி ஏற்ற கியாசுதீன், இந்தியா முழுமையையும் ஒரே குடையின் கீழ் கொணர நினைத்தான். அப்போது பாண்டி நாட்டை ஆண்டவன் பராக்கிரமப் பாண்டியன். கியாசுதீன் தன் மகன் உலுக்கான் என்பானை, பாண்டியருடன் போர் புரிய அனுப்பினான். பராக்கிரமப் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பெரும்புகழ்ப் பாண்டி நாடு, டில்லி சுல்தானின் 23 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.

டில்லி சுல்தான்களால் அனைத்து மாகாணங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 1335 ஆம் ஆண்டு, மதுரையை ஆண்ட ஜலாலுதீன் தன்னை சுதந்திர அரசனாக – சுல்தானாக அறிவித்துக்கொண்டான். அதன் பின்னர் மதுரை, சுல்தான்களின் ஆட்சியில் நீடித்தது.

தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி அமைவதை, ஆரியவயப்பட்ட தென்னிந்திய அரசர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரிய – பிராமணிய ஆட்சிமுறைக்கு நேர் விரோதமான கொள்கைகளைக் கொண்டிருந்த முகமதியரின் தொடர் வெற்றிகளை நிறுத்தாவிட்டால், தமது இருத்தலே கேள்விக்குள்ளாகிவிடும் என்ற நிலை ஆரியக் கருத்தில் தோய்ந்த அரச குலத்தவருக்கு ஏற்பட்டது. குறிப்பிட்ட இந்தக் காலத்தில், அரசமைக்கும் வலுவோடு தென்னிந்தியாவில் இருந்தவர்கள் இணைந்து, அமைத்த அரசே விஜயநகரப் பேரரசு ஆகும். 

கர்நாடகத்தில் உள்ள துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஒய்சாளர்களிடம் அதிகாரிகளாகவும் சிற்றரசர்களாகவும் இருந்தவர்கள் அரிகரன், புக்கன் ஆகியோர். 1346 ஆம் ஆண்டு ஒய்சாள வம்சத்தில் நிலவிய பூசல்களைப் பயன்படுத்தி, ஆட்சியமைத்தவர்கள் இவர்கள். 
இந்துத்துவக் கோட்பாடுகளைத் தமிழகத்தில் விதைத்து உரமிட்டவர்கள் விஜயநகரப் பேரரசினர் ஆவர்.

விஜயநகரப் பேரரசு அமைக்கப்பட்ட வரலாறு

’தென்னிந்தியாவில் இந்துதர்மத்தை நிலைநாட்டும் அரசு தேவைப்பட்டது; இதற்காகவே விஜயநகரப் பேரரசு அமைக்கப்பட்டது’ - இதுதான், பல வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்து ஆகும். இது பாதி உண்மைதான். இந்துதர்மம் என்பதைக் காட்டிலும், ’பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அரசு’ எனக் கூறுதல் பொருத்தமாகும்.

13ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பு தென்னிந்தியாவரை பரவியது. ஆந்திரா – கர்நாடக பகுதிகளில் அரசாண்ட காகதியர்கள் முகலாயரிடம் தோற்றனர். இந்த காகதியரின் படைத் தளபதிகளாக இருந்தோர் அரிகரன், புக்கன் ஆகிய சகோதரர்கள். இவ்விருவரும், குறுப இனத்தவர் எனப்படுகின்றனர். குறும்பராயிருக்க வாய்ப்புள்ளது. ஏனென்னில், இவர்கள் தம்மை யாதவர் என்றும் அழைத்துக்கொண்டனர். மேலும், கிருக்ஷ்ணன் வழித் தோன்றல்களாகவும் தம்மைக் கூறிகொண்டவர்கள் இவர்கள். குறும்பர்கள், மேய்ச்சல் குலத்தவர் என்பதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

முகலாயரிடம் கைதான சகோதரர்கள் இருவரும் டெல்லியில் சிறையிலடைக்கப்பட்டனர். அங்கு, இவ்விருவரும் முகலாயராக மதம் மாறும்படி நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்கள் மாறுவதாக ஒத்துகொண்டு தப்பினரா அல்லது வேறுவகையில் தப்பினரா என்பது புரியவில்லை.

இந்த நேரத்தில், இச் சகோதரர்களைச் சந்திக்கிறார் வித்யாரண்யர் எனும் பிராமண குரு. இவர், மாதவாச்சாரியார் என்றும் மாதவ வித்யாரண்யர் என்றும் கூட அழைக்கப்பட்டவர். ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கைவழி வந்தவர் இந்த வித்யாரண்யர். பல்வேறு தத்துவ மரபுகளைத் தொகுத்து இவர் எழுதிய நூல், ’சர்வதர்சனசங்கிரஹா’ என்பதாகும். அத்வைத மரபில் இயற்றப்பட்ட முகாமையான நூல் என இது புகழப்படுகிறது.

இந்துமதம் என்னும் பிராமண ஆதிக்கக் கருத்தியலை வடிவமைத்தவர்களில் வித்யாரண்யருக்கு சிறப்பான இடம் உண்டு. இந்த நூலில் வித்யாரண்யர், 16 தத்துவங்களை அத்வைதத்துக்குள் / இந்து மதத்துக்குள் அடக்குகிறார். அவை அனைத்துமே, வெவ்வேறு தனிச் சிறப்புகள் வாய்ந்தவை.

தமிழரின் தன்னிகரில்லா தத்துவமாகிய, சாங்கியத்தையும் வித்யாரண்யர் 16 தத்துவங்களில் ஒன்றாக்கினார். சிவனியமும் (சைவமும்) மேற்படி நூலில் அடக்கப்பட்டது. 

வைதீக பிராமணியத்தை எதித்த, தமிழரின் சமயங்களையே, பிராமணிய தத்துவங்களுக்குள் அடக்கினார் வித்யாரண்யர். சிவன், இந்து மதத்தின் கடவுள் ஆக்கப்பட்டார் என்பதைக் காட்டிலும் கேலிக் கூத்து வேறு என்ன இருக்க இயலும்? 

இவ்வாறுதான் ‘இந்து’ எனும் மதம் பிராமணியத்தால் ‘உருவாக்கப்பட்டது’.

இந்த வித்யாரண்யர், அரிகரன் – புக்கன் சகோதரர்களிடம் ’இந்துத்துவக் கொள்கைகளை நிலைநாட்டும் அரசை அமைக்க வேண்டும்’ என்றார். சகோதரர்கள் ஒப்புக்கொண்டனர். 

இவர்கள் பேரரசு அமைத்த கதை பலவாறு கூறப்படுகிறது. அவற்றில் முகாமையாகக் கூறப்படும் கதையைக் காண்போம்.

2000 ஆண்டுகள் நீடித்து இருக்கும்படியான பேரரசு அமைத்துத் தருவதாக வித்யாரண்யர் உறுதி அளித்தார்.

பேரரசு அமைப்பதற்காக, அவர்கள் இடம் தேடிச் சென்றனர். ஓரிடத்தில், ஒரு முயல் நாயைத் துரத்திப் போவதைக் கண்டனர். வித்யாரண்யர், ’இந்த இடமே பொருத்தம்’ என்றார். அதுவரை நிலவிய அதிகார நிலையை மாற்றப்போகும் இடம் இது என்று பொருள் கொள்ளலாம். ’இனி, பிராமணர்கள் சத்ரியர்களைத் துரத்தப்போகும் இடம் இது’ எனலாம்.

வரலாற்றில் அதுதான் நடந்தது. அந்த இடத்தில் அமைக்கப்பட்டதுதான் விஜயநகரப் பேரரசு ஆகும். 

அடுத்ததாக, அரசு அமைக்க அடிக்கல் நாட்ட நல்ல நேரம் பார்த்தனர். சகோதரர்களைக் குறிப்பிட்ட இடத்தில் நிற்க வைத்துவிட்டு, வித்யாரண்யர் மலைக் குன்று மீது ஏறினார். வானில் உள்ள நட்சத்திரங்களைக் கணித்துவிட்டு முகூர்த்தம் பார்த்துச் சொல்வதற்காகச் சென்றார்.

அவர் சென்ற பிறகு, மலையிலிருந்து சங்கு ஊதும் ஓசை கேட்டது. ’இதுவே தகுந்த நேரம்’ எனக் கருதி, சகோதரர்கள் அந்த நேரத்திலேயே அடிக்கல் நாட்டினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் சங்கு ஊதும் ஓசை கேட்டது. சகோதரர்களுக்கு விளங்கவில்லை. பின்னர், வித்யாரண்யர் வந்து ‘எந்தச் சங்கொலிக்குக் கல் நாட்டினீர்கள்?’ எனக் கேட்டார். சகோதரர்கள் ’முதல் சங்கொலிக்கு’ என்றனர்.

’இந்தப் பேரரசு 200 ஆண்டுகள் மட்டும்தான் நிலக்கும். ஏனெனில், முதல் சங்கு ஊதியவன் தாழ்ந்த சாதிக்காரன்’ (பணிவுடன் நடந்துகொள்பவன் / JangamaDevaru / one who begs) என்றார். 

’இந்தப் பேரரசு, நீடிக்க வேண்டுமெனில் தாழ்ந்த சாதிக்காரர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக் கூடாது’ என்பதற்கான எச்சரிக்கை அல்லவா இது!

ஆக, இடம் – அதிகாரப் படி நிலையை மாற்றும் சகுனத்தை அடிப்படையாகக் கொண்டது. (முயல் போன்ற பிராமணர்கள், நாய் போன்ற சத்ரியர்களைத் துரத்தப் போகிறார்கள்), நேரம் – சாதியால் தாழ்ந்தவரை முன்னிறுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையைக் கொண்டது. 

இவ்வாறாக அமைக்கப்பட்டது விஜயநகரப் பேரரசு – திராவிட அரசு!

வித்யாரண்யர், விஜயநகரப் பேரரசின் மூளையாகவே செயல்பட்டார். தனக்குப் பிறகு, விஜயநகரப் பேரரசில் பிராமணர்கள் ஆதிக்கம் மேலோங்குவதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்துவைத்தார்.

விஜயநகரப் பேரரசன் முதலாம் புக்கனின் மகன் கம்பணா, தமிழகத்தைக் கைப்பற்றிய ’திராவிட ’அரசர்களின் முன்னோடி. வட மேற்குத் தமிழகத்தை ஆண்ட சம்புவரையர்களை, கம்பணா தோற்கடித்தான். இதேவேளை மதுரையில் சுல்தான் ஆட்சி நடந்தது.

முதல் மசூதி இடிப்பு – திராவிடர் ’சாதனை’!

’காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பணா ஒரு கனவு கண்டான். அக் கனவில் தோன்றிய பெண், மதுரை சுல்தான் ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தாள். 

வேத மந்திரங்கள் ஒலித்த இல்லங்களில் கூச்சலும் குழப்பமும் மலிந்தன. பெண்களும் பிராமணர்களும் துன்புறுத்தப்பட்டனர். இந்துக்களின் புனிதச் சின்னமான ‘பசு’ வதைக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு ரத்த ஆறாக ஓடியது’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 2007/ பக் – 32)

இந்தக் கனவின் பின்னர் மதுரை சுல்தானை கம்பணா வென்றான். மிகத் தெளிவான இந்துத்துவ / பிராமணியக் கனவு கம்பணாவுக்கு வந்தது. கம்பணா உள்ளிட்ட அன்றைய ’திராவிட’ ஆட்சியாளர் அனைவரும் இந்துத்துவ வெறியராக இருந்தனர் என்பதாலேயே இவ்வாறு கூறுகிறேன்.

இதற்கான முகாமையான சான்று ஒன்றைக் காண்போம்.

‘திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கண்ணனூர் என்பது ஒய்சாளர்களின் முந்தையதலைநகரமாக இருந்தது. அங்கு வீரசோமேஸ்வரா என்ற ஆட்சியாளன் கி.பி.13 ஆம் நூற்றாண்டின் மத்தியில் போசலீஸ்வரம் உடையார் கோயிலைக் கட்டினான். ஆனால், இக்கோயில் முகமதியரின் தென்னகப் படையெடுப்பின்போது சேதப்படுத்தப்பட்டது. இக்கோயில் வளாகச் சுவர்க் கற்களை முகமதியர் கோட்டையமைக்கப் பயன்படுத்தினர். ஆனால், குமார கம்பணாவின் தென்னகப் படையெடுப்பின் விளைவாக அம்மசூதியை மீண்டும் பழைய நிலைக்குக் கோயிலாகப் புதுப்பிக்கத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது’ (மேலது நூல்/ பக் – 33)

அதாவது, மசூதி இடிக்கப்படு கோயில் கட்டப்பட்டது. தமிழக வரலாற்றில் முதல் முதலாக மசூதியை இடித்தவர்கள், விஜயநகர – திராவிடரே!

கம்பணாவின் அதிகாரிகள் வரிசையைக் காண்போம்.
1. சோமப்ப தன்ன நாயக்கர் 
2. கண்டாரகுளி மாரய்ய நாயக்கர்
3. அனிகொண்டி வித்தாரபர்
4. கோபணாரிய கோபணாங்கா

இவர்கள் அனைவரும் சாதியால் பிராமணர் ஆவர். ‘நாயக்கர்’ என்பது அரசனால் வழங்கப்படும் பட்டம். ’நாயக்கன்’ என்றால், ’சேனைத் தலைவன்’ என்று பொருள். கன்னட – தெலுங்கு ‘திராவிட’ பிராமணர்கள் எண்ணற்றவர்கள் விஜயநகரப் பேரரசில் பங்கு பெற்று, ’இந்துத்துவ தர்மத்தைக் காத்து’ நாயக்கர் எனும் பட்டம் பெற்றனர். இப்பட்டமே பின்னர் சாதியாகவும் மாறியது. பிற்காலத்தில், இச்சாதி பெருவாரி மக்களுக்கானதாக மாறியது. இன்றைக்கு இச்சாதி அடையாளத்தோடு இருப்போருக்கும், விஜயநகர பிராமணச் சாதியினருக்கும் நேரடி உறவோ தொடர்போ வரலாற்றில் காணப்படவில்லை.

அக்காலத்தில் அது ஒரு ‘பட்டப் பெயர்’ என்பதை மறக்கலாகாது.

இனி, விஜயநகரப் பேரரசின் துவக்ககால ஆட்சியாளர்களைப் பார்ப்போம்.

’சோமப்ப தன்ன நாயக்கர் ஒரு வட மொழிப் பண்டிதர். கோயில் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்டவர். முல்பாகல் என்னுமிடத்தில் சோமநாதர் ஆலயத்தைக் கட்டியவர்’ (மேலது நூல் / பக் – 39)

’கண்டாரகுளி மாரய்ய நாயக்கர், சோமப்ப நாயக்கரின் மகன். கம்பணாவின் தளபதி. இவருக்குக் கம்பணா ‘அன்ன மங்களப் பற்று’ எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்தான். தன் தந்தை சோமப்ப நாயக்கர் பேராலேயே, சோமப்ப தன்ன நாயக்க சதுர்வேதி மங்கலம்’ என்னும் சர்வமானிய கிராமத்தைஏற்படுத்தினார். அதுவே தற்போது தென்னார்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் சட்டம்பாடி எனும் பெயருடன் விளங்கி வருகிறது.

மேலும், இக்கிராமத்தை 42 பங்காகப் பிரித்து இரண்டு பங்கைக் கோயிலுக்கும் மீதமுள்ள 40 பங்கை 40 பிராமணர்களுக்கும் பங்கிட்டு வழங்க ஆணையிட்டான்’ (மேலது நூல் / பக் – 40, 41, 43)

’அனிகொண்டி வித்தாரபர், கம்பணாவின் மனைவி ரமாதேவியின் பெயரில் ‘ரமாதேவி நல்லூர்’ என்ற பிராமண கிராமத்தை அமைத்தார்.’ (மேலது நூல் / பக் – 44)

’கோபணாரிய கோபணாங்கா, தமிழகக் கோயில்களுக்குப் பொதுக் கண்காணிப்பாளராக இருந்தார்’ (மேலது நூல் / பக் – 45)

- ஆட்சியதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் பிராமணர்கள் இருந்த நிலையைத்தான் ‘திராவிட’ அரசர்கள் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தனர். 
இந்தப் பிராமணர்களும் ஆட்சியாளர்களாக இருந்த பிற ஆதிக்க சாதியினரும்தான் தமிழகத்தின் சாதியம் எனும் கருத்தியலை முற்றும் முழுதாக நடைமுறைப்படுத்தினர். 

(தொடரும்)

No comments:

Post a Comment