தமிழர் வரலாற்றியல், இயற்கையியல், சமூகவியல் என பல்வேறு தளங்களில் ஆய்வுகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும், திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன்.
இயற்கையின் பேராற்றலை உணர்ந்து வழிபடும் கருத்தியலாளர் இவர். தமிழர்கள், தொல் பழங்காலத்திலிருந்தே இயற்கையின் பேராற்றலை உணர்ந்து வழிபட்டு வந்துள்ளனர் என்பதைத் தம் ஆய்வுகள் வழியாகவும் பயண அனுபவங்கள் வழியாகவும் அறிந்துள்ளார்.
பழங்குடி மக்களுடன் உறவாடுவது, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது, காடு காடாக, ஊர் ஊராகப் பயணம் செய்வது இவரது வழக்கங்கள். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர்.
தமிழர் கண்ணோட்டம், இதழில் எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தினமணி, குமுதம், தினகரன் ஆகிய அச்சு
ஊடகங்களில் பணியாற்றினார்..

’நீயா நானா’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று தம் வாழ்வியல், வரலாற்றியல் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
2009 ஆம் ஆண்டு, ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது, ’போர் நிறுத்தம்’ கோரி தீவிரமாகப் பரப்புரை இயக்கங்களில் ஈடுபட்டார்.
![]() |
அணுசக்தி எதிர்ப்புப் போராளிகள் முனைவர் சு.ப.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோருடன் |
ஆக்கங்கள்
மறைக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளை கண்டறிந்து சொல்லும் ‘பேசாமொழி’, ஆடு மேய்க்கும் கீதாரிகளின் வாழ்வியலைச் சித்தரிக்கும் ‘ஆடோடிகள்’, நான்காம் ஈழப்போரில் காங்கிரஸ் அரசின் உதவிகளை ஆதாரங்களுடன் விளக்கி தமிழகமெங்கும் இளந்தமிழர் இயக்கத்தினரால் பரப்புரை செய்யப்பட்ட ‘தீர்ப்பு எழுதுங்கள்’ , ‘கடல் மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டம் 2010’ அறிமுகம் செய்யப்பட்டபோது, அச்சட்டத்தின் கொடூர முகத்தை விளக்கும் ‘நெய்தல்’ ஆவணப்படத்தை இயக்கி, மீனவர்கள் கிராமத்திலேயே அப்படத்தைத் திரையிட்டார்.
தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் அதன்வழியே தமிழ்நாட்டு பெண்களின் உளவியலை விளக்கும் ‘டிராகுலாவின் காதலிகள்’, மனித சமூகத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும், இன்றைய உலகமயமாதல் சூழலில் சமூகவியலையும், விளக்கிக் கூறும் ‘நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். இராசராசச் சோழர் காலத்தின் சமூக நிலைகள் குறித்த ‘இராசராசச் சோழர்’ எனும் குறுநூலை 2010 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.
சங்க காலத் தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும், ’பாலை’ திரைப்படத்தை இயக்கினார். 2011, நவம்பர் 26 ஆம் நாள் வெளியான ’பாலை’ஊடகங்களாலும் , பாலுமகேந்திரா போன்ற மூத்த இயக்குனர்களாலும், திரையுலகத் திறனாய்வாளர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டது.
தமிழர் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை ம.செந்தமிழன் எழுத்துக்கள் வெளிக் கொணர்கின்றன. தமது முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமது இரண்டாம் திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
திரு. ம.செந்தமிழன் அவர்களது,
எழுத்துகள் இத்தளத்தில் தொகுத்துப்
பதிவு செய்யப்படுகின்றன!