Friday, December 28, 2012

அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர் - சில சங்க இலக்கியச் சான்றுகள்





ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது;

1. பிறப்பு அடிப்படை
2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி
3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்
4. தீண்டாமை
5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்

தொல்காப்பிய நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;

’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும் 
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)
-இதன் பொருள், ’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.

‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76) -என்கிறார் தொல்காப்பியர். 

தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். 

மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன. 

மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை,
1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர்
-என்பதாகும். 

தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை,
1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்
-என்பது. இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை. பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார். அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார். அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும். 
’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் “ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது. 

சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.

சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம். இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று, ‘அய்யன்’ என்பதாகும். (Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)

(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)

(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)

ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்!

மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன. 

சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது. சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.

ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே. 

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை – புலியூர் கேசிகன்). இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை, ’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;

’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’

அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. 

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள்தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.

அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.

’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர். ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு. பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது. 

தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது. 

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை;
’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’
(தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:

’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’
(அகநாநூறு 337)

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’
(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம். 

குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத்தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல. தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள். 

மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை!


Tuesday, December 25, 2012

கிறிஸ்துமஸ்: ஒரு நாயகனின் பிறந்த நாள்!





இயேசு, என்ற பெயர் சிறுவயதில் எனக்கு உயரிய மரியாதையும் கடவுள் தன்மையும் கொண்ட மனிதர் என்ற உணர்வை உருவாக்கியிருந்தது. நான் படித்த பள்ளிகள் கிறித்தவ அமைப்பினர் நடத்துபவை என்பது முக்கியக் காரணம். 

எங்கள் அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியி தேவாலயத்தில், இயேசு ரத்தம் வழியப் படுத்திருப்பது போன்ற சிலை ஒன்று உண்டு. அந்தச் சிலை கம்பி வேலியால் மூடப்பட்டிருக்கும். நாம் நமது தேவைகளை துண்டுச் சீட்டில் எழுதி, அந்தக் கம்பிக்குள் திணித்துவிட்டால், இயேசு அவற்றை நிறைவேற்றுவார் எனச் சொல்லப்பட்டது.

நான் சில வேண்டுதல்களை எழுதி அங்கே வைத்ததுண்டு. அனைத்துமே நிறைவேறினவா என நினைவில்லை. ஆனால், உடலில் ரத்தம் வழியும் நிலையிலும், அடுத்தவர் வேண்டுதல்களைக் கேட்கும், கடவுள் இயேசு மட்டும்தான்.

இயேசுவைப் பற்றிய வரலாற்றுத் தகவகளைப் பின்னாட்களில் அறிந்த போது, அவர் என் மனம் கவர்ந்த நாயகன் ஆகியுள்ளார். இப்போதும், அவரைச் சிலுவையில் அறைந்ததை என்னால் ஏற்க இயலவில்லை. 

‘உள்ளதை ஆம் என்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்லுங்கள்’ என்றவர் அவர். 
சீசர் மன்னனுடைய உருவம் ஒரு பக்கமும், கடவுளின் உருவம் மறு பக்கமும் பொறிக்கப்பட்ட நாணயம் அக்காலத்தில் வழக்கில் இருந்தது. இயேசுவை அரச விரோதியாக்கத் துடித்த சிலர், ‘இந்த நாணயத்தில் எந்தப் பங்கு, அரசருக்கு உரியது? எந்தப் பங்கு கடவுளுக்கு உரியது?’ எனக் கேட்டனர். இயேசு புன்னகையுடன், ‘சீசருடையதை சீசருக்கும் கர்த்தருடையதைக் கர்த்தருக்கும் கொடுங்கள்’ என்றார். 

வார்த்தை விளையாட்டல்ல இது. அக்காலப் பொருளாதாரத்தில் கடவுளின் பேரால் நடத்தப்பட்ட கொள்ளையைக் குறித்த வசனமாக இது எனக்குப்படுகிறது. கடவுளும் சீசரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆக்கப்பட்ட சூழலைக் குறிக்கிறது இவ்வசனம் என எண்ணுகிறேன். 

ஒளியானவரை நோக்கி தவமிருந்த இயேசு, அந்த ஒளியானவரை உணர்ந்திருந்தார். தமக்கு மெய்யறிவு வழங்கியவர் ஒளியானவர்தான் என அறிவித்தார். இயேசுவைக் கைது செய்யப் படையினர் வரும்போது கூட, வனத்தில் தவம் செய்தவாறு, வானை நோக்கி, ‘இந்தச் சதிவலையிலிருந்து என்னைக் காப்பாய் என் தந்தையே! என்னைக் கைவிடாதே’ என மன்றாடிக் கொண்டிருந்தார் அவர்.

அப்போதும், அவர் மனிதர்களை நம்பவில்லை, தமது ஒளியான தந்தையையே நம்பினார். சிலுவையில் அறையப்பட்டபோதும், கிழிந்த முகத்தை மேலே உயர்த்தி, ‘தந்தையே என்னைக் கைவிடாதே’ என வேண்டினார். 

யூதர்களின் மனிதகுல விரோதச் செயல்களை மிக இளம் வயதிலேயே எதிர்த்து நின்ற போராளி இயேசு. ‘தேவன் உறைவிடம், கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது’ என அவர்தான், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தேவாலயங்களைப் பார்த்துச் சொன்னார். இந்தத் துணிவு, இந்தப் பார்வை, இந்தத் தெளிவு அவருக்கு ‘ஒளியானவரால்’ வழங்கப்பட்டது.

நோயாளிகளை இயேசு எந்த மருந்தும் இல்லாமலே குணப்படுத்தினார். இது மிகையான கற்பனை என எனக்குத் தோன்றியதுண்டு. ஆனால், தற்போது, எனது நண்பர்கள் சிலர் தொடுசிகிச்சை எனும் முறையில், எந்த மருந்தும் இல்லாமலே, நோய் தீர்ப்பதைப் பார்க்கிறேன். அவர்களைக் கேட்கும்போது, ‘தொடுவது ஒரு தொழில் நுட்பம் மட்டுமே. அதற்கு மேல், நோயாளிகளுக்காக நாங்கள் மனதளவில் இயற்கையை வேண்டுகிறோம். அந்த வேண்டுதலுக்குப் பலன் கிடைக்கிறது’ என்கிறார்கள்.

இயேசுவும் இதைத்தான் மிக விரிவாகப் பேசியுள்ளார். ‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்’ என்று அவர் கூறியது இப்பொருளில்தான். இயற்கையை வேண்டினால், கிடைக்கும் என்பதே இதன் சாரம் என நான் உணர்கிறேன். அடிப்படையில் இயேசு ஓர் இயற்கையியலாளர்.

’உங்கள் தந்தையிடம் நேரடியாகக் கேளுங்கள். அவர் செவிமடுப்பார்’ என்பதே இயேசு மக்களுக்கு உரைத்த அடிப்படைச் சேதி.

பொதுவாகவே, எளிய மனிதர்கள் சுயேச்சையாக, நிறுவனங்களைச் சாராமல், நேரடியாக இயற்கையுடன் /கடவுளுடன் உறவுகொள்வதை அதிகார நிறுவனங்கள் விரும்புவதில்லை. மனிதர்கள், தம்மிடம் மனுப்போட வேண்டும், தம்மால் சுரண்டப்பட வேண்டும் என்பதே அவற்றின் கொள்கை. ஆகவே, இயேசுவை யூதர்கள் துன்புறுத்தினர். 

இப்போது, அதிகார நிறுவனங்கள் இயேசுவின் பேராலேயே இலாபகரமாக உலகெங்கும் இயங்குகின்றன. 

அன்பின் அதிகபட்ச மனித வடிவாக வாழ்ந்த இயேசுவின் பேரால், பெரும் போர்கள் நடத்தப்படுகின்றன. ஊழல் கூடாரங்களின் தலைமையகங்களாக பல தேவாலயங்களும் திருச்சபைகளும் மாறிவிட்டன. அப்பாவி மக்களுக்குச் சலுகைகள் வழங்கி அவர்களை மதம் மாற்றும் கயமையைச் சில அமைப்புகள் இயேசுவின் பேரால் செய்துவருகின்றன.

‘இயேசு சிலுவையில் சாகவில்லை. அவர் இந்தியாவில் கற்றுக் கொண்ட சித்தர்களின் ஓக முறைகளைப் பயன்படுத்தி, தப்பிவிட்டார். காஷ்மீர் பகுதியில் தன் இறுதி நாட்களைக் கழித்தார்’ என்று ஓஷோ சொல்வார். இதற்கான பல சான்றுகளயும் அவர் முன் வைத்துள்ளார்.

இது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆழ்மனதின் ஏக்கமும் விருப்பமும். ஆனால், உண்மையில் அவரைக் கொலை செய்வதென்பது, அவர் பேரால் ஊழல் செய்வதுதானே தவிர, சிலுவையில் அறைவதல்ல.

வெறும் பிறப்பால் மட்டுமல்லாமல், உண்மையிலேயே இயேசுவைப் புரிந்துகொண்டு வாழும் நண்பர்களுக்கு எனது கிறித்து பிறந்த நாள் வாழ்த்துகள்!

Sunday, December 23, 2012

செம்மொழித் தமிழரின் வேளாண் நுட்பங்கள்!


சென்னையில் நடைபெற்ற சங்கம் 4- நிகழ்வில் 
இயக்குநர் ம.செந்தமிழன் வாசித்த 
ஆய்வுக் கட்டுரை - 23/12/12


பசுமைப் புரட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் அனைவரும் மரபுசார்ந்த தமிழக வேளாண் தொழில்நுட்பங்களைக் கேலி செய்யும் வழக்கம் உள்ளது. 

இந்தியா முழுக்க பசுமைப் புரட்சிக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்பட்டதில் உள்ளூர் மரபு சார்ந்த தொழில் நுட்பங்களைக் குறைகூறும் வழக்கம் முக்கியப் பங்கு வகித்தது. இன்றுவரை இந்தப் போக்கு நிலவுகிறது. தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் நம்ப இயலாத அளவு மோசமானவை. 

ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கடைப்பிடித்து, மேம்படுத்தி வந்த எண்ணற்ற வேளாண் தொழில்நுட்பங்களை 50 ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிட்டது பசுமைப் புரட்சி. 

உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம், வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தது. அரசர் முதல் கடைநிலை மாந்தர் வரை அனைவரும், வேளாண் பாதுகாப்பு என்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். இதனால், பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். இந்தத் தொழில்நுட்பங்கள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக, சங்க இலக்கியங்களில் இப்பதிவுகள் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. மேலும், சங்கப் பாடல்களில் உள்ள பயிர்த் தொழில்நுட்பங்கள் இன்றைய விவசாய நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சேதி.

சங்ககால விவசாயத்தின் சிறப்பு –இயற்கை அமைப்பிற்கேற்ற வகையில், நிலத்தை வகைப்படுத்திப் பிரித்ததுதான். 

மலை, காடு, ஆற்றோரச் சமவெளி, கடலோர நன்னீர்ப் பகுதிகள் ஆகிய நான்கு வகை நிலங்களிலும் பயிர்த்தொழில் செய்யப்பட்டது. இந்த நான்கு வகை நிலங்களுக்கும் எனத் தனித் தனியான தொழில்நுட்பங்கள் இருந்தன.


தமிழ்ச் சமூகத்தின் இலக்கணத்தைத் தொகுத்த தொல்காப்பியர், ஒரு நிலத்திற்கான பயிர்களை மற்ற நிலத்தில் செய்வதை ‘மயக்கம்’ என்றார். அதாவது, இயற்கையின் இயல்புக்கு மாறான செயல் என்றார். இந்தக் கருத்தின் பின்னே, சூழலியல், மண்ணியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகள் குறித்த அறிவு உள்ளது. 

குறிப்பிட்ட நிலத்தின் நீர்ப் பிடிப்புத் தன்மை, சத்து, தட்ப வெப்பம், மழை அளவு, நீர் இருப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில்தான் அந்த நிலத்தில் இயற்கையான தாவரங்கள் செழித்து வளர்கின்றன. இதுவே இயற்கை நியதி. இந்த விதிக்குப் புறம்பாக, அந்தநிலத்திற்குப் பொருத்தமில்லாத பயிர்களைப் பயிரிட்டால், அது கால ஓட்டத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை சங்ககாலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். 

நெல் விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். மலை, ஆற்றோரச் சமவெளி ஆகிய இரு நிலங்களிலும் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இவை தவிர, கடலோரக் கழிமுகங்களிலும், காடுகளின் ஓரங்களிலும் கூட நெல் விளைவிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஆயினும், இவற்றைப் பொது விதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது. 

பெரும்பாலான நெல் விவசாயம் ஆற்றோரங்களிலும், குறைந்தளவு மலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. 

மலைகளில் பயிரிடும் நெல்லுக்கெனத் தனி வகைகள் இருந்தன. அந்த வகைகள் மலைகளில் நிலவும் குளிர், மித வெப்பம் ஆகியவற்றைத் தாங்கி வளரும் திறன் கொண்டவை. மலைநெல் என்ற வகையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். 

ஆற்றங்கறைச் சமவெளிகளில் பயிரிடப்பட்ட நெல் வகைகள், கடும் வெப்பம், வெள்ளம், மிதமான வெப்பம், நீடித்த மழை ஆகியவற்றைச் சமாளித்து வளருபவை. செந்நெல், வெண்ணெல் உள்ளிட்ட பல வகைகள் மருத நிலத்துக்கென இருந்தன. 

இன்றும் கூட, மாப்பிள்ளை சம்பா எனும் நெல்வகை பல்வேறு பருவமாற்றங்களைத் தாங்கி வளரும் தன்மையுடன் இருப்பதைக் காணலாம். இந்த மாப்பிள்ளைச் சம்பா, நெற் பயிர் ஏறத்தாழ ஐந்தரை அடி உயரம் வளரும் ஆற்றலுடையது. 

மடுமுழுங்கி, எனப்படும் ஒரு நெல் வகை, இன்றும் அரிதாகப் பயிரிடப்படுகிறது. இம் மடுமுழுங்கி நெல், பெருவெள்ளத்தையும் தாங்கி, அழுகிவிடாமல், வளர்கிறது. தஞ்சையின் புன் செய் நிலப்பகுதிகளில் பயிரிடப்படம் மட்டை நெல், வறட்சி தாங்கி வளரும் தன்மையுடையது.

இவைபோல, எண்ணற்ற வகைகள் சங்ககாலத்தில் இருந்தன.

தமிழகம் முழுக்க நெல் வேளாண்மை நடக்கும் இன்றைய நிலை, உண்மையில் தமிழரின் மரபு சார்ந்த சிந்தனைகளுக்கு முற்றிலும் மாறானது.

எல்லா நிலங்களிலும் நெல் விவசாயம் செய்வது முறையற்றது அல்லது சாத்தியக் குறைவானது என்பதைப் பல்வேறு புலவர்கள் வலியுறுத்தினர்.

’புன்புலச் சீறூர் நெல்விளை யாதே’ என்கிறது புறநானூற்றுப் பாடல் (328). அதாவது, புன்செய் நிலத்தில் நெல் விளையாது என்பது இதன் பொருள். 

நெல்லுக்கு நீர் அதிகத் தேவை என்பதாலும் பிற சூழலியல் காரணிகளையும் கணக்கில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டது. 

ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்வதற்குரிய முல்லை நிலத்தில் எந்தெந்தப் பயிர்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது மற்றொரு பாடல்.
’வரகு, தினை, கொள்ளு, அவரை இந்த நான்கும் இல்லாமல் பிற உணவுப் பயிர் இல்லை’ என்பது அப்பாடல் (புறம் 355). 

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை – 335 

இந்த நான்கு மட்டுமே முல்லை நிலத்தின் உணவுப் பயிர்கள் என்பதல்ல, இதன் பொருள். மாறாக, வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய நான்கு பயிர்களையும் முல்லை நிலத்தில் தவிர்க்கவே இயலாது, இப்பயிர்களே முகாமையானவை என்கிறார் புலவர் மாங்குடிக்கிழார்.

பயிரிடும் முறையிலும் நிலத்துக்குத் தகுந்த நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. மலைச் சாரலில் பயிர் செய்வது பற்றிய குறிப்பு நற்றிணையில் உள்ளது (209). 

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென பல விளைந்து

எனத் துவங்குகிறது அப்பாடல். பாடியவர் நொச்சி நியமங்கிழார் எனும் புலவர். 

இப்பாடலின் பொருள் என்னவெனில், மலைவாழ் மக்கள், மழைக் காலத்திற்கு முன், தமது தோட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தினர். அதாவது, தோட்டத்தின் வேலிக்கு வெளியே உள்ள நிலத்தையும் பண்படுத்தி வேலிக்குள் கொண்டுவந்தனர். மழை பெய்யும் முன், காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததும் மண் உழவுக்கு ஏற்ற பதத்திற்கு வந்துவிட்டது. ஆகவே, மழைக்கு முன்னே, நிலத்தை உழுதனர். இந்தப் பதம் ‘தளி பதம்’ எனப்பட்டது. ’தளி’ என்பதற்கு, குளிர், மெல்லிய தூறல், மேகமூட்டம் ஆகிய அர்த்தங்கள் உள்ளன. மழை பெய்து மண்ணில் நீர்த் தன்மை அதிகரிக்கும் முன், தளி பதம் பார்த்து விதைத்துவிட வேண்டும் என்பதே இதில் கவனிக்கத்தக்க நுட்பம்.

உழுத பிறகு, குறைந்த விதைகளை அதிக இடைவெளி விட்டு தூவினர். இதன் பலனாக, பயிர்கள் செழிப்புடன் வளர்ந்து அதிக விளைச்சல் கிடைத்தது. இந்த நுட்பம், ’சிலவித்து அகல விட்டு பலவிளைந்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையே இன்று ஒற்றை நாற்று நடவு முறை எனப்படுகிறது. இன்றும் தமிழக மலைக் கிராமங்களில் இந்த முறைப்படி பயிர் செய்கின்றனர். குறிப்பாக, மேட்டூர் அருகே உள்ள பாலமலைக்கு நான் சென்றபோது, ஓரிரு நாற்றுகளை மட்டுமே நடும் வழக்கத்தைக் கண்டேன். பொதுவாகவே, இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் நாற்று நடும் வழக்கம் அங்கே உள்ள பழங்குடி மக்களிடம் இன்றும் உள்ளது. ஆயினும், ஒற்றை நாற்று நடவு முறை, தமிழர்களின் மரபிலேயே ஊறிய ஒன்றுதான், என்ற புரிதல், தமிழக வேளாண் துறையிடம் இல்லாதது வருந்தத்தக்கது.

மருத நில நெல் விவசாயத்துக்கென ஏராளமான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அந்த முறைகள் இன்றைய தேவைகளுக்கும் தீர்வாக அமைகின்றன. சிலவற்றைக் காண்போம்.

அதற்கு முன் மருத நில விவசாயத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். மருதநிலம் ஆற்றுச் சமவெளி என்பதால், ஆற்று நீரின் வரத்து வயல்களுக்கு அதிகமாக இருந்தது. மேலும், அக்காலத்தில் ஆற்று நீரை வயல்களில் பாய்ச்சுவதற்கான நீர் மேலாண்மை முறைகள் இப்போதைய முறைகளைக் காட்டிலும் வலுவாகவும் இயற்கையின் இயல்புகளுக்கு நெருக்கமானவையாகவும் இருந்தன. 

பயிர்த் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற விதத்தில், ஆற்று நீரை அக்கால அரசாங்கம் முறைப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது உள்ளது போல், நீரின் வரத்துக்குத் தகுந்தாற்போல தண்ணீர் திறப்பு என்ற நிலை அன்று இல்லை எனத் தோன்றுகிறது. மாறாக, தேவைக்கு ஏற்ற தண்ணீர் திறக்கப்பட்டது. அல்லது, தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு ஏற்ற முறையில் விவசாயம் செய்யப்பட்டது.

மருத நிலத்தின் நெல் வயல்கள் எப்படி இருந்தன எனப் பார்ப்போம். 

நெல் வயல்களில் மழை பெய்தபோது, கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்தன. 
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
....நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – 287
(புறம் 287)

நெல் வயலின் அடியில் மீன்கள் இருந்தன. நீர் மட்டத்தில் குவளை மலர்கள் பூத்திருந்தன. அதற்கும் மேலே நெல் விளைந்திருந்தது. என்கிறது மற்றொரு புறநானூற்றுப் பாடல்.

கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396 
(அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர்)

மற்றொரு புற நானூற்றுப் பாடல் பின்வருமாறு சித்தரிக்கிறது;
’நெல் வயலில் பயிர்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. அந்தப் பயிர்களின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருந்தன. அறுவடைக்குச் சென்ற உழவர்கள் பறவைகளுக்குச் சேதம் ஏற்படக் கூடாதென்ற கவலையுடன், அவை பறந்து செல்லும்படி ஒலி எழுப்பினர். இந்த ஓசையைக் கேட்டு, வயல்களைச் சுற்றி இருந்த மூங்கில் காடுகளில் இருந்த தேனீக்கள், தேனடையை விட்டுப் பறந்தன. சுற்றி இருந்த மக்கள் தேன் வடித்துக் கொண்டனர்’. (புறநானூறு பாடல்: 348)

-மேற்கண்ட மூன்று காட்சிகளும் மூன்று வகை நெல் பயிர் முறைகளைக் கொண்டுள்ளன. 

முதல் வகை, வயலில் ஆற்று நீரைப் பாய்ச்சி மீன் வாழும் அளவுக்கு எப்போதும் நீர் தேக்கி வைத்திருக்கும் முறை. இந்த முறை அக்காலத்தில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நற்றிணைப் பாடல் ஒன்று இம்முறையைச் சுவைபடச் சித்தரிக்கிறது.

‘நெல் அறுவடைக்குச் சென்ற உழவர்கள், விதை எடுத்துச் சென்றனர். வயல்களில் இருந்த மீன்களைப் பிடித்துக் கொண்டு திரும்பினர்’ என்கிறது அப்பாடல் (210).

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர’

என்ற அப்பாடலை இயற்றியவர் மிளைகிழான் நல்வேட்டனார்.

இதன்படி, 
• அறுவடையின் போதே விதைக்கப்பட்டது
• அறுவடையின்போதும் வயலில் மீன் வாழுமளவு நீர் இருந்தது
• விதைப்புக்காக, நீரை வடித்தனர். அப்போது மீன்கள் சிக்கின
-ஆகிய செய்திகளை உணர முடிகிறது.

இரண்டாம் வகை வயல், பல்லுயிர்ப் பெருக்கத்தின் சிறந்த சான்றாக உள்ளது. இந்த வயலில் மூன்று அடுக்குகள் உள்ளன. நீரின் அடியில் மீன்கள், நீர் மட்டத்தில் நீர்த் தாவரம், அதற்கும் மேலே நெற் கதிர்கள். நீர்த் தாவரங்கள் வளர்ந்து பூக்கும் காலம் வரை, இந்த வயலில் களைப் பறிப்பு உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு நடந்திருந்தால், நீர்த் தாவரங்கள் பூக்குமளவு வளர்ந்திருக்காது. ஆகவே, இது இயற்கைக்கு மிக நெருக்கமான விவசாயத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இருந்த வயல் ஆகும். அதாவது, இந்த வயலில் விதைப்புக்குப் பிறகு, நீர் மேலாண்மை மட்டுமே கவனிக்கப்பட்டுள்ளது, களை, எரு கொட்டுதல் உள்ளிட்ட வேலைகள் நடக்கவில்லை. 

ஆஸ்திரேலிய வேளாண் அறிஞர் பில் மோலிசன், தான் முன் வைக்கும் Perma Culture எனப்படும் நீடித்த வேளாண், முறையில் இம்மாதிரியான வயலை வலியுறுத்துகிறார். 

ஆயினும் இம்முறை நமது முன்னோர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகும்.

மூன்றாம் வகை, முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்ப வகையில் உள்ள வயல் ஆகும். இந்த வயலில், அறுவடையின்போது நெற் பயிரில் பறவைகள் கூடு கட்டியுள்ளன. ஆகவே, இது பிற நெல் வகைகளைக் காட்டிலும் நீண்ட காலப் பயிர் விளைந்த வயல் எனலாம். மேலும், இந்த வயலில் முந்தைய வயல்களைப் போல் நீர் தேக்கப்படவில்லை. அதேவேளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர். இந்த வயலிலும் மனித நடவடிக்கைகள் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் பறவைகள் கூடு கட்டியிருக்காது. ஆகவே, இம்முறையும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலானதே.

இந்த மூன்று வயல்களும் உதாரணங்கள்தான். இவைபோல, ஏராளமான தொழில்நுட்பங்கள் நமது இலக்கியங்களில் உள்ளன. 

ஜப்பானிய அறிஞர் மசானபு புக்கோகா முன் வைத்த, ’ஏதும் செய்யாத (Do Nothing)’ இயற்கை வேளாண்மை’த் தொழில் நுட்பங்கள், தமிழகத்தில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறையில் இருந்தன. இதற்கான சான்றுகளாக மேலேயுள்ள மூன்று நெல் பயிரிடும் முறைகளையும் கூறலாம். 

இவை தவிர, புக்கோகாவின் தொழில்நுட்பங்களில் சிறப்பு வாய்ந்ததான, ‘அறுவடையின்போதே அடுத்த பயிரை விதைப்பது’ என்ற முறையும் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.

‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்’ என்கிறது ஐங்குறுநூறு 
(மருதம் 3 பாடியவர் ஓரம்போகியார்).அதாவது, விதைக்கச் சென்ற உழவர்கள் அறுவடை முடித்து நெல்லோடு திரும்பினர் என்கிறது இந்தப் பாடல். பொதுவாகவே, அறுவடைக்குப் பின் விதைப்பு என்ற இன்றைய முறை அக்கால மருதப் பாடல்களில் குறைவாகவே உள்ளது. 

அறுவடையின்போதே விதைத்து விடும் வழக்கம் பரவலாக இருந்தது. உழாமலே விதைத்தனர் என்பதையும் இப்பாடல் மறைமுகமாக விளக்குகிறது.

• அறுவடையோடு விதைத்தல்
• உழவு செய்யாத விதைப்பு
• களை நீக்காமல், நீர் மேலாண்மையின் வழி களைக் கட்டுப்படுத்தல்
• பயிர்க் காலத்தில் வயலில் வெளி இடு பொருட்கள் சேர்க்காதிருத்தல்
-ஆகியவை புக்கோகாவின் கோட்பாடுகளில் அடிப்படையானவை. 

இவை அனைத்துமே நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டன. உண்மையான இயற்கை வேளாண்மையின் முன்னோடிகளாக தமிழர்கள் இருந்தனர் என்பதற்கான சான்றுகளே முன்னர் கண்டவை.

மேலும், பல்லுயிர்ப் பெருக்கம் என்பது இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற அறிவியலாக உருவெடுத்துள்ளது. சங்கத் தமிழர் வேளாண் முறைகளில் மீன், நத்தை, நண்டுகள், செடிகள், கொடிகள், வண்டுகள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகளையும் அரவணைத்துச் செல்லும் விதமான தொழில்நுட்பங்கள் இருந்தன. 

சங்கத் தமிழர் வேளாண் அறிவியல் குறித்த ஆய்வுகள் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கவில்லை என்பது வருத்ததிற்குரிய சேதி. சில ஆர்வலர்களும் வேளாண் அறிவாளர்களும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். 

இத்துறையில், வேளாண் அறிவாளர் பாமயன், சில முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.
சங்க காலத்தில் உழாத வேளாண்மை இருந்தது என்பதற்கான நேரடியான சான்றை அவர் முன் வைக்கிறார்.
‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்கிறது சிறுபாணாற்றுப் பாடல். உழவு செய்யாமல் விதைக்கப்பட்ட வளமான நிலம், என்பதுவே இதன் பொருள்.

’உழாது வித்திய பரூஉக் குரற் சிறுதினை’ என்கிறது புறநானூறு (168). 

இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்களை நம் மரபிலேயே வைத்துக் கொண்டு, அவற்றை அறியாதவர்களாக நிற்கிறோம். இது அவலமான நிலை ஆகும்.

இவை தவிர, அக்காலத் தமிழர்கள், கம்போஸ்டு (Composed manure) எனப்படும் மட்கு எரு தயாரித்துள்ளனர் என்பதை பாமயன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். 

’தாது எரு மறுகின் மூதூர்’ என்பது அகநானூறு (165). தாது எரு என்பது மட்கு எரு ஆகும். இயற்கை வேளாண்மை, இடுபொருள் வேளாண்மை, நீடித்த வேளாண்மை ஆகிய இன்றைய நவீன வேளாண் முறைகள் அனைத்துக்குமான தொழில்நுட்பங்கள் சங்கப் பாடல்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறைப்படி வெளிக்கொணர்ந்து, இன்றைய உழவர்களுக்குப் பயன்படச் செய்வது அரசின் கடமை ஆகும். 

ஆனால், தமிழக அரசு இதுபோன்ற உருப்படியான ஆய்வுகளுக்கு ஆதரவு அளிப்பதே இல்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை, மொழி வேறு; தொழில்நுட்பங்கள் வேறு என்ற அறிவுக்குப் புறம்பான நிலைப்படுதான் உள்ளது. 

மொழியில்தான் தொழில்நுட்பங்கள் உள்ளன. மொழியைக் காக்க வேண்டும் என்றால், அம்மொழியில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைக் காக்க வேண்டும்.

தமிழ் செம்மொழி என்றால், அதன் இலக்கணச் சிறப்பால் மட்டும் அல்ல; தமிழில் உள்ள அறிவுச் செல்வம்தான் அதன் தனிச் சிறப்பு. தமிழக ஆட்சியாளர்கள் அனைவருமே, தமிழ் மொழியை வெறும் இலக்கிய , இலக்கண மொழியாக சித்தரித்தனர். அறிவு என்றாலே, மேற்குலகிலிருந்துதான் இறக்குமதியாகும் என்ற மூடநம்பிக்கையைப் பரப்பியுள்ளனர். ஆங்கிலம் என்றால் அறிவு; தமிழ் என்றால் பிற்போக்கு என்பதும் இவர்கள் ’கண்டுபிடிப்புகளில்’ ஒன்று. மேற்குலகம் நமது வேளாண்மைக்கு சாவு மணிதான் அடித்ததே தவிர, நன்மை செய்யவில்லை. இதனால், விவசாயம் என்பதே தமிழகத்தில் கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தின் உயிர்நாடியாகிய விவசாயிகளின் கழுத்தைப் பசுமைப் புரட்சியின் பேரால் நெறித்துக்கொண்டு, செம்மொழி பெருமை பேசுவது முரண் ஆகும். இதைக் கண்டு வருங்காலம் நகைக்கும். 

உண்மையிலேயே, செம்மொழியான தமிழ் மீது அக்கறை இருந்தால், முன்னோர்களின் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்து, தற்காலப் பயன்பாட்டுக்குத் தக்கபடி மாற்ற வேண்டும். அப்படிச் செய்தால்தான், மொழி வாழும். வெறுமனே பழம்பெருமை பேசுவதாலோ மாநாடுகள் நடத்தித் திருவிழாக் கொண்டாடுவதாலோ தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் நற் பலன்கள் ஏற்படுவதில்லை.

ஆகவே, இந்த நிகழ்வு நமது மரபுசார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என வேண்டுகிறேன். 

இயற்கையைப் போற்றுவோம்! தமிழராய் வாழ்வோம்!

(இணைப்பு படம்: இயக்குநர் ம.செநதமிழனின் வேளாண் தோட்டத்தில் உள்ள குடிசை - ஆச்சாம்பட்டி, ஒளிப்பதிவாளர் பால் கிரகொரி - Paul Gregory)

Friday, December 21, 2012

அறிவார்ந்த மேதைகளே உலகைக் காப்பாற்றுங்கள்! -டிசம்பர் 21 குறித்த செய்திகள்



உலகம் அழியுமா அழியாதா என்ற கேள்வி, மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினையையும் தராமல் உலா வருகிறது. மாயன்கள், இயற்கையின் ஆற்றல்களைப் பெற்ற முன்னோடிகள். இயற்கையைச் சிதைக்காமல், வாழத் தெரிந்தவர்கள். இயற்கையின் பேராற்றலை உணர்ந்து அதை வணங்கி வாழ்ந்தவர்கள்.

காலம் கடந்து நிற்கும் அவர்களது ஆற்றல்களின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கூட, தற்போதைய ‘உலக அழிவு’ பற்றிய செய்திகளை என்னால் உணர முடிகிறது. இந்தச் சமூகத்திற்கு, மாயன்களின் பேரால், ஒரு முக்கியமான பாடம் கற்றுத் தரப்படுவதாகவே எண்ணுகிறேன்.

மாயன் நாட்காட்டியை முன்னிட்டு பேசப்படும் ’அழிவு’ எனும் கருத்து, பரபரப்புச் செய்திக்கானதல்ல. ‘அனைத்தையும் வென்றுவிட்டோம். எங்கள் அறிவே மேன்மையானது. இயற்கையை வென்றவர்கள் நாங்கள்’ எனும், மனிதகுலத்தின் அறிவுத் திமிரை, எள்ளி நகையாடிக் கொண்டுள்ளது இயற்கை.

எந்த சுனாமியையையும் தடுக்க இயலாமல், எந்த நில அதிர்வையும் தாங்கவியலாமல், எந்த வறட்சியையும் கடக்க இயலாமல், எந்தப் புயலையும், பனிப் பொழிவையும், வெள்ளத்தையும், வெப்பத்தையும் வெல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறது மனித குலத்தின் அறிவு சமூகம்.

கொசுக்களின் எண்ணிக்கையைக் கூட இந்த அறிவுச் சமூகத்தினால் கட்டுப்படுத்த இயலவில்லை. ’மனித அறிவே மேலானது’ என்ற இறுமாப்பு தொழிற்புரட்சியும், காலனி ஆதிக்கமும் கூடிப் பெற்ற அசுரக் குழந்தை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக, இந்த குழந்தை பிரபஞ்சத்தைக் காட்டிலும் உயரமாகவும் அகன்றும் வளர்ந்து விட்டதாகக் கற்பிதங்கள் செய்யப்பட்டன.

கப்பல்களில் தொலைதூரம் பயணித்த ஐரோப்பிய வந்தேறிகள், இயற்கையின் மைந்தர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த தீவுகளை அடைந்தார்கள். அத்தீவுகளைத் தாமே ‘கண்டுபிடித்ததாக’ தம்பட்டம் அடித்துக் கொண்டனர்.

அத்தீவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த அழகிய மக்களைத் துப்பாக்கி முனையில் அடிமைகள் ஆக்கினர். 

பழங்குடி மக்கள் ஆடைகளை வெறுத்தவர்கள். பழங்குடிகளில், திறந்த நிலையில் ஒரு பெண்ணின் உறுப்புகளைக் கண்டால், எந்த ஆணுக்கும் குறி விறைத்து, அப்பெண் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதில்லை. திறந்த நிலையில் ஓர் ஆணின் குறியைக் கண்ட எந்தப் பெண்ணும் அவனை மோகித்து அலைந்ததில்லை. 

நிர்வாணம் என்பது, மனித குல நாகரிகத்தின் முதிர்ச்சி என வாழ்ந்து காட்டிய பழங்குடிகள், ஐரோப்பிய வந்தேறிகளால், ’காட்டுமிராண்டிகள்’ என அழைக்கப்பட்டனர். விரல் நுனியைக் கூட கையுறையால் மறைக்கும் சீமாட்டிகளும் சீமான்களும் ‘நாகரிகமானவர்கள்’ என மரியாதை பெற்றனர். நாட்டின் தலைநகரில் பேருந்தில் பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் சமூகம் ’அறிவுச் சமூகம்’. 

வந்தேறிகள் சென்று இறங்கிய காடுகள் பழங்குடிப் பெண்களின் கதறலால் அதிர்ந்தன. ஆண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர். ’மரணம் என்பது, வாழ்ந்த மனிதனின் முதிர்ச்சி நிலையைக் குறிப்பது. ஆகவே, மரணம் துன்பமல்ல, அதைக் கொண்டாடுவோம்’ என்பது உலகெங்கிலும் வாழும்/வாழ்ந்த, பழங்குடிகளின் நம்பிக்கை. மரணத்தைக் கொண்டாடிய அந்த மக்கள், வந்தேறிகள் வருகைக்குப் பின்னர்தான், மரணத்தைக் கண்டு அஞ்சினார்கள்.

அதுவரை அவர்கள் சந்தித்த மரணங்கள், இயற்கை நிகழ்வுகள். வந்தேறிகளோ, தமது துப்பாக்கிகளால் மரணத்தைச் செயற்கையாக வரவழைத்தனர். வேட்டையில் இறந்தால் – வீரம், போரில் கொல்லப்பட்டால் - தர்மம். முதுமையில் இறந்தால் – இயற்கை. ஆனால், காரணமே அறியாத வகையில், துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடிகள், மரணத்தைக் கண்டு அஞ்சத் துவங்கினர். வந்து இறங்கியவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? என்ன பகை? ஏதும் புரியவில்லை. 

அவர்கள் வணங்கிய பெருமரங்கள், ஐரோப்பிய சீமான்களின் உணவு மேசையாக மாற்றப்பட்டன. அவர்களது மலைகள், பெயர்த்தெடுக்கப்பட்டு, ஐரோப்பியக் கழிவறைகளில் பதிக்கப்பட்டன. இயற்கையின் பிள்ளைகள், ’மலை’ என வணங்கிய அனைத்தும் அறிவின் பிள்ளைகள் கண்களுக்கு ’குவாரி’களாகத் தெரிந்தன.

தொழிற்சாலையில் உற்பத்தி ஆகாத எதுவும், நாகரிகமற்றது, என அறிவு பூதம் அறிவிப்பு செய்தது. வேப்பங்குச்சியும், ஆலங்குச்சியும் கொண்டு பல் துலக்குபவர்கள், ’நாகரிகமற்றவர்கள்’. நச்சு வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பசைகளால் பல் துலக்குவோர் ‘நாகரிகமனவர்கள்’ என்ற வகைப்பாட்டு உலகம் முழுவதும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

வானத்தைப் பார்த்து மழைக் குறி சொல்லும் கிராமத்துப் பூசாரிகள் கேலி செய்யப்பட்டனர். ’நாளை காலை முதல் மாலை வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். மிகச் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என பொத்தாம் பொதுவான அறிக்கைகள் பகட்டுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, கோள்களின் எண்ணிக்கையையும், இயல்புகளையும், விண்மீன்களின் தன்மைகளையும், நகர்வுகளையும் துல்லியமாக அறிவித்த இனத்தின் வாரிசுகள் ’மூடநம்பிக்கையாளர்கள்’ என அறிவிக்கப்பட்டனர். 

ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம், அணுக்களின் சேர்க்கையே உலகம், பூமி உருண்டை வடிவமானது, சூரியனை 360 பாகையில் கோள்கள் சுற்றி வருகின்றன என்றெல்லாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர்கள் ‘பிற்போக்குவாதிகள்’ என அவமானப்படுத்தப்பட்டார்கள். 
இதே தகவல்களை 300 ஆண்டுகளுக்கு முன் உரைத்தவர்கள் ‘விஞ்ஞானிகள்’ என கொண்டாடப்பட்டனர். 

ஆக, எதையும் அறிவிக்கும் அதிகாரம் இயற்கையின் மைந்தர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, அறிவின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது. கேள்வி கேட்பவர்கள் சுடப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள். 

உலகின் தொன்மையான பழங்குடிகளில் பெரும்பகுதியினர் துடைத்தழிக்கப்பட்டார்கள். மீதமுள்ளோரும் ’இயற்கைக்கும் தமக்குமான உறவை அறுத்துக் கொண்டுள்ளனர். எவரேனும் தமக்கும் இயற்கைக்குமான உறவை உறுதி செய்ய முனைந்தால், அவர்கள் இப்போது, தீவிரவாதிகள் எனவும் பயங்கரவாதிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இயற்கையை வணங்குதல் மூடநம்பிக்கை. இயற்கையின் பேராற்றலை நிராகரிக்கும் அறிவுச் சமூகத்தின் தத்துவவாதிகளை வணங்குவது ‘பகுத்தறிவு’ என்ற எழுதப்படா சட்டம் நடைமுறைக்கு வந்தது.

பல்லாண்டுகளைக் கடந்து நிற்கும் மரத்தை வணங்கும் எளியோர் ‘அறிவற்றோர்’. ’மனிதரை விஞ்சிய ஆற்றலே இல்லை’ என்று உரைத்துவிட்டு, எப்போதோ இறந்துபோன, மனிதர்களின் சிலைகளுக்கு மாலையிடுவோரும் ஆண்டு தோறும் வணங்குவோரும் ’அறிவாளர்கள்’.

ஒருகாலத்தில் வாழ்ந்து, ஊருக்காகப் போராடி இறந்த கிராமத்து முன்னோர்களை அதே ஊர்க்காரர்கள் வணங்கினால், மூடத்தனம். ஒருபோதும் கண்டிராத தொலைதூர நாடுகளில் பிறந்து இறந்த தலைவர்களை, அதே கிராமத்தில் சிலை நட்டு வணங்கினால், அது ’லட்சியவாதம்’.

ஆக, இயற்கைக்கு நெருக்கமாக எவரேனும் வாழ்ந்தால், அவர்களை இழிவுபடுத்துவதும், ’அறிவின் அடிமைகளாக வாழ்ந்தால் அவர்களை அங்கீகரிப்பதும் சமகால சமூக அதிகார மையங்களின் கோட்பாடு.

இயற்கையின் பிள்ளைகளாக மனிதர்கள் தம்மை உணர்ந்த வரையில், அழிவைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை. அவ்வப்போது நேர்ந்த இயற்கைப் பேரிடர்களுக்குப் பின்னரும் மனித குலம் நீடித்துப் பிழைத்து, நாகரிகம் வளர்த்து, கட்டிடக் கலை கண்டு, மருத்துவம் அறிந்து, வானியல் உரைத்து, மொழியியல் கண்டு, வேளாண்மை பெருக்கி, காட்டு விலங்குகளைக் கால்நடைகளாக்கி, இன்னும் எண்ணற்ற அற்புதங்களைச் செய்து, இப்புவியில் மனிதர்களுக்கான வாழ்வுலகை நமக்கு வழங்கியுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக இறுகத் தழுவிக் கிடந்த மனிதகுலத்தையும் இயற்கையையும் வெறும் 300 ஆண்டுகளில் ’அறிவுப் புரட்சி’ பிரித்தேவிட்டது. 
ஆழிப் பேரலைகள் பொங்கும்போதும், நிலம் நடுங்கும்போதும் ’இயற்கை அன்னையே காப்பாற்று’ என வேண்டுதல் ‘அறிவற்ற’ செயல். ஆகவே, மீண்டும் கடல் பொங்கினால், ‘அமெரிக்காவே காப்பாற்று, பிரான்சே காப்பாற்று, ஜப்பானே காப்பாற்று’ என வேண்டலாம். 

‘இயற்கை என்பது மனிதர்களை விட மேலானது இல்லை’ எனக் கண்டுபிடித்த ‘மேதைகள்’ பெயர்களைச் சொல்லி ‘காப்பாற்றுங்கள் மேதைகளே’ என வேண்டலாம். அமெரிக்காவும் இன்னபிற நாடுகளும் மேற்படி மேதைகளும் பெரும் ஆற்றல் மிக்கவர்கள்தான். 

ஏறத்தாழ 15,000 ஆண்டுகளாக மனித குலம் உணர்ந்து வாழ்ந்த வாழ்வியலை, வெறும் மூன்று நூற்றாண்டுகளில் புரட்டிப் போட்ட வல்லவர்கள் அல்லவா அவர்கள்!

ஆனால், நண்பர்களே, நானறிந்த வரையில், எந்த அழிவு நேர்ந்தாலும் மரங்களும் மண்புழுக்களும் அஞ்சப்போவதில்லை. ஏன் தெரியுமா?

அவைகளுக்குத்தான் அறிவே இல்லையே!

(இணைப்பு ஒளிப்படம்: ஒளிப்பதிவாளர் பால் கிரிகோரி - Paul Gregory– சத்தியமங்கலம், திம்பம் மலையிலிருந்து)

Tuesday, December 18, 2012

சாமிக்கண்ணு வின்சன்ட் என்னும் சாகசக்காரரின் கதை!



இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட் எனும் தமிழரை, நினைவூட்டும் கட்டுரையை, THE INIDAN EXPRESS நாளிதழில் மு.நியாஸ் அகமது எழுதியுள்ளார். பேசாமொழி எனும் எனது ஆவணப்படத்தில் திரு. சாமிக்கண்ணு வின்செண்ட் பற்றி சற்றே விரிவாக பதிவு செய்திருந்தேன். இத்தருணத்தில், திரு.சாமிக்கண்ணுவை நினைவு கூரும் நியாஸ் அகமதுவுக்கும் INDIAN EXPRESSக்கும் வாழ்த்துகள்!

சாமிக்கண்ணு வின்சன்ட் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா எனத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெயருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் சாகசங்களை, சாதனைகளை, இழப்புகளை, தாங்க இயலா துயரங்களை, ஒரு மாபெரும் வரலாற்றை நீங்கள் அனைவரும் உணர்ந்து அம்மனிதரின் வாழ்க்கையை உலகிற்கு அறிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதத் துவங்குகிறேன்.

திருச்சி பொன்மலை ரயில் நிலையம். 1905 ஆம் ஆண்டு. கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட சாமிக்கண்ணு எனும் 22 வயது இளைஞர் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றுகிறார். வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களுமே மிகுதியாக வந்து போகும் இடம் ரயில் நிலையம். சாமிக்கண்ணு மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடன் எத்தனை பேர் பணிபுரிந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சாமிக்கண்ணுவை மட்டும் நமக்குத் தெரிகிறது, 107 ஆண்டுகளுக்குப் பிறகும்!

சாமிக்கண்ணு எடுத்த ஒரு முடிவு, தென்னிந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்டது. இன்று ஜெயலலிதா முதல்வராக இருப்பதற்கும் திரையுலகம் கோடிகளில் புழங்குவதற்கும் பாதை போட்டுக் கொடுத்தவர் சாமிக்கண்ணு.

சினிமா எனும் ‘கலை’ பிரான்சைச் சேர்ந்த லூமியே சகோதரர்களால் உலகிற்கு அறிவிக்கப்பட்ட ஆண்டு 1985. இங்கே ‘கலை’ எனும் சொல் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்காலத்தில், சலனப்படங்களை (motion pictures) புகைப்படங்களின் (photographs) மேம்பட்ட வடிவமாகத்தான் பெரும்பாலனோர் பார்த்தார்கள். அது ஒரு பெரும் தொழிலாக மாறும் என்றோ அதுதான் உலகையே ஆட்டி வைக்கப்போகிறது என்றோ பெரும்பாலானோர் கற்பனையும் செய்யவில்லை. மிகச் சிலர் சினிமாவை ‘கலையாகவும் தொழிலாகவும்’ அறிந்து கொண்டனர். அந்த மிகச் சிலரில் சாமிக்கண்ணு வின்ன்சன்ட் ஒருவர்.

அக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவை அனைத்தும் துண்டுப்படங்கள். அதாவது மிகச் சில நிமிடங்களே ஓடக் கூடியவை. 3 நிமிடத்திற்கு ஓடும் படம், 7 நிமிடம் ஓடும் படம் என வகைகள். அப் படங்கள் அனைத்துமே ஒலி அற்றவை அல்லது மௌனப்படங்கள் (silent movies). ஊமைப்படங்கள் என்று பொதுவழக்கில் அழைக்கப்பட்டவை.

படங்களின் நீளமும் குறைவு, ஒலியும் இல்லை. அவை பெரும்பாலும் ஆவணப்படங்களின் மூல வடிவங்களாகவே இருந்தன. Leaving the factory என்றொரு பிரபலாமன படம். அதில் என்ன ஓடும்? ஒரு தொழிற்சாலையிலிருந்து பணி முடித்த தொழிலாளர்கள் வெளியேறும் காட்சி இருக்கும். அப்போதைய படப்பதிவுத் தொழில்நுட்பத்தின்படி, வினாடிக்கு பொதுவாக 14 சட்டகங்கள் (frames) ஓடும். அதாவது, பாத்திரங்கள் குடுகுடுவென நடப்பார்கள், வெடுக்கெனப் பேசுவார்கள், சீமாட்டி நாயைப் பிடித்து மின்னல் வேகத்தில் நடப்பாள். இயல்பான வேகத்தைவிட ஏறத்தாழ 90% அதிகமாக இருக்கும். இப்போது நாம் காணும் இயல்பான வேகம் 24 சட்டகங்களில் பதிவு செய்யப்படுகிறது.

இவ்வளவு குறைபாடுகளுடன் சினிமா இருந்த காலம் அது.

இதைக் காட்டுவதும் எளிதல்ல. அதற்கென ப்ரொஜடர் வேண்டும். ப்ரொஜடரை இயக்குவதற்கென ஏராளமான தொழில்நுட்பங்கள் வேண்டும். திரை கட்ட வேண்டும், இருட்டில்தான் படம் ஓட்ட முடியும், அதற்கென கொட்டகைகள் அமைக்க வேண்டும், மக்களுக்குப் புகைப்படங்களே முறையாக அறிமுகம் ஆகாத காலம் அது. அவர்களுக்கு சலனப்படங்களைப் பற்றி எடுத்துக் கூறி, கொட்டகைக்கு வரவழைக்க வேண்டும். அப்படி வரும் மக்களை மன நிறைவுடன் படம் பார்க்க வைக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களும் சில நிமிடங்களில் ஓடி நின்று போகும், சத்தமே வராது, கதாபாத்திரங்கள் அனைவரும் வழக்கத்தை விட வேகமாக ஓடுவார்கள், சிரிப்பார்கள். படத்தில் வரும் முகங்களும் பெரும்பாலும் வெள்ளைக்கார முகங்கள்.

பொன்மலை ரயில் நிலையத்தில் வேலைபார்த்த சாமிக்கண்ணு எப்படித்தான் இவ்வளவு சிக்கல்களையும் கடந்து சிந்தித்தாரோ புரியவில்லை.

அவரது நிலையத்திற்கு ஒரு ரயில் வந்து நின்றது. டூபான் (Du Pont) என்ற பிரெஞ்சுக்காரர் வந்திறங்கினார். அக்காலத்தில் உலக சந்தையில் பிரபலமாக இருந்த பதே (pathe) எனும் ப்ரொஜக்டர் நிறுவனத்தின் அதிகாரி அவர். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று துண்டுப்படங்களைத் திரையிட்டுக் காட்டி, பணம் ஈட்டுவது அவர் பணி. இவ்வாறானவர்களை பயணச் சினிமாக்காரர்கள் என்பார்கள். இவர்கள் டூர் அடித்துக் கொண்டே இருப்பதால் டூரிங் தியேட்டர் என்ற பெயர் பின்னாளில் உருவானது. இலங்கையில் பயணத்தை முடித்துவிட்டு வந்த டூபான், களைத்திருந்தார். உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். சாமிக்கண்ணு வின்சன்ட் டூபானுக்கு சில உதவிகள் செய்தார். இருவரும் நட்பு பாராட்டினர். டூபான், தான் வீடு திரும்ப விரும்புவதாகவும் தான் சுமந்து திரியும் உபகரணங்களை யாரிடமாவது விற்றுவிட்டால் நல்லது என்றும் சாமிக்கண்ணுவிடம் கூறினார்.

அந்த உரையாடலில் விதைக்கப்பட்டது, தென்னிந்திய சினிமாத் தொழிற்சாலையின் வித்து.

2 ஆயிரம் ரூபாய் விலை சொன்னார் டூபான். சாமிக்கண்ணு உறவினர்களிடம் திரட்டி அத் தொகையை டூபானிடம் கொடுத்து, ப்ரொஜக்டர், சில துண்டுப்படங்கள், பிற சாதனன்ங்கள் அனைத்தையும் வாங்கினார்.

அக்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் எவ்வளவு பெரும் தொகை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எல்லாவிதங்களிலும் சாத்தியம் குறைவான ஒரு தொழிலில், இவ்வளவு பெரிய முதலீடு. ரயில்வே வேலையையும் உதறிவிட்டார். கடனோ பெரும் தொகை. தொழிலோ புத்தம் புதிது.

திருச்சிப் பகுதியில் சாமிக்கண்ணு குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் பாவேந்தன் கூறும் சம்பவங்களில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்பகுதி முதியவர்களிடம் பேசியபோதும் ’நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தபோது, ஒரு ஆள் ஊருக்கு வந்தாரு. பெரிய திரையக் கட்டி அதுல வெளிச்சம் போட்டாரு. அந்தத் திரையில வந்ததைப் பார்த்து பேய்ங்கன்னு நினைச்சு நாங்க அலறி ஓடிட்டோம்’ என்றார்களாம்.

இதே போன்ற அனுபவங்கள் அக்காலத்தில் ஏராளம். Arrival of the train என்றொரு துண்டுப்படம். ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நிற்கும் காட்சி மட்டும் அதில் உண்டு.

திரையில் இக்காட்சி வந்ததும், ரயில் தங்கள் மீது மோதப் போகிறது என அஞ்சி, அலறி அடித்துக் கொண்டு மக்கள் கூடாரங்களைப் பிய்த்தெறிந்துவிட்டு ஓடினார்கள்.

எனது ‘பேசாமொழி’ ஆவணப்படத்தில் இக்காட்சியைப் படமாக்கியுள்ளேன்.

புகைப்படம் எடுத்துக்கொண்டாலே ஆயுள் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை இப்போது சிலரிடம் உள்ளதை நாம் அறிவோம். அக்காலத்தில், திரையில் படத்தைப் பார்த்தாலே ஆயுள் குறையும், பார்வை மங்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. ஆகவே, சினிமா காட்டுபவர்களைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.மக்கள் இவ்வாறுதான் சினிமாவைப் பார்த்தார்கள்.

இவர்களை நம்பித்தான், இந்தச் சூழலில்தான் சாமிக்கண்ணு அவ்வளவு பெரிய முடிவை எடுத்தார். சூழலைக் கண்டு அஞ்சுபவர்கள் சாமானியர்கள், சூழலை மாற்ற முடிவெடுப்பவர்கள், சாகசக்காரர்கள். சாமிக்கண்ணு சாகசக்காரர்!

ஒரு மாட்டு வண்டி, சில உதவியாளர்கள், வண்டியில் ப்ரொஜக்டர் மற்றும் சாதனங்கள் –இதுதான் பயணத் திரையரங்கம். சென்னை எஸ்ப்ளனேட் பகுதியில், முதன் முறையாக கொட்டகைத் திரையரங்கை அமைத்தார் வின்சன்ட். கொட்டகைக்குள் படம் காட்டலாம் எனச் சிந்தித்ததே சாதனைதான்.

ஏனெனில், சினிமா என்பது ஏற்கெனவே சொன்னபடி ‘கலை’யாக மட்டும் பார்க்கப்பட்ட காலம் அது. வார்விக்மேஜர் என்னும் பிரிட்டன்காரர், சென்னையில் 1897ஆம் ஆண்டு முதல் முதலாகத் திரைப்படக் கலையை அறிமுகம் செய்தார். அவர் படம் ஓட்டிய இடம் எலக்ட்ரிக் தியேட்டர் எனும் திரையரங்கம். 

அது செறிவாகக் கட்டப்பட்ட திரையரங்கம். மின்சாரத்தால் இயங்கும் அரங்கம். அதில் படம் பார்த்தவர்கள் எல்லோருமே துரைமார்கள்தான். வெள்ளையரும் பிற பணக்காரர்களுக்குமானதாகத்தான் சினிமா இருந்தது. அவர்களுக்குத்தான் அது புரியும் என்று நம்பப்பட்டது. அவர்கள் வந்து பார்க்குமளவுக்கான வசதியான இடத்தில்தான் திரையிட முடியும் என்றும் நம்பப்பட்டது. 

மின்சாரமே அக்காலத்தில் ஒரு ஆடம்பரம் அல்லவா! அப்படியானால் சினிமா…எவ்வளவு பெரியது!

சாமிக்கண்ணு, எஸ்ப்ளனேட்டில் டெண்ட் அடித்துப் படம் ஓட்டினார். அந்தக் கொட்டகைக்கு யார் வருவார்கள் என நமக்குத் தெரியும். சினிமாவை மேட்டிலிருந்து பள்ளத்துக்குக் கொண்டு சென்றார். எளிய மக்களும் சினிமாவை நேசிப்பார்கள் என அவ்வளவு மோசமான காலத்திலும் அவர் நம்பினார். 1908 ஆம் ஆண்டு வரை, பெரும்பாடுகள். கடன் மேல் கடன். நீண்ட காலம் வெளியூர்களில் தங்கி இருந்தபோது, மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. வின்சன்ட் ஊர் திரும்பிய சில நாட்களில் மனைவி இறந்தே போனார்.

சாமிக்கண்ணு, சில ஆண்டுகளில் வருவாய் ஈட்டத் தொடங்கினார். மக்கள் சினிமாவைப் புரிந்து கொண்டனர். இந்த நிலையைச் சாதிக்க சாமிக்கண்ணு, செய்த வித்தைகளுக்கு அளவே இல்லை. அவருக்கு மந்திர வித்தைகள் தொடக்கத்திலேயே தெரியுமா அல்லது சினிமாவுக்காகக் கற்றுக் கொண்டாரா எனத் தெரியவில்லை. ஆனால், கொட்டகைகளில் அவர் மக்களைக் கவர்வதற்காக, மந்திரவித்தைக் காட்சிகள் செய்து காட்டினார்.

ஒரு படம் முடிந்து அடுத்த படத்தை ப்ரொஜக்டரில் இணைக்கும்போது, சிறிது நேரம் ஆகும். ப்ரொஜக்டரில் சூடு தணிய வேண்டும். அந்த இடைவெளியில் யாரும் கூச்சலிடக் கூடாது. எழுந்து சென்றுவிடக் கூடாது. சாமிக்கண்ணு எனும் அந்த இளைஞரால் அந்த இடைவெளியை உற்சாகமாக நிரப்ப முடிந்தது. சிறந்த மேஜிசியனாக அவர் இருந்தார். அதனாலேயே முன்னோடி சினிமாக்காரராகவும் இருந்தார். சினிமாவே ஒரு மந்திர வித்தைதானே!

கிறித்தவ மத விதிகள் சாமிக்கண்ணுவைக் கண்டித்தன. கோவையின் பிஷப், சாமிக்கண்ணுவை, ‘கிறித்துவுக்கு எதிரான சாத்தானின் வேலைகளைப் பார்ப்பதாகக்’ கூறி தேவாலயத்தை விட்டு விலக்கினார். பெரும்பாடுபட்டு பிஷப்பிடம் மந்திர வித்தைகள் எல்லாமே தந்திரங்கள்தான் என விளக்கி, மீண்டும் தேவாலயத்தில் இணைந்தார் வின்சன்ட்.

இவ்வாறான துன்பங்களுக்கிடையில், சினிமாவை ஒரு தொழிலாக மாற்றிக் காட்டினார் சாமிக்கண்ணு.

நண்பர்களே, நாம் குளிரூட்டப்பட்ட அரங்குகளுக்குள் அமர்ந்து சினிமா பார்ப்பதற்கான மூலகாரணங்களில் சாமிக்கண்ணு முதன்மையானவர். 

சில ஆண்டுகளில், தென்னிந்தியா முழுவதும் ஏறத்தாழ 200 பயணச் சினிமா அரங்குகள் சாமிக்கண்ணு வின்சன்டால் நிறுவப்பட்டன. பதே ப்ரொஜக்டர் நிறுவனத்தின் முதல் தென்னிந்திய விற்பனையாளர் (dealer) சாமிக்கண்ணு வின்சன்ட்தான்.

எந்த ப்ரொஜக்டரை 2 ஆயிரம் ரூபாய்க்குக் கடன் வாங்கி கொள்முதல் செய்தாரோ, அதே ப்ரொஜக்டர்களை தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்யும் உயரத்தை மேலே கண்ட இன்னல்களுக்கு மத்தியில் அடைந்தார் அவர்.

தமிழகத்தின் முதல் திரையரங்கம் கெயிட்டி சென்னையில் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டாம் அரங்கத்தைக் கோவையில் வின்சன்ட்தான் 1914 ஆம் ஆண்டு கட்டினார். பெயர் வெரைட்டி ஹால். இப்போதும் அந்த அரங்கம் இயங்குகிறது. பெயர் மட்டும் டிலைட் தியேட்டர் என மாற்றப்பட்டுவிட்டது, உரிமையாளர்கள் மாறியதால்.

ஆனாலும் அந்த அரங்கம் இருக்கும் வீதியின் பெயர் இப்போதும் கோவையில் வெரைட்டி ஹால் வீதிதான்.

அந்த திரையரங்கத்துக்குக் கடந்த 2005 ஆம் ஆண்டு என் ‘பேசாமொழி’ படப்பிடிப்புக்காகச் சென்றேன். அரங்கத்துக்கு எதிரே சிகையலங்காரக்கடை வைத்திருக்கும் முதியவர்களிடம் பேசி, சாமிக்கண்ணு பற்றிக் கேட்டேன். அவர்கள் சாமிக்கண்ணுவை நேரில் கண்டவர்கள். டிலைட் அரங்கத்தின் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.

வின்சன்ட் வாழ்ந்த காலத்தில் அவரது மாளிகை வெரைட்டி ஹாலுக்குப் பக்கத்தில் இருந்தது. அது உண்மையில் அரண்மனைதான். அதன் மிச்சங்கள் இப்போதும் தெரிகின்றன. வின்சன்ட் குடும்பத்தினர் தங்கள் மாளிகையிலிருந்து படம் பார்க்க அரங்கத்துக்கு வருவதற்கென பிரத்தியேகமான வாயில், அழகிய மர வேலைப்பாடுகளுடன் இருந்திருக்கிறது. அவர் பேரப்பிள்ளைகளுக்காகக் கட்டிய மீன் தொட்டி, அவர் ரசித்து ரசித்து வரைய செய்த ஓவியங்கள் என நிறைய காணக் கிடைத்தன.

வின்சன்ட் 1942 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

1938 ஆம் ஆண்டு முதலே, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாராம். அவரது மாளிகையின் நீண்ட காரிடாரில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏதோ ஒரு மன உளைச்சல் அவரை ஆட்டிப் படைத்ததாக அவரது பேரன் வின்பிரட் வின்சன்ட் கூறுகிறார். 

சாமிக்கண்ணு வின்சன்டைப் பற்றி நான் முதன் முதலில் படித்தது, ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகள் வழியாகத்தான். அவரே சாமிக்கண்ணு வின்சன்ட் உட்பட பல முன்னோடிகளுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்.

பின்னர் பேராசிரியர் பாவேந்தனைச் சந்தித்தேன். அவரும் பல்வேறு தகவல்களை வழங்கினார். யூ டிவியின் தென்னிந்தியத் தலைவர் தனஞ்சயன் தமது நூலில் வின்சன்ட் குறித்து எழுதியுள்ளார்.

இவ்வாறான சில பணிகள் மட்டும் நடக்கின்றன.

யாரால் இந்த சினிமா ஒரு தொழிலாக மாற்றப்பட்டதோ, யாரால் சினிமா சாமானியர்களைச் சென்றடைந்ததோ, யாரால் சினிமாவில் கோடிகள் கொழிக்கும் என நிறுவப்பட்டதோ, யாருடைய வாழ்வின் அர்ப்பணிப்பு கடந்த 100 ஆண்டுகாலமாகப் பலருக்கு வாழ்க்கையை, பதவிகளை தானம் செய்ததோ, அவரைப் பற்றி யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது எனக் கேட்டுப் பாருங்கள்.

(இக்கட்டுரை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் நாள் ம.செந்தமிழன் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிந்தார். சூழல் கருதி மீண்டும் பதியப்படுகிறது)