Tuesday, December 25, 2012

கிறிஸ்துமஸ்: ஒரு நாயகனின் பிறந்த நாள்!





இயேசு, என்ற பெயர் சிறுவயதில் எனக்கு உயரிய மரியாதையும் கடவுள் தன்மையும் கொண்ட மனிதர் என்ற உணர்வை உருவாக்கியிருந்தது. நான் படித்த பள்ளிகள் கிறித்தவ அமைப்பினர் நடத்துபவை என்பது முக்கியக் காரணம். 

எங்கள் அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியி தேவாலயத்தில், இயேசு ரத்தம் வழியப் படுத்திருப்பது போன்ற சிலை ஒன்று உண்டு. அந்தச் சிலை கம்பி வேலியால் மூடப்பட்டிருக்கும். நாம் நமது தேவைகளை துண்டுச் சீட்டில் எழுதி, அந்தக் கம்பிக்குள் திணித்துவிட்டால், இயேசு அவற்றை நிறைவேற்றுவார் எனச் சொல்லப்பட்டது.

நான் சில வேண்டுதல்களை எழுதி அங்கே வைத்ததுண்டு. அனைத்துமே நிறைவேறினவா என நினைவில்லை. ஆனால், உடலில் ரத்தம் வழியும் நிலையிலும், அடுத்தவர் வேண்டுதல்களைக் கேட்கும், கடவுள் இயேசு மட்டும்தான்.

இயேசுவைப் பற்றிய வரலாற்றுத் தகவகளைப் பின்னாட்களில் அறிந்த போது, அவர் என் மனம் கவர்ந்த நாயகன் ஆகியுள்ளார். இப்போதும், அவரைச் சிலுவையில் அறைந்ததை என்னால் ஏற்க இயலவில்லை. 

‘உள்ளதை ஆம் என்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்லுங்கள்’ என்றவர் அவர். 
சீசர் மன்னனுடைய உருவம் ஒரு பக்கமும், கடவுளின் உருவம் மறு பக்கமும் பொறிக்கப்பட்ட நாணயம் அக்காலத்தில் வழக்கில் இருந்தது. இயேசுவை அரச விரோதியாக்கத் துடித்த சிலர், ‘இந்த நாணயத்தில் எந்தப் பங்கு, அரசருக்கு உரியது? எந்தப் பங்கு கடவுளுக்கு உரியது?’ எனக் கேட்டனர். இயேசு புன்னகையுடன், ‘சீசருடையதை சீசருக்கும் கர்த்தருடையதைக் கர்த்தருக்கும் கொடுங்கள்’ என்றார். 

வார்த்தை விளையாட்டல்ல இது. அக்காலப் பொருளாதாரத்தில் கடவுளின் பேரால் நடத்தப்பட்ட கொள்ளையைக் குறித்த வசனமாக இது எனக்குப்படுகிறது. கடவுளும் சீசரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆக்கப்பட்ட சூழலைக் குறிக்கிறது இவ்வசனம் என எண்ணுகிறேன். 

ஒளியானவரை நோக்கி தவமிருந்த இயேசு, அந்த ஒளியானவரை உணர்ந்திருந்தார். தமக்கு மெய்யறிவு வழங்கியவர் ஒளியானவர்தான் என அறிவித்தார். இயேசுவைக் கைது செய்யப் படையினர் வரும்போது கூட, வனத்தில் தவம் செய்தவாறு, வானை நோக்கி, ‘இந்தச் சதிவலையிலிருந்து என்னைக் காப்பாய் என் தந்தையே! என்னைக் கைவிடாதே’ என மன்றாடிக் கொண்டிருந்தார் அவர்.

அப்போதும், அவர் மனிதர்களை நம்பவில்லை, தமது ஒளியான தந்தையையே நம்பினார். சிலுவையில் அறையப்பட்டபோதும், கிழிந்த முகத்தை மேலே உயர்த்தி, ‘தந்தையே என்னைக் கைவிடாதே’ என வேண்டினார். 

யூதர்களின் மனிதகுல விரோதச் செயல்களை மிக இளம் வயதிலேயே எதிர்த்து நின்ற போராளி இயேசு. ‘தேவன் உறைவிடம், கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது’ என அவர்தான், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தேவாலயங்களைப் பார்த்துச் சொன்னார். இந்தத் துணிவு, இந்தப் பார்வை, இந்தத் தெளிவு அவருக்கு ‘ஒளியானவரால்’ வழங்கப்பட்டது.

நோயாளிகளை இயேசு எந்த மருந்தும் இல்லாமலே குணப்படுத்தினார். இது மிகையான கற்பனை என எனக்குத் தோன்றியதுண்டு. ஆனால், தற்போது, எனது நண்பர்கள் சிலர் தொடுசிகிச்சை எனும் முறையில், எந்த மருந்தும் இல்லாமலே, நோய் தீர்ப்பதைப் பார்க்கிறேன். அவர்களைக் கேட்கும்போது, ‘தொடுவது ஒரு தொழில் நுட்பம் மட்டுமே. அதற்கு மேல், நோயாளிகளுக்காக நாங்கள் மனதளவில் இயற்கையை வேண்டுகிறோம். அந்த வேண்டுதலுக்குப் பலன் கிடைக்கிறது’ என்கிறார்கள்.

இயேசுவும் இதைத்தான் மிக விரிவாகப் பேசியுள்ளார். ‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்’ என்று அவர் கூறியது இப்பொருளில்தான். இயற்கையை வேண்டினால், கிடைக்கும் என்பதே இதன் சாரம் என நான் உணர்கிறேன். அடிப்படையில் இயேசு ஓர் இயற்கையியலாளர்.

’உங்கள் தந்தையிடம் நேரடியாகக் கேளுங்கள். அவர் செவிமடுப்பார்’ என்பதே இயேசு மக்களுக்கு உரைத்த அடிப்படைச் சேதி.

பொதுவாகவே, எளிய மனிதர்கள் சுயேச்சையாக, நிறுவனங்களைச் சாராமல், நேரடியாக இயற்கையுடன் /கடவுளுடன் உறவுகொள்வதை அதிகார நிறுவனங்கள் விரும்புவதில்லை. மனிதர்கள், தம்மிடம் மனுப்போட வேண்டும், தம்மால் சுரண்டப்பட வேண்டும் என்பதே அவற்றின் கொள்கை. ஆகவே, இயேசுவை யூதர்கள் துன்புறுத்தினர். 

இப்போது, அதிகார நிறுவனங்கள் இயேசுவின் பேராலேயே இலாபகரமாக உலகெங்கும் இயங்குகின்றன. 

அன்பின் அதிகபட்ச மனித வடிவாக வாழ்ந்த இயேசுவின் பேரால், பெரும் போர்கள் நடத்தப்படுகின்றன. ஊழல் கூடாரங்களின் தலைமையகங்களாக பல தேவாலயங்களும் திருச்சபைகளும் மாறிவிட்டன. அப்பாவி மக்களுக்குச் சலுகைகள் வழங்கி அவர்களை மதம் மாற்றும் கயமையைச் சில அமைப்புகள் இயேசுவின் பேரால் செய்துவருகின்றன.

‘இயேசு சிலுவையில் சாகவில்லை. அவர் இந்தியாவில் கற்றுக் கொண்ட சித்தர்களின் ஓக முறைகளைப் பயன்படுத்தி, தப்பிவிட்டார். காஷ்மீர் பகுதியில் தன் இறுதி நாட்களைக் கழித்தார்’ என்று ஓஷோ சொல்வார். இதற்கான பல சான்றுகளயும் அவர் முன் வைத்துள்ளார்.

இது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆழ்மனதின் ஏக்கமும் விருப்பமும். ஆனால், உண்மையில் அவரைக் கொலை செய்வதென்பது, அவர் பேரால் ஊழல் செய்வதுதானே தவிர, சிலுவையில் அறைவதல்ல.

வெறும் பிறப்பால் மட்டுமல்லாமல், உண்மையிலேயே இயேசுவைப் புரிந்துகொண்டு வாழும் நண்பர்களுக்கு எனது கிறித்து பிறந்த நாள் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment