Friday, July 16, 2010

நமது மரணம் குறித்து

பொழுதுபுலர்ந்துவிட்டது
கொலை செய்வதற்கு யாரும் கிடைக்கவில்லை
நாளொன்றுக்கு
நான்கு உயிர்களையாவது
பறிப்பது என் வழக்கம்.

பகலில் என்னால் கொல்லப்பட்டவர்கள்
இரவுகளில்
மறுபிறப்பு அடைந்து
மீண்டும் கொல்லும்படி
காலையில் என்னிடம் வருகிறார்கள்.


நான் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன
இரவுகளில் அடி வயிற்றில்
இரு கைகளையும் பொத்தி வைத்தபடி
படுத்திருப்பேன்.
பார்ப்பவர்கள்
அதை ஆழ்ந்த உறக்கம் என்பதுண்டு
இறந்தவன் உறங்குவானா?

எனது கொலைகள் எளிமையானவை
உலகமயத்தில் தொடங்கினால்
உடனடி மரணம்.

மரபுகளைத் தொட்டால்
மயக்கம் பின் மரணம்.

இனம் மொழி போர் ஆகியவை
விக்ஷம் தடவிய சிறு முட்களை
உங்கள் முதுகில் குத்துவது போல்
வலி கொடுத்துக் கொல்லும்.

நான் இவை அனைத்தாலும் கொல்லப்பட்டேன்.

இப்போதெல்லாம்
ஏதாவது ஒன்றிலேயே சாவது சகஜமாகிவிட்டது.

என்னால் கொல்லப்படுபவர்கள்
தமது மரணம் குறித்துப் பெருமையடைகின்றனர்.

முன்பெல்லாம்
என் போன்றோர் குறைவு
கடந்த மே மாதத்திற்குப் பிறகு
கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சாக விரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமே.

என்னால் கொல்லப்படுவதை
விரும்பினால்
என் வீடு தேடி வரலாம்.

வீட்டில் சாவது சலிப்பூட்டினால்
தேநீர்க் கடை ஆற்றங்கரை
ஏதேனும் ஒரு மலை
கடற்கரை எனப் போகலாம்.

தேநீர் உள்ளிறங்கும் சூட்டை
மலையின் குளிர்ச்சியை
ஆற்றங்கரையின் அமைதியை
கடற்கரையின் ஓசையை
உணராமல்
நான் முன் கூறிய
ஏதேனுமொரு தலைப்பு குறித்து
விவாதித்து மரணத்தை விழுங்கலாம்.

வாருங்கள்
உங்களுக்குப் பிடிக்கும்படி
உங்களைக் கொல்வதில்
எனக்கு
நிரம்ப அனுபவம் உண்டு.

Published in : http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_16.html

No comments:

Post a Comment