Friday, December 7, 2012

ஆளுமைகளும் காமக் கதைகளும்! - எம்.எஃப்.உசேன் வாழ்க்கை வரலாற்று நூல் குறித்து





ஓவியர் எம்.எப்.உசேன், வாழ்க்கை வரலாறு தமிழில் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஓவியர் புகழேந்தி இந்நூலை எழுதியுள்ளார். 

‘எம்.எஃப்.உசேன், இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி’ எனும் பெயரிலான அந்நூல் வரும் 29 ஆம் நாள் சென்னையில் வெளியிடப்படவுள்ளது.

என் பதின் பருவத்தில், திரு. உசேன் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம், அவர் பெண்களை கவர்ச்சிகரமாக வரைவார் என்பதுதான். திரு. உசேனுக்கும் நடிகைகளுக்குமான உறவைப் பற்றி, கல்லூரிக் காலத்தில் கேள்விப்பட்டேன். ’ஒருவேளை ஓவியராக இருப்பது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வசதியாக இருக்கும் போல’ என எண்ணிக் கொள்வேன். 

மேலும், ’அழகிய பெண்களுக்கு ஓவியம் பிடிக்கும் அதனால், ஓவியர்களின் மேல் விழுவார்கள்’ என்றும் எனது ஆய்வுகளின் வழியே முடிவெடுத்ததும் உண்டு. இதற்காக, நான் சில படங்களை வரைய முற்பட்ட போது, நண்பர்கள் தடுத்தனர். ’ஒனக்கெல்லாம் அந்தளவுக்கு கஷ்டம் வராது மாப்ள. அந்தாளுக்கு மடிஞ்சிருக்காது. பெயிண்டிங்க் கத்துக்கிட்டாரு. ஒனக்கு என்னா கொற?’ எனக் கேட்டார்கள். எனக்கும் ஸ்கேல் வைத்து கூட ஒரு நேர்க் கோடு கூட போடத் தெரியாது. ஆகவே, நான் ஓவியர் ஆகவில்லை!

ஓவியர் உசேன் கிழப் பருவம் எய்திய பின்னரும், இளம் நடிகைகள் காதல் கொண்டதிலிருந்து நான் கற்ற பாடங்களும் காமம் சார்ந்தவையே. ஆக, ஓவியர் உசேன் என்றால், அவர் ஒரு காமக்கார ஓவியர் என்பதே எனக்குள் இருந்த பதிவு. மைக்கேல் ஜாக்சன் பற்றியும் இவ்விதமான பதிவு இருந்தது. அது மிக சமீபமாக அவரது, ‘beat it’, ‘they don’t really care for us’, ‘the earth song’ ஆகிய பாடல்களின் காணொளியைக் கண்ட பின்னர் மாறியது. மிகக் குறிப்பாக, இப்பாடல்களின் வரிகளைப் படித்த பின்னர், மைக்கேல் ஜாக்சனுக்குள் இருந்த போராளியை என்னால் உணர முடிந்தது. அவரது ’இயற்கை நேசம்’ வியக்க வைத்தது.

ஓஷோ வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ நூலை 10 ஆம் வகுப்பு படிக்கும்போது வாங்கிச் சென்றேன். என் அம்மா, ‘இதையெல்லாம் படிக்க இன்னும் வயசு இருக்கு’ என்றார். பொதுவாக நான் எதைப் படிப்பதையும் என் பெற்றோர் தடுப்பதில்லை. மேற்கண்ட நூலைப் பற்றி இப்படிச் சொன்னதால், ஓஷோ மீது தனி ஆர்வம் வந்தது. அதன் பின்னர், ஓஷோ பற்றி நான் கேள்விப்பட்டவை:

1. ஓஷோ ஒரு காமச் சாமியார்
2. ஓஷோ ஒரு நிர்வாணச் சாமியார்
3. ஓஷோ ஒரு பெண் பித்தர்
4. ஓஷோ ஒரு ஓரினச் சேர்க்கையாளர்
5. அவர் ஒரு ஒழுக்கக் கேடானவர்
6. அவரது தியான மண்டபத்தில் ஆணும் பெண்ணும் நிர்வாணமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டே ஓஷோவின் பேச்சைக் கேட்பார்கள்.

- இப்படியெல்லாம் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்னர், அவரை என்னால் நேசிக்காமல் இருக்க முடியுமா? எனக்கு ஓஷோவை அநியாயத்துக்குப் பிடித்துவிட்டது.

சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர் ஒரு அற்புதமான தத்துவவாதி என்பதை உணர முடிந்தது. மேலும், அவரது கோட்பாடுகள் மனிதரை உச்ச நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. 

குஷ்வந்த் சிங் பற்றியும் இதேவிதமான ’காமக்காரர்’ சாயம் பூசப்பட்டிருந்தது. அவரது, ‘men and women in my life’ நூலை குமுதம்.காம் இணையத்துக்காக தமிழில் மொழிபெயர்க்க வேண்டி இருந்தது. நான், ‘women in my life’ என்ற பகுதியை மட்டும் மொழிபெயர்த்தேன். அதில்தான் அவரைப் பற்றிய கிளுகிளுப்புகள் இருக்கும் என ஆர்வம் எனக்கு. அவருக்கும் பெண்களுக்குமான உறவில் காமக் கிளுகிளுப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பக்கம் பக்காமாக மொழிபெயர்த்தேன். கடைசியில் அப்படி எதுவும் அக்கட்டுரைகளில் இல்லை.

Amritha shergil என்ற பேரழகு கொண்ட ஓவியருக்கும் அவருக்குமான உறவு, கவிதை போன்றது. அது மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது.

‘Illustrated weekly’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த குஷ்வந்த் சிங், ஆற்றியுள்ள இதழியல், அரசியல் பணிகள் பற்றிப் பின்னர் அறிந்தபோது, எனக்கே வெட்கமாக இருந்தது.

பொதுவாகவே ஒரு நபரைப் பற்றி, நமக்கு ஒற்றை அடையாளம் தேவைப்படுகிறது. ’அவர் நல்லவர்’ அல்லது ‘அவர் கெட்டவர்’ என்பதுபோல. காமம் சார்ந்த முத்திரைகளை பிறர் மீது பதிப்பதில் ஊடகங்கள் எப்போதும் வெற்றி அடைந்து விடுகின்றன.

ஓவியர் உசேன் பற்றி மிகச் சில தகவல்களை, ஓவியர் புகழேந்தி கூறியபோது, மீண்டும் எனக்கு வெட்கம். நம்பவியலாத அரசியல் சாகசங்களையும் மதவெறிக்கு எதிரான போராட்டங்களையும் செய்தவர் உசேன். மேலும், அவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தவராம்.

ஓவியர் புகழேந்தி இந்நூலை, உசேனது பன்முகத் தன்மை வெளிப்படும் விதமாக எழுதியுள்ளார். 1987 ஆம் ஆண்டு, இந்திய அளவிலான ஓவியக் கண்காட்சியில் சுமார் 4000 ஓவியர்கள் பங்கேற்றனர். அவர்களில் இரண்டாம் பரிசை வென்றவர் புகழேந்தி. இப்போட்டியின் நடுவர் எம்.எஃப்.உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஓவியரே தமது ஓவிய முன்னோடி பற்றி எழுதியுள்ள நூல் என்பதால், இந்நூல் முக்கியத்துவம் பெறும் என எண்ணுகிறேன்.

No comments:

Post a Comment