Thursday, December 13, 2012

நாயக்கர் ஆட்சியின் ’தர்ம’ நூலும் மாவட்ட ஆட்சியரின் முன்னுரையும்!குறிப்புஇக்கட்டுரயில் குறிப்பிடப்படும் ‘நாயக்க மன்னர்’ எனும் பிரிவினருக்கும் இதேவித பெயர்களில் தற்போது உள்ள சாதிகளுக்கும் நேரடி உறவு இல்லை. அவ்வாறான பொருளில் இக்கட்டுரை எழுதப்படவில்லை. 

அக்காலத்தில் ‘நாயக்க’ என்பது போர்த் தளபதிகளுக்கு வழங்கப்பட்ட பட்டம். சிங்களத்தில் ‘நாயக்க’ என்பதும் இப்பொருளில்தான். ஆகவே, இக்கட்டுரையைச் சாதி குறித்ததாக அணுக வேண்டாம், பயன்படுத்தவும் வேண்டாம். சாதிவழியே மனிதரைப் பகுப்பதில் சற்றும் உடன்பாடில்லை எனக்கு. 

நாயக்கர் வகை சாதியினரும் பிற தெலுங்கு கன்னட மூலச் சாதியினரும், தமிழரே இல்லை, என்ற கருத்தில் எனக்கு முற்றும் முழுதான மாறுபாடு உள்ளது. நாயக்க மன்னர் காலத்தில் தமிழ்ச் சமூகம் கண்ட நெருக்கடிகளை விளக்குவதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது.


நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மனுநீதியையும் அர்த்த சாத்திரத்தையும் ஒட்டிய / தழுவிய புதிய சட்டங்கள், நீதி நூல்கள் இயற்றப்பட்டன. இச் சட்டங்கள் தமிழரை, தொல் தமிழ்க் குலங்களை, அவர்கள் மரபுசார்ந்த அறிவாற்றலை ஒழித்துக்கட்டின.

’தர்மநெறி நீதிகள்’ எனும் நூல், ஒரு பிராமணரால் இயற்றப்பட்டது. இப் பிராமணருக்குத் தமிழ் முறையாக எழுதக்கூடத் தெரியவில்லை. நூல் முழுதும் கொச்சையான(இலக்கணம் வழுவிய) சொற்களும், எழுத்துப் பிழைகளும் நிரம்பியுள்ளதைக் காண முடிகிறது. ஆயினும், இந்நூலே, அக்கால நீதி நூல். ஆட்சி செய்த நாயக்கரும் பிராமணர் அல்லது பிராமணக் கலப்பாளர், எழுதுபவரும் பிராமணர். ஆட்சி மொழி, தெலுங்கு. வழிபாட்டு மொழி, இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி சமக்கிருதம். இதில், தமிழுக்கு என்ன இடம்? ஆகவே, தமிழ் அறியாத பிராமணரும் தமது அரைகுறை மொழி அறிவால் நீதி நூல்கள் இயற்ற முடிந்தது.

இந்த நூல் இவ்வளவு இடர்களுக்கு இடையில் தமிழில் இயற்றப்பட்டதன் காரணம், ஆட்சியாளரின் நீதி முறைகள் குறித்து தமிழர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதாகவே இருக்க முடியும். இதுபோன்ற சூழலிலும், தமிழ்ப் புலவர் ஒருவரைக்கொண்டு அந் நூலை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் ‘திராவிட’ ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதைக் கவனிக்க வேண்டுகிறேன். 

அந்த நூலிலிருந்து சில ‘நீதிகள்’; (சரசுவதிமகால் வெளியீடு 2005)

• உண்மையான கற்புடைய பெண் யார் தெரியுமா? வேலை செய்யும்போது அடியாளைப் போலவும், அறிவில் மந்திரிபோலவும், தோற்றத்தில் லட்சுமி போலவும் படுக்கையில் வேசிபோலவும் இருப்பவளே கற்புடையவள்!
(பாடல் 54)

• கணவன் முன் எதிர்த்துப் பேசுபவள், தானே பொருள் தேடுபவள், கணவன் உறங்கும் முன்னால் உறங்குபவள், புறங்கூறுபவள் – இவர்கள் பத்துப் பிள்ளைகளைப் பெற்றாலும் அப்பிள்ளைகள் அவர்களைக் கைவிடுவார்கள்!
(பாடல் 55)

• தேசத்தில், 
மக்கள் செய்யும் பாவம் அரசனைச் சேரும்
அரசன் செய்யும் பாவம் புரோகிதனைச் சேரும்
மனைவி செய்யும் பாவம் கணவனைச் சேரும்
சீடன் செய்யும் பாவம் குருவைச் சேரும்!
(பாடல் 57)

-(ஆகவே, அரசன் மக்களையும், புரோகிதர் அரசனையும், கணவன் மனைவியையும், குரு சீடனையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பது பொருள்)

• அரசன் பிராமணரைக் காக்க வேண்டும். இல்லையெனில் நாசமாகப் போவான்!
(பாடல் 58)

• பிராமணரே தெய்வம்!
(பாடல் 59)

• பிராமணன் புண்ணியங்கள் அனைத்தும் அவன் பறைச்சியை (பறையர் பெண்ணை) சேர்ந்தால் அழியும்!
(பாடல் 63)

-இந்த விதிகளில் கவனிக்கத்தக்க சேதி ஒன்று உண்டு. பிராமணன் பறையர் குலப் பெண்களோடு கூடுவதை இந்த ‘நீதி’ ஏன் தடுக்கிறது? தொல் தமிழரின் அந்தணர் – பார்ப்பார் – மறையோர் பறையர் குலத்தவரில் கணிசமானோர் இருந்தனர். 

தமிழகத்தில், பல சாதியார் கலந்து உருவான குலமே அந்தணர் – பார்ப்பார் குலம் ஆகும். இந்தக் கலப்பு தொடராமல் தடுக்கிறது இந்த விதி. பறையருக்கென வழி வழியாக இருந்து வந்த கோயில் உரிமைகளைப் பிடுங்கி, ஆரியவயப்பட்ட தென்னாட்டு பிராமணருக்கு வழங்கும் முயற்சியின் வடிவம் இது.

தொல் தமிழரது மரபு அறிவு, ஒருங்கிணைந்த சமூக அமைப்பு முறை ஆகியவற்றைத் தகர்க்கும் ‘நீதிகள்’ கூறப்பட்டன. அவற்றுள் சில;

’சோதிடம் பார்ப்பவன்
தொன்மையான வழக்குப்படி நீதி உரைப்பவன்
சிக்கல்களுக்கு பரிகாரம் / தீர்வுமுறை கூறுபவன்
மருத்துவம் பார்ப்பவன்
-இவர்களெல்லாரும் சாத்திரப்படி நடக்காவிட்டால், இவர்கள் பிராமணரைக் கொலை செய்த பாவத்தைச் செய்தவர்போல் நடத்தப்பட வேண்டும்’
(பாடல் 73)

அதாவது ,
’சோதிடம் பார்ப்பவன் – வானியலாளரான வள்ளுவக் குலத்தார். 
தொன்மையான வழக்குப்படி நீதி உரைப்பவன், சிக்கல்களுக்கு பரிகாரம் / தீர்வுமுறை கூறுபவன் – தொன்மையான தமிழர் மரபுப்படி நீதி வழங்கும் குலத்தவர் (பெரும்பாலும் அந்தந்த கிராமசபைகளில் இருந்த பல்வேறு குலத்தவர். ’நீதிவழங்கும் இடத்தில் இன்னார்தான் இருக்க வேண்டும்’ என்ற் விதி தமிழர் மரபில் இல்லை)

மருத்துவம் பார்ப்பவன் – அம்பட்டர், பறையர், நாடார், பாணர் உள்ளிட்ட தொல் மருத்துவக் குலத்தினர் ஆகியோர் ஆரிய சாத்திரங்களின்படி நடக்காதவர். அவர்கள் ஆரிய சாத்திரங்களை ஏற்காவிட்டால், பிராமணரைக் கொன்ற குற்றம் புரிந்தோர்போல் நடத்தப்பட வேண்டும்/ கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழரது அறிவுக் குலங்கள் அனைத்தும் இவ்வளவு கடுமையாக ஒடுக்கப்பட்டன. இந்தக் குலங்கள் அனைத்தும் சாதிகளாகக் கட்டாயமாக மாற்றப்பட்டன. அதாவது, ஆரிய சாத்திரங்களைக் கடைப்பிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன. ஆரிய சாதியமுறை இவ்வாறுதான் தமிழகத்தில் திணிக்கப்பட்டது. 

தமிழரின் பாரம்பரிய அறிவுச் செல்வங்கள் பிராமணரால், திராவிடரின் பிற ஆதிக்க சாதியினரால், தமிழரின் நிலவுடைமைச் சாதிகளால் பங்கிட்டுகொள்ளப்பட்டன. 

மேற்கண்ட ’தர்மநெறி நீதிகள்’ நூல் தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கு முகவுரை எழுதிய அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மா. வீரசண்முகமணி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்;

‘மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துகறன்
ஆகுல நீர பிற’

என்பார் திருவள்ளுவர். மக்கள் செய்யத்தக்கன இன்ன; தள்ளத்தக்கன இன்ன என்பதனை வலியுறுத்த வந்த செந்நாப் போதார் ‘மனத்துக்கண் மாசு இலனாக இருத்தல் வேண்டும்’ என்கின்றார். அவ்வாறு ஒழுக, பல நீதிநூல்களைப் பல சான்றோர்கள், தனது அறிவின் முதிர்ச்சியாலும், அனுபவ ஞானத்தாலும் அறிந்து, எழுதி, நூலாக்கித் தந்தனர்.

இன்ன குற்றம் புரிந்தவனுக்கு இன்ன தண்டனை, என்று நீதிமன்றம் கூறுவதுபோல, மனிதன் இப்படித்தான் நடக்க வேண்டும்; தவறினால், இன்னின்ன துன்பங்கள் நேரிடும் என்று, தவறு செய்வதற்கு முன்னமே எச்சரித்து, நம்மை வழிப்படுத்தவனவே நீதி நூல்கள். அவற்றுள் ஒன்றே இத்தரும நீதிகள் எனும் நூல்’

பெரும் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரே ஒரு வரலாற்று நூலை, இப்படி அணுகுகிறார் என்பது வருந்தத்தக்கது. மேற்கண்ட நூலை அவர் படித்தாரா என்பதே ஐயமாக உள்ளது.

தமிழர்களுக்குத் தமது உண்மையான வரலாறு தெரியாமல் போனதன் காரணங்களில் இவ்வாறான அணுகுமுறைகளும் ஒன்று என எண்ணுகிறேன்.

No comments:

Post a Comment