Friday, July 16, 2010

உங்கள் வீட்டிற்கு கடவுள் வந்தாரா?


கடவுள் வந்தபோது நான் வீட்டில் இல்லை
நான் காத்திருந்தபோது அவருக்கு வேறு வேலை

மதில்மேல் முகம் புதைத்துப் பூனைபோல் பார்த்தபடி
இன்றாவது சந்தித்தாயா எனக் கேட்கும் அண்டைவீட்டார்

தொலைபேசி வழி விசாரிப்புகள் என எனக்கும் கடவுளுக்குமான உறவில் ஊர் சிரித்தது

அன்று ஒரு நாள் நான் தோட்டத்திற்குப் புறப்பட்டபோது, என் மகன் தன் பென்சில் ஓவியங்களுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். அவனது ரயில் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருக்கும். கேட்டால், ’இந்த ரயில் தண்ணீர் ஊற்றினாலே தானே முளைத்து வளர்ந்துவிடும். யாரும் செய்ய வேண்டியதில்லை. அதில் பயணிக்கக் காசும் தேவையில்லை’ என்பான். என் தேவைகளைப் பட்டியலாக எழுதி, மடித்து அவனிடம் கொடுத்தேன்.

’கடவுள் என்னைத் தேடி வந்தால் இதை அவரிடம் கொடுத்துவிடு’ என்றேன். ’நீ வர்ற வரைக்கும் இருக்கச் சொல்லவா?’ எனக் கேட்டான். ’அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். வேண்டாம்’ என்றேன். பிறகு, ‘நீ அவரை உன் கார் விளையாட்டில் சேர்ந்துகொள்ளும்படி தொந்திரவு செய்துடாதே’
‘ஏன்...அவருக்குக் கார் ஓட்டத் தெரியாதா?’

’இல்ல...அவருக்கு எல்லாம் தெரியும்...ஆனா நேரம் இருக்காது’

அவனுக்கு இதில் உடன்பாடில்லை என்பதுபோல் தெரிந்தது. நான் புறப்பட்டுவிட்டேன்.

அன்று மாலை சாயத் தொடங்கிய வேளை, நீண்ட காலமாக சத்துடனிருந்துவிட்டு, என் அப்பா காலத்தில் உயிரற்றுப்போன தோட்டத்தில் வாய்க்கால் வெட்டிக்கொண்டிருந்தோம். அந்தக் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சிறு வண்டுகளோ தும்பிகளோ கூட வருவதில்லை. அவை வருவதற்குரிய செடிகளும் அந்நிலத்தில் முளைப்பதில்லை.

என் மண்வெட்டி சற்றே ஆழப் பதிந்தபோது, வெட்டி வீசப்பட்ட மன்ணோடு சுருட்டிக்கொண்டு மண்புழு ஒன்று வந்தது. கடவுளிடம் கேட்டிருந்த உதவிகளில் அதுவும் ஒன்று! பிறகு, பள்ளமான வயல் ஒன்றில் வயல் நண்டுகளைப் பார்த்ததாக மாடு மேய்த்த சிறுவர்கள் கூவியபடி ஓடி வந்தார்கள். நத்தைகளைக் கண்டதாகவும் கானாங்கோழிகளைக் கண்டதாகவும் முதியவர்கள் தெரிவித்தார்கள். இவையும் கடவுளிடம் நான் வைத்த கோரிக்கைகள்தான்.

சிட்டுக்குருவிகள், செம்போத்துப் பறவைகள், மரங்கொத்திகள், வரிச்சான்கள் என காணாமல்போனவை அல்லது போகத் தொடங்கியவை அனைத்தும் காணக்கிடைத்தன.

நான் வீடு திரும்பும்போதும் மகன் வரைந்துகொண்டுதானிருந்தான்.
’கடவுள் வந்தாரா...?’
’ஓ...வந்தாரே...’
’அந்தப் பட்டியலைக் கொடுத்தியா...?’
’ம்...’
என்றபடி நிமிராமல் வரைந்தான்.
’நீ ஏதும் கேட்டியா...?’ என்றேன்.
ஆர்வத்துடன் நிமிர்ந்துபார்த்து சொன்னான்,
‘அந்த வண்ணாத்துப்பூச்சி என் கையில சிக்காமலே இருந்துச்சுல்ல...? அது இனிமே சாயங்காலம் ஆனா தானே பறந்து வந்து என் கையில உக்கார்ந்திருமே...’
‘எப்படி?’
’கடவுள் தாத்தா கிட்ட இதப்பத்தி சொன்னேன்...அவர் அந்த வண்ணாத்திப்பூச்சிக்கிட்ட சொல்லிட்டாரு...இதோ பாரு...’
என உள்ளங்கைகளை விரித்துக் காட்டினான். மஞ்சள் கலந்த செந்நிறத்தில் மருதாணி பூசியது போலிருந்தது. வண்ணத்துப் பூச்சி பறந்து வந்து இவன் கைகளில் அமர்ந்து, மகரந்தத் தூளை உதிர்த்து மருதாணிபோல் பூசியதாக விளக்கினான். மேலும், இது இனி தினமும் நடக்கும் என்றும் அந்த வண்ணத்துப்பூச்சியிடம் மகரந்தம் இல்லையென்றால் அதன் தோழிகளை அழைத்து வரும் என்றும் கூறினான். மீண்டும் வரையத் தொடங்கினான்.


என் அண்டை வீட்டார் சுவர் உச்சியில் முகம் புதைத்தபடி, ‘என்ன...இன்னிக்கும் சாமி வரலியே?’ என்றனர். நான் மகனைப் பார்த்தேன். அவன் ’பாருப்பா…வந்தாரு வந்தாருன்னு சொல்றேன்…இவங்க இல்ல இல்லங்கறாங்க…அவங்களுக்குக் காட்டத்தான்…கடவுளைப் படம் வரஞ்சுக்கிட்டிருக்கேன்…’ என்றான்.


’சின்னப் பயலைக் கெடுத்து வச்சிருக்கீங்களே…’என்றார் ஒருவர்.
’உங்க வீட்டுக்கு இதுவரைக்கும் கடவுள் வந்ததே இல்லையா?’ எனக் கேட்டேன்.


அவர்கள் பூஜை அறையைப் பராமரிப்பதில் தொடங்கி பல்வேறு தூர தேசங்களுக்குச் சென்று உண்டியலில் பணம் கொட்டுவதுவரை அடுக்கடுக்காகக் கூறினர்.
’அப்புடியுமே…எங்க வீட்டுக்கு சாமி வந்ததில்ல…உங்க வீட்டுல ஒரு சாமி படம் கூடக் கெடையாது…கோயிலுக்கும் போறதில்ல…எப்புடி வருவாரு?’ என்றனர்.


பிறகு தங்கள் வேண்டுதல்களில் ஒன்று கூட நிறைவேறுவதில்லை என்றனர். அந்த வேண்டுகோள்களில் சிலவற்றை மாதிரிகளாகக் கூறிப் புலம்பினர். அவையனைத்தும் கடன் அடைப்பது, சம்பள உயர்வு, புதிய கடன் பெறுவது, நோய் தீர்வது தொடர்பானவை.


மகன் சட்டெனத் திரும்பி கோபமாகக் கத்தினான், ‘கடவுள் என்ன பேங்க் வச்சிருக்காரா? இல்ல அவர் என்ன டாக்டரா? அவர்கிட்டப் போயி…இதெல்லாம் கேக்கறீங்க? அவர் எதைப் படைச்சாரோ அதைக் கேட்டாத்தான் குடுப்பாரு…’
என்றுவிட்டு என்னைப் பார்த்து…
‘இல்லப்பா…?’ என்றான்.
நான் புன்னகைத்தபடி அவன் வரைந்த படத்தைப் பார்த்தேன்.
’இது யார் சொல்லு?’ என்றான்.
‘தெரியலையே…’
’இதுதான்…கடவுள் தாத்தா…’
என்றான்.
மகனது ஓவியத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதை என்னால் உங்களுக்கு விளக்க இயலவில்லை. ஆகவே, உங்கள் மகனிடமோ மகளிடமோ இதுபோன்ற அனுபவம் கிடைக்கும் வரைக் காத்திருங்கள்.


ஒருவேளை, அவர்கள் கடவுள் படம் என்ற பேரில் சுற்றிலும் தனம் கொட்டியிருக்கும் ஏதேனும் வங்கி அதிபர் படத்தை வரைந்தால், உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகளும் மருதாணியும் இல்லை என்று பொருள். அதேபோல், உங்கள் நிலத்தில் உயிர் இல்லை என்றோ அல்லது உங்களுக்கென்று நிலமே இல்லை என்றோ பொருள்.


இப்படிச் சொல்வதற்காக என்னைக் கோபிக்காதீர்கள்.
தாத்தா பாட்டியைத் திண்ணையில் வைத்து, திண்ணை இல்லாத வீடு மாறிய பிறகு வீட்டிலிருந்தே விரட்டியதுபோல, கடவுளை விரட்டியடித்தவர்கள் நீங்கள்!
உங்கள் குழந்தைகள் கடவுளைப் பார்க்காதவரை, உங்கள் முதுமையில் உங்களையும் விரட்டுவார்கள்!

1 comment: