Friday, July 16, 2010

ஆந்தைக்கும் எனக்குமான தற்காலிக உறவிலிருந்து...

அன்றைய செய்தித் தாளில் என்னை ஈர்த்த செய்தி இதுதான்:
‘ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்
அதிசய ஆந்தை பிடிபட்டது’

பொதுவாக ஆந்தைகள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவை இரவுகளில் உலகைப் பார்க்கின்றன, அந்த விதத்தில் மனிதரை விட மேம்பட்டிருகின்றன, இரவுகளில் திருடி வாழும் பெருச்சாளிகளை ஆந்தைகள் பிடித்துவிடும். என் வீட்டுக்கு அருகே ஓங்கி வளர்ந்த மரங்கள் இருப்பதால், நாங்கள் எலிப் பொறிக் கட்டைகளும் எலி விக்ஷமும் இல்லாமலே சமையலறையில் தக்காளிகளையும் பழங்களையும் பாதுகாத்துக்கொள்கிறோம். ஆந்தைகள் இந்தச் சேவைக்காக எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதில்லை.

ஒரு நாள் இரவு, வயது முதிர்ந்த ஆந்தை கனவில் வந்தது. என் தோட்டத்து மா மரத்தில் வாழ்வதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டது. ஒரு சில சேதிகளை மனம் விட்டுப் பேசவே கனவில் வந்ததாகக் கூறியது. ’உங்கள் மா மரத்தின் தென் மேற்குக் கிளைகள் கரையான் தாக்குதலுக்குட்பட்டு வேதனைப்படுகின்றன’ என்றது. ’அதற்கு என்ன செய்வது?’ எனக் கேட்டேன். ’அந்தக் கரையான்களை விரட்ட வேண்டும்’ என்றது. ’கரையான்கள் இருந்தால் உங்கள் இனத்தவருக்கு உணவாகுமே?’ என்றேன். ஆந்தை, ’நாங்கள் உணவுக்குச் சிரமப்படுவதில்லை. ஆனால், இருப்பிடம்தான் எங்களுக்கு சவாலானது. இந்த மா மரத்தின் கரையான்கள் தென்மேற்குக் கிளைகளை இற்று விழச் செய்துவிடும் அபாயம் உள்ளது. அதுமட்டும் நடந்துவிட்டால் எங்கள் குடும்பம் வேறு இடம் தேடி அலைய வேண்டும்’ என்றது.

எனக்கு அலுப்பு ஏற்பட்டது. அதை மறைக்க நான் பின்வருமாறு கேட்டேன்.
’நீங்களே அந்தக் கரையான்களைத் தின்றுவிட்டால் என்ன?’
ஆந்தை இறக்கைகளைக் கீழிறக்கி, பணிவுடன் கூறியது.
’ஆலோசனைக்கு நன்றி. ஆனால், எல்லாக் கரையான்களையும் தின்று தீர்ப்பது எங்களால் இயலாது. தவிர, உணவுக்காக உழைப்பதை நாங்கள் விதியாக வைத்திருக்கிறோம். காலடியில் கிடைக்கும் உணவு நிரந்தரமல்ல என்பது எங்கள் முன்னோர் வாக்கு. ஆகவே, கரையான்களை ஒழித்து உங்கள் மரக்கிளைகளையும் எங்களையும் காக்க வேண்டும்’ எனக் கேட்டுவிட்டு மறைந்துவிட்டது.

மாமரத்தின் தென்மேற்குக் கிளைகளில் கரையான் தாக்குதல் இருந்தது என்னவோ உண்மைதான். கரையான்கள் அங்கு வரக் காரணம் என்ன எனக் கண்டறிந்து, ஆந்தையின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. நன்றி சொல்வதற்காக அந்த ஆந்தை மீண்டும் கனவில் வரும் என எதிர்பார்த்தேன். அது வரவில்லை. ஆனால், எங்கள் தோட்டத்தில் நீண்ட நாட்களாகப் பதுங்கியிருந்த சில பாம்புக் குட்டிகளை ஆந்தைகள் பிடித்துவிட்டதாக, அக்கம்பக்கத்தினர் நிம்மதியடைந்தனர்.

இந்த அனுபவம் எனக்கு இருந்ததால், ஆயிரம் ஆண்டுகள் வாழும் அந்த ஆந்தையைப் பார்க்க விரும்பி வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். துருப்பிடித்த மிகப் பழைய கூண்டு ஒன்றில் இருந்தது அந்த ஆந்தை. இறக்கைகள் தளர்ந்து பாதி கீழிறங்கிய நிலையில் இருந்தன. நான் பகலில் சென்றேன். ஆந்தை பாதிக் கண்கள் மூடிய நிலையில் இருந்தது. ’பேச முடியுமா? எனக் கேட்டபோது,
‘பகலில் நாங்கள் வேலை செய்வதில்லை’ என்றது.
‘பேசுவது எப்படி வேலையாகும்?’
’நீங்கள் இரவில் உறங்குவது ஏன்?’
’ஓய்வெடுக்கத்தான்’
’ஏன் அதை ஓய்வு என்கிறீர்கள்?’
’ஏனெனில் தூங்கும்போது, எந்த வேலையும் செய்வதில்லை’
’அப்படியானால், பேசுவதும் வேலைதானே?’

ஆந்தை தன் முடிவில் பிடிவாதமாக இருந்தது. ஆகவே நான் சிறப்பு அனுமதி பெற்று அந்த ஆந்தையை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். கூண்டிலிருந்து தன்னை விடுவிக்கும்படிக் கேட்டது. வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்துவிடுமா என்ற என் கவலையை வெளிப்படுத்தினேன். என் தோட்டம் அதற்குப் பிடித்துவிட்டதாகவும் அதனால் வேறு எங்கும் போக விருப்பமில்லை என்றும் கூறியது.

இரவு நான் தூங்கிவிடுவதும் பகலில் அது தூங்கிவிடுவதும் வழக்கமானது. எங்கள் இருவருக்குமான முறையான அறிமுகம் கூட நடக்கவில்லை.இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க ஒரு திட்டம் வேண்டியிருந்தது. ஒரு அந்திப் பொழுதில் ஆந்தை விழித்தபோது, ’நாம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது’
என்றேன்.
‘அப்படியா?’
‘ஆமாம்... இன்று இரவே நாம் பேசலாம். நான் இன்று இரவு விழித்திருப்பதாக முடிவு செய்துவிட்டேன்’ என்றேன்.
’ஆனால், நான் உன்னோடு பேசுவதாக முடிவு செய்யவில்லையே’ என்றது.
’ஒரு நாள் கூட ஒதுக்க முடியாதா?’
’மன்னிக்கவும். ஒரு நாள் என்பதை நீங்கள் பார்க்கும் விதம் வேறு. நாங்கள் பார்க்கும் விதம் வேறு. உங்களுக்கு நாள் என்பது அடுத்த நாளுக்கும் இன்றுக்கும் இடையில் உள்ளது. எங்களுக்கு ஒரு நாள் என்பது மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் உள்ளது. ஆகவே, ஒரு நாளை வீணடித்தால் அந்த நாள் கிடைக்கவே போவதில்லை என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது’

‘ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு இந்தத் தத்துவம் கூடப் பேசவில்லை என்றால் எப்படி?’ என்றேன் எரிச்சலுடன்.

ஆந்தை ஆச்சரியமாகக் கேட்டது,
‘நான் பேசியது தத்துவமா?’
‘ஆமாம். மரணத்தைப் பற்றியும் வாழ்வின் நிலையாமை பற்றியும் குழப்பும் விதத்திலும் பேசுவது தத்துவம்தானே?’
ஆந்தை பெருமூச்செறிந்தது.
’உன் முன்னோர் பேசிய தத்துவங்கள் தெரியுமா?’ எனக் கேட்டது.
’அவர்களும் இதைத்தான் பேசியிருப்பார்கள்’ என்றேன்.
ஆந்தை ஒரு முதியவருக்கே உரிய கேலிப் புன்னகையுடன், ‘சரி...நான் கிளம்ப வேண்டும்’ என்றது.
’நீ என் கனவில் வர முடியுமா?’ எனக் கேட்டேன்.
‘கனவிலா? ஏன்?’
’கனவில் உரையாடலாமே’
’உன் கனவு உன் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது?’ என்றது.
’இல்லை. மா மரத்து ஆந்தை ஒன்று என் கனவில் வந்ததே?’
ஆந்தை நீண்ட நேரம் பதில் பேசாமல் யோசித்தது. பிறகு பரிவும் கனிவும் பொங்க என்னிடம்,
‘சரி...இன்று இரவு கனவில் சந்திப்போம்’ என்று கூறிச் சென்றது.

அன்று இரவு நீண்ட நேரம் உறக்கமில்லாமல் உலாத்திக் கொண்டிருந்தேன். கனவு வருமா வராதா என்ற கேள்விக்கு விதவிதமான விடைகள் கிடைத்துக்கொண்டேயிருந்தன. பொதுவாக, எந்தக் கனவும் நான் விரும்பி வந்ததில்லை. ஆனால், கனவில் வந்தவைகளில் பெரும்பாலானவை நான் விரும்பியவையாக இருந்தன. சில கனவுகளில் நான் அம்மணமாயிருப்பேன், சிலவற்றில் நான் படிக்காமலேயே தேர்வெழுதப் போவேன், சில கனவுகளோ ஏதேனும் ஒரு பெண்ணிடம் நான் இச்சை வழியப் பேசுவதாகவும், சிலவற்றில் பிரபல நடிகைகளுடன் சல்லாபிப்பதாகவும், வேறு சிலவற்றில் பெரிய நட்சத்திர விடுதியொன்றில் சாப்பிட்டுவிட்டுப் பணமில்லாமல் நிற்பேன், சிறுநீர் கழிப்பதும் சிலவேளைகளில் உண்டு.

ஆந்தையுடனான உரையாடல் எனக்குப் புதிதுதான். அதுவும் அந்த மாமரத்து ஆந்தை கனவில் கூறியபடியே கரையான்கள் இருந்தது எனக்கே அதிசயம்தான்.

உலாத்திய களைப்பில் கால்கடுத்துப் படுத்தேன். கண்கள் மூடிய மறு கணம் ஆந்தை வந்து என் மார்பில் உட்கார்ந்தது. கொஞ்சம் சிடுசிடுப்பாகத்தான் தொடங்கியது.
’ஏன் இவ்வளவு தாமதம்?’
’தூக்கம் வரவில்லை’
’நான் எவ்வளவு நேரம்தான் உன் கனவு திறக்குமா எனக் காத்துக்கொண்டிருப்பது? எனக்கு வேறு வேலையே இல்லை என நினைத்தாயா?’
‘மன்னித்துக்கொள்’
’சரி...என்ன சேதி?’

ஆந்தையின் குரலில் தெரிந்த கண்டிப்பு என்னை மிகுந்த பயனளிக்கும் விதமான கேள்விகளை மட்டும் கேட்கத் தூண்டியது.ஆகவே, உரையாடலுக்கான வழக்கமான பீடிகைகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாகவே சேதிக்குப் போனேன்.

’உனக்கு ஆயிரம் வயது என எப்படி நம்புவது?’
’நீ ஏன் அதை நம்ப வேண்டும்?’-என்றுவிட்டு அடுத்த கேள்விக்குக் காத்திருப்பது போல பார்த்தது.

‘நீ இன்னும் என் முதல் கேள்விக்கே பதில் சொல்லவில்லை’
’நீ கேட்டது கேள்வியே அல்ல. எனக்கு ஆயிரம் வயது என நான் சொல்லவில்லை. அதை நீ நம்ப வேண்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, வயது குறித்த பயமும் பதட்டமும் பெருமிதமும் எங்கள் இனத்தவருக்கு இல்லை. நாங்கள் பிறந்த நாளைக் கணக்கிடுவதும் இல்லை, கொண்டாடுவதுமில்லை’

‘இது குதர்க்கமாகத் தெரியவில்லையா உனக்கு?’ என எரிச்சலாகக் கேட்டுவிட்டு, ஆந்தையின் போக்கிலேயே கேட்பதாக நினைத்துக்கொண்டு,
’நீ பிறந்து நீண்ட காலமாகிவிட்டதா?’ என்றேன்.
’ஆம்’ என்றது.
’எத்தனை தலைமுறைகள் இருக்கும்? அதாவது நீ பிறந்த பிறகு எத்தனை ஆந்தைகள் பிறந்து இறந்திருக்கும்?’
’எத்தனை மனிதர்கள் எனக் கேட்டால் விடை சொல்வேன். ஏனெனில் நாங்கள் எங்கள் பிறப்பையும் இறப்பையும் கொண்டாடுவதும் இல்லை, துக்கிப்பதும் இல்லை. ஆகவே, அவை பதிவுகள் ஆவதில்லை’
’அப்படியானால்...வாழ்க்கை மீது உங்களுக்குப் பிடிப்பு இல்லை என எடுத்துக்கொள்ளலாமா?’
’வாழ்க்கை மீது விருப்பம் இருப்பதால் தான் வாழ்க்கையை மட்டும் பார்க்கிறோம். பிறப்பு எனும் முடிந்ததையும் இறப்பு எனும் வரப்போவதையும் கணக்கில் கொள்வதில்லை’
’சரி...எத்தனை மனிதர்கள் பிறந்து இறந்ததைப் பார்த்திருப்பாய்?’
ஆந்தை பேசும் முன் வேறொரு ஆந்தை பறந்து வந்தது. அது இந்த ஆந்தையைப் பார்த்து எரிச்சலுடனும் எச்சரிக்கும் விதமாகவும் கூறியது,
’நீ ஏன் இந்த நாகரிகம் பிடித்தவனுடனெல்லாம் பழகுகிறாய்? நமக்கென தகுதி இருப்பதை மறந்துவிட்டாயா?’
அதிசய ஆந்தை பொறுமையுடன் பேசியது,
’இந்தக் காலத்தில் உங்களுக்குப் பொறுமை இல்லாமல் போய்விட்டது. நம்மைவிடக் கீழானவருக்கும் மரியாதை செலுத்த வேண்டும்’

புதிய ஆந்தை அதிசய ஆந்தையை விரைந்து வரும்படிக் கூறிவிட்டுப் பறந்தது. அது என் வீட்டில் நின்ற சில நொடிகளிலும் அதன் முகம் கடுமையான வெறுப்புடனிருந்தது. பிடிக்காத அல்லது அருவருப்பான இடத்திற்கு வந்ததுபோல நடந்துகொண்டது.

அதிசய ஆந்தை என் பக்கம் திரும்பியது,
’எங்கள் காலத்தில் இப்படியான வெறுப்பும் வன்மமும் இருக்கவில்லை’ என்றது. மீண்டும் அதுவே தொடர்ந்து, ‘ஆனால்...இந்த கெட்ட மாற்றத்திற்கும் நீங்கள் தான் காரணம்’ என்றது.

உங்களுக்கு வருவதைப் போலவே எனக்கும் ஆத்திரம் வந்தது.
’ஆந்தைகள் மனிதர்களை இழிவாக நினைப்பது அக்கிரமம் அல்லவா?’ என்று எனக்குள்தான் சொல்லிக்கொண்டேன். ஆந்தை சிரித்தது.

‘ஏன் சிரிக்கிறாய்? நாகரிகம் பிடித்தவன் என்பதை ஏதோ பைத்தியம் பிடித்தவன் போல் சொல்கிறீர்கள்...ஆந்தைகளுக்கு இவ்வளவு திமிர் இருக்குமா?’

’மன்னித்துக்கொள்...நாங்கள் மனிதர்களைத் திட்டப் பயன்படுத்தும் வார்த்தை அது’

நான் குழப்பமும் ஆவேசமும் மேலிட மூச்சிறைக்கப் பார்த்தேன். ஆந்தை சிறு விளக்கம் ஒன்றை அளித்தது. ’இந்த நாகரிகம் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது உங்கள் கண்டுபிடிப்புதான். உங்களுக்கும் எங்களுக்கும் இருந்த இடைவெளியை...உங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடாக நீங்கள் மாற்றினீர்களே அப்போது இந்தச் சொல் பிறந்திருக்கலாம். பிறகு உங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாட்டை நீங்கள் முரண்பாடாக மாற்றினீர்கள். எங்கள் இனம் வாழும் மரங்களை உங்கள் கழிப்பறைக் கதவுகளாக்கினீர்கள். நாங்கள் உண்டு வாழவே விதிக்கப்பட்ட எலிகளையும் சிறு பூச்சிகளையும் விக்ஷம் வைத்துக்கொன்றீர்கள். எங்களுக்கு உணவில்லாமல் போனது. இப்படி...நமக்கான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. ‘நீங்கள்...செய்வது அக்கிரமம்...இந்த பூமி நாங்களும் வாழத்தான் விதிக்கப்பட்டது’ என்று உங்களிடம் பேச வந்தபோதெல்லாம், நீங்கள் மேலும் மேலும் நாகரிகமடைந்துகொண்டே போவதாக உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டீர்கள்.
அப்போதுதான் கண்டுகொண்டோம், அது கெட்ட வார்த்தை என்பதை. அதன்பிறகு, உங்களைத் திட்டுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்துகிறோம்.’

பேசி முடித்துவிட்டு என் கண்களை உற்றுப் பார்த்தது. என்னால் எச்சில் விழுங்கக்கூட இயலவில்லை. வியர்த்தது. நான் கழிவிரக்கம் கொண்டவனானேன்.
ஒரே ஒரு வார்த்தையாவது ஆந்தையிடமிருந்து பாராட்டாகப் பெற்றுவிட முடியாதா என ஏங்கினேன்.

‘எங்கள் வளர்ச்சியை நீ ஏன் கணக்கில் கொள்ளக் கூடாது? பாலங்கள்...விமானங்கள்...செயற்கைக்கோள்...கணிப்பொறி....’

’போதும் நிறுத்து...’ என்றது ஆந்தை. ‘இந்தப் பட்டியல் இப்போது முடியாது. இது முடியும் வரைக் காத்திருப்பதும் வாழ்வு முடியும் நாளை எதிர்பார்ப்பதும்’ ஒன்று என்றது.
’அவ்வளவு பெரிய வளர்ச்சிப் பட்டியல் எங்களிடம் உள்ளது அல்லவா?’ என்றேன்.

’நான் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல. உங்கள் வளர்ச்சிப் பட்டியல் முடியும் நாளில் உங்கள் அனைவரின் வாழ்நாட்களும் முடியும்’ என்றது.

மேலும் தொடர்ந்து,
’பெயர் வைப்பதில் உங்கள் முறை சிக்கலாகவே உள்ளது. ஒரு உயிர் பறிப்பவரைக் கொலைகாரர் என்கிறீர்கள் ஆயிரக்கணக்கில் கொல்பவரை வீரர் என்கிறீர்கள். அதுபோலத்தான் வளர்ச்சி என்ற வார்த்தையை நாங்கள் பார்க்கிறோம். அதிகமாக வளரும் எதுவும் வெடித்து, சிதைந்து அழியும் என்ற விதி எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மரம் அதிகம் வளர்ந்துவிட்டால் அதன் கிளைகள் ஒவ்வொன்றாகப் பட்டுப் போய் கடைசியில் வேரும் அழுகிவிடுகிறது. அதிகமாக இரையெடுத்த மலைப்பாம்புகள் நகர முடியாமல், யானைக் காலடியில் சிதைந்துபோன சம்பவங்கள் அதிகம்.

அதனால்தான் நீங்கள் வளர்ச்சி எனப் பட்டியலிடும் எல்லாமே உங்களை அழிக்கப்போகின்றவை என்கிறேன். நாகரிகம் என்பது மிகப் பழைய வார்த்தை என்பதால் அதுகுறித்த விளக்கங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அது ஒரு கெட்ட வார்த்தை என்பதை மட்டும் என்னால் கூற முடியும். ’

‘எது அதிகம் எது குறைவு என்பதை நீ எப்படி முடிவு செய்யலாம்?’

‘சமைத்த உணவைத்தான் உண்ண வேண்டும் என நீங்கள் முடிவெடுத்ததே அதிகம்தான். அதன் பிறகு எல்லாமே அதிகத்திற்கும் அதிகம் அல்லவா?’ என்றுவிட்டுக் கேலியாகச் சிரித்துவிட்டு மார்பின் மீது மேலும் ஈரடிகள் நடந்து வந்து கண்களைக் கொத்திவிட்டுப் பறந்தது.

இப்போதும் என் வலது கண் வலிக்கிறது. அந்த ஆந்தையை மட்டுமல்ல எந்த ஆந்தையையும் அதன் பிறகு நான் பார்ப்பதில்லை. இரவுகளில் தூங்குவதே பல விதங்களிலும் சரியெனப்படுகிறது.

Published in : http://kaattchi.blogspot.com/2010/06/blog-post.html

No comments:

Post a Comment